மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இயல் 4 – சிறுகதையின் கூறுகள்-பாத்திரவார்ப்பு

ஆச்சாரி

Oct 1, 2012

ஒரு கதையின் செயல்களில் பங்கு கொள்ளும் ஒரு மனிதரோ, விலங்கோ எவராயினும் கதாபாத்திரம் எனப்படுகிறார். கதையே மனிதர்களை (அல்லது மனிதர்களை உட் பொருளாகக் கொண்ட விலங்குகளை)ப் பற்றியதுதானே? மனிதர்கள் இல்லாமல் கதை ஏது?

பாத்திரம்(கேரக்டர்) என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன. ஒருவரது குணாதிசயங்களைக் குறிக்கும் சொல்லாக அது அமைகிறது. கதையில் வரும் மனிதரைக் குறிக்கும் சொல்லாகவும் அது இருக்கிறது. அது  அஃறிணைப் படர்க்கைச் சொல்லாக இருக்கிறது. எனவே சிலர் கதைமாந்தர் என்ற உயர்திணைச் சொல்லைப் பயன் படுத்துகிறார்கள்.

முன் இரண்டு இயல்களில், எளிமைக்காக வேண்டி, (ஏதோ இரண்டும் வெவ்வேறு என்பதுபோலக்) கதாபாத்திரத்தைத் தவிர்த்துக் கதைப்பின்னல் பற்றி மட்டும் பேசப்பட்டது. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல, ஓர் அளவுகோலின் இருமுனைகள் போல, ஒரு சீசாப்பலகையின் இருபக்கங்கள் போல, பாத்திரவார்ப்பும் கதைப்பின்னலும் ஒரே விஷயத் தால் ஆனவை. ஒன்று இல்லாமல் இன்னொன்று இருக்க இயலாது. சீசாப்பலகை என்ற உதாரணம் இங்கே பயனுள்ளது. கதை, பொழுதுபோக்கிற்கானது என்றால் கதாபாத்திர முனை தாழ்ந்திருக்கும்-கதைப்பின்னல் முனை உயர்ந்திருக்கும். கதை வாழ்க்கை விளக்கத்தை நோக்கிச் செல்லச்செல்ல, கதைப்பின்னல்முனை தாழ்ந்து பாத்திரவார்ப்புமுனை உயர்ந்து கொண்டே செல்லும். தேர்ந்த வாசகர்கள், நிகழுகின்ற சம்பவங்களைக் காட்டிலும், அவை ஏன் நிகழ்கின்றன என்பதில்தான் அக்கறை காட்டுகிறார்கள்.

கதாபாத்திர வார்ப்புக்காக வாசிப்பது, வெறுமனே கதைக்காக வாசிப்பதைவிடக் கடினமானது. ஏனெனில் பாத்திரவார்ப்பு சிக்கலானது. ஒரு குறிப்பிட்ட கதைமாந்தர் என்ன செய்தார் என்பதை யார் வேண்டுமானாலும் எளிதில் சொல்லிவிடலாம். ஆனால் அந்தப் பாத்திரம் யாராக இருக்கிறார் என்பதை அவ்வளவு எளிதில் கூறிவிட முடியாது. மனித இயற்கைக்குச் சமமான சிக்கல் கொண்டது உலகில் எதுவுமே இல்லை. குற்றக்கதைகள் போன்றவை கதைப்பின்னலை வலியுறுத்தி, கதாபாத்திர வார்ப்பைச் சிக்கலற்றதாக ஆக்கு கின்றன. முதிர்ச்சி குறைந்த வாசகர்கள், எளிய கதாபாத்திரங்களையே விரும்புகிறார்கள். அவர்கள் எளிதில் அடையாளம் காணக்கூடியவர்காக இருக்கவேண்டும், நல்லவன் அல்லது கெட்டவன் என்று முத்திரை குத்தவேண்டும்.

மேலும் வரையறைப்பட்ட வாசகர்களுக்கு முக்கியக் கதாபாத்திரம் கவர்ச்சிகரமாகவும் இருக்கவேண்டும். முழுமைபெற்ற ஆளாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை, ஆனால் அடிப்படையில் மேன்மை உடையவனாக, நாகரிகமானவனாக, நல்லெண்ணம் உடையவனாக, கொஞ்சம் அழகானவனாக இருக்கவேண்டும். அவன் நல்லவனாக இல்லாவிட்டால் அதை ஈடுசெய்யக்கூடிய வலிமையான பண்புகள்-தைரியம், வீரம், சாகசம் இவையெல்லாம் இருக்க வேண்டும். அவனுக்கு எல்லோருக்கும் நல்லது செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அவன் சட்டத்தையும் மீறலாம். “நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா எந்தத் தப்பையும் செய்யலாம்”-என்ற வசனத்தை எத்தனை திரைப்படங்களில் கேட்டிருப்பீர்கள்?

முதிர்ச்சி குறைந்த வாசகர்களின் எதிர்பார்ப்பு இப்படி இருப்பதற்குக் காரணம், இலக்கியத்தை அவர்கள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளப் பயன்படுத்துவதில்லை, பகற் கனவு காண்பதற்கு ஒரு முகாந்திரமாக அதை ஆக்குகிறார்கள். முக்கியக் கதாபாத்திரத்தோடு எளிதில் அவர்கள் ஒன்றிவிடுகிறார்கள். பிறகு அந்தக் கதாபாத்திரத்தின் சாகசங்கள், வெற்றிகள், தப்பித்தல்கள் ஆகியவற்றில் அவர்களும் பங்கேற்கிறார்கள். எனவே முக்கியக் கதாபாத்திரம் ஒரு மகிழ்ச்சியான பிம்பத்தை அவர்களுக்குத் தரவேண்டும். தாங்கள் கனவுகாணும் ஒரு மனிதனாக, அல்லது விரும்புகின்றவனாக அவன் இருக்கவேண்டும். இந்த வகையில் முதிர்ச்சி அற்ற கதைகள், வாசகர்களை மகிழ்விக்கின்றன. வாசகர்களும் தங்கள் போதாமைகளை மறந்து, தங்கள் சுயத்தைத் திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள். கதையின் முக்கியக் கதாபாத்திரங்களுக்குக் குற்றங்குறைகள் இருந்தால், அவை வாசகர்கள் பொருட் படுத்தாதவையாக, அல்லது தாங்களே செய்ய விரும்புகின்றவையாக இருக்கவேண்டும்.

தப்பிப்புக்கான பல கதைகள், பார்வைக்குக் கவர்ச்சியான ஆண் அல்லது பெண்ணைப் படைக்கின்றன. பாலியல் வாழ்க்கையில் அவர்கள் தைரியமானவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட கதைமாந்தர்களைப் படிக்கும்போது, தாங்களும் அந்தப் பாலியல் செய்கைகளில் அவர்களைப் போன்றே ஈடுபடுவதான திருப்தியை வாசகர்கள் அடைகிறார்கள். ஆனால் அந்தச் செய்கைகள், நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் தடைசெய்யப்பட்டவை. இப்படித் தன் சுய அடையாளத்தின் தன்மையை இழக்காமல், பிறரால் தூற்றப்படாமல், எளிதாக இன்பம் அடையும் வழியை அந்தக் கதைகள் தருவதால் அவை விற்பனை ஆவதற்கு அளவேயில்லை.

முக்கியக் கதாபாத்திரம் கவர்ச்சியாக இருக்கக்கூடாது என்ற கட்டாயம் எதுவும் நல்ல இலக்கியத்திற்கு இல்லை. ஆனால் வாழ்க்கையில் எத்தனைவிதமான மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனைவிதங்களையும் நல்ல இலக்கியம் அளிக்க முனைகிறது. வாழ்க்கையைப் போலவே இலக்கியத்திலும் அவ்வளவு எளிதாக ஒருவரை நல்லவர்-கெட்டவர் என்று பெட்டிகளில் அடைத்துவிடமுடியாது. மனித இயற்கை கருப்பு-வெள்ளை என்ற பாகுபாடுகளில் அடங்குவதில்லை. எனவே அத்தகைய பாகுபாடுகள் இலக்கியத்திலும் பொருந்தாது. அதனால் நல்ல இலக்கியப் படைப்புகளில் கதைமாந்தர்கள் ஹீரோக்களாகவோ, ஹீரோயின் களாகவோ இருப்பதில்லை. இரண்டாவது இயலில் படித்த ‘மறுபடியும்’ கதையையே எடுத்துக்கொள்ளுங்கள். சந்திரசேகரன் என்ன, ஹீரோவா? ஒரு சாதாரண மத்தியதர வாழ்க்கையை வாழுகின்ற குடும்பத் தலைவன் அவன்.

ஹீரோ, வில்லன் என்ற எந்திரகதியான வேறுபாட்டைக் கடந்து வந்துவிட்டால், கதை எவ்வளவு விதமான மனித இயல்புகளை அவ்வவற்றிற்குரிய சிக்கல்களோடும், பன்மைத் தன்மையோடும் நோக்க வாய்ப்பளிக்கிறது என்பதை எளிதாக உணர்ந்துகொள்ளலாம். மனிதர்களை அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும், மனிதர்கள்மீது கருணைகாட்டவும், இலக்கியம் நமக்கு வாய்ப்பளிக்கிறது. பலசமயங்களில் நிஜமனிதர்களைவிடப் பாத்திரங்களை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. அவர்கள் நமக்கு உண்மை மனிதர்களைப் போலவே இருக்கிறார்கள். வாழ்க்கை அளிக்காத முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பங்களை இலக்கியம் எளிதாக அளித்து, அந்தச் சந்தர்ப்பங்களில் மனிதர்கள் எவ்விதம் இயங்குகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இன்னொருபுறம், நாம் நிஜவாழ்க்கையில் எவர் வாழ்க்கைக்குள்ளும் புகுந்து நோக்கமுடியாத அளவு அந்தரங்கமாக அந்த மனிதர்களின் மன வாழ்க்கையை நோக்க இலக்கியம் வாய்ப்பளிக்கிறது. வாழ்க்கையில் ஒரு நிஜமனிதரின் வெளிப்புற நடத்தையை மட்டுமே காணமுடியும். அந்த நடத்தை, அவருடைய மனத்தில் உண்மையில் என்ன நிகழ்கிறது என்பதைப் பெரும்பாலும் மறைப்பதற்குச் செய்கின்ற ஒன்றாகவே இருக்கும். இலக்கியத்தில் அப்படியில்லை. மனிதர்களுக்குள் புகுந்துகாணும் வாய்ப்பை எழுத்தாளர்கள் உருவாக்கித் தருகிறார்கள்.

ஆசிரியர்கள் தங்கள் பாத்திரங்களை நேராகவோ மறைமுகமாகவோ சித்திரிக்கலாம். (சித்திரம்-சித்திரித்தல்; அதாவது, சித்திரப்படுத்தல்.  ‘சித்தரித்தல்’ அல்ல; நீங்கள் எதையும் ‘தரிக்க’ வேண்டாம்.) நேரடியாகப் பாத்திரத்தை உருவாக்கினால், அவர்கள் இப்படிப் பட்டவர்கள் என்று தாங்களாகவே கூறிவிடுகிறார்கள். அல்லது இன்னொரு பாத்திரத்தின் மூலம் கூறுகிறார்கள். மறைமுகமாகச் சித்திரித்தால், அவர்கள் வாழ்க்கையின் சூழல்களில் எப்படிச் செயல்படுகிறார்கள் என்று காட்டுகிறார்கள். சிக்கல்களை உள்ளடக்கிய சூழலில் கதாபாத்திரங்களை ஆசிரியர்கள் வைக்கிறார்கள். பிறகு அந்தப் பாத்திரங்கள்தான் அந்தச் சூழலுக்கேற்பச் செயல்படவேண்டும். பாத்திரங்களின் செயல்கள், சிந்தனைகள், பேச்சுகள் ஆகியவற்றிலிருந்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் அறிகிறோம். சிக்கலைத் தீர்ப்பதற்கான முதன்மைப்பாத்திரச் செயல்களுக்கு உதவக்கூடிய அல்லது அதைத் தடுக்கக் கூடிய சில பாத்திரங்களும் கதையில் (சிறுபாத்திரங்களாக) இடம்பெறுகிறார்கள்.

சில சமயங்களில் ஆசிரியர்கள் தாங்களாகவே பாத்திரப்பண்பு பற்றி அங்கதமாகவே கூறுவதுண்டு. புதுமைப்பித்தனின் ‘நியாயம்’ என்ற கதையின் தொடக்கப் பகுதியை உதாரணமாகக் காணலாம்.

[தேவ இறக்கம் நாடார்-அவருக்கு வல்லின இடையினங்களைப் பற்றி அபேதவாதக் கொள்கையோ, தனது பெயரை அழுத்தமாகச் சொல்லவேண்டும் என்ற ஆசையோ-எதுவானாலும் அவர் எப்பொழுதாவது ஒரு தடவை இந்த 'டமிலில்' எழுதுவதுபோலவே எழுதிவிடுவோம். நல்ல கிறிஸ்தவர். புரோடஸ்டாண்டு சர்சில் சேர்மனாக இருந்து, மிஷனில் உபகாரச் சம்பளம் பெற்று வருபவர். இந்த உலகத்திலே கர்த்தருடைய நீதி வழங்கப்பெறுவதற்காகப் பாடுபட்டதனால் ஏற்படப்போக இருக்கும் அந்த உலகத்தின் பென்ஷனை எதிர்பார்த்தி ருக்கிறார்....அவருடைய மதபக்தி ராஜபக்தியுடன் போட்டியிடும். ஞாயிற்றுக்கிழமை வரத் தவறினாலும் அவர் கடவுளால் கொடுக்கப்பட்ட அந்த ஓய்வுநாளில் கோவிலில் போய் ஓய்வு எடுத்துக்கொள்ளாமல் இருக்கமாட்டார்.]

இந்தப் பகுதி தேவஇரக்கம் நாடார் எப்படிப்பட்டவர் என்பதை ஆசிரியர் கூற்றாகவே விளக்கிவிடுகிறது, குறிப்புமுரணைக் (ஐரனி) கையாள்வதில்  புதுமைப்பித்தனின் பாணி இது. இதனைச் சொல்முரண் (வெர்பல் ஐரனி) என்போம்.

பாத்திரங்களைச் சொல்லினால் விளக்குவது போதாது, இம்மாதிரி வருணனையில் தெளிவும் சுருக்கமும் உண்டு. என்றாலும் தனியாக இதைப் பயன்படுத்தலாகாது. அவர்கள் எப்படி இயங்குகிறார்கள் என்பதைக் காட்டவேண்டும். மேற்கண்ட கதைக்கே செல்வோம். தேவஇறக்கம் நாடார் ஒரு கௌரவ மாஜிஸ்திரேட்டாகப் பணிபுரிபவர். அவரிடம் ஒரு குதிரைவண்டிக்காரன் மாட்டிக்கொள்கிறான். காலில் புண்ணான குதிரையை வண்டியில் கட்டி வண்டி ஓட்டியதாகப் பிடித்துவிடுகிறார்கள். அவனுக்கு ஐந்துரூபாய் அபராதம் விதிக்கிறார் அவர். (1930களில் எழுதப்பட்ட கதை இது. அப்போது ஐந்து ரூபாய் என்பது இன்றைக்கு ஐந்தாயிரம் ரூபாய்க்கும் மேலாக இருக்கும்.) அல்லது ஒருமாதம் ஜெயில்.

[சுடலைமுத்துப்பிள்ளை ஆவேசம்கொண்டவன்போல் ஓடிவந்து காலைப்பிடித்துக்கொண்டு, “தருமதுரைகளே! இந்த ஒரு தடவை மன்னிக்கணும். புள்ளேகுட்டி வவுத்துலே அடியாதிங்க…”

“பின்னாலே போ சாத்தானே!” என்று தேவஇறக்கம் நாடார் கர்ஜித்தார். கோர்ட் ஆர்டர்லி சுடலைமுத்துப் பிள்ளையை இழுத்துக்கொண்டு வெளியே போனான்.

இரவு தேவஇறக்கம் நாடார் படுத்துக்கொள்ளுமுன் முழங்கால்படியிட்டு ஜபம் செய்கிறார்.

“பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே! உமது நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய அப்பத்தை அன்றன்று எங்களுக்குத் தாரும். எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். நாங்களும் எங்களிடம் கடன் பட்டவர்களுக்கும் மன்னிக்கிறோமே…ஆமென்!”

கண்ணைவிழித்து எழுந்தார். அந்த அஞ்ஞானி வண்டிக்காரனைப் பற்றி ஞாபகமேயில்லை!]

தேவஇறக்கம் நாடார் எப்படி நடந்துகொள்கிறார் என்பதைக் காட்டிவிட்டார் புதுமைப் பித்தன். இந்த முடிவைப் படிக்கும்போது ஏன் அவ்வளவு தூரம் ஆரம்பத்தில் தானே அவரை வருணித்தார் என்பதும் புரிந்து விடுகிறது.

உடல்ரீதியான வருணனை மட்டும் போதாது. பாத்திரங்களுடைய வாழ்க்கை முறை பற்றிக் கொஞ்சமேனும் நமக்குத் தெரிந்தாக வேண்டும். வீடு, உறவினர்கள், பிற தொடர் புகள், ஒட்டுமொத்த வாழ்க்கையின் இழைவு. கதையின் பிற பாத்திரங்களோடு இந்தப் பாத்திரம் எப்படி இடைவினை புரிகிறது போன்ற விஷயங்கள்.

கதை என்றால் பாத்திரங்கள் இயங்கியாகவேண்டும். இல்லாவிட்டால் கட்டுரை ஆகி விடும். பாத்திரவிளக்கக் கூற்று முறையை அதிகமாகப் பயன்படுத்தினாலோ, அது பாத்திரமாக இருப்பதற்குபதிலாக பண்புவிளக்கமாகிவிடும். வாசகர்கள் பாத்திரங்களைப் பற்றிக் கேட்டால் போதாது. அவர்கள் பாத்திரங்களைச் செயலில் காணவேண்டும், ஒட்டுக் கேட்கவேண்டும். பாத்திரங்கள் நாடகப்படுத்தப்படும்போதுதான் கதை வெற்றியடையும். நாடகப்படுத்தல் என்றால், நாடகத்தில் நிகழ்வதுபோல அவர்கள் பேசுவதையும் இயங்கு வதையும் காட்டவேண்டும். ஒரு கதாபாத்திரம் சுயநலக்காரன் என்றால், அவன் சுயநலக்காரன் என்று சொல்லுவது பற்றாது. ஒரு குறிப்பிட்ட சூழலில் அவன் சுயநலத்தோடு நடந்து கொள்வதைக் காட்டவேண்டும். எனவே நல்ல எழுத்தாளர்கள் நேரடிக்கூற்று முறையை விட, மறைமுகப் பாத்திரவார்ப்பு முறையையே கையாளுகிறார்கள்.

ஐந்து விஷயங்களின் மூலம் ஒரு கதாபாத்திரத்தை நாம் அறியலாம். அவர்

என்ன சொல்கிறார்,

என்ன நினைக்கிறார்,

என்ன செய்கிறார்,

அவரைப்பற்றிக் கதை சொல்பவரோ  மற்றவர்களோ என்ன சொல்கிறார்கள்,

ஆசிரியர் கூற்றாக என்ன வருகிறது

என்பன அவை.

கதாபாத்திர வார்ப்பு வெற்றியடைய வேண்டுமென்றால், மூன்று கொள்கைகளை அனுசரிக்க வேண்டும்.

முதலில் பாத்திரங்களின் நடத்தைக்கூறுகள் ஒத்துப்போக வேண்டும். ஒரு சந்தர்ப் பத்தில் ஒரு மாதிரியாகவும் இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னொரு மாதிரியாகவும் அவர்கள் நடக்கலாகாது. (நடந்துகொண்டால் அவன் இப்படிப்பட்டவன் என்று ஒரு முடிவுக்கும் வர முடியாது.) ஒரு பாத்திரம் சுயநலம் கொண்டவன் போல ஒரு சந்தர்ப்பத்தில் நடந்து கொண்டு  பொதுநலமே உருவானவன்போல அடுத்த சந்தர்ப்பத்தில் நடக்கலாகாது. அவன் அப்படி மாறினால், அதற்கான காரணமும் காலஅவகாசமும் தரவேண்டும்.

இரண்டாவது கதாபாத்திரங்கள் என்ன செய்தாலும் அதற்குக் காரணங்கள் இருக்க வேண்டும். குறிப்பாக அவர்கள் நடத்தையில் மாறுபாடு இருக்குமானால் அந்தக் காரணங்கள் தெளிவுபடவேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்கான காரணங்களை நாம் அறிந்துகொள்ளவேண்டும். அந்தந்த சமயத்திலேயே இல்லாவிட்டாலும் கதை முடிவுக்குள் ளேனும் அவை தெரியவேண்டும்.

மூன்றாவது, கதாபாத்திரங்கள் நம்பத்தக்கவர்களாக, நிஜவாழ்க்கையில் காண்பது போல இருக்கவேண்டும். அவர்கள் அறத்தின் உருவங்களாகவோ, தீமையின் வடிவங்களாகவோ அல்லது முரண்பட்ட குணக்கூறுகளின் சேர்க்கைகளாகவோ இருக்கலாகாது. ஆசிரிய ரின் அனுபவத்திலிருந்து அவர்கள் உருவாகவேண்டும்.

பாத்திரப்படைப்புக்கு மிகவும் உதவக்கூடியது உரையாடல். உரையாடல் என்பது பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் என்ன செய்துகொள்கிறார்கள் என்பதைப் பற்றியது. மனிதர்கள் யாரும் சும்மா ஒரு சம்பாஷணையில் ஈடுபடுவதில்லை. கதாபாத்திரங்களுக் கிடையில் என்ன இருக்கிறது என்பது அதனால் வெளியாகவேண்டும். அதற்காக நீண்ட உரையாடல்களை அமைத்துவிடவும் கூடாது. பேசியாகவேண்டுமே என்பதற்காகக் சும்மா வளவள என்று இழுக்கக்கூடாது.

தங்கள் வளர்ச்சியைப் பொறுத்துப் பாத்திரங்களை இருபரிமாண(ஓவிய)ப் பாத்திரங்கள், முப்பரிமாண(சிற்ப)ப் பாத்திரங்கள் என்று வகைப்படுத்தலாம். இருபரிமாணப் பாத்தி ரங்களின் (சித்திரப் பாத்திரங்களின்) ஒருசில பண்புகள் மட்டுமே விளக்கமாகும். முப்பரிமாணப் பாத்திரங்களின் (சிற்பப் பாத்திரங்களின்) குணாம்சங்கள் இன்னும் சிக்கலா னவை; பன்முகத்தன்மை கொண்டவை. ஓவியங்கள் இருபரிமாணம் (நீளம்-அகலம்) கொண்டவை, சிற்பங்கள் (நீளம், அகலம், கனம்) மூன்றும் கொண்டவை.

இருவகைப் பாத்திரங்களுக்குமே கதையில் தேவையுண்டு. முப்பரிமாணப் பாத்திரங்கள் போல இருபரிமாணப் பாத்திரங்கள் வாழ்க்கை அனுபவங்களால் நம்மைத் தொடாது போனாலும், ஒரு சில மறக்கமுடியாத தன்மைகளை அவர்களுக்குத் தருவதன்மூலம் திறமான ஆசிரியர்கள் உயிருள்ளவர்களாக அவர்களை ஆக்கி மறக்கமுடியாமல் செய்துவிடுவார்கள். பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி படைத்த ஆழ்வார்க்கடியான் போன்றவர்கள் இப்படிப்பட்ட பாத்திரங்கள்.

சிறுகதைகளில் அதிகமான பாத்திரங்களைக் கொண்டுவர இடமில்லை. இவற்றில் ஓரிரண்டு முதன்மைப் பாத்திரங்கள் இருபரிமாணப் பாத்திரங்களாக இருப்பதே போதும். பிறர்-சிறு பாத்திரங்கள்-வந்துபோவதே போதுமானது. முதிர்ச்சியற்ற ஆசிரியர்கள் குணாம்சங்களில் மாறுபாடுகளை உடனடியாக நிகழ்வதாகக் காட்டிவிடுவார்கள். உதாரணமாக, ஒரு திருடன் திடீரென நேர்மையானவனாக மாறிவிடுவது என்பது இயலுமா? அதற்குத் தகுந்த காரணங்கள், அனுபவங்கள் நிகழவேண்டும். சில ஆசிரியர்கள் தங்கள் பாத்திரங்களின் பண்புகளை நிழலாகவே வைத்து, அந்தக் குறைபாட்டைத் தங்கள் வாசகர்கள் கவனிக்க மாட்டார்கள் என்று நம்பவும் செய்வார்கள்.

இருபரிமாண, முப்பரிமாணப் பாத்திரங்கள் பற்றிப் பார்த்தோம் இல்லையா? ஒரு பரிமாண(கோட்டுப்)ப் பாத்திரங்களும் உண்டு. அவர்களுக்கு ஸ்டாக் கேரக்டர் என்று பெயர். எப்போதுமே ஒரேமாதிரி இயங்குபவர்கள். விசித்திரமான தன்மைகள் கொண்ட ஜேம்ஸ் பாண்ட் (துப்பறிபவன்) பாத்திரம், விசித்திரப் பொருள்களை ஆராய்ச்சி செய்யும் பைத்தியக் கார விஞ்ஞானி, கேலிக்கு ஆளாகக் கூடிய போலீஸ்காரன், தோளில் துண்டு போட்டுக் கொண்டு தமிழைப்பற்றி முழங்கும் அரசியல்வாதி, அழகான சாகசம் புரிகின்ற ஹீரோ, அவனைப் பார்த்தவுடனே காதல் கொள்கின்ற ஹீரோயின், தீமைகளை மட்டுமே செய்கின்ற வில்லன், எங்கே சென்றாலும் ஏமாந்துபோய் அடிவாங்கும் நகைச்சுவைக்கோமாளி, ஜோல்னாப் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு திரியும் ‘அறிவாளி’-இவர்கள் எல்லோருமே ஒற்றைப் பரிமாணம் உடைய பாத்திரங்கள்தான். சிறுகதைகளை, நாவல்களைவிட, திரைப்படம்தான் இந்தப் பாத்திரங்களை அதிகமாகப் பயன்படுத்துகிறது. வடிவேலு நடிக்கும் பாத்திரவார்ப்பு எந்தத் திரைப்படத்திலாவது மாறிப் பார்த்திருக்கிறீர்களா? (எதையாவது செய்து உதைவாங்கினால்தானே எனக்குக் காசு என்று அவர் சொல்லக்கூடும், ஆனால் வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஆளைப் பார்க்கமுடியுமா?)

ஒற்றைப்பரிமாணப் பாத்திரங்களைப் படைப்பதற்குக் கற்பனையும் தேவையில்லை, வாழ்க்கையைக் கூர்ந்துநோக்குவதும் தேவையில்லை. ஆகவே மிகவும் தரங்குன்றிய கதைக ளில் தான் இப்படிப்பட்ட பாத்திரங்கள் இடம் பெறுவார்கள். இவர்களைக் காணும்போதே வாசகருக்கு இவர் ஸ்டாக் கேரக்டர் என்று தெரிந்துவிடும். மிஷின்களில் மாற்றிப் பொருத்தக் கூடிய உதிரிபாகங்களைப் போல இவர்களை எந்தக் கதையிலும் பொருத்தி விடலாம்.

திறமையான ஆசிரியர்கள், இந்தமாதிரி மரபுசார்ந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டால் கூட, ஒரு சில தனித்த கோடுகளை வரைந்து, புதிய மறக்கமுடியாத பாத்திரங் களாக ஆக்கிவிடுவார்கள். அவர்களில் சிலபேர் மறக்கமுடியாத முன்மாதிரிகளும் ஆகிவிடு வார்கள். ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரப்படைப்பு அவ்வாறானது.

சிறுகதைகளைப் பொறுத்தவரை மாறாப் பாத்திரங்கள், மாறும் பாத்திரங்கள் என்ற பிரிவு இன்னும் பொருத்தமானது. மாறாப் பாத்திரம் என்பவர் கதைத் தொடக்கத்தில் எப்படியிருந்தாரோ அதுபோலவே சற்றும் மாற்றமின்றிக் கதையின் இறுதியிலும் இருப்பவர். மாறும் பாத்திரம், கதையிநூடாக மாற்றம் அடைபவர். அந்த மாற்றம் சிறியதாகவோ பெரியதாகவோ இருக்கலாம். நல்லவிதமான மாற்றமாகவோ எதிர்மாறாகவோ இருக்கலாம். நாவலாக இருந்தாலும்கூட, மாறும் பாத்திரங்களை எண்ணிக்கையில் அதிகமாகக் கொண்டு வர இயலாது. புதுமைப்பித்தனின் ‘நியாயம்’ கதையில் வரும் தேவஇறக்கம் நாடார், மாறாப் பாத்திரம். ஆனால் அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ கதையில் வரும் கதைத்தலைவி, மாறுகின்றவள்.

சிறுகதையில் ஏதேனும் ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தினை அமைத்து அது எவ்விதம் ஒரு பாத்திரத்தின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று காட்டுவது நாம் அவ்வப் போது பல கதைகளில் காணும் அடிப்படைத் திட்டம். தப்பிப்பு நோக்கச் சிறுகதைகளில், இவ்விதம் ஏற்படும் மாற்றங்கள் மேலோட்டமானவையாக, மகிழ்ச்சிமுடிவை உறுதிப் படுத்து வதற்காக அமையும். அவற்றைப் பெரும்பாலும் நம்மால் நம்பவும் முடியாது.

ஒரு பாத்திரம் அடையும் மாற்றம் நமக்கு நியாயமானதாக, ஏற்புடையதாகப் பட வேண்டும் என்றால் மூன்று விஷயங்கள் தேவை.

ஃ ஒன்று, அந்த மாற்றம் அந்தப் பாத்திரத்தின் பண்பு வரையறைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.

ஃ இரண்டு, அந்தப் பாத்திரம் இயங்கும் சூழலினால் அது தக்கவாறு தூண்டப்பட்டதாக இருக்கவேண்டும்.

ஃ மூன்று, குறிப்பிட்ட மாற்றம் ஏற்படுவதற்கான கால அவகாசம் கதையில் அளிக்கப்பட வேண்டும்.

மனிதர்களின் குணாதிசயங்களில் அடிப்படை மாற்றங்கள் திடீரென ஏற்படுவது கிடையாது. திரைப்படத்தில் வேண்டுமானால் கதையின் கடைசியில் உதைவாங்கிய வில்லன் நான் மாறிவிட்டேன், திருந்திவிட்டேன் என்று சொல்லலாம். வாழ்க்கையில் அப்படி இயலாது. சிறுகதையாசிரியர்கள், தங்கள் கதையில் அளிக்கும் சிறுமாற்றங்களோடு திருப்தியடை பவர்கள்தான்.

கையில் கொஞ்சம் மண்ணை எடுத்துக் கடவுள் ஊதியவுடனே ஆதாம் பிறந்ததாக விவிலியம் சொல்கிறது. அதுபோல, கதாசிரியர் தன் பாத்திரத்தில் உயிரை ஊதியவுடனே கதை பிறக்கிறது. அவர் அளித்த கதாபாத்திரத்தின் நேர்த்திதான் அவரை உயரச் செய்யவோ வீழ்த்தவோ செய்கிறது.

வாசகர்கள் கதாபாத்திரங்களை ஆராயும்போது, அவருடைய பேச்சு, உரையாடல் எப்படி இருக்கிறது, அவருடைய தோற்றம் எவ்வாறு இருக்கிறது, அவருடைய செயல்கள் என்ன, அவருடைய சூழல் எவ்விதம் உள்ளது, அவரது வகைமாதிரி என்ன, அவரது குணாதிசயங்களைத் தூண்டுவது என்ன, ஏன் ஒரு குறிப்பிட்ட மாதிரியில் நடந்துகொள் கிறார், அந்தத் து£ண்டல்முறை ஏற்புடையதாக, பொருத்தமாக இருக்கிறதா என்பதை யெல்லாம் காணவேண்டும்.

கதாபாத்திரத்தினை ஆராய்வதற்கு ஒரு கதையை உதாரணமாகக் காணலாம். இங்கே தரப்படுவது ஆண்டன் செகாவின் ‘பச்சோந்தி’ என்ற சிறுகதை.

பச்சோந்தி

போலீஸ் இன்ஸ்பெக்டர் அச்சுமேலவ் புதிய மேல்கோட்டு அணிந்து கையில் ஒரு காகிதக் கட்டுடன் சந்தையின் குறுக்கே சென்றார். செம்பட்டைத் தலைப் போலீஸ்காரர் பறிமுதல் செய்யப்பட்ட நாவல் பழக்கூடையைத் தூக்கிக்கொண்டு அவர் பின்னால் நடந்தார். சுற்றிலும் நிசப்தமாயிருந்தது. சந்தையில் எந்த ஆத்மாவும் இல்லை. கடைகள், மதுவிடுதிகள் இவற்றின் திறந்த வாயில்கள், பசியால் வாடி விரியப் பிளந்த வாய்களைப் போல் சோகமாய் ஆண்டவன் உலகை நோக்கின. இவற்றின் அருகே பிச்சைக்காரர்களையும்கூடக் காணமுடிய வில்லை.

திடுமென எழுந்த கூக்குரல் அச்சுமேலவின் காதில் விழுந்தது. “கடிக்கவா செய்கிறாய்? அசட்டு நாயே! பசங்களே, விடாதீங்க. பிடியுங்க. இந்தக் காலத்தில் கடிக்க அனுமதியில்லை. பிடியுங்கள் அதை, ஊய்!”

நாய் ஊளையிடும் சத்தம் கேட்டது. அச்சுமேலவ் அந்தச் சத்தம் எழுந்த திசையில் திரும்பிப் பார்த்தார். அவர் கண்ணுற்றது இதுதான். வணிகன் பிச்சூகினது மரவாடியிலிருந்து மூன்று கால்களில் ஒரு நாய் ஓடிவந்தது. கஞ்சிபோட்ட பூச்சட்டையும் பொத்தான் மாட்டப்படாத அரைக்கோட்டும் அணிந்தஆள் அதை விரட்டிக்கொண்டு வந்தான். முன்பக்கமாய் முழு உட லையும் கவிழ்த்துக்கொண்டு ஓடிவந்த அவன் அந்த நாயின் பின்னங்கால்களைப் பிடித்துக் கொண்டான். மீண்டும் ஊளையிடும் சத்தம். திரும்பவும் “பிடி, விடாதே” என்ற கூக்குரல். தூக்கம் கலையாத முகங்கள் கடைகளிலிருந்து எட்டிப் பார்த்தன. தரைக்கடியிலிருந்து உதித்ததுபோல நொடிப்பொழுதுக்குள் மரவாடிக்கு முன்னால் கூட்டம் கூடிவிட்டது.

“மாண்புடையீர், கலவரம்போல அல்லவா இருக்கிறது” என்றார் போலீஸ்காரர்.

அச்சுமேலவ் உடனே திரும்பி அந்தக் கூட்டத்தைநோக்கி நடந்தார். மரவாடியின் வாயிலுக்கு வந்ததும், பொத்தான் மாட்டப்படாத அரைக்கோட்டு அணிந்த ஆள், வலக்கையை உயர்த்தி இரத்தம்கசியும் தனது விரலைக் கூட்டத்தினருக்குக் காட்டியவாறு நிற்கக் கண்டார்.

“சனியனே, உன்னை என்ன செய்கிறேன் பார்!” இந்த வாசகம் குடிமயக்கம் தெளியாத அந்த ஆளின் முகத்தில் எழுதிஒட்டப்பட்டிருந்தது. அவன் உயர்த்திக் காட்டிய விரல் வெற்றிக்கொடி போல் காட்சியளித்தது. அவன் பொற்கொல்லன் ஹரியூக்கின் என்பது அச்சுமேலவுக்குத் தெரிந்தது. கூட்டத்தின் நடுமையத்தில் அந்தக் குற்றவாளி நாய் முன்னங்கால்களை அகல விரித்து, அங்கமெல்லாம் வெலவெலத்து நடுங்கியவண்ணம் உட்கார்ந்திருந்தது. கூரிய மூக்கும் முதுகில் மஞ்சள் புள்ளியும் கொண்ட வெண்ணிற பர்சோய் நாய்க்குட்டி அது. கலங்கிய அதன் கண்களில் சோகமும் பீதியும் குடிகொண்டிருந்தன.

“என்ன இதெல்லாம்?” என்று கேட்டுக் கூட்டத்தை இடித்து விலக்கிக்கொண்டு அச்சுமேலவ் உள்ளே நுழைந்தார். “இங்கே என்ன செய்கிறீர்கள்? நீ ஏன் விரலை உயர்த்திக் காட்டுகிறாய்? கூக்குரலிட்டது யார்?”

“மாண்புடையீர், எந்த வம்புமின்றி நடந்துவந்துகொண்டிருந்தேன்” என்று மூடிய கைக்குள் இருமியபடி ஹரியூக்கின் பதில்கூற முற்பட்டான். “இங்கே மீத்ரி மீத்ரிச்சிடம் மரம் சம்பந்தமாய் எனக்குக் கொஞ்சம் வேலை இருந்தது. எக்காரணமுமின்றி திடீரென என் விரலைக் கடித்துவிட்டது இந்த எழவு. என்னை மன்னிக்கணும்…நான் வேலைசெய்கிறவன் …என்னுடைய வேலை நுட்பம் வாய்ந்தது. இன்னும் ஒருவாரத்துக்கு என்னால் இந்த விரலை அசைக்கமுடியாது போலிருக்கு. எனக்கு இவர்கள் இழப்பீடு தரும்படி நீங்க செய்யணும். மாண்புடையீர், மூர்க்கப் பிராணிகள் புரியும் கொடுமைகளை சகித்துக்கொண்டு வாழ வேண்டுமென எந்தச் சட்டமும் கூறவில்லை. இவையெல்லாம் கடிக்க ஆரம்பித்தால் வாழ்க்கை நரக வேதனையாகிவிடும்…”

“உம், சரிதான், சரிதான்” என்று கனைத்துக்கொண்டு, புருவங்களை நெரித்தவாறு கடுமையான குரலில் பேசினார் அச்சுமேலவ். “சரிதான், சரிதான்! யாருடைய நாய் இது? இந்த விவகாரத்தை நான் சும்மா விடப்போவதில்லை. நாய்களை ஓடித்திரியும்படி விடுவோருக்குச் சரியான பாடம் கற்பிக்கப் போகிறேன். ஒழுங்குவிதிகளுக்குப் பணிந்து நடக்க விரும்பாதோர் குறித்து இனி சும்மாயிருக்கக்கூடாது. நடவடிக்கை எடுத்தாக வேண்டும். போக்கிரிப் பசங்கள்! சரியானபடி அபராதம் விதிக்கப்படும் இவர்களுக்கு. நாய்களையும் மாடுகளையும் சுற்றித்திரிய விட்டால் என்ன கிடைக்கும் என்று நான் காட்டப்போகிறேன். எது என்னவென்பதைப் புரிய வைக்கப்போகிறேன்…எல்தீரின்!” என்று கூப்பிட்டுப் போலீஸ்காரரின் பக்கம் திரும்பினார். “இந்த நாய் யாருடையது என்று கண்டுபிடித்து அறிக்கை ஒன்று தயார் செய். உடனே இந்த நாயை ஒழித்துக்கட்டியாக வேண்டும். பைத்தியம் பிடித்த நாயாகத்தான் இருக்கும்! யாருடையது இது?”

“ஜெனரல் ழிகாலவின் நாய் என்று நினைக்கிறேன்” என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந்தது.

“ஜெனரல் ழிகாலவ்! ஓஹோ…எல்தீரின்! என்னுடைய கோட்டைக் கொஞ்சம் கழற்றிவிடு… உஸ், வெக்கை தாங்க முடியவில்லை. மழை பெய்யப்போகிறது, அதனால்தான் புழுங்குகிறது”. பிறகு அவர் ஹரியூக்கின் பக்கம் திரும்பினார். “எனக்கு இது புரியவில்லை…உன்னை இது கடிக்க நேர்ந்தது எப்படி? உன் விரல் எப்படி அதன் வாய்க்கு எட்டிற்று? இது சின்னஞ்சிறு நாய், நீ வாட்டசாட்டமான ஆள். ஆணியில் விரலைக் கீறிக் கொண்டிருப்பாய், பிறகு இழப்பீடு கேட்டுவாங்கலாமென்று உனக்கு எண்ணம் தோன்றியிருக்கிறது…உன்னைப் போன்ற ஆட்களை எனக்குத் தெரியுமே! எமகாதகர்கள் ஆயிற்றே!”

“மாண்புடையீர், புகையும் சிகரெட்டை அதன் மூக்கில் வைத்துச் சுட்டு வேடிக்கை பார்த்தார். உடனே அது விழுந்து பிடுங்கிற்று. அது ஒன்றும் அசட்டுப் பிறவியல்லவே! இந்த ஹரியூக்கின் எப்போதுமே இப்படித்தான். சேஷ்டை செய்யாமல் இருக்கமுடியாது அவரால்!”

“ஒண்ணரைக்கண்ணா! உன் புளுகுமூட்டையை அவிழ்க்காதே, நிறுத்து! நீ ஒண்ணும் நேரில் பார்க்கவில்லை. பிறகு ஏன் இப்படிப் புளுகுகிறாய்? மாண்புமிகு இன்ஸ்பெக்டர் விவரம் அறியாதவரல்ல; பொய் பேசுகிறவர் யார், உண்மையைச் சொல்கிறவர் யார் என்று அவருக்குத் தெரியும். நான் சொல்வது பொய்யானால் நீதிபதி என்னை விசாரணை செய்யட்டும்! சட்டத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது: இன்று எல்லோரும் சரிநிகர் சமானம்…உனக்குச் சொல்கிறேன் நான், போலீசில் எனக்கு யாரும் இல்லாமல் போய்விடவில்லை…சகோதரர் ஒருவர் இருக்கிறார். போதும் நிறுத்து….”

“இல்லை, இது ஜெனரலுடைய நாய் அல்ல” என்றார் போலீஸ்காரர், அழுத்தம் திருத்தமாய். “ஜெனரலிடம் இம்மாதிரியான நாய் எதுவும் இல்லை. அவரிடம் இருப்பவை யாவும் மோப்ப நாய்கள்”.

“நிச்சயம்தானா?”

“சந்தேகமில்லை, மாண்புடையீர்!”

“நீ சொல்வது சரிதான். ஜெனரலுடைய நாய்கள் யாவும் விலை உயர்ந்தவை. ஜாதி நாய்கள். ஆனால் இதைப் பாரேன்! பார்க்கச் சகிக்கவில்லை. தெருச்சனியன்! இம்மாதிரியான நாயை யாரும் வீட்டில் வைத்திருப்பார்களா? பித்துப்பிடித்துவிட்டதா, உனக்கு? இம்மாதிரி நாய் மாஸ்கோவிலோ பீட்டர்ஸ்பர்கிலோ தென்படுமானால், அதன் கதி என்னவாகும் தெரியுமா? சட்டத்தைப் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். அதே நிமிடத்தில் அதற்கு முடிவு ஏற்பட்டுவிடும். ஹரியூக்கின், நீ கடிபட்டு இழப்புக்கு உள்ளானவன். இந்த விவகாரத்தை நீ இதோடு விட்டுவிடக்கூடாது. தக்கபடி பாடம் கற்பித்தாக வேண்டும்! ஆமாம், உடனே செய்தாக வேண்டும்…”

“ஒருவேளை ஜெனரலுடைய நாய்தானோ என்னமோ” என்று போலீஸ்காரர் வாய்விட்டுச் சிந்திக்கலானார். “யாருடையது என்று அதன் மூஞ்சியிலா எழுதி ஒட்டியிருக்கிறது? அன்று நான் இம்மாதிரியான ஒரு நாய் அவருடைய வீட்டு வெளிமுற்றத்தில் இருக்கக் கண்டேன்.”

“ஜெனரலுடைய நாய்தான், சந்தேகமே வேண்டாம்!” என்று கூட்டத்திலிருந்து அந்தக்குரல் மீண்டும் ஒலித்தது.

“ஓ! கோட்டை என்மீது மாட்டு, எல்தீரின்…ஜில் காற்று வீசுகிறது, குளிராயிருக்கு. இதை ஜெனரலுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கே அவர்களைக் கேட்டுப்பார். நான் இதைக் கண்டதாகவும் அனுப்பிவைத்திருப்பதாகவும் சொல்லு. தெருவிலே விடவேண்டா மென்று அவர்களிடம் கூறிவிட்டு வா. விலை உயர்ந்த நாயாய் இருக்கும். ஊரிலுள்ள முரடர்கள் எல்லாம் இதன் மூக்கிலே சிகரெட்டைத் திணிக்க முற்பட்டால் உருப்படாமல் அல்லவா போய்விடும்! நாய் மென்மையான பிராணி…முட்டாளே! கையைக் கீழே இறக்கு! அசிங்கம் பிடித்த அந்த விரலை எல்லோருக்கும் காட்டிக்கிட்டு நிக்காதே. எல்லாம் நீ செய்ததுதான்! குற்றம் உன்னுடையதுதான்….”

“ஜெனரலுடைய சமையற்காரர் இதோ வருகிறாரே, அவரைக் கேட்டால் தெரிந்துவிடுகிறது… உம்மைத்தானே புரோஹர்! கிழவரே, இங்கே வா! இந்த நாயைப் பார். உங்க வீட்டு நாயா இது?”

“நல்லாயிருக்கே, இந்த மாதிரி ஒரு நாய் எங்களிடம் எந்நாளும் இருந்ததில்லை!”

“இனி யாரையும் விசாரிக்கத் தேவையில்லை” என்றார் அச்சுமேலவ். “தெருநாய்தான். இங்கே பேசிக்கொண்டு நின்று பயனில்லை. தெருநாயென்று சொல்லிவிட்டார்கள். ஆகவே இது தெருநாயேதான்! இழுத்துச் சென்று ஒழித்துக்கட்டு! விவகாரம் தீர்ந்துபோகட்டும்.”

“இது எங்களுடைய நாய் அல்ல” என்று புரோஹர் தொடர்ந்து சொன்னார். “ஜெனரலுடைய சகோதரர் சில நாட்களுக்கு முன்பு வந்தாரே, அவருடையது இது. எங்கள் ஜெனரலுக்கு பர்சோய் நாய்கள் பிடிக்காது. ஆனால் அவர் சகோதரர் இருக்கிறாரே, அவருக்கு உயிர்…”

“என்ன, ஜெனரலுடைய சகோதரர் வந்துவிட்டாரா? விளாதீமிர் இவானிச் வந்துவிட்டாரா?” என்று வியந்து கூவினார் அச்சுமேலவ். ஆனந்தத்தால் அவர் முகம் பூரித்துவிட்டது. “மகிழ்ச் சிக்குரிய செய்தி ஆயிற்றே! எனக்குத் தெரியாதே இது! இங்கேயே தங்கிவிடப் போகிறாரா?”

“இங்கேதான் இருக்கப்போகிறார்.”

எதிர்பாராத நல்ல செய்தி! தமது சகோதரரைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறாரா? செய்தி தெரியாதவனாக இருந்திருக்கிறேன். அவருடைய நாயா இது? மட்டற்ற மகிழ்ச்சி! வீட்டுக்கு அழைத்துச் செல்….அற்புதமான நாய்க்குட்டி! அந்த ஆளின் விரலைக் கடித்தாயா நீ! ஹா… ஹா…ஹா! பரவாயில்லை, நீ நடுங்காதே! உர்…உர்…உர்…பொல்லாத குட்டி! கோபம் பொத்துக் கொண்டு வருகிறது…அருமையான நாய்க்குட்டி!”

புரோஹர் அந்த நாயை அழைத்துக்கொண்டு மரவாடியிலிருந்து போய்ச் சேர்ந்தார். கூட்டத் தினர் ஹரியூக்கினைப் பார்த்துச் சிரித்தனர்.

“இரு! செம்மையாய்த் தருகிறேன் உனக்கு!” என்று அச்சுமேலவ் அவனை மிரட்டினார். பிறகு மேல்கோட்டை நன்றாக இழுத்துவிட்டுக்கொண்டு சந்தையின் குறுககே நடந்தார்.

இப்போது பின்வரும் கேள்விகளுக்கு விடைகளை யோசிக்கலாம்-

1. செகாவ், பாத்திரங்களின் பண்புகளை வெளிப்படுத்த என்ன வழிகளைக் கையாளுகிறார்? பாத்திரங்கள் போதியஅளவு நாடகப்படுத்தப்பட்டுள்ளனரா? பாத்திரமுரண்படுத்தல் எவ்வித மாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது?

2. பாத்திரங்கள் தங்கள் செயல்களில் முரண்பாடின்றி நடக்கிறார்களா? அவர்கள் நடத்தைகளுக்குப் போதிய தூண்டுதல் இருக்கிறதா? நம்பத்தகுந்த பாத்திரங்கள்தானா? ஆசிரியர் ஸ்டாக் (ஒற்றைப் பரிமாணப்) பாத்திரங்களைத் தவிர்த்துள்ளாரா?

3. கதையில் தங்கள் பங்கிற்கேற்பப் பாத்திரங்கள் போதிய அளவு வளர்க்கப்பட்டுள்ளார்களா? முக்கியக் கதைமாந்தர் சிற்பப்பாத்திரங்களா, ஓவியப்பாத்திரங்களா?

4. வளர்ச்சிபெறக்கூடிய பாத்திரம் ஏதேனும் உண்டா? ஏன் உண்டு அல்லது இல்லை?

கடைசியாகச் சொல்லவேண்டிய சொல் ஒன்று உண்டு. பாத்திரப்படைப்பு என்பது ஒருபோதும் நடுநிலையாக இருக்கமுடியாது. பாத்திரப் படைப்பின் ஒவ்வொரு கூறும், ஏதோ ஒரு எண்ணம் அல்லது நிலைப்பாட்டினை விளக்குகிறது. அதனால்தான் நாம் பாத்திரங்களை வாசிக்க முடிகிறது. மேலும் இம்மாதிரி வருணனைகள்தான் ஆசிரியர் யார் பக்கம் என்பதைக் குறிப்பாக உணர்த்தவும் செய்கின்றன.

மேலேபார்த்த பச்சோந்தி கதையில் வரும் அச்சுமேலவ்-அவர்தான் கதைத் தலைவர்-எப்படிப்பட்டவர்? சந்தேகமின்றி வசதியுள்ளவர்தான் (காவல்துறை உயர்அதிகாரி-கூடவே ஒரு போலீஸ்காரர் எடுபிடியாகப் பின்தொடர்கிறார்). பச்சையான பூர்ஷ்வா. ஏழைகளை மிரட்டிப் பணம் பறிப்பவர் (யாரோ ஒருவரிடமிருந்து பறிக்கப்பட்ட நாவற் பழக்கூடையைப் போலீஸ்காரர் தலையில் தூக்கிவருகிறார். நாவற்பழம் விற்கின்ற ஒரு கடைக்காரன்/காரி அன்றாடங்காய்ச்சியாகத்தான் இருப்பான்(ள்).)

தனது நிறத்தை அவ்வப்போது மாற்றிக் கொள்பவர் (பச்சோந்தி). மேலதிகாரிகளைக் காக்காய் பிடிப்பவர். அதன்மூலம் பயன்பெற வேண்டுமென்று நினைப்பவர். அதற்காக நியாயத்தைக் காற்றில் பறக்க விட்டுவிடலாம் என்று நினைப்பவர் என்பது மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்டவரையே மிரட்டுபவர். இத்தகைய ஆட்கள் எத்தனைபேரை நாம் வாழ்க்கையில் அரசாங்க அலுவலகங்களில், காவல் நிலையங்களில் சந்தித்திருக்கிறோம்?

கதை வருணனையில் வரும் ஒரு முக்கியமான விஷயம் கவனிக்கவேண்டியது. அவ்வப்போது அவருக்கு வியர்க்கிறது. மேல்கோட்டைக் கழட்டு என்கிறார். அல்லது குளிர்கிறது. இழுத்து மூடிக்கொள்கிறார். இவை எதை வெளிப்படுத்துகின்றன என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். இந்த விஷயங்கள் கதையில் உருவகம், படிமம் என்ற விஷயங்களுக்கு அழைத்துச் செல்லும்.

In fact, professors in germany generally do not know the paying someone to write an essay names of the students enrolled in their courses

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இயல் 4 – சிறுகதையின் கூறுகள்-பாத்திரவார்ப்பு”

அதிகம் படித்தது