இரு தொழில்நுட்ப புரட்சியாளர்கள்
ஆச்சாரிNov 1, 2011
சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப உலகம் தனது இரண்டு மேதைகளை இழந்துள்ளது. இருவருமே தத்தமது துறைகளில் வல்லுனர்களாக விளங்கியவர்கள். இருவருமே வலிமையான படைப்புகளையும், ஆக்கங்களையும் உலகுக்கு அளித்தவர்கள், இருவருக்கும் அவர்களது துறையில் மட்டற்ற மரியாதையும், சிறப்பும் இருந்தது , ஒரே ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால் ஒருவர் உலகப் புகழ் பெற்றவர், ஊடகங்களினால் கொண்டாடப்பட்டவர், மற்றவர் தமது துறையில் மட்டுமே அறியப்பட்டவர். இந்தப் பதிவு கணக்கற்ற பங்களிப்புகளை உலகுக்கு தந்த இவர்களின் நினைவை போற்றும் வகையில் எழுதப்படுகிறது.
ஒரு கணினியின் இதயம் போன்றது ஒபெரடிங் சிஸ்டம் என்று அறியப்படும் கணினியை இயங்கச் செய்யும் இயக்கு மென்பொருள். இதனை கணினியின் மூளை என்றும் இதர கணினி சாதனங்களை தசையும், எலும்பும் என ஒப்பிடலாம். அறுபதுகளின் இறுதி வரை இந்த இயக்கு மென்பொருள் கணினியின் அச்செம்ப்லி லேங்குவேஜ் எனப்படும் எந்திர மொழியில் எழுதப்பட்டது. கணினியின் செயல்திறத்தை முழுதும் வெளிக்கொணர இந்த மொழியில் எழுதப்பட்டது.
கணினியின் இயக்கு மென்பொருள் என்பது மிகவும் கடினமான ஒரு விடயம். ஏனெனில் அவை கணினியின் வன்பொருட்கள், பயனாளர்கள் மற்றும் பிற செயல் ஓட்டங்களை நிர்வகிக்கும் செயலை செய்கிறது. அந்நாளைய மெயின்பிரேம் கணினிகள் மிகவும் பெரிதாகவும், அதிக செலவு பிடிப்பதாகவும் இருந்தன. எனவே அப்போது கணினியின் செயல் திறன் ஆனது பல செயல் ஓட்டங்களிடையே பகிரப்பட்டது. அந்த நேரத்தில் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் மல்டிக்ஸ் என்ற பெயரில் பல சிறப்புகளை கொண்ட இயக்கு மென்பொருளை உருவாக்கியது. ஆனால் இதுவும் சிக்கலும் செலவும் கொண்டதாக இருந்தது. இந்த மென்பொருள் உருவாக்கத்தில் பணி புரிந்த கேன் தோம்ப்சன் மற்றும் டென்னிஸ் ரிட்சி ஆகிய இருவர், மல்டிக்ஸ் இன் சில சிறப்புகளை மட்டும் எடுத்து, யுனிக்ஸ் என்ற பெயரில் ஒரு கணினி இயக்கு மென்பொருளை உருவாக்கினர்.
இவர்கள் யுனிக்ஸ் மென்பொருளை கணினியின் இயங்கு மொழியில் எழுதாமல் அதை விட மேம்பட்ட மொழியான சி மொழியில் உருவாக்கினர். இந்த சி மொழி டென்னிஸ் ரிட்சி மற்றும் ப்ரைன் கேர்நின்கான் என்ற இருவரால் உருவாக்கப்பட்டது.அந்த கால கட்டத்தில் இது மிகவும் துணிச்சலான மற்றும் புதுமையான முயற்சி.
மேலும் இத்தனை சிறப்புகள் போதாது என்று என்று யுனிக்ஸ் மென்பொருளின் மொத்த உருவாக்க குறியீடுகளையும்(Source Code) இலவசமாக கல்வி நிறுவனங்களுக்கும் ஆர்வப்பட்ட நபர்களுக்கும் அளித்தனர். இதனால் யார் வேண்டுமென்றாலும், யுனிக்ஸ் மென்பொருளில் மாற்றங்கள் செய்து பயன்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆக இவர்கள் எளிமையான அதே சமயம் வலிமையான ஒரு இயக்கு மென்பொருளை மேம்பட்ட ஒரு மொழியில் உருவாக்கி அதனையும் இலவசமாக அனைவர்க்கும் தந்து விட்டனர்.
இதனால் பலரும் இதனை எடுத்து மாற்றங்கள் செய்து ஒரு மிகச்சிறந்த இயக்கு மென்பொருள் பிறக்க வழி செய்துவிட்டனர். அதன் பிறகு உலகின் பெருவாரியான கணினிகள் இந்த யுனிக்ஸ் மென்பொருளின் இயக்கத்தில் இயங்க ஆரம்பித்துவிட்டது. அது இன்று வரை தொடர்கிறது. இந்த கட்டுரையை நீங்கள் படிக்கும் இந்த நேரத்தில், இந்த கட்டுரையின் உருவாக்கம், அமைப்பு, வெளியீடு போன்றவை யுனிக்ஸ் இன் மூலமாக நடந்திருக்க பாரிய வாய்ப்புகள் உண்டு. இவை யாவும் சில மனிதர்களின் பேரார்வம், ஊக்கம் இவற்றால் விளைந்தவை. அவர்களில் ஒருவர் தான் டென்னிஸ் ரிட்சி.
அந்த டென்னிஸ் இந்த மாதம் இறந்து போனார். அவருக்கு நமது அஞ்சலியும் வணக்கமும்.
கணினி தொழிலதிபர்,படைப்பாற்றலில் மேதை,துணிச்சல் கொண்டவர் மற்றும் நுண்ணிய மேலாண்மைக்கு பெயர் பெற்றவர் என்று அறியப்படும் ஸ்டீவ் ஜொப்ஸ் இந்த யுனிக்ஸ் இயக்கு மென்பொருளின் இயக்கத்தால் இயங்கும் கணினிகளின் உயர்வை உணர்ந்தார். ஆனால் இவை அசிங்கமாக மற்றும் பெரிதாக இருப்பதாக கருதினார். நளினம் வாய்ந்த, கண் கவரும் அழகிய கணினிகளை வடிவமைத்து அவற்றை மக்கள் பலன் பெரும் விதமாக இயங்க வைக்க எண்ணினார்.
பயனாளர்களையும், நல்ல வடிவமைப்பையும் எப்போதும் கருத்திற் கொண்ட ஸ்டீவ் ஜொப்ஸ் அவர்கள் தனது நண்பர் ஸ்டீவ் வோஜ்னியாக் உடன் இணைந்து எடுத்த முயற்சியில் உருவானதே ஆப்பிள் நிறுவனம். மசிண்டோஷ் என்ற பெயரில் காட்சி வடிவ தொடர்பு வசதியை கொண்டு, சிறந்த எழுத்து வடிவங்களுடன், அற்புதமான வசதிகளுடன் ஒரு கணினி ஆப்பிள் நிறுவனத்தால் உருவானது. அது முதற் கொண்டு சிறந்த வடிவமைப்புக்கு ஆப்பிள் நிறுவனம் பெயர் பெற்று விளங்குகிறது.
ஆப்பிள் நிறுவனத்தை விட்டு சில காலம் பிரிந்து இருந்த ஸ்டீவ் ஜொப்ஸ், பிறகு மறுபடி நிறுவனத்தில் இணைந்து ஒரு புதிய சாதனத்தை உருவாக்கினார். அது தான் தொலை பேசி உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஐபோன். ஒரு நபரின் சட்டை பையில் நுழையும் கணினி என்று இதனை கூறலாம். இதற்கென்று அப்ஸ் என்ற பெயரில் ஒரு சிறு மென்பொருள் தொகுப்பை ஏற்படுத்தினார். இதனை கொண்டு பல்வேறு வேலைகளை ஒரு பயனாளர் மேற்கொள்ளலாம்.
ஸ்டீவ் தனது சொந்த வாழ்விலும், தொழிலிலும் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை சந்தித்தார். இவையெதுவும் அவரது ஆர்வத்தையும், மேன்மைக்கான தேடலையும் தடுக்க முடியவில்லை. பல்வேறு தொழில்நுட்ப முனைவோருக்கு அவர் பெரும் உந்து சக்தியாக விளங்குகிறார், பயனாளர்களும், சிறந்த வடிவமைப்பும் ஒரு சாதனத்துக்கு எத்துணை அவசியம் என்று உலகுக்கு உணர்த்தியவர் ஸ்டீவ் ஜொப்ஸ். ஸ்டீவ், உங்களுக்கு எங்கள் அஞ்சலி.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
பெரிய ஊடகங்களே ஸ்டீவ் ஜாப்சை மட்டும் பெரிதாக காட்டும் வேலையில், கணினி மென்பொருளின் வித்தகரையும் சேர்த்து கட்டுரை அமைந்தது சிறப்பு. சிறகுகள் சிறக்க வாழ்த்துக்கள்.