இலங்கைக்கு எதிரான தமிழக மாணவர்கள் போராட்டம் - சிறப்பு கண்ணோட்டம்
ஆச்சாரிMar 21, 2013
1937 –ம் ஆண்டு முதல் முறையாக இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. பிறகு இதைத் தொடர்ந்து 1965 –ம் ஆண்டு தமிழகமெங்கும் பல மாணவர்கள் கூடி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பெரும்பங்காற்றி இந்தியை தமிழ் நாட்டிலிருந்து விரட்டியடித்தனர். அதே போல் மீண்டும் ஒரு மாபெரும் மாணவர் புரட்சி எழுந்தது இலங்கையில் போர் நடக்கும் போது. அப்போது முத்துக்குமார் அவர்கள் தீக்குளித்ததை முன்னிட்டு தமிழகமெங்கும் மாணவர் போராட்டம் பற்றி எரிந்தது. இதனை அடக்க அப்போதைய தி.மு.க அரசு அனைத்துக் கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அளித்தது. பின்பு அதே போல் ஒரு மாபெரும் மாணவர் போராட்டம் தற்போது தமிழ் நாடெங்கும் பரவிக்கொண்டிருகிறது.
இங்கிலாந்திலுள்ள சேனல் 4 என்ற தொலைக்காட்சியானது மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கடைசி மகனான, பனிரெண்டு வயது நிரம்பிய பாலச்சந்திரனுக்கு முதலில் உண்ண பிஸ்கட் கொடுத்து பின்பு கொடூரமான முறையில் மார்பில் நான்கு குண்டுகளைப் பாய்ச்சிய புகைப்படத்தை வெளியிட்டது. இதைக் கண்டதும் உலகெங்கும் வாழும் தமிழர் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை ஆளும் ராஜபக்சே அரசுக்கெதிரான கண்டனக் குரல்களும், போராட்டங்களும் வலுக்கத் தொடங்கின.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள்
கறுப்புச்சட்டை அணிந்து இலங்கைக்கு எதிராக 8.3.2013 அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே ஒன்று திரண்டு, கையில் ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகளைச் சித்தரிக்கும், படங்கள் மற்றும் வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கையிலே ஏந்தி ஈழத்தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
இவர்கள் இங்கே பேசும்போது “ இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழக மாணவர்கள் எந்த அளவிற்கு தீவிரம் காட்டினார்களோ அதே தீவிரத்தை ஈழத்தமிழர் பிரச்சனையையிலும் காட்டுவோம். மேலும் மத்திய அரசு எங்கள் கோரிக்கைக்கு இணங்கி வராவிட்டால் அடுத்தக்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள எல்லா கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்” எனத் தெரிவித்தனர். இதற்க்கு முன்பு 7.3.2013 அன்று காலை 10 மணி முதல் லயோலா கல்லூரியைச் சேர்ந்த 8 பேர் கொண்ட மாணவர் குழு இலங்கைக்கு எதிராக உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு படிக்கும் திலீபன் (வயது 20 ) இளங்கலை கணிதம் 3 –ம் ஆண்டு படிக்கும் ஜோசப் பிரிட்டோ (20) , இளம் கணிதம் 3 –ம் ஆண்டு படிக்கும் அந்தோணி ஜார்ஜ் (20) , இளங்கலை தமிழ் 2-ம் ஆண்டு படிக்கும் பார்வைதாசன் (20) , இளம் கணிதம் 3 -ம் ஆண்டு படிக்கும் பால் கென்னத் (20) , இளம் வணிகவியல் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவன் சண்முகப் பிரியன் (20) , இளம் கணிதம் 3 -ம் ஆண்டு படிக்கும் லியோ ஸ்டாலின் (20) ஆகிய எட்டு மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது விடுத்த கோரிக்கைகளாவன..
• இலங்கை மீது சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும்.
• ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
• இலங்கைத் தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும்.
• இலங்கையின் மீது பொருளாதாரத்தடை கொண்டுவர இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• உலகத் தமிழர்களைப் பாதுகாக்க தமிழக அரசு வெளியுறவுத்துறை அமைக்க வேண்டும்.
• தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் – என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்த மாணவர்களின் உண்ணா விரதத்திற்க்கு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமானும், ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ அவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் 3 வது நாளாக உண்ணாவிரதமிருந்த மாணவர்களை உலகத்தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன், கம்யூனிஸ்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் நல்லகண்ணு, டி.கே.எஸ். இளங்கோவன், பேரா.சுபவீரபாண்டியன், டாக்டர்,சேதுராமன், தொல் திருமாவளவன், தமிழருவி மணியன் போன்ற பலர் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் இருக்கும் நிலையில் 10.3.2013 மாலை 5 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு மாநில பொதுச் செயலாளர் தாமோதரன் உட்பட 10 பேர் உண்ணாவிரத பந்தலுக்கு வந்தனர்.
அப்போது மாணவர்கள் அவர்களை வாசலில் தடுத்து நிறுத்தினர், அப்போது கூட்டத்திலிருந்து தங்கபாலுவை நோக்கிக் குடிநீர் பாட்டில், வெங்காயம், புத்தகம், கற்கள் போன்றவை வீசப்பட்டன. இதில் தங்கபாலுவுடன் வந்த தாமோதரனின் மண்டை உடைந்து ரத்தம் வந்தது. ஆனாலும் உண்ணாவிரதம் இருக்கும் தமிழர்களைப் பார்த்துவிட்டுத்தான் செல்வேன் என தங்கபாலு விடாப்பிடியாக இருந்தார். போலீசார் இவரைச் சமாதானப்படுத்தி வெளியே அனுப்பியதும் இதற்காகவே காத்து நின்றிருந்த நமது வழக்கமான பத்திரிகை நண்பர்கள் தங்கபாலுவைப் புடைசூழ்ந்து என்ன, ஏது என கேள்விக்கனை வீச நொந்து போன தங்கபாலு கூறியதாவது “தமிழன் என்ற முறையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களைப் பார்த்து அவர்களுடைய கோரிக்கையை கேட்டு நடவடிக்கை எடுக்க வந்தேன். ஆனால் மாணவர்கள் போர்வையில் வன்முறைக் கும்பல் உண்ணாவிரதம் பந்தலுக்குள் என்னை வரக்கூடாது என்று எங்களை தடுத்ததுடன் கற்களையும், புத்தகம், குடிநீர் பாட்டில், வெங்காயம் போன்றவற்றை வீசித் தாக்கினர்.
நான் இவர்களைச் சந்தித்துப் பேசாமல் , வேறு யார் வந்து இவர்களைச் சந்தித்துப் பேசுவார்கள்? கற்களைத் தூக்கி வீசிக் காயப்படுத்துவதா ஜனநாயகம்? இதனைப் போலீசாரும் வேடிக்கை பார்த்தது கண்டிக்கத்தக்கது. இம்மாணவர்களின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தீர்க்க முடியும். காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பது நல்லதல்ல, இப்பிரச்சனையை சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங் , ராகுல் காந்தியால்தான் தீர்க்க முடியும் எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் ஈழத்தமிழர் பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களின் போராட்டம் வெற்றி அடைய வேண்டும் என பா.ஜ.க. மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ஆதரவைத் தெரிவித்தார். ஆளுங்கட்சிக்கு எதிராக நடத்தப்படும் பல்வேறு போராட்டங்களுக்கு எதிர்கட்சியினர் ஆதரவு தெரிவிப்பது இயல்பான, எதிர்பார்க்கின்ற ஒன்றுதான். இவ்வேளையில் லயோலா மாணவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும். அவர்களின் ஆற்றல் வருங்காலத்திற்க்குத் தேவைப்படுகிறது. உண்ணாவிரதத்தைக் கைவிட்டு இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக வரும் காலங்களில் நடைபெறும் போராட்டங்களில் தங்களை இம்மாணவர்கள் அர்ப்பணிக்க வேண்டும் எனத் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது அறிக்கை மூலம் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.
இந்நிலையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழகம் முழுவதும் மாணவர்கள் 11.3.2013 அன்று வகுப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அறிவிப்பு செய்தது. இதில் அனைத்து ஜனநாயக முற்போக்கு அமைப்புகளும் பங்கேற்க வேண்டும் என மாணவர் பெருமன்ற மாநிலச் செயலாளர் ம.வெங்கட்ராமன் கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் இவ்வாறு மாணவர்கள் கொதித்தெழும் நிலையில் மத்தியப்பிரதேச மாநில தலைநகரான போபாலில் உள்ள தமிழர்கள், இலங்கை போரில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரி பல தமிழ்க் குடும்பங்கள் தனது குடும்பத்தினருடன் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுவரை ஈழத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சாவை போர்க்குற்றமேன்றோ , இது இனப்படுகொலை என்றோ அல்லது தினமும் தமிழக மீனவர்களைத் தாக்கப்பட்டு வரும் செயலுக்கு இலங்கைக்கு எதிரான கண்டனமோ இந்தியாவை ஆளுகின்ற காங்கிரஸ் அரசு குரல் கொடுக்காதது தமிழர்களுக்கு பெருத்த அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கின்ற ஒரு செயலாகும். சோனியா அவர்களின் ஒருதாலி அருந்ததற்க்குப் பதிலாக , பழிக்குப்பழியாக பல தமிழச்சிகளின் தாலிகளை அறுத்துக்கொண்ட பெருமை இந்தியாவின் பிரபல பெண்கள் பட்டியலில் முதலாவது இடத்தில் இருக்கும் திருமதி சோனியா அவர்களையே சாரும்.
போராட்டம் தொடரும் . . . . . . . . .
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலங்கைக்கு எதிரான தமிழக மாணவர்கள் போராட்டம் - சிறப்பு கண்ணோட்டம்”