மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இருளர் இன மக்களின் கலாச்சாரமும், இன்றைய வாழ்க்கைச் சூழலும் (கட்டுரை)

ஆச்சாரி

Aug 1, 2013

இருளர் இனம்:

ஆதி தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களில் தங்கள் வாழ்க்கையை மேற்கொண்டனர் என்பது உலகறிந்த வரலாறு. இந்த ஐவகை நிலங்களில் முல்லை நிலமான காடும் காடு சார்ந்த பகுதிகளில், வாழ்ந்த ஆதி தமிழ் குடும்பங்கள் தான் இந்த இருளர் இனம் என்று கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு இயற்கை மாற்றங்களாலும், வாழ்தல் வேண்டியும் தென்னிந்திய மாநிலங்களில் உள்ள காடுகளில் பரவலாக வாழ்ந்து வந்தவர், பின்பு காட்டை விட்டு மருத நில மக்கள் வாழும் நிலப்பகுதியில் வந்து வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் தஞ்சை, செஞ்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், கோவை ஆகிய மாவட்டங்களிலும் இன்னும் பிற பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் சமுதாயப்படிநிலை மிகத்தாழ்த்தப்பட்ட ஒன்றாகும். ஆகையால் இன்று இவர்கள் பட்டியல்வகுப்பினர் என அரசால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் தற்கால வாழ்வியல் சூழல் கேள்விக்கிடமாகவும், பெரும் மாற்றங்களுக்கு உட்பட்டும் நிற்கிறது. காடு, சாதி சார்ந்த வாழ்வியலை மீறி நவீன பொது வாழ்வியலுடன் தங்கள் தனித்துவத்தையும் பேணி இணைவது இவர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது.

மொழி:

இவர்கள் பெரும்பாலும் தமிழ், தெலுங்கு மொழிகளையே அதிகம் பேசுகின்றனர். இவர்களின் மொழி வழக்கு இருளர் மொழிவழக்கு என்றும் கூறப்படுகிறது. இம்மக்களில் எவரும் தங்கள் முன்னோர்களைப் பற்றியும், தங்களின் கலாச்சாரம், பண்பாடு பற்றியும் எழுதி வைத்ததில்லை. காரணம், இவர்கள் பேசும் இருளர் மொழிக்கு எழுத்து வடிவமே இல்லை. உலகில் பழங்குடியினர் பேசும் மொழிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை இன்று உயிர்ப்போடு இல்லை. காரணம் தோற்றுப் போனவர்களின் மொழி என வெற்றி பெற்றவர்கள் எண்ணுகின்றனர் போலும்.

இப்பேர்பெற்ற பழங்குடிகளான இருளர் இன மக்கள் இன்று எச்சூழலில் வாழ்கின்றனர் என்பதை அறிய மாமல்லபுரம் பிரதான சாலையின் வலப்புறத்தில் அமைந்திருக்கும் ‘திருவிடந்தை’ என்ற கிராமத்திற்குச் சென்றோம்.

திருவிடந்தையில் ‘நித்திய கல்யாணப் பெருமாள்’ என்ற பிரசித்திபெற்ற கோவில் உள்ளது. திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வேண்டினால் நிச்சயம் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. தவிர 60-ஆம் கல்யாணம் பண்ணிக்கொள்ள இத்தலமே தமிழ்நாட்டில் சிறந்த தலம் என்பதால் இந்த வயதுடையவர்கள் இங்கு வந்து 60-ஆம் கல்யாணம் செய்து போகும் முதியோர்கள் பலர் வலம் வரும் தலம் இது. இத்தலத்திற்கு இடது புறத்தில், திருவிடந்தை கிராமத்தின் ஒரு ஒதுக்குப்புறத்தில் இரு தெருவை மட்டும் கொண்ட சிறு காலனியில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

“இருளர் பெண்கள் நல அமைப்பு” என்ற பழமை மிக்க பதாகை இக்காலனிக்கு முகவாயிலில் உயிரற்று நின்று கொண்டு நம்மை வரவேற்கிறது. இக்காலனியில் அதிகாலையிலேயே ஆண்களும், பெண்களும் கூலிப் பணிகளுக்கு சென்றுவிட்டதின் அடையாளமாக தெருக்கள் ஆள் அரவமற்று வெறிச்சோடிக் கிடந்தன. இக்காலனியில் மொத்தம் உள்ள 25 வீடுகளில் 18 குடும்பங்களே இங்கு வசிக்கின்றனர். அத்தனை வீடுகளும் அரசு கட்டிக் கொடுத்த இலவச காலனி வீடுகள். 70 நபர்கள் மட்டுமே இக்காலனியில் வசிக்கின்றனர்.

‘இருளர் பெண்கள் நல அமைப்பு’ என்ற தொண்டு நிறுவனத்தில் ஒரு உறுப்பினராக இருந்த புஷ்பா (32) என்ற பெண்மணியிடம் இக்காலனி வாழ்க்கைச் சூழல் பற்றியும், வாழ்வியல் முறைகள் பற்றியும் கேட்டபோது இவர் கூறியதாவது.

நன்கு வாழக்கூடிய வாழ்க்கைச் சூழலில் எங்கள் வாழ்க்கை இல்லை. 18 வயதில் திருமணமாகி 2 குழந்தைகளைக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். என் கணவர் ராசா. அன்றாடக் கூலி வேலை செய்து வருகிறார். மரம் வெட்டுதல், மீன் பிடித்தல், கட்டிடம் கட்டுவதற்கு கலவை கலந்து கொடுத்தல் போன்ற வேலைகளைச் செய்து வருகிறார். நான் ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் 100 நாள் வேலைக்குச் செல்கிறேன். ஏதோ எங்கள் வாழ்க்கை ஓடுகிறது.

திருமண முறை:

எங்கள் இனத்தில் திருமணம் நிச்சயமான பின் ஒரு வருடத்திற்கு மணமாகாமலேயே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வார்கள். பின் இவர்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்றால் திருமணம் நடக்கும். பிடிக்கவில்லை என்றால் இருவருமே வேறு நபரைத் திருமணம் செய்து கொள்ளலாம், விபச்சாரம் என்ற வார்த்தை எங்கள் மத்தியில் எந்த மட்டத்திலும் இல்லை. ஆனால் தற்போது திருமண முறையில் முன்பு கூறியது போலவும், வழக்கமாகத் தமிழகத்தில் நடக்கும் திருமண முறை போலவும் நடக்கிறது. இதில் சொந்தத்திற்குள்ளே மட்டுமே பெண் கொடுத்து, பெண் எடுக்கும் முறை எங்கள் திருமண முறையில் உள்ளது. வரதட்சணை என்பது கட்டாயமில்லை விரும்பிப் பெண் வீட்டார் போடுவது மட்டுமே.

தொழில் முறை:

போதிய படிப்பறிவின்மையால் நாங்கள் தொன்று தொட்டே பாம்பு பிடித்தல், எலி, முயல், ஆமை, உடும்பு போன்ற விலங்கினங்களைப் பிடித்து வாழ்கிறோம். இதில் பாம்பு பிடித்து பாம்பு பண்ணையில் கொடுத்தால் ஓரளவிற்கு பணம் கிடைக்கும். கட்டுவிரியன், கண்ணாடிப் பாம்பு, நல்ல பாம்பு, மலைப் பாம்பு, கருவிளாம் பாம்பு (குட்டியாக இருக்கும்), சுருட்டைப் பாம்பு, பேபி பாம்பு (2  தலை உள்ளது. இந்த பாம்பின் சிறப்பு என்னவென்றால் 6 மாதத்திற்கு ஒரு முறை தலை முன்னும், பின்னும் மாறி மாறி இருக்கும்) தவிர நண்டு தொரக்கான், தேள், இவைகளையும் பிடிக்கிறோம். இவற்றில் நண்டு, எலி, மீன் போன்றவைகளை அன்றாட உணவுக்குப் பயன்படுத்துவோம். தற்போது எங்களின் பெரும் போராட்டமே உணவுக்காக உள்ளது. பாம்பு ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள முதலில் எங்களையே நாடி வருகின்றனர். தற்போது கடலில் போய் மீன் பிடித்து வந்தால் தான் சோறு, இல்லை என்றால் பட்டினி.

இருளர் கலை:

எங்களுக்கு இன்னொரு மொழி இசை. எங்களது ஆடல், பாடல்களில் காதல் ரசம் தூக்கலாக, இன்றைய நாகரீக மனிதரைக் காட்டிலும் பாலின சமத்துவம் எங்களிடம் உள்ளது. பெண்களுக்கு நிகராக ஆண்களும் சமையல் வேலை செய்கின்றனர். ஒரு நாள் முழுதும் கடினமாக  உழைத்து மாலை நேரம் வீடு திரும்பும் ஆண்களும், பெண்களும் ஒன்றாகச் சமைத்து சாப்பிட்டப் பின் அனைத்துக் குடும்பங்களும் ஓரிடத்தில் அமர்ந்து எங்கள் இனப்பாடலைப் பாடி நடனம் ஆடுவோம்.

பாட்டை, எவர் வேண்டுமானாலும் பாடுவர், ஆட்டத்தை எவர் வேண்டுமானாலும் ஆடுவர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஓரிடத்தில் அமர்ந்து ஆடிப், பாடும் அந்த மகிழ்ச்சிக்கு இணையான மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை. இதில் ஆண், பெண் என்று பார்க்காது மது அருந்தி, உணவு உண்டு ஆடிப்பாடி மகிழ்வுடன் இருப்பார். ஒவ்வொரு குடும்பத்திலும் ஜால்ரா, மேளம் போன்ற இசைக்கருவிகள் வைத்துள்ளனர். எங்களுக்கு மேடை என்பது நடுத்தெருவும், திண்ணையும் தான்.

நாங்கள் பாடும் பாடல்களில் சில:

பாடல்: 1

ஆண்: நலந்தானம்மா தேவி சுகந்தானம்மா

பெண்: நான் நலன்தானைய்யா மாமா சுகந்தானைய்யா

ஆண்: நீ மல்லிப் பூவாட்டம் தேவி பூத்துக்குலுங்கிறியே

ஒன்னத்தொட்டுப் பரிச்சாலும் தேவி எட்டிப் போகுறியே

நலந்தானம்மா தேவி சுகந்தானம்மா

 பெண்: ஒரு பொண்ண பூவாட்டம் மாமா வளஞ்சு பாக்குறியே

ஒன்ன எட்டிப் பாத்தாலும் நீ சிரிச்சு மலுப்புறியே

நீ நலந்தானைய்யா மாமா சுகந்தானைய்யா

ஆண்: நீ கொட்டிப் பூவாட்டம் தேவி பூத்துக்குலுங்குறியே

நான் கிட்ட வந்தாக்கா நீ சிட்டாப் பறக்குறியே

நீ நலந்தானம்மா தேவி சுகந்தானம்மா

பெண்: ஒரு கழக்கா பூவாட்டம் மாமா பாத்து சிரிக்கிறியே

நான் கலங்கி நின்னாலும் மாமா கண்ணத் துடைக்கிறியே

நீ நலந்தானைய்யா மாமா சுகந்தானைய்யா

மாமனும், மாமன் மகளும் தங்களின் நலத்தையும், சுகத்தையும் மென்மையான பூக்களின் வரிசையிலே பாடி இப்படி விசாரித்துக் கொள்வர்.

பாடல்: 2

ஆண்: ஆத்தங்கர ஓரத்துல ஏ… ஆடு மேய்க்கிற குள்ளப்பெண்ணே

ஆத்துல வெள்ளம் வந்தா நீ என்ன பண்ணுவ குள்ளப்பொண்ணே

பெண்: ஆத்துல வெள்ளம் வந்தா மாமா படகு மேல நான் வருவேன்.

ஆண்: சன்னா குன்னியா ரூபம் கொண்டு பெண்ணே

படகை எல்லாம் கவுத்திடுவேன்.

பெண்: கொறவ மீனாட்டம் ரூபம் கொண்டு- மாமா

நான் சேத்திலயும் புகுந்திருவேன் – மாமா

இவ்வாறு எத்தனை ரூபங்கள் நீ கொண்டாலும் உன்னை விட்டுப்  போகமாட்டேன் என்று மாமன்காரன் அத்தை மகளை நினைத்துப் படுவதே இப்பாடல்.

பாடல்: 3

 ஆண்: உடும்பு போற நடையப்பாரு

இன்னா வாட்டமா போகுது பாரு

எத்துக்கடி அந்த சில்லா கொம்ப

எத்துக்கடி அந்தப் பல்லாக் கொம்ப

பெண்: மொசலு போற நடியே பாரு

 இன்னா வாட்டமா காட்டுல மேயுது

எத்துக்கைய்யா அந்த சில்லா கொம்ப

எத்துக்கைய்யா அந்த பல்லாக் கொம்ப

ஆண்: வத்தெலி போற வலையப் பாரு

இன்னா வாட்டமா வலையில போகுது

எத்துக்கடி அந்த சில்லா கொம்ப

எத்துக்கடி அந்தப் பல்லாக் கொம்ப

பெண்: மாமா போற நரியப் பாரு

இன்னா வாட்டமா நழுவுது பாரு

எத்துக்கைய்யா அந்த சில்லா கொம்ப

எத்துக்கைய்யா அந்த பல்லாக் கொம்ப

உடும்பு, வரப்பு எலி, ஆமை, கீரிப்பிள்ளை என இவர்கள் சாப்பிடும் இந்த உணவுகளை வைத்தும் பாட்டுக்கட்டி பாடியுள்ள பாடல் இது.

வழிபாட்டு முறை:

எங்களின் குலசாமி கன்னிமார் சாமி. எங்கள் தெருவுக்கு பின்புறம் உள்ளது. நடுகல் போல இருக்கும் இந்த சாமியைத்தான் பூர்வீகக் காலத்தில் இருந்து நாங்கள் வழிபட்டு வருகிறோம். தவிர மாரியம்மன் சாமியையும் வழிபடும் வழக்கம் உள்ளது. எங்க குலசாமிக்கு கூழு ஊற்றி, கருவாடு, கத்தரிக்காய், முருங்கை, உருளைக்கிழங்கு போன்றவைகளைச் சமைத்து பூசை செய்து வழிபடுவோம். இந்த உணவுக்கலவையை எங்கள் குலசாமியைச் சுற்றி உள்ள நாலு திசைகளில் வைத்து வழிபடும் போது ஆளாளாளுக்கு சாமி வந்து ஆடுவர். தவிர மாசி மாதத்தில் மூன்று நாட்கள் மாமல்லபுரம் கடற்கரையில் எங்கள் இன மக்கள் பலர் கூடி அங்கே கடலுக்குள் இருக்கும் கன்னியம்மா தெய்வத்தை வழிபடுவோம். கன்னியம்மாளை ஆயம்மா என்று அழைக்கின்றனர்.

அடிப்படை வசதிகள் எப்படி?

அரசு தான் எங்களுக்கு இந்தக் காலனியைக் கட்டிக் கொடுத்தது. ஆனால் மழை வந்து விட்டால் உள்ளே இருக்க முடியாது. ஆங்காங்கே ஒழுகுகிறது. நல்ல வீடு ஒன்று வேண்டும் என காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்திலும், எங்கள் ஊர் பஞ்சாயத்துத் தலைவர் சங்கர் அவர்களிடமும் எத்தனையோ முறை மனு கொடுத்தும், கூறியும் பார்த்து விட்டோம். ஒன்றும் பலனில்லை. அரசிடம் இருந்தும் ஆணை வந்ததும் உங்களுக்கு வீடு கட்டித் தருகிறேன் என பஞ்சாயத்துத் தலைவர் கூறி 13 வருடம் ஆனது. இன்னும் எந்த ஏற்பாடும் செய்து தரவில்லை. இங்கே உள்ள வீடுகளை நமக்கு காட்டினார். இவர்கள் கூறுவதை விட மோசமான நிலையிலேயே இவர்கள் வாழும் வீடுகள் உள்ளன. 25 குடும்பத்தில் 18 குடும்பத்திற்குத்தான் இங்கே வீடுகள் உள்ளன. மற்றவர்கள் குழந்தையோடு தெருவிலே படுத்து உறங்குகின்றனர். இதில் மழை ஏதும் வந்து விட்டால் நித்திய கல்யாணப் பெருமாள் கோவில் முன்பு உள்ள சிறு மண்டபத்தில் போய் 15 குடும்பங்கள் படுத்துக் கொள்கின்றனர். அதிகாலை ஆனதும் மீண்டும் தங்கள் தெருத்திண்ணைக்கே வந்து விடுகின்றனர். இந்த நிலை என்று மாறப் போகிறதோ தெரியவில்லை என புஷ்பா புலம்பினார். மேலும் மழை காலத்தில் குழந்தைகளுக்கு வரும் தொற்று நோய்களைக் கூட குணப்படுத்த பணமில்லாத அவல நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

 குடிநீர் பிரச்சனை:

எங்களுக்காகத்தான் ஒரு தண்ணீர் தொட்டி கட்டினார்கள். இதில் எங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் தான் தண்ணீர் விடுகின்றனர். அந்த குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு எங்கும் சென்று விட்டால் நீர் பிடிக்க முடியாது. பின்பு தூரமாக இருக்கும் கிணற்றிற்குப் போய் நீரைப் பிடித்து வர வேண்டும். நல்ல வீடு வேண்டியும், குடிநீர் வேண்டியும் பஞ்சாயத்துத் தலைவரிடம் முறையிட்டோம். வந்து எங்கள் காலனியைக் கண்டு விட்டு உங்கள் வீடெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது.பிறகு ஏன் வீடு கேட்கிறீர்கள்? தொடர்ந்து குடிநீர் வர ஏற்பாடு செய்கிறேன் என்று போனவர்தான் இன்னும் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் மட்டும் எங்கள் மீது பாசமழை பொழிவதும், நான் உங்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவேன் என்று பொய் வாக்கு உரைப்பதும் காலம் காலமாக மாறாத கதையாகத்தான் இருக்கிறது.

தவிர பஞ்சாயத்துத் தலைவர் வாழும் மேற்குடிப் பகுதிக்குள் பாம்பு வந்தால் பிடிக்க எங்களை அழைத்துச் செல்வார்கள். எவரேனும் இங்கு தற்கொலையோ, சாவோ விழுந்தால் நாங்கள் தான் தூக்கிப் புதைக்கப் போக வேண்டும். இவ்வாறு இவ்வூர்க்காரர்கள் என்ன வேலை சொன்னாலும் அதைத் தட்டாமல் செய்யும் எங்கள் இனத்தை முன்னேற்ற எவரும் முனைந்ததில்லை. ஒரு நியாயவிலைக் கடைக்குக் கூடச் சென்றாலும் அங்கே மளிகைப் பொருட்களை அளந்து போடுபவர் பெண்களாகிய எங்களைப் பார்த்து வில்லீர், காட்டுக்காரர்கள், பாம்பு புடிப்பவர்கள் எனக்கூறி எங்களை இழிவு படுத்துகின்றனர். நாங்கள் அவர்களை மறுத்துப்பேச முடியவில்லை.

மின்சாரம் வசதி:

இங்கே உள்ள 25 வீட்டில் 3 வீட்டிற்கு  மட்டுமே மின்சார இணைப்பு உள்ளது. எங்கள் காலனியில் 10 குழந்தைகள் இங்கே அருகில் இருக்கும் கோவளம், நெம்மேலியில் இருக்கும் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். இவர்கள் பள்ளி முடித்து வந்தால் இரவில்  படிக்க மின்சார வசதி கூட இல்லை. தெரு விளக்கில் பிள்ளைகள் அமர்ந்து படிக்கின்றனர். இதில் மழை வந்து விட்டால் அந்த விளக்கிலும் படிக்க முடியாது. நாங்கள் தான் படிக்கவில்லை. எங்கள் குழந்தைகளாவது நாளை நன்கு படித்து வர வேண்டும் என்று நாங்கள் நினைத்தாலும் போதிய வசதிகள் இல்லை.

 அரசு உதவிகள்:

இந்தக்        காலனி வீடுகளில், 2 வீட்டிற்கு மட்டுமே மின்சாரமும், குடிக்க அவ்வப்போது கிடைக்கும் கொஞ்சம் குடிநீரைத் தவிர இந்த அரசு எங்களை முன்னேற்ற எந்த உதவியும், திட்டமும் இடவில்லை. தற்போது அரசு அளிக்கும் ,  விலையில்லா ஆடு, மாடு, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி என ஒவ்வொரு ஊரிலும் மக்கள் வாங்கி பயன்பெற்று வந்தாலும் எங்களுக்கு இதுவரை இந்தப் பொருட்கள் கிடைத்தது இல்லை. எந்த இலவசங்களும் எங்களை வந்தடையவில்லை. இப்போது எங்களுக்கு இருக்கும் ஒரே சொத்து அரசு கட்டிக்கொடுத்த வீடான இரண்டரை செண்ட் நிலமும், எங்களின் ஓட்டு மட்டுமே உள்ளது.

அரசு வேலை வாய்ப்பு உங்களுக்கு எப்படி ?

 படிக்கவே வழியில்லாத எங்களுக்கு எங்கு அரசு வேலை தரப்போகிறார்கள். உணவு, உடை, உறைவிடம், கல்வி இது கிடைத்தாலே போதும் என்பது போல் புஷ்பா பேசினார்.

ஆண்கள் எலி, பாம்பு பிடித்து வருகிறார்கள். பெண்களான நாங்கள் சித்தாள் வேலைக்கும், மண் சுமக்கவும், கல் சுமைக்கவும், இங்கே உள்ள கோவளம் கடற்கரையில் உள்ள குப்பைகளைப் பொறுக்கிச் சுத்தம் செய்யும் வேலையும் செய்து வருகிறோம். எங்கள் காலனியில் பெண்களான நாங்களே ஒரு குழுவாக இணைந்து “இருளர் பெண்கள் சேமிப்புக் குழு” -என்ற 15பேர் கொண்ட குழுவில் மாதா மாதம் எங்கள் கைகளில் கிடைக்கும் பணத்தைச் சேமித்து வருகிறோம். இப்போதைக்கு எங்களுக்கு இருக்கிற ஒரே வங்கிச் சேமிப்பு என்பது இந்தக் குழுவில் நாங்கள் சிறுகச் சிறுகச் சேர்த்து வைக்கும் பணம் மட்டுமே என புஷ்பா கூறிவிட்டு எனக்குக் குடிக்க தண்ணீர் கொடுத்து என்னை வழியனுப்பி வைத்தார்.

தமிழகத்தின் பூர்வீகக் குடிகளாக காடுகளில் வாழ்ந்த இவர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்ட பின்பு, சமவெளி மக்களை அண்டி வாழ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டனர். பெரும்பாலும் இவர்கள் சமவெளி மக்களிடம் இன்றுவரை கொத்தடிமைகளாகவே உள்ளனர். இது ஜனநாயக நாடு, எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற வாசகங்கள் இவர்களுக்குப் பொருந்தாது போலும். பணக்காரன் பணக்காரனாகவும், ஏழைகள் மீண்டும் ஏழைகளாகவும் ஆக்கி வருகின்ற இந்த ஜனநாயகத்தை என்னவென்று சொல்வது?

Die erluterung der hypothese oder forschungsfrage, die in der best-ghostwriter.com arbeit bearbeitet wird

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இருளர் இன மக்களின் கலாச்சாரமும், இன்றைய வாழ்க்கைச் சூழலும் (கட்டுரை)”

அதிகம் படித்தது