மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இலங்கையின் வடக்கு மாகாணத் தேர்தல் – மருத்துவர் நா.எழிலன் நேர்காணல்

ஆச்சாரி

Oct 1, 2013

மருத்துவர் நா.எழிலன் பற்றி:

*  சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ், எம்.டி. படித்துப் பட்டம் பெற்றவர்.

* 2006 -ஆம் ஆண்டிற்கான சர்வதேச விருதான B. Braun Medical Scholar– ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

* புகழ் மிக்க மருத்துவப் படிப்பிற்கு அளிக்கப்படும் விருதான Edward Norraday 2007 – ல் பெற்றவர்.

* ஐந்து வருடமாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தனிப்பட்ட முறையில், சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று இலவச மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தி வருபவர்.

* பெரியார், அம்பேத்கார் கொள்கையைப் பின்பற்றி வரும் இவர், சமுதாயத்தில் வேரூன்றி இருக்கும் மூடப்பழக்க வழக்கங்களை, சாதிய சிந்தனைகளை ஒழித்திட இளைய தலைமுறையினருக்கு அறிவியல் விழிப்புணர்வு, மனித நேயம், சமுதாயச் சீர்திருத்தம், போன்ற கருத்துக்கள் கொண்ட “இளைஞர் இயக்கம்” என்ற ஒரு அமைப்பினை நிறுவி தொடர்ந்து செயலாற்றி வருகின்றார்.

* ஈழத்தில் தமிழர்கள் இனப்படுகொலை செய்ததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 3500 கி.மீ, 210 இடங்களில் 18 பொதுக்கூட்டங்களை 14 நாட்களில் மாணவர்களோடு சென்று பரப்புரை செய்து, ஈழத் தமிழர்களின் இன்னல் துடைக்க தமிழக மாணவர் கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வருபவர்.

* ஈழப் போராட்டத்தில் பெரும்பங்காற்றிய இவர், தலைவர் பிரபாகரன் மீது கொண்ட அதீத பற்றால் தற்போது மூன்று மாதங்களுக்கு முன்பு தனக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு ‘பிரபாகரன்’ என்ற தலைவர் பெயரைச் சூட்டி மகிழ்ந்தவர்.

* தற்போது பொதுநல மருத்துவராக சென்னையில் உள்ள பிரபலமான இரண்டு மருத்துவமனைகளில் பணி செய்து வருகிறார்.

கேள்வி: இந்தத் தேர்தலினால் ஈழ மக்களுக்கு என்ன பலன்?

பதில்:  இது இலங்கை பாராளுமன்றத்திற்கு உட்பட்டு நடந்த மாகாணத் தேர்தல். இந்தத் தேர்தல் வெற்றியை நாம் இரண்டு விதமாகப் பார்க்கலாம். இந்தத் தேர்தலால் நமக்கு என்னென்ன ஆதரவான தன்மை, மற்றொன்று இந்தத் தேர்தலால் நமக்குப் பின்னடைவு என்ன என்று பார்க்கலாம். முதலில்  நமக்கு ஆதரவான தன்மை இந்த வெற்றியினால் எந்த அளவு இருக்கிறது எனக்காண்போம்.

நமது விடுதலைப்புலிகளின்  மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, தியாகத்திற்குப் பிறகு ஒரு மந்த நிலை ஏற்பட்டது. ஒரு மூன்று ஆண்டுகாலமாக தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பப்படாமல் இருந்தது. இந்தத் தேர்தல் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கையில் உள்ள நாடாளுமன்றத்தில் தமிழருக்காக குரல் எழுப்புவதற்கு இது அருமையான வாய்ப்பு. இதன் மூலம் என்ன உரிமைகள் பெறப்போகிறார்கள்  என்பது பற்றிய தெளிவு இல்லாவிட்டாலும் கூட, தமிழர்களுக்காக இலங்கை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும். இந்தக்குரலானது சர்வதேச தமிழ் சமூகத்திற்குச் சென்று சேருவதற்கான வாய்ப்புகளும் நிறையவே உள்ளது. இதைத்தான் நான் ஒரு ஆதரவான நிலையாகப் பார்க்கிறேன்.

பின்னடைவு என்று கூறினால் தந்தை செல்வா அவர்கள் நடத்திய ஜனநாயகப் போராட்டம் தோல்வி அடைந்தது எனக் கூறமாட்டேன். அது ஒரு ஆயுதம் கலந்த போராட்டமாக மாறி, தனி ஈழம் அமைவதற்கான கோட்பாடுகள் அமையும் போது, திருப்பி மாபெரும் இன அழிப்புப் போர் மூலம், போரினால் பின்னடைவு ஏற்பட்ட பிறகு, திரும்பவும் நாம் 1950, 60 களில் இருந்த நிலைக்கே போய்விட்டோம். என்ன நிலைமை? தமிழர்கள் சிங்களர்களிடம் உரிமைக்காகத் திருப்பித் திருப்பி ஜனநாயக முறையில் முறையிடும் நிலைக்குச் சென்றுவிட்டோம். இந்தப் பின்னடைவுக்குப் பலகாரணங்கள் கூறினாலும் கூட, முன்பு இருந்த இலங்கை அதிபர்கள் மனநிலையும், இப்போது இருக்கும் இலங்கை அதிபர் மனநிலையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொது பெரும் அளவு வித்தியாசமில்லை என்றுதான் கூறவேண்டும். ஏனென்றால் இவர்களின் தெளிவான கொள்கை பௌத்த சிங்களவாதம் தான். சிங்களர்களுக்கு மட்டுமே இலங்கை, மற்றவர்கள் எல்லாம் இரண்டாம்தரக் குடிமக்கள் என்ற கொள்கை அங்கே தீவிரமாகப் பின்பற்றி வருகின்றனர். இதன்படியே இன்றுவரை செயல்பட்டும் வருகிறார்கள். அதனால் நாம் ஜனநாயக முறையில் என்னதான் போராடினாலும் கூட, இவர்கள் காலம் தாழ்த்தும்  முயற்சியைத்தான் செய்வார்கள்.

இப்போது இந்த மாகாணத் தேர்தலை இலங்கை அரசு முழுமனதோடு நடத்தியதா? என்றால் முழுமனதோடு நடத்தவில்லை என்று தான் கூற வேண்டும். இப்போது அங்கே காமன்வெல்த்   மாநாடு நடக்கவிருப்பதால்,  இந்த சர்வதேச உலக மக்களுக்கு இது ஒரு ஜனநாயக நாடு என்பதைக் காட்டுவதற்காக, தமிழர்களுக்கு நாங்கள் ஜனநாயக முறைப்படி உரிமைகள் கொடுக்கப்போகிறோம் என்பதை நிரூபிப்பதற்காகவே அவர்களால் நடத்தப்பட்ட தேர்தல் இது. ஆனால் இதனால் அதிகாரப் பகிர்வு நடந்ததா? காவல், உள்ளாட்சி கட்டமைப்பு போன்ற விசயங்கள் நடந்ததா? அதாவது இந்திய நாட்டிலுள்ள மாநிலங்களுக்குக் கூட கொடுக்கபட்ட உரிமைகள் படியாவது நடந்ததா? என்றால் இல்லவே இல்லை என்றுதான் கூறுவேன். முழுக்க அங்கு மாகாணத் தேர்தல் நடந்து முடிந்திருந்தால் கூட முதலமைச்சர்களுக்கு இங்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற முதலைமைச்சரோ? இந்தியாவில் இருக்கும் பிற மாநிலத்தில் உள்ள முதலமைச்சர்கள், அளவிற்குக்கூட அங்கு அதிகாரப் பகிர்வு கிடையாது.

அங்கு ஜனாதிபதியாக இருக்கும் ராஜபக்சேவால் நியமிக்கப்பட்ட ஆளுனர்களுக்கு மட்டுமே முழு அதிகாரம் அங்கு இருக்கும். இந்தியா கேட்கின்ற இந்த 13 வது சட்டத்திருத்தம் என்பது ஒற்றை ஆட்சி முறை உள்ள இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஒவ்வாது. நம் நாட்டு அரசியலமைப்புச் சட்டமானது கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் உள்ளது. ஆனால் இலங்கை அரசியலமைப்புச் சட்டமானது ஒற்றை ஆட்சி அரசியலமைப்புச் சட்டமாக உள்ளது. இந்த அரசியலமைப்புச் சட்டத்தில் எவ்வகையான மாகாணத்திற்கும் முழுமையான அதிகாரப்பகிர்வு என்பதை அந்நாட்டுச் சட்டத்திருத்தத்தில் கொண்டு வராமல் அங்கு நாம் எதுவும் செய்யமுடியாது. அதனால்தான் இந்த 13 வது சட்டத்திருத்தம் செல்லுபடி ஆகாது எனக்கூறி இலங்கை உச்சநீதிமன்றமே விரிவான ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தோமேயானால் ஒற்றையாட்சி முறை உள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தில் இதுபோல் அதிகாரப் பகிர்வு அளிப்பது முடியாத காரியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தெரிந்தும், வேண்டுமென்றே இந்திய அரசு 13 வது சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் எனக்கூறிவருகிறது. இந்த 13 வது சட்டத்திருத்தத்தில் ஈழமக்களுக்கு பெரிய அளவில் அதிகாரப் பகிர்வு ஏற்படுத்துவற்கான வாய்ப்புகள் மிக மிகக்குறைவு.

கேள்வி: இந்தத் தேர்தல் எந்த அளவு நம்பகமானது?

பதில்: கடந்த இரு மாதகால நடவடிக்கையைப் பார்த்தோமேயானால் நவிப்பிள்ளை அவர்கள் ஐக்கிய நாட்டு சபையின் (UNHRC) அடிப்படையில், இலங்கையின் எல்.எல்.ஆர்.சி- கமிசன் படி இலங்கை செயல்பட்டிருக்கிறதா போர்க்குற்றங்களை சரியாக விசாரித்ததா? இங்கு இருக்கும் மக்களுக்கு ஜனநாயகம் வந்துவிட்டதா? இங்கு இருக்கும் ராணுவத்தினுடைய, ஊடுறுவல், அடக்குமுறைகள் முழுமையாக வந்துவிட்டதா? இந்த ராணுவம், வெகுஜன மக்கள் வாழும் இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டதா? என்று பலவகையான  குறிப்புகள் எடுத்துக்கொண்டு, இலங்கை சென்று பார்வையிட்டார்.

இலங்கை அரசு பற்றி, இவர் கொழும்பில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் என்ன கூறுகிறார் என்றால் “இன்னும் இலங்கை அரசு ராணுவ நடவடிக்கை முறையில் தான் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நாடு ஜனநாயகத் தன்மை இழந்து ஒரு சர்வாதிகாரத் தத்துவத்துடன் இலங்கை அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எங்கு பார்த்தாலும் ராணுவத்தின் பிடியில் இப்பகுதிகள் உள்ளன. பத்து அடிக்கு ஒரு இடத்தில் ராணுவம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு தமிழர்களின் மீள்குடியேற்ற  நிகழ்வு சார்ந்த விசயங்கள் எதுவும் நடக்கவில்லை. தமிழர்கள் வீட்டில் திருமணம் நடந்தால்கூட ராணுவத்திடம் அனுமதி பெற்ற பிறகே தான் இங்கு தமிழர் திருமணங்கள் நடக்கிறது. தவிர இதுபோல இன்னும் பல்வேறு அடக்குமுறைகள் இங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. இலங்கை போர்க்குற்ற விசாரணையை நியாயத்துடன் நடத்தவில்லை.

இப்போது 2014 மார்ச் வரை இதற்கான காலம் உள்ளது. இதற்குள் இலங்கை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் இங்கு சர்வதேச போர்க்குற்ற விசாரணை வரக்கூடும்” என்று ஒரு விசயத்தை பதிவு செய்துவிட்டுச் சென்றுள்ளார் நவிபிள்ளை அவர்கள். இலங்கை அரசு இதை மனதில் நினைத்துக்கொண்டு நாங்கள் ஜனநாயக முறைப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறோம், ஜனநாயகத் தத்துவத்தில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதைக் காட்டவே இந்த மாகாணத் தேர்தலை நடத்தியுள்ளனர். அங்கு மாகாணத் தேர்தல் நடத்துவதற்கு, எந்த வகையான முடிவும் இலங்கை அரசுக்கு மகிழ்ச்சி தரும் விசயம்தான்.

ராஜபக்சேவின் ஆளும் கட்சி வெற்றி பெற்றிருந்தால், மக்கள் எங்கள் அரசின் மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர் எனக்கூறிக்கொள்ளலாம். இதை வெளிப்படையாகவே ராஜபக்சே அரசு பிரச்சாரம் செய்திருப்பார்கள். இப்போது அவர்கள் தோல்வியுற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதால் “ பாருங்கள் நாங்கள் இங்கு அவ்வளவு ஜனநாயகத் தன்மையுடன் தேர்தல் நடத்தியுள்ளோம் என்று உலகத்திற்கு செய்தியைப் பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

 இலங்கையில் ஜனநாயக தத்துவத்தின் வெளிப்பாடே இல்லை, தமிழர்களும், சிங்களர்களும் ஒன்றுபட்டு வாழமுடியாது, இதற்கு ஒரு சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டும், இதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக்கூறும் நிலையில், இப்போது இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, இந்த மாகாணத் தேர்தல் நடத்தப்பட்டதின் வெளிப்பாடு என்னவென்றால், நாங்கள் ஜனநாயகத்தைக் கடைபிடிக்கிறோம். எங்களின் எதிர்கட்சி ஜனநாயக முறைப்படி வெளிப்படையாக வெற்றிபெற்றுள்ளனர். இதை வெளிப்படையாக நாங்கள் வரவேற்கிறோம் என்று இந்தத் தோல்வியையும் தங்களுக்குச் சாதகமாகவே பயன்படுத்தியுள்ளனர்.

இது தமிழ்மக்களுக்கு எந்த அளவிற்கு உரிமைகள் பெற்றுக்கொடுக்கும் என்பதைவிட, இலங்கை, சர்வதேச அரங்கில், இது ஜனநாயகநாடு என்ற அடையாளத்தை இந்தத் தேர்தல் மூலம் அடையாளப்படுத்தவே உதவியுள்ளது.

கேள்வி: இந்தத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலை எப்படி இருக்கும்?

பதில்: இந்தத் தேர்தலின் நடவடிக்கைகளை நாம் கூர்ந்து பார்க்கும்போது பல இடங்களில் ராணுவத்தின் மிரட்டல்கள் இருந்துள்ளன. முழுமையாக ராணுவமயமாக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் மக்கள் வெளிப்படையாக, தைரியமாக வெளிவந்து வாக்களித்துள்ளனர். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தேர்தல் களத்தில் நடந்த சில பொதுக்கூட்டத்தில் “ தலைவர் பிரபாகரன் ஒரு போர் வீரர், தியாகி எனக்கூறித்தான் பிரச்சாரம் செய்துள்ளனர். இரண்டாவது தனி ஈழக்கோரிக்கையை நாங்கள் ஒரு கோரிக்கையாகவே வைத்துள்ளோம் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளனர். இதை ஆங்கிலப் பத்திரிக்கைகள் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தோமென்றால் தனிஈழம் அமைவதற்கான கூறுகள் நிறையவே இதில் இருக்கிறது. இதை வைத்துத்தான் மக்களிடம் போய் நின்றார்கள். ஏனென்றால் இதைக் கூறினால் மட்டுமே,  நம் மக்களிடம் போய்  நிற்கமுடியும் என்று அவர்களுக்குத் தெரியும்.

ஒரு மாபெரும் இனஅழிப்புக்குப் பிறகு, ராஜபக்சே என்ற கொடுங்கோலன் இருக்கின்ற போதும், ராணுவமும் தங்கள் மத்தியில் இருந்தாலும் கூட, மக்கள் தைரியமாக வெளியே வந்து வாக்களித்துள்ளனர் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களுக்கும் இதன் மூலம் என்ன செய்தி கூறுகிறார்கள் என்றால் தயவு செய்து நிரந்தர அரசியல் தீர்வுக்காண, ஜ.நா சபை மூலம் ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்துங்கள். அவ்வாறு நீங்கள் பொது வாக்கெடுப்பு நடத்தினால் எதற்குமே நாங்கள் பயப்படமாட்டோம், நிம்மதியாக வாக்களிப்போம் என்பதே அவர்கள் நமக்கு உணர்த்துவதாகும். எப்படி இந்த மாகாணத் தேர்தலில் பயம் மீறி வந்து வாக்களித்தோமோ, அதுபோல் நீங்கள் நாளை ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துகின்ற ஒரு சந்தர்ப்பம் வந்தால் இதைவிட வெகுதிரளாக வந்து வாக்களிப்பதற்கான தைரியம் எங்களிடம் இருக்கிறது என்றுதான் அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர். அதனால் ஈழத்தில் இருக்கும் நம் இன மக்கள் மிகத்தெளிவாக இருக்கின்றனர். ராணுவத்தால் அடிபட்டாலும், புண்பட்டாலும், வதை முகாம்களில் வதைக்கப்பட்டாலும், தைரியமாக பொதுவாக்கெடுப்பு நடந்ததில் தனி ஈழம்தான் தீர்வு என்ற கேரிக்கையை நீங்கள் முன் வைத்தால் அதற்கும் அம்மக்கள் இந்த சதவீதத்தை விட, மாபெரும் சதவீதத்தில் வந்து வாக்களிப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்ற செய்தியை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் மிகத்தெளிவாக உணர்ததிவிட்டார்கள்.

அதனால் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும் ஒன்றை மட்டுமே நன்கு புரிந்துகொள்ளவேண்டும். ஈழத்தமிழர்களின் கோரிக்கையான சர்வதேச போர்க்குற்ற விசாரணை, தனிஈழம் தான் தீர்வு, இந்தத் தனி ஈழம் வாங்குதற்காக ஒரு பொதுவாக்கெடுப்பை தெற்கு சூடானில் நடந்தது போல் இன்னும் விரைந்து செயல்படுத்துவதற்கான தருணமே இது எனக் கூறுகின்றனர்.

கேள்வி: ஈழப்போராட்த்தின் அடுத்தநிலை என்ன?

பதில்: இந்தப் போராட்டம் காலகாலமாக நடந்து வரும் போராட்டமாகும். இந்தப் போராட்டம் இதுவரை பல்வேறு நிலையில் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜனநாயக ரீதியிலான போராட்டம், பின்பு ஆயுதம் ஏந்திய போராட்டம், பின்பு உலகளவில் வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழர்களும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களும் இணைந்து நம் ஈழமக்களுக்காக போராடும் அரசியல் போராட்டம் என இப்போராட்டமானது பல்வேறு காலகட்டத்தைத் தாண்டி வந்துள்ளது. இந்தப் போராட்டம் எதை நோக்கிப் போகவேண்டும் என்றால் தனிஈழம் அமைவதற்கான இலக்கை நோக்கி செல்ல வேண்டும்.

ஏனென்றால் 1976-ல் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் சிங்களவர்களோடு இணைந்து வாழமுடியாது என்று மக்கள் முடிவெடுத்த பின்பு தனிஈழம் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றிபெற்றாலும் சரி, தனிஈழக் கொள்கையோடு விடுதலைப்புலிகள் ஆட்சி செய்யும் போதும் சரி மக்கள் தெளிவாக இருந்தார்கள். இன்னும் நம் மக்கள் அந்தத் தெளிவோடுதான் இருக்கிறார்கள்.

அடுத்தகட்டப் போராட்டம் எப்படி நடக்குமென்றால் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை மூலம், ஜனநாயக அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான சில போராட்டங்கள் அமைவதற்கான சில வாய்ப்புகள் தமிழ்தேசியக் கூட்டமைப்பு செய்யலாம். ஆனால் கடந்த வரலாறு என்ன கூறுகிறது என்றால் ஜனநாயக ரீதியாக என்ன போராட்டம் நடத்தினாலும் இலங்கை அரசு தன்னுடைய கொள்கையில் இருந்து மாறப்போவதில்லை. அப்படி என்றால்  மறுபடியும் ஈழத்தில் உள்ள மக்களுக்கு ஒரு கவலையான நிலை ஏற்படும் போது, மறுபடியும் ஒரு புரட்சி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பிற்காலத்தில் 5, 10, 15 வருடத்திலே இனி சிறு அளவிலான புரட்சி நடந்தால் கூட அந்தப்புரட்சி நியாயமான புரட்சியாகும். இந்தப் புரட்சியின் நியாயத்தை உலக அரங்கத்திற்கும், இந்திய அரசிற்கும் மிக அழுத்தம் கொடுத்து, பின்பு தனி ஈழம் அமைவதற்கான கட்டுமான வேலைகளைச் செய்வதுதான் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் வரும் காலத்தில் பெரும் கடமை வாய்ந்த பணியாக இருக்கும்.

கேள்வி: இந்தத் தேர்தலினால் அங்கு என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது?

பதில்: இந்த ஒரு தேர்தல் பெரிய மாற்றத்தை அங்கு நிகழ்த்தி விடமுடியாது. இப்போது இந்தியாவில் எவ்வளவோ தேர்தல் நடந்து முடிந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி பெரிய மாற்றம் இங்கு நிகழ்ந்துவிடவில்லை. இதே நிலைதான் அங்கும். ஈழத்தில் வாக்களித்தார்கள், ஒரு மாகாணத்தில் வெற்றி கண்டார்கள் என்றாலும் மீண்டும் தனது வழக்கமான வாழ்ககையைத்தான் வாழ்ந்து வருகின்றனர். ஏனென்றால் இந்தியாவில் ஒரு கோரிக்கைக்கோ, போராட்டத்திற்கோ செவி சாய்க்கின்றனர். ஆனால் இலங்கையில் இதற்கு மாறான சர்வாதிகார அரசுதானே இயங்கி வருகிறது. அப்படி என்ன நம் மக்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கப்போகிறது. அப்படி இருக்கும் இச்சூழலில் நம்மக்களுக்கு பெரிய அளவில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. நல்ல மாற்றங்கள் அங்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.

கேள்வி: தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நம்பகத்தன்மை என்ன?                    

பதில்:  தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படையில் ஒரு அரசியல் கட்சி. உலகத்தில் உள்ள அரசியல்வாதிகள் போல் அவர்களும் அரசியல்வாதிகள்தான். இப்போது நாம் பார்த்தோமானால், ஆங்கிலப்பத்திரிக்கையில் பேசும் போது வெவ்வேறு கூற்றுகளும், தமிழ்ப் பத்திரிக்கையில்  பேசும் போது வேறு கூற்றுகளும், பிறகு தேவை இல்லாமல் தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் தலைவர்களையும், தமிழ்நாட்டில் போராடுபவர்கள் பற்றியும் விமர்சனம் செய்வதும் இதெல்லாம் அவர்கள் தவிர்க்கக்கூடிய ஒன்றாகும். அங்கிருப்பவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்றால், இப்போதுதான் எதுவும் இல்லையே, ஏதாவது ஒரு கோரிக்கையைப் பெறுவோமே என்ற செயல்பாட்டுத் திட்டத்துடன் செயல்படுகிறார்கள். இப்போது ஈழ மண் நம்மிடம் இல்லை, பெரிய ஆயுதம் ஏந்திய போராட்டமும் தோல்வி அடைந்துவிட்டது. இதனால் மக்களிடம் ஏதாவது ஒரு கோரிக்கையாவது நிறைவேற்ற வேண்டுமென்ற பணியில் இறுதியாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் ஆங்கிலேயர் போன்று இலங்கை சிங்களவாதிகள் இல்லை. இந்தியாவில் காந்திய போராட்டம் வெற்றியடைய மிக முக்கியக் காரணம் ஆங்கிலேயர்கள் ஜனநாயக ரீதியாக அந்த அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பளித்தார்கள். அதேபோல் மார்ட்டின் லூதர் கிங் நடத்திய அகிம்சைப் போராட்டம், அங்கு இருக்கக்கூடிய அமெரிக்க ஆட்சியாளர்களான வெள்ளையர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டதால் தான் அந்தப் போராட்டத்திற்கு செவி சாய்த்தார்கள். கென்னடி போலவே, தங்களுடைய போராட்டத்தன்மையை உணர்ந்து ஜனநாயத்தின் மீது நம்பிக்கை வைத்தவர்கள் எல்லாம் இப்போது இலங்கையில் அரசியல் பண்ணுவதில்லை.

முழுக்க முழுக்க அங்கு ஒரு (பாசிசம்) இனவாதம், இனவெறி கொண்ட தேசமாக இலங்கை விளங்கி வருகிறது. ஒரு முறை சி.பி.ஐ-யின் பொதுச்செயலாளரான தோழர் ராஜா அவர்கள் ஒரு பத்திரிக்கைக்கு நேர்காணல் கொடுக்கும் போது இலங்கையை (ரோக் ஸ்டேட்) ரௌடித்தனமான அரசு என்று கூறியுள்ளார். இந்த மாதிரி ஒரு அரசிடம் அகிம்சை, கோரிக்கை நிறைவேற்றுகிற போராட்டங்கள் எந்த அளவிற்கு மாற்றம் அளிக்கக் கூடும் என்று எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் ஆயுதம் ஏந்திய போராட்டம் போல் அது மாறிவிடுகிறது.

இதில் ஒரு செய்தி மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இப்போது 2009 – க்குப் பிறது 2013 வரை வந்துவிட்டோம். தலைவர் பிரபாகரனுடைய கோரிக்கைகளோ,  தலைவரின் நடவடிக்கைகளோ, தலைவர் பிரபாகரன் சிங்கள பேரினவாதத்தைப் புரிந்துகொண்ட விசயங்கள் பற்றி இவர் அன்று கூறியதுதான் சரியானது என்று இப்போது நமக்குத் தோன்றுகிறது. இவர்களுக்கு எதைச் செய்தால் நம் பேச்சுக்கு வருவார்கள், இவர்களுக்கு எதைச் செய்தால் நம்மிடம் சமமாக அமர்ந்து பேசுவார்கள் அப்படிப்பட்ட முயற்சிகளைத்தான் விடுதலைப்புலிகள் செய்துவந்தார்கள்.

விடுதலைப்புலிகள் இல்லாத பட்சத்தில் ஒரு கோரிக்கையை எடுத்துக்கொண்டு ஒரு அரசாங்க அலுவலகத்தில் ஏறி இறங்கும் அவல நிலைதான் இப்போது உள்ளது. ஜனாதிபதியிடம் சந்திப்பதற்கான அனுமதிபெற்று எங்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுங்கள், இதை எங்களுக்குத் தாருங்கள் எனக் கூறுவதனாலேயும், பின்பு இந்திய அரசிடம் பேசி எங்களுக்கு இங்கே அதிகாரப் பகிர்வு பெற்றுக்கொடுங்கள் என்று கெஞ்சுகிற தன்மையில் தான் இருக்கிறோமே தவிர பெரிய அளவில் அங்கு நம் மக்களுக்கு சுய நிர்ணயமோ, இல்லை தன்னாட்சி அதிகாரப் பகிர்வோ போய்ச்சேரும் என்பது எனக்குப் பெரும் சந்தேகமாகவே உள்ளது.

சிறகிற்கு நேரமளித்து கருத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி.

This chapter deals with those matters, how they are to be carried out, and the factors that influence http://www.essaydragon.com and guide faculty decision making

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “இலங்கையின் வடக்கு மாகாணத் தேர்தல் – மருத்துவர் நா.எழிலன் நேர்காணல்”
  1. அல்லிராஜ் says:

    அணுவின் ஆபத்தை இனி எப்போதுதான் உணரப்போகிறார்கள் ….இந்த சுயநல அரசியல்வாதிகள் ….

அதிகம் படித்தது