மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இலங்கைத் தமிழ்ச் சங்க விழா – 2013

ஆச்சாரி

Nov 23, 2013

அமெரிக்காவில் உள்ள நியூசெர்சி மாநிலத்தின் ‘தெற்கு புரவுன்சுவிக்’ நகரில், இலங்கை  தமிழ்ச் சங்க விழா நவம்பர் 02, 2013 அன்று காலை 9:00 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதாகத் துவங்கியது.

சிறப்பான வரவேற்புரையை அடுத்து ‘ஐ.நா. அவையில் தமிழர் சட்டப்போராட்டம் – எதிர்காலத் திட்டம்’ எனும் தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது. இதில் திரு. கசேந்திரன் பொன்னம்பலம், திரு. குருபரன், புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்கள், அரசியல் அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்புற விவாதித்தனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்த நிகழ்வாக, ‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை’  என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது, இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. சுமந்திரன், திரு. மாவை சேனாதிராசா அவர்களும், மருத்துவர் வரதராசன், திருமதி. ஆனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விவாதத்தில் பேசிய புலிகள் இயக்கத் தளபதி எழிலன் அவர்களின் மனைவி திருமதி. அனந்தி சசிதரன் அவர்கள், தற்பொழுது இலங்கையில் நடைபெற்ற வட மாகாணத் தேர்தலில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகளுடன் வெற்றி பெற்றவர். இவர் இலங்கையில் நடந்த போரில் தாமும், அங்குள்ள தமிழ் மக்களும் பட்ட கொடுமைகளைப்  பற்றிக் கூறுவதைக் கேட்டபோது கல்லான நெஞ்சும் கரைந்திருக்கும். போரின்போது உயிருக்கு அஞ்சி மக்கள் ஓடியதையும், குண்டுவெடிப்பும், பெண்கள் – குழந்தைகளின் ஓலங்களும், உணவுக்கும் – நீருக்கும் மக்கள் பட்ட துன்பத்தையும் கூறுகையில், அவருக்கு மட்டுமல்லாமல் அவையில் இருந்த ஒவ்வொருவரின் மனமும் கலங்கியது. இதுவரை ஊடகங்கள் வாயிலாகக் கேட்ட இக்கொடுமைகளை நேரடியாக பாதிக்கப்பட்டவரே கூறுவதைக்  கேட்டபோது அனைவரின் உள்ளத்திலும் ஏற்பட்டத் தாக்கம் அளவற்றது.

அடுத்து மருத்துவர் வரதராசன் அவர்கள், இலங்கையில் இறுதிகட்டப் போர் நடைபெற்ற காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளித்த போது நேர்ந்த கொடுமைகளை விவரித்தது நெஞ்சை உருக்கியது. இறுதிக்கட்டப் போரின்போது  போதுமான மருத்துவ வசதி இன்மையால் சிகிச்சை அளிக்க முடியாமல், அவர் மருத்துவராக இருந்தும் ஏதும் செய்யமுடியாமல்  தன்  கண் முன்னே  உயிர்கள் உடலை விட்டுப் பிரிந்த கொடுமைகளை வெறும் சொற்களால் அவரால் விவரிக்க முடியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. மாவை சேனாதிராசா, திரு. சுமந்திரன் ஆகியோர் இலங்கையில் தமிழ் அரசியல்வாதிகளின் தற்போதைய நிலை குறித்து விவாதித்தனர்.

நண்பகல் உணவு இடைவேளைக்குப் பின்னர் அமெரிக்க தமிழ் அரசியற் செயலவைக் (USTPAC) கூட்டம் தொடங்கியது. இவ்வமைப்பின் அமெரிக்க அரசியல் செயற்பாடுகள், வரவு செலவுகள், ஈழத்திற்கான அடுத்தகட்ட சிறப்புச் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இவ்வமைப்பில் தன்னார்வத் தொண்டர்களாக விழாவில் கலந்து கொண்ட சிலர் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசின் (TGTE) கூட்டம் ‘மாகாணத் தேர்தலும் தமிழீழ விடுதலையும்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. தோழர். தியாகு அவர்கள் தமிழ் நாட்டில் இருந்து இணையம் வழியாக தொடர்பு கொண்டு தனது கருத்துக்களைப் பதிவுசெய்தார். இவரைத் தொடர்ந்து திரு. குருபரன், திரு. கசேந்திரன் பொன்னம்பலம் அகியோர் ஈழ விடுதலைப் போரின் தேவையையும், முதன்மைத்துவத்தையும் வலியுறுத்தினர் – தனித்தமிழீழம் ஒன்றே தீர்வென்றனர்.

இறுதியாக நா.க. தமிழீழ அரசின்  தலைமை அமைச்சர் திரு.உருத்திரகுமாரன் அவர்கள் இத்தலைப்பின் கீழ் தனது கருத்தைப் பதிவு செய்தார். அனைவருமே ‘மாகாணங்கள்’ தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முதுகெலும்பல்ல ஆனால் ஒரு நெம்புகோலாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றனர்.

அடுத்த நிகழ்வாக உலகத் தமிழ் அமைப்பின் கூட்டம் (WTO) நடைபெற்றது. அமைப்பின் தலைவர் திரு. க. தில்லைக்குமரன் அவர்கள், இவ்வமைப்பு தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளும் அரசியல் பணிகள் குறித்து விளக்கினார். இக்கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக வட இந்திய ஊடகவியலாளர் திரு. இராசேசு சுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு, இந்தியாவின் இலங்கை வெளியுறவுக் கொள்கை குறித்து சிறப்புரை ஆற்றினார். மேலும் அரங்கில் இருந்தோரின் வினாக்களுக்கும் விடையளித்தார்.

சிறிது இடைவேளைக்குப் பின்பு, மாலையில் மீண்டும் தமிழீழத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. விருந்தினர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, குறிப்பாக புலித்தளபதி எழிலன் அவர்களின் மனைவி திருமதி. அனந்தி சசிதரன் அவர்களை மக்கள் அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி வரவேற்று சிறப்பித்தனர். இலங்கையில்  போர் முடிந்த பின்பும்  இன்றளவும் அரசப் படையின் பிடியில்தான்  தமிழ் மக்கள் சிக்கித் தவித்துக்கொண்டு இருப்பதாகவும், அவர்களின் வீடுகள், சொத்துகள்  மட்டும் அல்லாமல் பண்பாட்டுச் சின்னங்களும் இன்றும் கையகப்படுத்தப்பட்டு, அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக உணர்ச்சி கலங்கக் கூறினார். இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்றும் அங்கு பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை தேவை என்றும் வலியுறுத்தினார்.

ஈழப் போராட்டத்தில் நம்பிக்கையும், உதவும் உள்ளமும், பலப் போராட்டங்களில்  தங்களையும் – குடும்பங்களையும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் புலம் பெயர்ந்தத் தமிழர்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் மேலும் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கும் ஈழ விருந்தினர்கள் அனைவரும் நன்றி தெரிவித்து கொண்டனர். நா.க. தமிழீழ அரசின்  தலைமை அமைச்சர் திரு. உருத்திரகுமாரன் அவர்கள் இவ்வரங்கில் சிறப்புரையாற்றினார்.

கனடா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலிருந்தும், அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழ் அமைப்புகளைச் சார்ந்த இளைஞர்கள் பலர் விழாவில் ஆர்வத்துடனும், உணர்வுடனும் பங்கேற்றது மிகவும் மகிழ்வளிப்பதாக இருந்தது. இவர்கள் அனைவரும் இலங்கைப் புறக்கணிப்பு, இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை எதிர்த்தல், தமிழீழப் போராட்டத்தில் ஊடகத்தின் பங்களிப்பை மேம்படுத்தல் பற்றித் தங்களுக்குள் சிறப்பு விவாதங்கள் நடத்தினர். அதுமட்டும் அல்லாமல் சில வெளி நாட்டவர்களும்  விழாவில் கலந்து கொண்டு தமிழர்களின் உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டது ஆறுதலும் நம்பிக்கையும் அளித்தது.

விழா அரங்கின் வரவேற்பறையில் ‘போரினால் காயமுற்ற, அனாதையான, விதவைகளுக்கான – புதிய வாய்ப்புகள்’ (NOW-WOW) எனும் அமைப்பு போரால் இன்னலுற்ற மக்களுக்கு உதவி செய்வது  குறித்து பரப்புரை மேற்கொண்டது. இலங்கைப் புறக்கணிப்பு தொடர்பான நூல்களையும், பொருட்களையும் அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவையும், சேவ் தமிழ் இயக்கம் வெளியிட்ட ‘வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி’ குறுந்தகட்டை உலகத் தமிழ் அமைப்பும் வழங்கியது. மேலும் நாடு கடந்த தமிழீழ அரசு அதன் ‘தமிழீழ சுதந்திர சாசனம்’, ‘குற்றம் சுமத்துகிறோம்: போர்க்குற்றமும் இனப்படுகொலையும்’ போன்ற நூல்களை வழங்கினர்.

இலங்கைத் தமிழ்ச் சங்கம், அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை, நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழ் அமைப்பு, பிரித்தானியத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இவ்விழாவினை சிறப்புடன் நடத்திக் கொடுத்தன.

Using two paragraphs (or two portions of a single essays online by https://www.essayclick.net paragraph) is better when you are organizing around a and bthat is, treating each subject in its (2) comparison, contrast, and analogy 119 entirety

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “இலங்கைத் தமிழ்ச் சங்க விழா – 2013”
  1. maniselvam says:

    வாழ்கை வாழதான்

அதிகம் படித்தது