மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இப்படிக்கு விவசாயி….

ஆச்சாரி

Mar 15, 2013

 

அறுவடை செய்யப் பயிர்கள் இல்லை

எங்கள் உயிர்கள் தான் இருக்கிறது
அறுவடை (தற்கொலை) செய்து கொள்கிறோம். . .

                                           – இப்படிக்கு விவசாயி

 

மறந்துவிட்ட அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் மறக்கப்பட்ட விவசாயி எழுதும் கடிதம். நீங்கள் நலமாக இருக்கும் இந்த வேளையில் நாங்கள் நலிந்து கொண்டிருக்கிறோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேரத்திற்கு உணவு உண்ணும் எங்களை நினைத்துப்பார்க்க கூட நேரம் இல்லை என்பதை அறிந்தும் அறியாதவனாய் எனது ஆற்றாமையை அடக்க முடியாதவனாய் இந்தக் கடிதத்தைஎழுதுகிறேன்.

இந்தச் சமூகத்தால் மறக்கடிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட விவசாயிகளின் தற்பொழுதைய நிலை என்னவென்று தெரியுமா உங்களுக்கு?.நிலையிழந்துவிட்ட எங்களின் நிலையை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

“விளை” நிலங்கள் எல்லாம் ”விலை” நிலங்களாக்கப்பட்ட நிலையில் வாழ வழியில்லாமல் வலியோடு வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்கள் எமது விவசாயிகள்.

 

      மண்ணில் விதையை விதைப்பவர்கள் அந்த விதையோடு சேர்ந்து தாங்களும் மண்ணிற்குள் விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். விவசாயம் பார்த்து இந்த உலக மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் எமது மண்ணின் மைந்தர்கள் தற்பொழுது மண்ணிற்குள் மைந்தனாகிக் கொண்டிருக்கிறார்கள்.

”வெளுக்காத சாயம் விவசாயம்” என்றான் கவிஞன். ஆனால், இன்றோ பயிர்களின் பச்சை நிறம் வெளுத்துப்போய் காற்றில் கரைந்து கொண்டிருக்கிறது.வாடிய பயிரைக் கண்டு கண்ணீர் விட இந்த
மேகங்கள் கூட மறுத்துவிட்டன.

 

       கலப்பையைப் பிடிக்க வேண்டிய கைகள் கடப்பாறையை பிடித்துக் கொண்டு கட்டிட வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. பயிர்களுக்கு விடுவதற்கு தண்ணீர் இல்லாமல் எங்களின் கண்ணீரை விட்டுக் கொண்டிருக்கிறோம். விதைக்கப்பட்ட விதைகளுக்கு இந்த விவசாயிகளின் உயிர் உரமாக்கப்படுகிறது.

 

       மாதம் மும்மாரி பொழிந்தது அந்தக் காலம். இப்பொழுது ஒரு ஆண்டிற்கு மும்மாரி பொழிவதே பெரும்பாடாக உள்ளது. மும்மாரியும் பொய்த்துவிட்ட நிலையில் அரசாங்கத்தின் மும்முனை மின்சாரமும் முரணாகிப்போனது. காத்துக் கொண்டிருந்தோம் காலம் வரும் என்று, காலம் முடிந்து போனதே தெரியாமல்.

 

இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் விவசாயியாகப் பிறத்தல் கொடுமை.அதனினும் கொடுமை தமிழக விவசாயியாகப் பிறத்தல். ஆம், முல்லைப் பெரியாறில் முடுக்கிவிடப்பட்டோம். காவிரியால் கைவிடப்பட்டோம். மின்சார இழப்பால் எங்கள் உயிரையே இழந்தோம். இவ்வளவு நடந்தும் இந்த மத்திய அரசின் மந்தமான போக்கைக் கண்டு வியக்கிறேன்.

 

      வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமலும் விதைத்த விதையை விளைவிக்க முடியாமலும் வானம் பார்த்த பூமியில் பூமியோடு சேர்ந்து நாங்களும் வானத்தை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். வாய்க்கரிசி மட்டும் தான் மிஞ்சியது.

        அரிசியை விளைவிக்கும் நாங்கள் எங்களின் வயிற்றுக்கு அரிசி கேட்டால் வாய்க்கரிசி போடுகிறது இந்த அரசாங்கம். மின்சாரம் கேட்டால் பற்றாக்குறை என்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்குத்  தடையற்ற மின்சாரம் என்று கேள்விபட்ட போது உடைந்தே போனேன்.

 

       அடுத்ததாக தமிழர்களின் கலாச்சார சீரழிவால் விவசாயம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை விளக்குகிறேன். இன்றைய சூழ்நிலையில் ரியல் எஸ்டேட் ஒரு மிகப்பெரிய வர்த்தகமாக வளர்ந்து  வருகிறது. நிலங்களை வாங்குவதும் விற்பதுமாக அடடே . . . என்னவொரு பெரிய வர்த்தகம். இதிலென்ன கலாச்சார சீரழிவு இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். கூறுகிறேன் நன்றாக கவனியுங்கள்.

 

   முன்பெல்லாம் தமிழர்கள் ஒரு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். தமிழர்களின் மிகப்பெரிய கலாச்சாரம் அது. ஆனால், இன்றோ கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடித்தனங்களாய் மாறி வருகின்றன. விளைவு வீடுகளின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் பெருகுகிறது. நான் முன்னரே குறிப்பிட்டது போல் விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. பெற்றவர்களுக்கு ஒரு வீடு, பிள்ளைகளுக்கு ஒரு வீடு, ஏன் இனிமேல் பிறக்கப்போகும் பேரக்குழந்தைகளுக்கும் இன்றே வீடு கட்டுகின்றனர். வானம் பார்த்த பூமியில் இன்று வானுயர கட்டிடங்கள்.

        விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து உங்களின் வாழ்க்கைத் தரத்தை கூட்டுகிறீர்கள். இதனால் பாதிக்கப்போவது எதிர்கால சந்ததியினரே.

 

       இந்திய நாட்டின் முதுகெலும்பாம் விவசாயம். அந்த முதுகெலும்பையே சுக்கு நூறாக உடைத்துவிட்ட பெருமை இந்த அரசாங்கத்தையும், மக்களையுமே சாரும்.

விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை அது ஒரு விபத்தே என்கிறது அரசாங்கம். உண்மையில் தற்கொலை செய்ய வேண்டியது விவசாயி அல்ல இந்த அரசாங்கமும் அதனை நடத்தும் அரசியல்வாதிகளும் தான். தற்கொலைக்குத் தூண்டுவது சட்டப்படி குற்றமென்றால் விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டிய அரசாங்கத்தை முதலில் தண்டிக்க வேண்டும்.

 

விஸ்வரூபம் படத்திற்கு அறிக்கைவிட்ட தலைவர்கள் விவசாயிகளின் தற்கொலைக்கு மெளனஅறிக்கை விட்டனரோ என்ற கேள்வி எழுகிறது. ஒரு படத்திற்கு இந்த அரசாங்கமும், தலைவர்களும், மக்களும் கொடுக்கும் முக்கியத்துவம் எமது உயிருக்கு கிடைக்கவில்லை என்று நினைக்கும் போது தற்கொலை

சேய்வதே மேல் என்று தோன்றுகிறது.. இதுபோன்ற இழிநிலையை வேறெங்கும் காண இயலாது.

 

  விவசாயத்தை இழிவாகக் கருதுகின்றனர் மேல்தட்டு மக்கள். நினைவில் கொள்ளுங்கள் நமது முன்னோர்கள் அனைவரும் ஒரு காலத்தில் விவசாயிகளே. அதேவேளையில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலையை விட்டு விட்டு விவசாயத்தைக் காக்க களம் இறங்கியுள்ள சில இளைஞர்களின் கால்களைத் தொட்டு வணங்குகின்றேன்.

 

நினைவில் கொள்ளுங்கள்….                                 

 

விவசாயி அழிகிறான் விவசாயமும் அழிகிறது இது நிகழ்காலம்.

விவசாயம் அழிகிறது மக்களும் அழிவார்கள் இது எதிர்காலம். . .

 

      இது போன்ற எதிர்காலத்தை எதிர்பார்ப்பதை நான் விரும்பவில்லை நீங்களும் விரும்ப மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் விளிம்பில் இருக்கும் விவசாயத்தை நாம் கட்டியிழுக்க வேண்டும்.

         விழியில் துளிகளோடு காத்திருக்கும் என்னைப்போன்ற விவசாயிகளுக்கு இந்த அரசாங்கமும், மக்களும் என்ன பதில் கூறப்போகிறார்கள். நீங்கள் பதில் கூறும் வரை என்னுடைய உயிரும் இங்கு இருக்குமா என்பதற்கு உத்திரவாதம் தர இயலாது.

 

நிம்மதியான தூக்கத்தில் நீங்கள்
நிம்மதியிழந்த ஏக்கத்தில் நாங்கள்

விழியில் துளிகளோடு நல்லதொரு விடியலுக்காக. . . .


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “இப்படிக்கு விவசாயி….”
  1. கிராமத்தான் says:

    இன்று ஆற்றில் / கிணற்றில் தண்ணீர் இல்லை; மின்சாரம் இல்லை; வேலை செய்ய கூலி ஆட்கள் தட்டுப்பாடு, உரத்தின் விலை பல மடங்கு அதிகமாகிக் கொண்டு இருக்கின்றது. அரசாங்கத்தின் கைங்கர்யத்தில் 100 நாட்கள் வேலையில்லா சம்பளம் திட்டம், மது விலையேற்றத்தை கருத்திற் கொண்டு தற்போது 150 நாட்களுக்கு வேலையில்லா சம்பளம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்&டி, ரிலையன்ஸ், டாடா போன்ற வட நாட்டு நிறுவனங்களின் மூலம் விவசாயம் செய்ய அரசாங்கம் வழி செய்து வருகின்றது. குடிமனைகளாக மாற்ற முடியாத நிலங்களை விவசாயிகள் குத்தகைக்கு விடும் சூழலை உருவாக்கி, ஏகாதிபத்தியத்தை வளர்க்க பாடுபடுகிறது. இதில் விவசாயியை பற்றி கவலைப்பட நாட்டில் யாரும் இல்லை. இப்போது எரிபொருள் விலையை ரிலையன்ஸ் எப்படி நிர்ணயம் செய்கிறதோ, அதேபோல் நாளை கத்திரிக்காயின் விலையும் இவர்களது கையில் இருக்கப் போகின்றது.

அதிகம் படித்தது