மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

“இலங்கைப் போரின் கொடுமைகள் என்ன”-தமிழ் பெண்ணின் நேரடி வாக்கு மூலம்

ஆச்சாரி

Nov 1, 2013

என் பெயர் கிருஷ்ணவேணி  (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  எனது பூர்வீகம் தமிழ் நாட்டிலுள்ள புதுக்கோட்டை மாவட்டம். நான் 1978 –ல் இலங்கையில் உள்ள வவுனியா என்ற பகுதியில் பிறந்தேன். கடந்த 25 வருடமாக அங்குதான் வளர்ந்தேன். எனது குடும்பம் விவசாயம் செய்து பிழைத்து வரும் குடும்பமாகும். நெல், பயறுவகை, காராமணி, எள்ளு, கேழ்வரகு, வெங்காயம் போன்ற பயிர்களை எங்கள் நிலத்தில விளைவித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம்.

இந்தியா சுதந்திரமானதற்குப்பின் இலங்கையிலுள்ள தேயிலைத் தோட்டத்திற்கு  வேலை செய்ய இலங்கைக்கு எங்கள் குடும்பத்தினர் வந்தனர். இந்த வழியிலே தான் நாங்கள் இலங்கையை வந்தடைந்தோம்.

1974-ல் சிங்களவனுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் அரிவாளால் வெட்டுகுத்து என பலத்த சண்டை வந்தது. இதற்கு அடிப்படை மதமே காரணம். மலையகத் தமிழர்கள் எல்லாம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள். இத்தமிழர்கள் தமிழ்நாட்டில் பேசும் தமிழ்மொழியைப் பேசக்கூடியவர்கள்.

1974-ல் நடந்த இந்தப் பிரச்சனைக்குப் பிறகு மலைப்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் எல்லாம் இடம் பெயர்ந்து உள்நாட்டிலேயே அகதிகளாக தங்கள் பெட்டி, படுக்கைகளைத் தூக்கிக்கொண்டு வவுனியா, திரிகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளுக்குச் சென்று வாழ்ந்தார்கள். இந்த வழியில் வந்த குடும்பமே எங்கள் குடும்பமாகும்.

1977-ல் சிங்களவர்கள் எந்த காரணமும் இல்லாமல் தெருவில் கண்ட தமிழர்களை அடித்துத் துன்புறுத்தினர். இதற்கு அடிப்படைக் காரணமே தமிழர்கள் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும், தமிழர்கள் இங்கு எந்த உரிமையும் பெறக்கூடாது என்ற எண்ணமே இதன் காரணமாகவே  கண்ணால் கண்ட தமிழர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்தான் சிங்களவன். இதை எல்லாம் கண்டு சகிக்க முடியாமல் தான் தமிழ் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தார். இறுதியில் நம் இயக்கமும், சிங்களவர்களும் மோதிக்கொண்டு தமிழருக்கு நடந்த துரோக சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கே தெரியும்.

இலங்கையின் வடக்கு மாவட்டமான கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என்ற இந்தப் பகுதியில் நடந்தபோர், இங்கேயே இருக்கும் வவுனியா பகுதி மக்களுக்கே தெரியாது. அவ்வாறு தெரியாமல் சிங்களவர்கள் பார்த்துக்கொண்டனர்.

பள்ளி அனுபவம்: 

நான் 1983-ல் 6 -வது படிக்கும் சிறு பெண்ணாக இருந்த போது, எங்கள் வவுனியா பகுதியில் யாராவது சாலையில் சந்தேகப்படும்படி நடந்து சென்றாலே சிங்களவன் சுடுவான். அந்தத் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டதும் குழந்தைகளான நாங்கள் பயந்துபோய் பள்ளியில் அமரும் மேஜைக்குக் கீழே போய் படுத்துக்கொள்வோம். சாலையில் சுதந்திரமாகத் தமிழர்கள் எவரும் நடமாட முடியாது. பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது துப்பாக்கிச் சத்தம் கேட்டு நாங்கள் காட்டுப்பகுதிக்குள் ஓடிப் பதுங்கியும், தவழ்ந்தும், உருண்டும் போய் வீட்டிற்குச் சேருவோம்.

குடியிருப்பு பகுதியில்  . . .

எங்கள் வீடுகளில் நாங்கள் இருக்கும் போது, திடீரென்று நடு இரவில் சிங்களவன் எங்கள் ஊரைச் சுற்றி ராணுவ வாகனத்தில் ரோந்து வருவான். அப்போது திடீரென்று தனது வண்டியை விட்டு இறங்கி கண்ணில் கண்ட வீடுகளில் எல்லாம் புகுந்து எந்தத் தமிழர் தென்பட்டாலும் சுட்டு வீழ்த்துவான். அந்த நடு இரவில் நாங்கள் குடும்பத்துடன் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் ஓடிப்போய் அமர்ந்து கொள்வோம். அவனின் துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் எனது கை, கால்கள் நடுங்கும். பதற்றத்தில் மிரண்டு போய் வாய்விட்டு அழுவேன். என் பெற்றோர் என் வாயை மூடிக்கொள்வர். அந்த வேதனையை அச்சிறுவயதில் அனுபவித்தால் தான் தெரியும்.

அந்த நடுஇரவில் சிங்களவன் எப்போது எங்கள் பகுதியை விட்டு கிளம்புவான், கிளம்புவான் எனக் காத்திருந்து, அவர்களின் துப்பாக்கிச் சத்தம் அடங்கி வெகு நேரமான பிறகே எங்கள் இல்லங்களுக்குச் செய்வோம். இந்த கொடுமை தினமும் நடப்பதாகும். அப்போதெல்லாம் நாங்கள் உட்பட வவுனியா பகுதியில் எந்தத் தமிழரும் நிம்மதியாக வீட்டில் இருந்ததில்லை. நடு இரவில் சிங்கள ராணுவம் வந்து வீடுவீடாக வந்து சோதனை செய்யும். சிங்களவர்கள் எந்தநேரம் வேண்டுமானாலும் தமிழர்கள் குடியிருப்புப் பகுதிக்குள் வருவார்கள். அவ்வாறு சிங்களவன் சோதனையிட வரும்போது எந்தத் தமிழனாவது தாடிவைத்துச் சோகமாகக் காட்சி தந்தால் அவ்வளவுதான். அவர்களைப் பிடித்துப்போய் சுட்டுத்தள்ளிவிடுவான் சிங்களவன்.

இந்தச் சிங்கள ராணுவம், தமிழர்கள் வீட்டிக்குள் புகுந்து எப்படிப் பரிசோதனை செய்வார்கள் என்றால், படாரென்று கதவை உடைத்துக்கொண்டு திறந்த வீட்டிற்குள் நாய் நுழைவது போல் வந்து, ஒரு சர்வாதிகாரி போல் வீட்டில் படுத்திருக்கும் எவரையும் சட்டை செய்யாமல் ஆங்காங்கே உள்ள துணி, மணி, பொட்டலங்கள், பெட்டிகள், மூட்டைகள், டப்பாக்கள் என எல்லாவற்றையும் கிழித்தும், உடைத்தும் பிரித்துப் போட்டு விடுவார்கள்.

சமையலறைக்குள் சென்றால், அரிசி மூட்டையை அவிழ்த்து அங்கேயே தரையில் கொட்டுவார்கள். பின் தரையில் கொட்டியிருக்கும் அரிசி மேல் சர்க்கரை மூட்டையை பிரித்துக்கொட்டுவார்கள், சர்க்கரை மேல் மிளகாய் டப்பாவை கழற்றிக் கொட்டுவார்கள், இந்த மிளகாய் மேல் பருப்பு டப்பாவை கழற்றிக் கொட்டுவார்கள், இந்தப்பருப்பின் மேல் உப்பு டப்பாவை கழற்றிக் கொட்டுவார்கள்.

இவ்வாறு ஒவ்வொரு உணவுப் பண்டங்களையும் பிரித்தும், உடைத்தும்  ஒன்றன்மேல் ஒன்றாகக் கொட்டிக் கவிழ்த்து எந்தப் பொருளையும் உணவிற்குப் பயன்படுத்த முடியாத அளவிற்குப் பண்ணிவிடுவர். எதற்காக இந்தப் பரிசோதனை என்றால் இந்த உணவுப் பொருட்களுக்குள் ஏதாவது வெடிக்கின்ற குண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் இருக்கின்றனவா? என்பதைக் காண்பதற்காகவே இவ்வாறு செய்வர். ஏனென்றால் இவ்வாறு ஆயுதங்களைப் பதுக்கி வைத்து விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு உதவி செய்வதை தடுப்பதற்கே இந்தப் பரிசோதனை.

1987 -ல் ஒரு முறை இந்திய ராணுவம் பற்பல ஆடுகளை வெட்டி சாப்பிட்டுவிட்டு எஞ்சியிருந்து எலும்புகள் மற்றும் வெட்டப்பட்ட ஆடுகளின் கழிவுப் பொருட்களை ராணுவ லாரியில் ஏற்றி வந்து ஓரிடத்தில் கொட்டுவார்கள். அவ்வாறு கொட்ட வரும்போது விடுதலைப்புலி இயக்கத்தினர் இந்திய ராணுவத்தை லாரியோடு வெடிகுண்டு வைத்துக்கொன்று விட்டனர். இதனால் சிங்கள ராணுவத்தின் அச்சுறுத்தல், கொடுமைகள் எங்கள் பகுதி மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் பிற பகுதிகளிலும் நடந்தேறியது.

இந்தச் சிங்கள ராணுவத்திடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றுகிறேன். பேர்வழி என்று தமிழர்கள் வாழும் பகுதிகளில் TELO, EPRLF, BLOOD,  ENDLF,  (இதில்  ENDLF என்ற இயக்கம் தமிழினத் துரோகி டக்ளஸ் தேவானந்தாவினுடைய இயக்கம்) போன்ற சில இயக்கங்கள் இருந்தன. இந்த இயக்கத்தினரே இரவு நேரத்தில் தமிழர்கள் வீட்டுக்குள் புகுந்து திருடிவிட்டு அத்திருட்டுப் பழியை விடுதலைப்புலிகள் மீது போட்டு வாழ்ந்தனர். சில நேரம் இப்பழியை சிங்கள ராணுவம் மேலேயும் போட்டு தாங்கள் நல்ல பேர் வாங்கிக் கொண்டு கேவலமான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

மேலே கூறிய இந்திய ராணுவ லாரி குண்டு வெடிப்பிற்குப் பிறகு இந்திய ராணுவத்தினர் பலரும் தமிழர்கள் வாழும் பகுதிக்குள் வந்து பல தமிழர்களைச்,  சொல்லமுடியாத அளவிற்குக் கொடுமைப்படுத்திக் கொன்றனர். அவ்வாறு இந்திய ராணுவம் இரவில் வந்து தமிழர்களைப் பிடித்துக் கொண்டு போகும் போது, வவுனியாவான எங்கள் பகுதியில் வாழும் பலர், அந்த லாரிச்சத்தம் கேட்டதும் தங்களது பெட்டி, படுக்கைகளை எடுத்துக்கொண்டு அந்தக் கும்மிருட்டில் காட்டு வழியே களைப்படையும் வரை ஓடுவோம். அது சுமார் 15 கி.மீ தூரம் இருக்கும். 15 கி.மீ தூரத்திற்கு அப்பால் உள்ள பிற தமிழர்கள் வாழும் பகுதியில் இருவாரம், மூன்று வாரம் இருந்து அங்கே இருக்கும் பள்ளி, கோவில்களில் இரவு நேரம் தங்குவோம்.

பின்பு எங்கள் பகுதியில் இந்திய ராணுவத்தின் தொல்லை ஓய்ந்ததும் எங்கள் இல்லங்களுக்குச் செல்வோம். இலங்கைக்குள்ளேயே ஊர்விட்டு ஊர் வந்து வாழும் அகதிகளாகவே நாங்கள் வாழ்ந்தோம்.

இந்திய ராணுவத்தில் அதிகமாக சீக்கியர்களான சிங்குகளே இக்கொடுமைகள் பலவற்றைச் செய்தனர். இரவு நேரத்தில் இவர்கள் வந்தால் சிறு குழந்தைகள், இளம்பெண்கள், வயதானவர்கள் என்று எவர் அகப்படுகிறாரோ அவர்களை லாரியில் அள்ளிக்கொண்டு போய் சித்ரவதை செய்து இறுதியில் சுட்டுவிடுவான் அல்லது தொங்கும் லாரி டயருக்குள் தமிழர்களைக் கட்டி தொங்கவிட்டு தீ மூட்டி டயரோடு டயராக எரித்துவிடுவர். இதனால் எந்தத் தடயமும் இருக்காது.

அப்படித்தான் ஒரு முறை இரவில் வந்த இந்திய(சீக்கிய) ராணுவம் எனது அப்பாவையும் தூக்கிச் சென்றுவிட்டனர். அப்போது என் தாய் உட்பட நாங்கள் பட்ட வேதனையை வாயால் கூற முடியாது. நாங்கெல்லாம் இரவில் தூங்கினாலும் என் அம்மா மட்டும் சாலையிலேயே விடிய விடிய என் அப்பா வருகைக்காக காத்து நிற்பார். எங்களின் இத்துயரத்தைக்கண்ட BLOOD, EPR போன்ற தமிழர் காப்பு இயக்கத்தினர் இந்திய ராணுவத்தோடு நல்லுறவு கொண்டிருந்தனர். இதனால் இந்திய ராணுவத்தினரை, இவர்கள் நேரடியாகச் சென்று அணுகிக் கேட்டுக்கொண்டதால் என் அப்பாவை விடுவித்தனர்.

வெளியே வந்த அப்பா கூறினார். என்னை வேலி கட்டும் கம்பியை என் உடல் முழுக்கக் கட்டி அங்கும் இங்கும் உருட்டினர், உடலில் இனிப்பைத் தடவி பல எறும்புகளை விட்டுக் கடிக்க விட்டனர்” என்றார். இப்படிப் பலவிதமான முறையில் பற்பல கொடுமைகளைப் பல தமிழ் குடும்பத்தினர் அனுபவித்துக்கொண்டிருந்தனர்.

கற்பழிப்புக் கொடுமை:

இந்திய ராணுவம், இலங்கையின் வடகிழக்குப் பகுதியான கிளிநொச்சி, முல்லைத் தீவு, யாழ்ப்பாணம் இப்பகுதிகளில் இருக்கும் வளர் இளம் பெண்களை ஈவு இரக்கமில்லாமல் கற்பழித்து, இப்பகுதியில் உள்ள பல கிணற்றுக்குள் உயிரோடு தள்ளிவிட்டு மண்போட்டு மூடிவிடுவார்கள். தற்போது போர் முடிவுக்குப் பின் அந்தப் பகுதியில் உள்ள கிணறுகளை தோண்டியபோது 18, 20 வயது உள்ள வளர் இளம் பெண்களின் எலும்புக் கூடுகள் வந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

பள்ளியில் பகீர் அனுபவம்:

“கிபீர்”  என்பது சிறிய விமானம். இதில் இரண்டு மண்ணென்ணெய் பேரலுக்குள் பலவித அனுகுண்டுகளையும், வெடிக்கும் ஆயுதங்களையும் முழுக்க நிரப்பி, இந்த ஆளில்லா கிபீர் விமானத்திற்குள் இரண்டு வெடிபொருள் பேரல்களையும் ஏற்றித் தமிழர்கள் வாழும் பகுதிக்குள் அனுப்பி விடுவர் சிங்கள, இந்திய ராணுவத்தினர். இந்தக் கிபீர் விமானத்தின் சத்தம் கேட்டாலே மக்கள் “பங்கர்” என்று அழைக்கப்படும் பகுதிக்குள் ஓடி ஒளிந்து கொள்வர். “பங்கர்” என்பது ஓரிடத்தில் ஆழமாகத் தோண்டி, அங்கிருந்து 15 அடி தூரம் மண்ணுக்குள்ளேயே அமைக்கப்பட்ட பதுங்கு குழிகளாகும்.

அடுத்து கிபீர் விமானத்திலிருந்து பல அடி உயரத்திலிருந்து இந்த வெடிபொருட்கள் அடங்கிய இரண்டு பேரல்களை தமிழர் பகுதிக்குள் போட்டுவிடுவர். இந்த பேரல் குண்டுகள் எந்தப் பகுதிக்குள் விழுந்தது என்று சிங்களவனுக்கும் தெரியாது. இந்தக் குண்டு, தரையில் விழுந்தால் அந்த இடத்தில் 15 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்படும். தவிர குண்டு விழுந்த இடத்தைச் சுற்றி உள்ள தமிழர் பகுதி முழுவதும் சிதைந்து விடும். அதனால் விமானச் சத்தம் கேட்டதும் முதலில் இந்த பங்கருக்குள் (பதுங்கு குழி) ஓடி எவர் முதலில் ஒளிகிறார்களோ அவர்கள் பாம்பு, தேள், மற்ற விச சந்துக்கள் கடித்து இறக்கும் கொடுமையும் நிகழும். இது நான் அங்கிருந்த 15 வருடமாகவே நிகழ்ந்தது.

1995 -ல்  5 வருடத்திற்கு யுத்த நிறுத்தம் என்று கூறி அப்போதைய இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கேயும், நம் தலைவர் பிரபாகரனும் ஒரு ஒப்பந்தம் போட்டார்கள். இதனால் தமிழர்-சிங்களவர்களுக்குள் எந்தச்சண்டையும் நிகழாமல் வாழ்வு அமைதியாகவும், ஆனந்தமாகவும் கழிந்தது. அப்போது நான் வாழ்ந்த வவுனியா பகுதியானது அனைத்துத் துறையிலும் பெரும் வளர்ச்சி பெற்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமென்றால் அச்சமயத்தில் வவுனியா வளர்ச்சியடைந்தது போல் தமிழர்கள் வாழும் பிற பகுதிகள் அந்தளவு வளர்ச்சி அடையவில்லை என்றுதான் கூறவேண்டும்.

எங்கள் நகர அசுர வளர்ச்சியைக் கண்ட சிங்களவர்கள் பயந்து, எங்கள் பகுதியில் வாழ்ந்த பெரும் தொழில் அதிபர்களை திட்டமிட்டுச் சுட்டுக்கொன்றனர். ஐந்து நட்சத்திர உணவகங்கள், விடுதிகள், வானுயர கட்டிடங்கள், போக்குவரத்து, விவசாயம், வணிகம், தொழில் நுட்பம்  என்று அனைத்துத் துறையிலும் நாங்கள் அடைந்த முன்னேற்றமானது இலங்கையின் தலைநகரான கொழும்பு போல் இருந்ததைக் கண்டு, தமிழர் வளர்ச்சியைப் பொறுக்காத சிங்களவன் இவ்வாறான துரோகச் செயலில் ஈடுபட்டான்.

இந்த ஒப்பந்தத்தால் 4 வருடம் அமைதியாக இருந்த எங்கள் பகுதியில் 4 வருடத்திற்குப் பிறகு, சிங்களவனே போட்ட ஒப்பந்தத்தை மீறி நடந்து கொண்டான். இந்த நிகழ்வுக்குப் பிறகு மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும், சிங்கள ராணுவப்படைக்கும் போர் மூண்டது.

சிங்களவனின் பரிசோதனைக் கொடுமை:

அப்பொழுதெல்லாம் நாங்கள் ஒரு நகரத்திற்கோ அல்லது வேறு ஒரு இடத்தில் இருக்கும் தமிழர்கள் வாழும் பகுதிக்கோ, கடைக்கோ போய் விட்டுத் திரும்ப உயிருடன் வருவோமா என்ற நம்பிக்கை இல்லை. காரணம் 10 அடிக்கு ஒரு பரிசோதனை மையத்தை சிங்கள ராணுவம், தமிழர்கள் வாழும் பகுதிக்குள் அமைத்திருக்கும். ஒரு இடத்திற்குப் பேருந்தில் நாங்கள் செல்ல 10 நிமிடம் ஆகும் என்றால், அடிக்கடி உள்ள பரிசோதனை மையத்தைத் தாண்டி அந்தப் பகுதிக்கு நாங்கள் செல்ல 45 நிமிடம் ஆகும். இந்தப் பரிசோதனை மையத்தில் எங்களுக்கான இலங்கை குடியுரிமை அட்டை, தவிர தமிழ் மக்களுக்கு மட்டும் சிங்கள ராணுவம், ராணுவ அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டதையும் இந்தப் பரிசோதனை மையத்தில் காண்பிக்க வேண்டும். இப்படிப் பரிசோதனை செய்யும்போது சிங்களவன் தமிழ் பெண்களை சோதனை செய்கிறோம் என்ற பெயரில் மானபங்கப்படுத்துவதும், அவமானப்படுத்துவதும், தொடக்கூடாத இடத்தில் தொட்டுப்பார்த்து சீண்டுதல் போன்ற அவமானம் பல நடக்கும். அதையெல்லாம் சகித்துத்தான் எங்கள் பகுதியை நாங்கள் அடையமுடியும். இவ்வாறு கடைசிப் பரிசோதனை மையத்தில், சரி. . . என்று கூறினால் மட்டுமே வீட்டுக்குச் செல்ல முடியும் இல்லாவிட்டால் சிறைக்கு அழைத்துச்சென்று கொடுமைப்படுத்துவான் சிங்களவன்.

படிப்பில் தடை:

இலங்கையில் தமிழ் மக்கள், 100-க்கு 90% பேர் நன்கு படித்துத் தேர்ச்சி பெற்றாலும் கல்லூரியில் சேர்க்கப் பல தடைகள் வைத்திருந்தனர். கல்லூரியில் சிங்கள மாணவர்களுக்கு 90% இடமும் மீதி உள்ள 10% தமிழ் மாணவர்களுக்கு என்று ஒதுக்கியிருந்தனர். சிங்களவன் பகுதியில் உள்ள கல்லூரிக்குச் செல்லும் தமிழ் மாணவிகள் நெற்றியில் பொட்டு வைத்தோ, கையில் மந்திரித்த கயிறுகள் கட்டியோ செல்லக்கூடாது என்பது சிங்களவன் விதித்த தடை. தவிர படிக்கும் தமிழ் மாணவிகளோ, திருமணமான தமிழ்பெண்களோ தங்கத்தால் ஆன தாலியைப் அணிந்துகொண்டு கல்லூரிக்கோ, பொது இடத்திற்கோ சென்றால் சிங்களவன் தாலியை அறுத்து விடுவான். தமிழன் கண்டாலும் தாலியை அறுத்துவிட்டு ஓடிவிடுவான் ஆகையால் தமிழ்நாட்டுப் பெண்களைப்போல் இங்கு தாலி (சென்டிமென்ட்) மனஉணர்வு பார்ப்பது இல்லை.

தமிழகத்தில் இருந்து இங்கு மாறுபட்ட விடயங்கள்:

இங்கு வாழும் தமிழர்களுக்குள் ஜாதி, மத உணர்வு என்று எவரும் பார்ப்பது இல்லை. அவசரச் சிற்றுந்து (ஆம்புலன்சு)  சாலையில் வந்தால் தமிழரும், சிங்களவனும் உடனே ஒதுங்கி வழிவிடுவார்கள். வவுனியாவிலிருந்து கொழும்புக்குப் பேருந்தில் சென்றால் 5 மணி நேரம் ஆகும். இதே அவசரச் சிற்றுந்தில் (ஆம்புலன்சில்) சென்றோமானால் ஒரு மணி நேரத்தில் போய்விடலாம். மேலும் தேவை இல்லாமல் சாலைகளில் எச்சில் துப்பமாட்டார்கள், சிறுநீர் கழிக்க மாட்டார்கள், கண்ட இடங்களில் குப்பை கொட்ட மாட்டார்கள்.

அங்கு அனைவருக்கும் இலவசக்கல்வி வழங்கப்படுகிறது. இலவசக்கல்வி வழங்குவது எல்லாம் அரசுப்பள்ளிகள் தான் என்றாலும் இங்கு எவ்வித தனியார் பள்ளிகளும் அப்போது இல்லை. இப்போது தான் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் உள்ளது. படிக்கும்போது சிங்களக் குழந்தைகள், தமிழகக் குழந்தைகள் என்று படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வெள்ளை நிறச் சீருடை மட்டுமே இலங்கை முழுவதும் வழங்கப்படுகிறது.

போருக்குப்பின்:

இலங்கையில் நடந்த போருக்கு முன்பு விலைவாசி அந்த அளவுக்கு இல்லை. போருக்குப் பின் விவசாயம் குறைந்ததால் மக்கள் இன்று பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகவும் உயர்ந்து விட்டது. அவற்றில் சில  . . . . .

வ.எண் கிலோ போருக்கு முன் (ரூபாய்) போருக்குப்பின் (ரூபாய்)

1

1 கிலோ அரிசி

20

150

2

1 கிலோ சர்க்கரை

30

200

3

1 சிகரெட்

4

30

4

1 தேங்காய்

10

60

 இதுபோன்று பல உணவுப் பொருட்களின் விலை தற்போது எவரும் வாங்க முடியாத அளவிற்கு உள்ளது. சிங்களவனால் தமிழர்கள் பகுதியில் இருந்த உணவுப் பொருட்களின் உற்பத்தித் திறன் குறைந்துவிட்டது. அதனால் நம் தமிழ் மக்களுக்கு போதிய அளவில் உணவு கிடைக்காததின் விளைவே இந்த விலைவாசி ஏற்றத்தின் காரணம் ஆகும்.

திருமண வாழ்வு:

அங்கு தமிழ்க் குடும்ப திருமண முறைகளில் வரதட்சணைப் பிரச்சனை எதுவும் இல்லை. விவாகரத்து 90% இல்லை. எந்த மாப்பிள்ளையும் தன் மனைவி என் வீட்டில் தான் இருக்க வேண்டும் என வற்புறுத்த மாட்டார்கள். அனைவரும் திருமண வாழ்வில் போதிய சுதந்திரமாகவே இருந்தனர். அதுபோல் இந்த மணமக்களுக்கு தமிழ்நாட்டில் இருப்பதுபோல் தலைத்தீபாவளி, பொங்கல் சீர்வரிசை என்ற கட்டாய வரதட்சணைப் பிரச்சினை எல்லாம் இங்கு இல்லை. விருப்பப்பட்டால் செய்யலாம். அதுபோல் தீபாவளிக்குத் தமிழர்கள் பட்டாசு வெடிக்கச் சிங்களவனால் தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம் வெடி என்ற பெயரில் குண்டுகள் போடும் செயலும் நடக்கும் என்பதைத் தடுப்பதற்கே இந்தத் தடை.

இலங்கைப் போரின்போது:

போர் நடந்த போது நான் எங்கள் பகுதியான வவுனியாவில் இருந்தேன். சாதாரண நாட்களில் நாங்கள் வேலைக்குக் காலை 7 மணிக்குச் சென்று இரவு 10 மணிக்கு வீடு திரும்பினோம். ஆனால் போரின் போது காலை 10 – 4 மணிக்குள் வந்துவிடுவோம். மாலை 6 மணிக்கு மேல் தமிழர்கள் வாழும் எந்த வீட்டிலும் விளக்கே எரியாது. அனைத்துவிட்டு அமைதியாக அவரவர் வீட்டில் இருப்போம். அந்த இருட்டு நேரத்தைப் பயன்படுத்தி தமிழர் வீடுகளில் தமிழர்களே திருடுவார்கள். இரவில் சிங்களவன் வந்து பூட்டி இருக்கும் வீட்டை துப்பாக்கியால் சுட்டுக் கதவைத்திறந்து திருடுவான், பின்பு சுடுவான். அந்த நேரம், வந்த வீட்டில் பெண்கள் இருந்தால் இரவு 11 மணிக்கு தூக்கிக்கொண்டு சிங்களவன் போனால் அவளைக் கற்பழித்தப்பின் அதிகாலை 4 மணிக்கு அவள் வீட்டு வாசலிலேயே வண்டியிலிருந்து தள்ளிவிட்டுச் சென்றுவிடுவான். இவ்வாறு பல்வேறு கொடுமைகள் இங்கே நடந்தது. ஆனால் எங்களின் பூர்வீக மண்ணான தமிழ்நாட்டுக்கு வந்த பின்பு அத்தனை வலிகளும் மறந்து அமைதியான வாழ்க்கையை இங்குதான் தொடருகிறேன்.

Plus, you http://celltrackingapps.com get control through an extended set of commands

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- ““இலங்கைப் போரின் கொடுமைகள் என்ன”-தமிழ் பெண்ணின் நேரடி வாக்கு மூலம்”

அதிகம் படித்தது