மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இயல் 11 – கதையின் நடை

ஆச்சாரி

Feb 1, 2013

மொழி, சிறுகதையின் தொனியுடனும் குரலுடனும் சம்பந்தப்பட்டுள்ளது. எப்படிக் கதையை வாசிப்பது என்பது பற்றியும் மொழி மிகுதியாகச் சொல்கிறது. கதையின் செயல் படும் பகுதி என்ற முறையில் ஆசிரியர் மனத்துள் என்ன இருக்கிறது என்பதையும் தெரிவிக்கிறது. படிக்கும்போதே நாம் படிக்க விரும்புகின்ற ஆசிரியர் இவர்தானா என்பதையும் நிறுவுகிறது. மொழியைக் கையாளுவது எவ்வளவு நயமானது அல்லது அதிகாரத் தன்மை வாய்ந்தது; கதையில் எவ்விதமான மொழி கையாளப்படுகிறது; என்ற கேள்விகள் மிக முக்கியமானவை.

ஓர் ஆசிரியர் தன்னை வெளிப்படுத்திக்கொள்கின்ற, தனது சிந்தனைகளையும், மைய நோக்கையும் எடுத்துரைக்கின்ற முறை நடை எனப்படுகிறது. நடை என்பது தனிப்பாங் கானது. இரண்டு எழுத்தாளர்களுடைய நடை ஒரேமாதிரி இருப்பதில்லை. எழுத்தாளரின் நடை தனிப்பாங்கானது என்றாலும் அது உருவானது அவருடைய சமூகப் பின்னணியினால் தான் என்பதை மறக்கலாகாது. புனைகதையில் நடை என்பது கதையை மொழிவாயிலாக உருவாக்கக் கையாளப்படும் மரபுகளைக் குறிக்கிறது. ஓர் எழுத்தாளர் தனது சொல்லாட்சி யைக் கட்டுப்படுத்துவது வாயிலாக, வாக்கிய அமைப்பு, தொடர்கள், உரையாடல், மொழியின் பிறகூறுகள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்திக் கையாளக் கூடும்.

நடையின் ஒரு சிறப்பான பகுதி, சொல்பயன்பாடு அல்லது சொல்லாட்சி (டிக்ஷன்) என்பது. இது வார்த்தைத் தேர்வு. முறைசார்ந்தோ, முறைசாராத நிலையிலோ, பேச்சு வழக்கிலோ, கொச்சைப் பேச்சிலோ வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்படலாம்.  முறைசார்ந்த வழக்கினைக் கல்விசார் நு£ல்களில், ஆய்வுக்கட்டுரைகளில், முறையான உரையாடல் சம்பவங் களில் காண்கிறோம். முறை சாராச் சொல் பயன்பாடு என்பதை இறுக்கமற்ற உரையாடல் களிலும் இலேசான எழுத்து வகைகளிலும் நகைச்சுவை எழுத்துகளிலும் பார்க்கலாம். கதைசொல்பவர் பயன்படுத்தும் சொற்களின் தொகுதியையும் சொல்லாட்சி என்ற சொல் குறிக்கிறது. சில ஆசிரியர்களின் சொல்லாட்சி சிறப்பானதாக இருக்கும். சிலரிடம் இருப்பதில்லை.

இங்கே மௌனியின் சொல்லாட்சி பற்றிக் குறிப்பிடுவது பொருந்தும். மௌனிக்குத் தமிழ்ச்சொல்லாற்றல் குறைவு. அவர் கதைகளைப் படிக்கும்போதே புலப்படும் விஷயம் இது. மௌனியின் நடை மிகவும் தனித் தன்மை வாய்ந்தது என்று க.நா.சுப்பிரமணியம்., பிருமீள், திலீப்குமார் போன்ற பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு குழந்தையின் பேச்சு இலக் கணத்திற்கு அப்பாற்பட்டது என்றாலும் நம்மை ஈர்ப்பதில்லையா? ஓர் அயல்நாட்டான் தமிழ் கற்றுக்கொள்ள முற்பட்டால் அவனது சொந்த மொழிச்சார்பு காரணமாகத் தமிழில் செய்யும் தவறுகள்கூட சமயங்களில் கலைப்பூர்வமாக ஆகிப்போவதில்லையா? அது போலத்தான் மௌனியின் நடையும். அவருக்குப் போதிய அளவு தமிழ் கைவராது என்பது உண்மை. ஆங்கிலத்தில் எழுதித் தமிழில் அவர் பலசமயங்களில் மாற்றியதையும் குறிப்பிட்டிருக் கிறார்கள். அதனால் ஏற்படும் மொழியின் அந்நியத்தன்மையும் குழந்தையின் வெளியீடு போன்ற தன்மையும்தான் மௌனியின் நடையில் கவர்ச்சியைத் தருகின்றன.

பேச்சுவழக்கு என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் தங்களுக்குள் அன்றாடப் பேச்சுக்குப் பயன்படுத்துகின்ற மொழிப்பயன்பாடு. கொச்சைப் பேச்சு என்பது குறிப்பிட்ட குழுவினர் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் வழக்குகள். இன்னும் கொச்சைப் பேச்சுச் சொற்கள் தமிழில் எந்த அகராதியிலும் இடம் பெறவில்லை. ஆங்கிலத்தில் அந்தந்த வட்டாரத்திற்கான கொச்சைப் பேச்சு அகராதிகள் (dictionary of slang) தனியாகவே உண்டு. தனது மண்சார்ந்த கதைகளைப் பதிவுசெய்யும்போக்கில் கி. ராஜநாராயணன் கொச்சைப் பேச்சுகளையும் இழி வழக்குகளையும் மிகுதியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

பலவிதமான வாக்கிய அமைப்புகளையும், தொடர்களையும், சொற்களையும், வினைச் சொற்களையும் பயன்படுத்த வாய்ப்பளிக்க வல்லதாகத் தமிழ் வளம் அமைந்திருக்கிறது. ஒரு சிந்தனையையோ, வருணனையையோ, செயலையோ வடிவமைப்பதில் இந்த வளத்தையும் பன்முகத்தன்மையையும் புனைகதை ஆசிரியர்கள் பயன்படுத்துகிறார்கள். வெவ்வேறு விதமான மொழித்தேர்வுகள் எந்த ஒரு வெளியீட்டுச் சந்தர்ப்பத்திற்கும் பலவித நடைகளின், தொனிகளின் வீச்சை உருவாக்க முடியும். பல்வேறுவித நடைகளும் தொனிகளும் கதைக்கு அதன் தனித்தன்மை வாய்ந்த அர்த்தத்தைக் கொடுக்கின்றன. பலசந்தர்ப்பங்களில் கதையை நடத்தும் நடை என்பது அதன் உள்ளடக்கத்திற்குச் சமமான முதன்மை வாய்ந்தது.

ஒரு கதாசிரியர் எந்த விதமான சொற்களை மிகுதியாகத் தேர்ந்தெடுத்து அமைக்கிறார் என்பது கதைப்பொருளைச் சார்ந்தது என்றாலும் அவருடைய தனித்தன்மையையும் காட்டு கிறது. உதாரணமாக, ஒரு கதைப்பகுதியில் அதிகமான அளவில் செயல்சார்ந்த வினைச் சொற்கள் இருப்பது, ஒரு செயலு£க்கமான-இயங்குகின்ற-வேகமான கதாபாத்திரத்தைச் சுட்டுகிறது. மனநிலைகள் சம்பந்தப்பட்ட வினைச்சொற்கள் மிகுதியாகக் காணப்படுவது ஒரு உள்நோக்குக் கதாபாத்திரத்தைக் காட்டுகிறது. இதேபோலச் சொற்றொடர் அமைப்பினை நோக்கும்போது, ஒரு பிரதியின் வாக்கியங்கள் எவ்விதம் அமைந்திருக்கின்றன-சிறியனவாக அல்லது நீளமாக, எளியதாக அல்லது சிக்கலானதாக, தெளிவுபட அல்லது கடுஞ்சொற்கள் நிரம்பியனவாக-எப்படி வாக்கியங்கள் அமைந்திருக்கின்றன என்பதைக் காணவேண்டும்.

எழுத்தாளரின் நடையைக் காண்பதற்கு வசதியாக, செயல், சுருக்கம், உரையாடல், உணர்ச்சிகள்/எண்ணங்கள், பின்னணி என்று சிலர் பகுத்துக்கொள்கிறார்கள். சிலர் ஆறுவகைகளாக-செயல், வெளிப்பாடு, வருணனை, உரையாடல், சுருக்கம், மாற்றம் என்று பகுத்துக்கொள்கிறார்கள். இன்னும் சிலர், செயல், உரையாடல், சிந்தனைகள், சுருக்கம், காட்சி, வருணனை என்று பிரிக்கிறார்கள்.
மேற்கொண்டு நடை பற்றிச் சொல்வதற்கு முன்னால் சில எழுத்தாளர்களின் எழுத்துப் பகுதிகள் கீழே உதாரணமாகத் தரப்படுகின்றன. அவற்றை வைத்து அவர்களைப் பற்றிய மதிப்பீடுகளை நீங்களே உருவாக்கலாம்.

சம்பத் (‘இடைவெளி’)
[டிப்ளமேடிக் என்க்ளேவிலிருந்த பிரகாஷ் மேல் எனக்கு ரொம்ப பிரியம். (Blighter he was a great runner. Above all he had tremendous will power). அவன் சாரங்கனோடு அட்லீஸ்ட் செகண்ட் ப்ளேஸ் வாங்கணும்னு நூறு கஜத்துக்கும் மேலேகூட ஓடி கடைசி லேப்பில் சாரங்கனை அவுட்விட் செய்து நூலிழையில் ஜெயித்ததை என்னால் என்றென்றும் மறக்கமுடியாது.
"டோன்ட் லீவ் மி...ஐ ஃபீல் லோன்லி" என்றான் சாகேத்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லை...கோ ஹேவ் எ பாத்...ட்ரை டு ஸ்லீப்...நாளைக்கு ஆபீஸ் இருக்கு" என்றான் நாராயணன்.
"நோ, ஸ்டே வித் மி...ஸ்டே ஃபார் ஃபியூ ஹவர்ஸ்....ஐ நீட் இட்" என்றான் சாகேத்.
"என்ன பண்ணுவது?" என்றான் நாராயணன்.
ஏதோ டான்ஸ் புரோக்ராமைப் பற்றிச் சொன்னான் சாகேத். அப்போது தான் கனாட் பிளேஸில் அந்த டான்ஸ்+யீடிங் ஆரம்பித்திருந்தார்கள்.]
மௌனி (பிரக்ஞை வெளியில்)
[அவளை மனைவியாக அடைந்தது என் பாக்கியமென்றாலும் தவறியே இவ்வுலகில் பிறந்த அவள் என்னை அடைந்ததும் அவளுக்கு ஒருவித பாக்கியம்தான். அவளை நான் இப்போது பார்க்கும்போது என்னென்னவோ தோன்றுகிறது...மனைவியை கணவன் பார்ப்பதில் என் னென்னவோ எல்லையற்றுத் தோன்றவிருக்கிறது. சிறிதுகாலமாக என்பிரியம் அவளிடம் அளவுகடந்துவிடுகிறது...உடனே மனது ஒரு பயமடைகிறது...பயம் என்று சொல்லுவது சரி யல்ல. மனத்தில் ஒரு விநோத பயங்கரம் காணுகிறது. அந்த பயங்கரத்தில் ஒரு வசீகரமும் காணமுடிகிறது போலும்......இங்கேயும் பெண்ணைப் பார்க்கும்போது அவளைக் காணும் தோற்றம் கொள்ளுகிறேன்.]
மௌனி (மனக்கோட்டை)
["இப்போது யதேச்சையாகவா வந்து சேர்ந்தேன்? இல்லை. என் வாழ்க்கை அவன் கற்பனை யில் என்பதில் அவர்களும் கூட இருப்பது உங்களுக்குத் தெரியவில்லை, இப்போது?-நான் இருப்பதில்" என்றான்.
தெரிவதுபோன்ற தோற்றம் சிறிது கொண்டும், அவன் பார்க்குமிடத்தைப் பார்க்காது, அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர் அவர்கள். இவன் மனம் தடுமாறுவதாகவும் சிறிது எண்ணமடைந்தனர் போலும்...]
இமையம் (நல்ல சாவு)
["யே பையா, செத்தெ செட்டியாரு கடயமுட்டும் போயிட்டுவாடா".
"எனக்கு எயிதுற வேலெ இருக்கு. நீயே போயிட்டு வா".
"இப்பதான் ஒரேமுட்டா எயிது எயிதுன்னு எயிதிறியா? நீ படிச்சதெல்லாம் போதும், போடா".
"எயிதலன்னா வாத்தியாரு அடிப்பாரும்மா".
"காயி ஒண்ணும் ஆப்புடல. குழம்பு வைக்கல. ரசம் வைக்கலாமின்னா பூண்டக் காணும். காட்டுலருந்து வர்ற மனுசன் ஊட்டுக்கு வந்ததுமே சோறு எங்கடின்னு கேட்டுதான் வருவாரு. செத்த போடா" என்று சொல்லிக் கட்டாயப்படுத்திக் கதிரவனைப் பார்வதி அனுப்பி வைத்தாள். முனகிக்கொண்டு வந்தவனிடம் "காசியக் கீய போட்டுடாத. பத்தரம். சட்டு சடுக்குனு வாடா" என்று பார்வதி கத்தியது கேட்டது. "மயிரு காசி" என்றான் கதிரவன்.]
சுந்தர ராமசாமி (கோலம்)
[வானம் இருண்டுகொண்டு வந்தது. மலைத் தொடர்களின் உச்சிகளில் கரிய மேகங்கள் படர்கின்றன. கணத்துக்குக் கணம் வானத்தின் முகவிலாசம் மாறிக்கொண்டு வந்தது. பெரும் மழையின் வருகையை எண்ணிக் காடுகளும் தோப்புத் துரவுகளும் புதரும் மணத்தக்காளி களும் கள்ளிகளும் குது£கலம் கொள்வதுபோல் தோன்றிற்று. ரயிலடி உலோகங்களுக்கு இந்தக் குதூகலத்தில் பங்குகொள்ளத் தெரியவில்லை. வர இருக்கும் மழை பற்றிய பிரக் ஞையே அவற்றுக்கு இல்லை. நன்றாக இருண்டுவிட்டது. முதல் துளிகளின் வெளிப் பாட்டைத் துல்லியமாகப் பிடிக்கக் கிழவர் விழிப்புடன் இருந்தார். எண்ணற்ற மழைகளின் முதல் தோற்றங்கள் அவர் மனப்பதிவில் இருந்தன. ஆனால் ஒவ்வொரு தடவையும் பழைய மழையைப் போலி செய்யும் யோசனை சிறிதும் இன்றிப் புதுமாதிரியாக வந்திருக்கிறது மழை. மங்கிய வெளிச்சத்தில் வீணைக் கம்பிகளின் தெறிப்புகள் கீழ்நோக்கி வருகின்றனவா என்று பார்த்தார்.]
புதுமைப்பித்தன் (சாப விமோசனம்)
[ரதத்தை விட்டு இறங்கிய ராமனது நெற்றியில் அனுபவம் வாய்க்கால் வெட்டியிருந்தது. சீதையின் பொலிவு அனுபவத்தால் பூத்திருந்தது. இருவர் சிரிப்பின் லயமும் மோக்ஷ லாகிரியை ஊட்டியது.
ராமனை அழைத்துக்கொண்டு கோதமன் வெளியே உலாவச் சென்றுவிட்டான்.
தன் கருப்பையில் கிடந்து வளர்ந்த குழந்தையால் சுரக்கும் ஒரு பரிவுடன் அகலிகை அவளை உள்ளே அழைத்துச் சென்றாள். இருவரும் புன்சிரிப்புடன் உட்கார்ந்திருந்தார்கள்.
ராவணன் து£க்கிச் சென்றது, துன்பம், மீட்பு எல்லாவற்றையும் துன்பக்கறை படியாமல் சொன்னாள் சீதை. ராமனுடன் சேர்ந்து விட்ட பிறகு துன்பத்துக்கு அவளிடம் இடம் ஏது?
அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். அகலிகை துடித்துவிட்டாள்.
"அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய்?" என்று கேட்டாள்.
"அவர் கேட்டார்; நான் செய்தேன்" என்றாள் சீதை, அமைதியாக.
"அவன் கேட்டானா?" என்று கத்தினாள் அகலிகை; அவள் மனசில் கண்ணகிவெறி தாண்டவமாடியது.
அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா?
ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா?
இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தனர்.
"உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?" என்றாள் அகலிகை. வார்த்தை வறண்டது.
"நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப்போகிறதா, உள்ளத்தைத் தொடவில்லை யானால்? நிற்கட்டும். உலகம் எது?" என்றாள் அகலிகை.]

அசோகமித்திரன் (காலமும் ஐந்து குழந்தைகளும்)

நாளையோடு இருபத்தைந்து வயது முடிகிறது. இனிமேல் இந்தமாதிரி இடங்களில் உத்தியோகம் எதிர்பார்க்க முடியாது. வேலைவாய்ப்பு என்பது நாளை கழிந்தால் அப்படியே ஒன்றுக்குக் காலாகிவிடும். முழுவாசி வேலைவாய்ப்பில் படிப்பு முடிந்து இந்த ஆறு வருஷங் களில் விட்டுவிட்டு எண்பத்தொரு நாட்கள் தினக்கூலி வேலை. ஒரு மாதம் நான்கு நாட்கள் ஒரு பண்டாபீசில் தற்காலிகமாக. அவ்வளவுதான். ஒருவேளை வேலைக்கென்று உண்மையாகவே தீவிரமாக முயற்சி செய்யவில்லையோ? முயற்சி. விடாமுயற்சி. தீவிர முயற்சி. முயற்சி திருவினையாக்கும். திருவினை யாக்கும். பணக்காரன் ஆகலாம். பணம் வந்தால் ரெயில் நிலையத்துக்கு பஸ்ஸில் வரவேண்டாம். ஒரு டாக்ஸியில் குறித்த நேரத்தில் வரலாம். ரெயில் பின்னால் சிறகொடிந்த நெருப்புக்கோழிபோல ஓடவேண்டியதில்லை. அதுவும் “ஹோல்டான்! ஹோல்டான்!” என்று கத்திக்கொண்டு. இந்த ஹோல்டான் என்ற சொல்லே தரித்திரத்தின் குறியீடு.
வண்ணதாசன் (தனுமை)
கைலியை இறக்கிவிட்டுக்கொண்டு நோக்காலில் இருந்து இறங்கினான். இறுக்கிக் கட்டின போச்சுக் கயிறு கீச்சென முனகியது. தொழுவங்களில் மூங்கில் தடியினால் தண்டயம் போட்டிருப்பதுபோல வண்டி போகவர மட்டுமே புழங்குகிற அந்த தடுப்புக்கு அப்புறம் தனுவும் அவள் தம்பியும் நின்றுகொண்டிருக்கிறார்கள். தம்பி சடக்கென்று காலை தவ்வலாகப் போட்டு குனிந்து உட்பக்கம் வந்துவிட, ஒரே ஒருவிநாடி அவள் விசாலமான தனிமையில் நின்றாள். பின்னால் பொருத்தமற்ற பின்னணியாய்ப் பாலையான மணல் விரிப் பும் உடை மரங்களும். உடைமரம் பூத்ததுபோல மெல்லிசான மணமாக இவள், தனு.
நாஞ்சில்நாடன் (இந்நாட்டு மன்னர்கள்)
வாக்கெடுப்பு நடக்கப்போகும் அரசினர் ஆரம்பப் பள்ளி, ஊர் எந்த மூலையிலிருந்து நடந்தாலும் அரைபர்லாங்குதான். ஆனாலும் முடிசூடா மன்னர்களை நடத்தியா கொண்டு செல்வது?
மறுநாள் பொழுது கலகலப்பாக விடிந்தது. தானாகப் பழுக்காததை தல்லிப் பழுக்கவைப்பது போன்று சூரியன் கிழக்கில் எழச் சற்றுத் தாமதமாகியிருந்தால், கயிறுகட்டி இழுத்துக்கொண்டு வந்திருப்பார்கள். அவ்வளவு அவசரமும் பதற்றமும்.
ஆறுமணிக்குப் பூசணிக்காயின் மகனும் மருமகளும் ஊரழைக்க வந்தார்கள். அதைத் தொடர்ந்து உருளையின் மகளும் மருமகனும் ஊரழைத்தார்கள். காலைக்காப்பிக்கான சன்னத் தங்கள். அதிகாலையிலேயே வைத்தியனைப் பாதுகாப்பான இடத்தில் கொண்டுவந்து வைத்து விட்டான் மாணிக்கம். அங்கேயே கிணற்றுத் தோட்டத்தில் குளிக்கச் செய்து, புதிய வேட்டியை யும் துவர்த்தும் உடுத்து, வெண்ணீறு பூசி, ஒரே அலங்கரிப்பு. அவனுக்கே ஒரு புளகாங்கிதம். ஊராட்சித் தேர்தல் மாதம் ஒருமுறை வந்தால் எப்படி இருக்கும் என்று அவன் எண்ணினான்.
பத்துமணிக்குமேல் வாக்கெடுப்பு துரிதகதியில் நடைபெறலாயிற்று. டாக்ஸிகள் எழுப்பும் புழுதிப்படலம். வில்வண்டிக் காளைகள் குடம்குடமாகப் பீச்சித் தெருக்களை மெழுகின. சைக்கிள்கூட நுழைந்திராத முடுக்குகளிலெல்லாம் கார் நுழைந்து தேடிப்பிடித்து வாக்காளர் களை இழுத்தது.

சுஜாதா (நகரம்)
சுவர்களில் ஓரடிஉயர எழுத்துகளில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை-ஆ.கே. கட்பாடிகள்-எச்சரிக்கை! புரட்சித்தீ!-சுவிசேஷக் கூட்டங்கள். ஹாஜி மூசா ஜவுளிக்கடை (ஜவுளிக் கடல்)-30.9.73 அன்று கடவுளை நம்பாவதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்.
மதுரையின் ஒரு சாதாரண தினம். எப்போதும்போல் பைப் அருகே குடங்கள் மனிதர்களுக் காக வரிசைத் தவம் இருந்தன. சின்னப்பையன்கள் டெட்டானஸ் கவலை இன்றி மண்ணில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ்கள் தேசீயம் கலந்த டீஸல் புகை பரப்பிக்கொண்டிருந்தன. விறைப்பான கால்சராய் சட்டை அணிந்த, புரோட்டீன் போதா போலீஸ்காரர்கள் ‘இங்கிட்டும் அங்கிட்டும்’ செல்லும் வாகன-மானிடப் போக்கு வரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நகரின் இயக்கம் ஒருவித ப்ரௌனியன் இயக்கம்போல் இருந்தது. (பௌதிகம் தெரிந்தவர்களைக் கேட்கவும்)…..

நம் கதை இந்த நகரத்துக்கு இன்று வந்திருக்கும் ஒரு பெண்ணைப் பற்றியது.

கொஞ்சம் உதாரணங்கள் நீண்டுவிட்டன. இருந்தாலும் பெரும்பாலும் கவனிக்க வேண்டிய வார்த்தைகளையும் தொடர்களையும் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். எல்லா வாக்கியங்களுமே கவனிக்கப்பட வேண்டியவைதான், வாக்கிய அமைப்புகள், வார்த்தை அடுக்குகள், முறைவைப்புகள் எல்லாமே கவனிக்கப்பட வேண்டியவைதான் என்றாலும் தொடக்கத்தில் நடைக்கென்று எவற்றை கவனிப்பது என்பதற்காக இவை தரப்பட்டன.

மேற்கண்ட உதாரணங்களைப் பார்க்கும்போது சில விஷயங்கள் புலனாகின்றன.
1, செம்மைப்படுத்தப்பட்ட பேச்சுமொழி, கொச்சை மொழி, செம்மையான மொழி ஆகிய எல்லாவற்றையுமே எழுத்தாளர்கள் கையாளுகின்றனர்;
2. பொதுமொழிக்கான சொற்கள், வட்டாரமொழிக்கான சொற்கள், குறித்த அறிவுப் பரப்புக் கான சொற்கள் ஆகியவற்றையும் உரிய இடங்களில் தேர்வு செய்கின்றனர்;
3. வாக்கியங்களையும் தொடர்களையும் கிளவிகளையும் உரியவாறு தேர்வு செய்கின்றனர்;
பழமொழிகள், மரபுத்தொடர்கள் (இவற்றைச் சொலவடை என்று கி. ராஜநாராயணன் போன்ற எழுத்தாளர்கள் குறிப்பிடுவர்) ஆகியவற்றை உரியவாறு கையாளுகின்றனர்;
4. தேவையான இடங்களில் உருவகம், உவமை போன்ற அணிகள் அமைந்த வருணனை களையும் கையாளுகின்றனர்.
5. தேவையான இடங்களில் இலக்கண அமைப்பிலும் உரிய மாற்றங்களைச் செய்துகொள் கின்றனர்.
6. சிலர் தேவை கருதியும், சிலர் தேவையின்றியும்கூட, பிறமொழிச் சொற்களைக் கையாளுகின்றனர்.

மேற்கண்ட உதாரணங்களில் இந்த ஐந்து விதமான மாற்றங்களுக்கும் சான்றுகள் இருக்கின்றன. முயற்சி திருவினையாக்கும் என்ற வள்ளுவத் தொடரை அசோகமித்திரன் சிலே டையாகக் கையாளுவதைப் பார்க்கலாம். இவ்வாறே உருவகங்கள், உவமைகள் அநேகம் பயின்று வருவதை நீங்களே கண்டுபிடிக்கலாம். நகர இயக்கம் பிரௌனியன் இயக்கம் போல இருந்தது என்பதில் உவமையோடு, பௌதிகத்துக்கான தனித்த சொற்பயன்பாடும் (இவற்றை ரெஜிஸ்டர் என்பார்கள்) இருக்கிறது. இராமனை அவர் அவர் என்றே குறிப்பிட்டு சீதையும் அகலிகையும் பேசிக்கொண்டுவர, கடுஞ்சினமுற்ற நிலையில் அகலிகை மரியாதையைக் கைவிட்டு அவன் என்று குறிப்பிடுவதாக எழுத்தாளர் அமைப்பதைப் பார்க்கிறோம். இவ்வாறு கூர்ந்து ஆராயத்தக்க பலவிதப் பண்புகளையும் மேற்கண்ட உதாரணங்கள் கொண் டுள்ளன.

சாதாரணமாக, கட்டுரைகளுக்கான நடை பொது இலக்கணப்படி அமைகிறது என்று வைத்துக்கொள்வோம். (அவற்றிலும் தனித்தன்மைகள் உண்டு, இப்போது அதற்குள் நுழைய வேண்டாம்.) தமிழின் பொது வாக்கிய அமைப்பு என்பது எழுவாய் + செயப்படுபொருள் + வினைமுற்று (பயனிலை) என்ற முறையைக் கொண்டது. இவற்றுடன் நாம் பலவித சேர்க்கை களை இணைக்கிறோம். தொடர்கள் (phrases), கிளவிகள் (clauses) முதலியன அவ்வாறு இணைக்கப்படுகின்றன. தமிழ்க்கிளவிகளுக்கு அடிப்படையாக எச்சங்கள்-வினையெச்சமும் பெயரெச்சமும்-அமைகின்றன. இவற்றை வாக்கியங்களில் முறைமாற்றி அமைப்பதன்மூலம் வெவ்வேறு விளைவுகளை உண்டாக்க முடியும்.

இவ்வாறு கிளவிகளையும் தொடர்களையும் மாற்றி அமைத்தல், வாக்கிய அமைப்பை மாற்றிக் கையாளுதல் (உதாரணம்£க, வினைமுற்று + எழுவாய் + தொடர் என்பது போல), வெவ்வேறு வகை வாக்கியங்களைக் கையாளுதல், அணிகளைக் கையாளுதல், பழமொழிகளை யும் மரபுத்தொடர்களையும் கையாளுதல் போன்றவற்றை எல்லாம் விலக்கங்கள் (deviations) என்று கூறலாம். ஒருவரது தனித்த நடை-நடந்துசெல்லும் நடையே-விலக்கங்களால்தான் தீர்மானமாகிறது. உதாரணமாக, “அதோ தாங்கித்தாங்கி நடந்துசெல்கிறாரே அவர்” என்கிறோம். அல்லது “வாத்துமாதிரி நடந்துபோகிறாளே அவள்” என்கிறோம். “கையைப் பின்புறம் கட்டிக் கொண்டு உலாவுகின்றாரே, அவர்தான் நான் சொன்னவர்” என்கிறோம். பலசமயங்களில் பின்னாலிருந்து பார்க்கும்போதே இன்னார்தான் என்று நடையை வைத்துத் தீர்மானிக்கி றோம். ஒரேமாதிரிப் பாணியில் எல்லோருமே நடப்பதாக இருந்தால், நாம் இப்படிக் கண்டு பிடிக்கவே முடியாது. அதுபோல எழுத்தாளர்களிலும் குறிப்பிட்ட முறையில் காணப்படுகின்ற விலக்கங்கள்தான் அவரவர் தனித்த நடையைக் காட்டுகின்றன. மேலே உதாரணங்களில், மௌனி, வண்ணதாசன் போன்றோர் நடையில் இந்த விலக்கப் பண்பை தெள்ளத் தெளிவாகவே காணமுடியும்.

மேலே காட்டிய உதாரணங்களில், சம்பத்தின் நடை தேவையின்றி மிக அதிகமாக ஆங்கிலச் சொற்களையும் வாக்கியங்களையும் அப்படியே கையாளுகிறது. சிலசமயங்களில் அவர் அப்படியே ஆங்கிலத்தில் எழுதிவிடுகிறார், சிலசமயங்களில் ஆங்கிலத் தொடர்களைத் தமிழில் எழுதுகிறார். இவ்வாறு செய்யும்போது பலருக்குப் புரியாமல்போக வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, “அவன் சாரங்கனோடு அட்லீஸ்ட் செகண்ட் ப்ளேஸ் வாங்கணும்னு நு£று கஜத்துக்கும் மேலேகூட ஓடி கடைசி லேப்பில் சாரங்கனை அவுட்விட் செய்து நூலிழையில் ஜெயித்ததை என்னால் என்றென்றும் மறக்கமுடியாது.” என்ற அவரது வாக்கியத்தை, “அவன் சாரங்கனோடு குறைந்தபட்சம் இரண்டாவது இடத்திலாவது வரவேண்டுமென்று நூறு கஜத் துக்கும்¢மேலே கூட ஓடி கடைசிச் சுற்றில் சாரங்கனைச் சாதுரியத்தினால் நூலிழையில் ஜெயித்ததை என்னால் என்றென்றும் மறக்கமுடியாது” என்று தமிழிலேயே எழுதலாம்.

மௌனியின் நடையில் தோற்றம் காணுகிறது, காணுகிறது போலும், தோற்றம் கொள்கிறது, தோற்றம் கொள்கிறேன், எண்ணமடைந்தனர் போலும் போன்ற தொடர்கள் அடிக்கடி அமைவதைக் காணமுடியும். இவை அவரது நடையின் தனித்தன்மைகள் மட்டுமல்ல, அவரது கதைத் தலைமக்கள் உறுதிப்பாடின்றி எப்போதும் ஒருவித ஈரடித்தன்மையிலேயே-சிந்தனை மயக்கத்திலேயே இருப் பதையும் அது காட்டுகிறது. இப்படித்தான் நடை கதை மாந்தர்களை வடிவமைக்கிறது.

இமையத்தின் நடையில் தென்ஆர்க்காடு மாவட்டத் தமிழ்ப் பேச்சு வழக்கை நாம் நன்றாகக் காணமுடியும். குறிப்பாக ழகரத்தை யகரமாக்கி உச்சரிக்கும் போக்கு கவனிக்கத் தக்கது. எழுது என்பதை எயிது என்றும், காசு என்பதைக் காசி என்றும், சற்றே என்பதைச் செத்த என்றும் பேச்சுவழக்கிலேயே எழுதும் போக்கினை கவனியுங்கள்.

சுந்தர ராமசாமியின் நடையில் குமரிமாவட்டத்திற்குரிய வாக்கிய அமைப்புகளும் சொற்களும் தென்பட்டாலும் அவற்றை மீறி அவருடைய உருவகப்பாங்காகக் கதைசொல்லும் நடைத் தன்மை நிற்கிறது என்பதை உணரமுடியும்.

உயர்வு நவிற்சி என்பது மிகைப்படுத்திக் கூறுதல். “நான் உன்னை அறையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று லட்சம் தடவை சொல்லியிருக்கிறேன்” என்னும் போது நிகழ்வது உயர்வு நவிற்சி. நாஞ்சில்நாடன், கிண்டல் செய்வதற்காகவே உயர்வு நவிற்சி யைச் சிறப்பாகக் கையாண்டிருப்பதை மேற்கண்ட உதாரணத்தில் பார்க்க முடியும்.

ஆய்வுநடை, இராணுவச்சிப்பாய்கள் போல, அல்லது என்.சி.சி. மாணவர்கள் பேரேடு நடக்கும்போது நடப்பதுபோல ஒரேமாதிரியாகத் தோற்றம் கொள்ளுகின்ற இறுக்கமான நடை. அந்தச் சிப்பாய்கள், அல்லது என்.சி.சி. மாணவர்களே சற்றே தொய்ந்து தளர்வாக நடந்துவரும் நடை போன்றது பொதுக்கட்டுரை நடை. ஆனால் எழுத்தாளர்களின் நடையோ மனிதர்களில் எத்தனை விதம் உண்டோ, அவர்கள் எத்தனை எத்த¬ன்விதங்களில் தெருக்களில் நடந்துபோகிறார்களோ, அவற்றைப்போல வேறுபாடுகள் கொண்டது. ஆகவே மொழியில் காணப்படும் விலக்கங்களை வைத்துத்தான்-அதாவது தனித்தன்மைகளை வைத்து எழுத்தாளரின் நடையைத் தீர்மானிக்கவேண்டும். இந்த அறிமுகத்தில் இதற்குமேல் நடைத் தன்மை பற்றி அறிமுகப்படுத்த இயலாது. குறிப்பாக ரோஜர் ஃபௌலர், பீட்டர் விடோசன் போன்றவர்கள் ஆங்கிலத்தில் இதுபற்றி எழுதிய விரிவான நு£ல்களைப் பயின்று நடையைத் தனியே ஆராய்ச்சி செய்யலாம். மிகத் துல்லியமாக மொழியியல் ரீதியாக நடையை ஆராயும் முறை ஸ்டைலிஸ்டிக்ஸ் எனப்படுகிறது. அதற்கு மொழியியலை முதலில் செம்மையாகப் பயில வேண்டும். ஆனால் ஆங்கிலத்தில் ரோஜர் ஃபௌலர், தமிழில் செ.வை. சண்முகம், அகத்தியலிங்கம், ஜெ. நீதிவாணன் போன்றவர்கள் எழுதிய நூல்களைப் பயின்றால், மொழியியல் அறிவு இன்றியே செம்மையாக நடையை ஆராய முடியும். இலக்கியரீதியாக நடையை அணுக இவை போதுமானவை.

இலக்கியச் சொல்லாட்சி பற்றிய ஆய்வு எவ்விதம் தொனியையும் பாத்திரப் படைப்பையும் சொற்கள் உருவாக்குகின்றன என்பதைக் காட்டுகிறது. இவ்வாறே இங்குத் தந்திருக்கும் மற்ற உதாரணங்களையும் அவற்றின் விலகல்களுக்காக ஆராய்ந்து பாருங்கள். மேலும் நீங்கள் படிக்கின்ற கதைகளையும் விலகல்தன்மை என்பதை மனத்தில் கொண்டு ஆராய்ந்து பார்க்க முயலவும்.

கதையின் நடையைச் செறிவாக்கியதில் சிலருக்குப் பங்கு உண்டு. புதுமைப் பித்தன், தி. ஜானகிராமன், அசோகமித்திரன் போன்றவர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். நடையை இலேசாக்கி, ஜனரஞ்சகப் பயன்பாட்டுக்கு உரியதாக்கியவர்கள் சிலர். கல்கி, தேவன், சுஜாதா, பாலகுமாரன் போன்றவர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

காலத்திற்குக் காலம் நடை மாறுகிறது. எனவே எந்தக் காலத்தில் ஒரு படைப்பு எழுதப்படுகிறதோ அதற்குத் தக்கவாறு நடை அமைகிறது. அந்தக்கால நாவலான பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம் போன்ற நாவல்களைப் படித்துவிட்டு, இன்று சுஜாதா போன்றவர்கள் எழுதிய நாவல்களைப் படித்துப் பார்த்தால் இந்த வேறுபாடு மிகவும் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

Sample questions clue directions enter a number by fi lling in circles in a grid

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இயல் 11 – கதையின் நடை”

அதிகம் படித்தது