மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சிதனை முகர்ந்தால் – இயக்குனர் புகழேந்தி நேர்காணல்

ஆச்சாரி

May 17, 2012

பத்திரிகையாளர், சமூக அக்கறை கொண்டவர் இயக்குனர் புகழேந்தி. இதுவரை ஐந்து திரைப்படங்கள் இயக்கி இருக்கிறார். வெறும் பிரமாண்டத்தை திரைப்படமாகக் கொடுக்கும் தமிழ்த் திரை உலகில், உண்மைகளை, சமூக சீர்கேடுகளை தமது திரைப்படங்கள் வழியே மக்களுக்கு அளிக்க ஆர்வம் கொண்டவர். இவரது காற்றுக்கென்ன வேலி திரைப்படமும், உச்சிதனை முகர்ந்தால் திரைப்படமும் உண்மைகளை சொல்லும் படங்கள். நார்வே திரைப்பட விழாவில் இவரின் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்திற்கு நான்கு விருதுகள் கிடைத்தது. நம் சிறகு வாசகர்களுக்காக அவரிடம் நாம் கண்ட நேர்காணல்.

சிறகு: உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்திற்கு நார்வே திரைப்பட விழாவில் நான்கு விருதுகள் கிடைத்துள்ளது பற்றி?

இயக்குனர் புகழேந்தி: இது மக்களுக்கான படம். சம்பாதிக்க வேண்டும் நல்ல வருமானம் பார்க்க வேண்டும் என்பதற்காக எடுத்த படம் அல்ல. இதை மக்களிடம் கொண்டு சென்றதில் நாங்கள் கொஞ்சம் தோல்வி அடைந்தோம். முதலில் இதை விநியோகம் செய்த நிறுவனம்  முறையாக விளம்பரம் செய்யவில்லை. அதனால் மக்களிடம் சரியாகப் போய்ச் சேரவில்லை.  விளம்பரம் செய்யாததற்கு என்ன காரணம் தெரியவில்லை. அதன் பிறகு மறு வெளியீடு செய்யப்பட்டு, ஓரளவு மக்களிடம் சென்று அடைந்தது. இப்போது இந்த விருதுகள் கிடைத்த பிறகு தமிழகம் முழுதும் சென்று சேரும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. தமிழகம் முழுதும் முப்பது மாவட்டங்களில் வெளியிட உள்ளனர். முதலில் சிவகங்கை மாவட்டத்தில் வெளியிடுகின்றனர்.

சிறந்த கதாசிரியர் விருது எனக்கும், சிறந்த பாடலாசிரியர் விருது திரு. காசி ஆனந்தனுக்கும், சிறந்த குழந்தை நட்சத்திர விருது நீனிகாவுக்கும் கிடைத்துள்ளது. இவை எல்லாவற்றையும் விட மக்களின் அபிமானத்தைப் பெற்ற படமாக தேர்வு செய்யப்பட்டு ‘நள்ளிரவுச் சூரியன்’ விருது கிடைத்துள்ளது. நார்வே விருதுகளில் உயர்ந்த விருது இது, சிறந்த கதை ஆசிரியர் விருது எனக்குக் கிடைத்ததால் நான் மகிழ்ச்சி கொள்ளவில்லை. முதலில் இது கதை அல்ல. கதை என்று சொல்வதற்கு வருத்தமாக உள்ளது. உண்மையை சொல்லி இருக்கிறேன். 2009 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் நாள் பதின்மூன்று வயதுள்ள ஒரு சிறிய குழந்தையைக் சிங்கள மிருகங்கள் சீரழித்தன. இதைப் பதிவு செய்தேன். இது நடந்த வரலாறு. தேதியுடன் அந்தக் குழந்தையின் பெயரைக்கூட மாற்றவில்லை. திரைப்பட தணிக்கையில் ஏதேனும் பிரச்சினை வரும் என்று சொன்னார்கள். ஆனால் நான் பெயரை மாற்ற மறுத்து விட்டேன். சிறந்த கதை என்று எனக்கு விருது கொடுத்துள்ளார்கள். இதில் சிறிய முரண் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

சிறகு:இந்தத் திரைப்படத்தின் விளம்பரத்தை வெளியிட சில ஊடகங்கள் மறுத்தன என்று அறிந்தோம். விளம்பரத்தை வெளியிடாததற்கு அவர்கள் சொன்ன காரணம் என்ன?

இயக்குனர் புகழேந்தி: எனக்குப் புரியவில்லை. இந்தப் படத்தை முதலில் ஒரு புகழ்பெற்ற நிறுவனம் வெளியிட்டது. தமிழகத்தில் முதல் இரண்டாம் இடத்தில் உள்ள அந்த முன்னணி நிறுவனமே என்னிடம் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தப் படத்தின் விளம்பரத்தை வெளியிட மறுக்கிறார்கள் என்று சொன்னார்கள். எனக்கு வியப்பாக இருந்தது. தொலைக்காட்சி என்றால் வியாபாரம்தான் முக்கியம். நான் ஒரு விளம்பரம் தருகிறேன் என்றால் அதற்கான தொகையைக் கொடுத்து விடுகிறேன். ஏன் இப்படி வாங்க மறுக்கிறார்கள் என்று வியந்தேன். குறிப்பாக இரண்டு தலைவர்களின் பெயரில் உள்ள தொலைக்காட்சிகள் விளம்பரம் செய்ய மறுத்தது. நான் கேட்டேன், இந்தப் படத்திற்கு தணிக்கைத் துறையின் அனுமதி வாங்கித்தான் வெளியிடுகிறோம். இந்தப் படத்தின் விளம்பரத்தை வெளியிடாத நீங்கள் என்ன தணிக்கை குழுவா என்று கேட்டேன்.

இந்தப் படத்தை இருட்டடிப்பு செய்வதற்காகத்தான் இவ்வளவும் நடந்தது என்று நாங்கள் உறுதியாக ஐயம் கொள்கிறோம். அதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. இப்போது நார்வே திரைப்பட விழாவில் நான்கு விருதுகள் கிடைக்கிறது. உடனே சன் தொலைக்காட்சி, புதிய தலைமுறை தொலைக்காட்சி போன்றவை இந்தச் செய்தியை முக்கியச் செய்தியாக தொடர்ந்து ஒளிபரப்புகிறார்கள். ஆனால் வேறு சில ஊடகங்கள் தங்கள் கண்களை மஞ்சள் துணியால் கட்டிக் கொண்டார்கள். யாரும் பார்க்கவில்லை. குறிப்பாக ‘தமிழ் வெல்க’ என்று பத்திரிகையின் முதல் பக்கத்தில் மேலே போடும் ஒரு அச்சு ஊடகம் – நார்வே விருதுகள் எந்த எந்த திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது என்று ஒரு பட்டியலை வெளியிடுகிறது. ஆனால் நான்கு விருது பெற்ற உச்சிதனை முகர்ந்தால் பற்றி குழந்தை நட்சத்திரமான நீநிகாவின் பெயரோ, காசி ஆனந்தன் பெயரோ, என் பெயரோ அந்த ஊடகத்தில் வெளிடப்படவில்லை. இதை மட்டும் தவிர்த்து விட்டார்கள். என்ன நோக்கத்தோடு இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

சிறகு: ஒரு நல்ல தகவலை எப்படி மறைத்தாலும் அது தானாகவே புகழ் அடைந்து விடும். அதற்கு சரியான உதாரணம் உச்சிதனை முகர்ந்தால். இப்போது இத் திரைப்படத்திற்கு உலக அளவில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த அங்கீகாரம் – விளம்பரங்கள் வெளியிட மறுத்த ஊடகங்களுக்கு சரியான பதில் என்று கருதுகிறீர்களா?

இயக்குனர் புகழேந்தி: இந்தப் படத்திற்கு சரியான அங்கீகாரம் என்று நான் நினைப்பது, இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய அன்று- இதில் புனிதவதியாக நடித்துள்ள நீனிகா என்ற சிறுமி. அவர்தான் இந்தப் படத்தின் முழு பலம். இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. நீனிகாவின் நடிப்பு, இமானின் இசை, இவை இரண்டுக்கும் மேலான தமிழருவி மணியனின் உரையாடல், காசி ஆனந்தனின் பாடல்கள். இவையெல்லாம் இந்தப் படத்தின் பலங்கள். முதல் நாள் படப்பிடிப்பில் சிறுமி நீனிகாவிடம் நான், இந்தப் படத்தைப் பார்த்து விட்டு வெளியே வருவோர் உன்னை நினைத்து அழ வேண்டும். அதுதான் இந்தப் படத்தின் வெற்றி, ரசிகர்களின் அங்கீகாரம் என்று சொன்னேன். இந்தப் படத்தைப் பார்த்த அத்தனை பெரும் அழுதபடியேதான் வெளியே வந்தார்கள். குறிப்பாக பெரியவர் நல்லகண்ணு, ராணி மேரி கல்லூரி மாணவிகள் பலர் என அத்தனை பெரும் கண்ணீர் சிந்தினார்கள். ஆகவே பார்வையாளர்கள் கண்களில் இருந்து வந்த ஒவ்வொரு துளி கண்ணீரும் எங்களுக்கு அங்கீகாரம். இதை விட மிகப் பெரிய விருது யாரும் கொடுத்துவிட முடியாது. இந்த அங்கீகாரம் எங்களை ஊக்குவிக்கிறது.

இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது- நார்வே திரைப்பட விழாவுக்காக விண்ணப்பிக்கச் சொல்லி விளம்பரம் வந்தது. அந்த நார்வே திரைப்பட விழாவில் கலந்து கொள்ள விண்ணப்பிக்காத ஒரே திரைப்படம் உச்சிதனை முகர்ந்தால். இந்தப் படத்தின் தரத்தைக் கருதி அவர்களாகவே போட்டியில் சேர்த்துக் கொண்டார்கள். பிறகு மூன்று ஜூரிஸ் விருதுகள் கிடைத்தது. ‘நள்ளிரவுச் சூரியன்’ விருது முகநூலில் (facebook) வாக்கெடுப்பு நடத்தி பெரும்பானமையான் வாக்குகள் பெற்று மக்களின் ஆதரவைப் பெற்ற படமாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள், என்னுடைய சொந்தங்கள் மனப்பூர்வமாக அளித்த வாக்குகள் காரணம்.

சிறகு: இந்தத் திரைப்படத்தை எடுத்து முடிப்பதற்குள் நீங்கள் நிறைய பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள். நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் என்ன?

இயக்குனர் புகழேந்தி: இரண்டாயிரம் ஆம் ஆண்டு காற்றுக்கென்ன வேலி படம் எடுக்கும்போது கோடியக் கரையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கியிருந்தோம். கடைசி நேரத்தில் இந்தியக் கடற்படை அனுமதியை ரத்து செய்தது. அதன் பிறகு வேறு இடத்தில் படப்பிடிப்பு நடத்தினோம். இந்தப் படத்தை முடித்த பிறகு பிரச்சினை வந்தது. முதலில் தணிக்கைக் குழுவினர் பார்த்தனர். இது முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளின் ஆதரவுப் படம் என்ற சான்றுடன்தான் அனுமதி கொடுக்கப்படும் என்று கூறினார்கள். ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் போராடி – மக்கள் மன்றத்தில் போராடி- நீதிமன்றத்தில் போராடி அனுமதி கிடைத்தது. இந்தப் படத்திற்கும் புலிகள் அமைப்புக்கும்  என்ன சம்பந்தம் என்று நீதி மன்றம் கேள்வி கேட்டு திரைப்படத்தை அப்படியே வெளியிட அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினார்கள். பிறகு மூன்று வெட்டுகளுடன் படத்தை வெளியிட்டோம்.உச்சிதனை முகர்ந்தால் படம் எடுக்கும்போது எந்தப் பிரச்சினையும் கிடையாது. படம் முடிந்து தணிக்கைக் குழுவுக்குச் சென்றோம் தணிக்கை அதிகாரிகள், உறுப்பினர்கள் எல்லோரும் படத்தைப் பார்த்து கண் கலங்கிக் கொண்டுதான் என்னிடம் பேசினார்கள். அவர்கள் அப்படிப் பேசும்போது எனக்கே வருத்தமாக இருந்தது. அவர்கள் இந்தப் படத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் தடுக்கக் கூடாது என்று நினைக்கிறோம். அவ்வளவு நல்ல படம். ஆனால் சிறிய சிறிய வெட்டுக்களுக்கு நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். யு. ஏ. சான்றிதழ்தான் கொடுப்போம் என்று கூறினார்கள். அப்படி என்ன ஆபாசம் இந்தப் படத்தில் இருக்கிறது என்று நான் வாதிட்டேன். குழந்தை கர்ப்பிணி என்பதால் விதிப்படி யு.ஏ. சான்றிதழ் தான் கொடுக்க முடியும் என்றார்கள். அதை மறுக்க முடியவில்லை. சில இடங்களில் வெட்டினார்கள். வசனத்தில் வெட்டினார்கள். அதன் பிறகு எங்கே பிரச்சினை ஆரம்பமானது என்றால் இந்தப் படத்தை வியாபாரம் செய்வதிலும் விளம்பரம் செய்வதிலும் தான். ஊடகங்கள் விளம்பரத்தை வெளியிட மறுத்தது, படத்தை வெளியிட திரை அரங்குகள் கொடுக்கப் படவில்லை.

தமிழ்த் திரை உலகம் இன்று கார்ப்பரேட் கலாச்சாரத்திற்கு போய் விட்டது. நல்ல திரைப்படம் வருவது அரிதாகி விட்டது. இன்னொன்று உண்மையைச் சொல்கிற படம், இலங்கையை தோலுரிக்கும் படம் இதையெல்லாம் அனுமதிக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். உதாரணமாக நான் மிகவும் மனம் நொந்து சொல்கிறேன், இந்தப் படத்தை தமிழ்த் திரை உலகம் எப்படி புறக்கணித்தது என்பதை நான் பார்த்தேன், நான் தமிழ்த் திரை உலகத்தைப் பற்றி வெளிப்படையான கருத்துக்களை வைத்திருக்கிறேன். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனியில் நாஜிக்கள் செய்த கொடுமைகள் மக்கள் அனுபவித்த கொடுமைகள் –அதன் கூட இருந்த மனித நேயம் இதையெல்லாம் காட்டி எத்தனை ஆண்டுகள் திரைப்படம் எடுத்தார்கள். ஆனால் இதோ பக்கத்தில் இருக்கிற நாட்டில் தன்னுடைய இனத்திற்காக, தன்னுடைய சுய மரியாதைக்காக, ஒரு மொழியைக் காக்க ஒரு போர் நடக்கிறது, இதைப் பதிவு செய்ய தமிழ் திரை உலகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. என்ன காரணம் என்று புரியவில்லை. ஒரு காலத்தில் தமிழ்த் திரை உலகம் திருட்டு குறுந்தகடு (சி,டி.) காரணமாக நசிந்து போய் இருந்தது. அப்போது தமிழ் திரை உலகைக் காப்பாற்றியவர்கள் என்னுடைய புலம் பெயர்ந்த தமிழ் சொந்தங்கள். அவர்கள் 1983 போருக்குப் பிறகு உலகம் முழுதும் சிதறிப் போனார்கள். அவர்கள் குடியேறிய அனைத்து இடங்களிலும் தமிழ் திரைப்படத்திற்கு நல்ல சந்தை வியாபாரம் கிடைத்தது.

தமிழகத்தில் படமே ஓடாது, பெரிய நடிகரின் படம் கூட தோல்வி அடைந்து விட்டது என்ற சூழல் இருந்தபோது, புலம் பெயர் சொந்தங் களால் பதினைந்து புதிய வியாபார சந்தைகள் தமிழ் திரை உலகுக்கு கிடைத்தது. அதனால் தமிழ் திரை உலகம் காப்பாற்றப்பட்டது. அந்த நன்றிக் கடனுக்காவது அந்த மக்களின் அவலத்தை நாம் பதிவு செய்திருக்க வேண்டாமா? ஆனால் வழக்கமாக ஒரு பாணி வைத்துள்ளார்கள்- மேடை ஏறி ஈழத் தமிழர்களுக்காக எப்படி எல்லாம் நடிக்கிறார்கள்? என்ன காரணம் என்றால் புலம் பெயர் தமிழர்களிடம்  அவர்கள் படத்தை விற்க வேண்டும், அதற்காகத்தான். இந்த வெளி வேடம் எனக்குப் பிடிக்கவில்லை. இலங்கைப் போராட்டத்தைப் பதிவு செய்யாமல் வெறும் வசனம் பேசி என்ன பயன். ஒரு பெரிய கதாநாயகன் படத்தில் ஒரு வசனம், என்னவென்றால்- மலேசியாவில் தமிழனை அடிக்கிறார்கள், இலங்கையில் தமிழனை அடிக்கிறார்கள். தமிழன் அடி வாங்கக் கூடாது, திருப்பி அடிக்க வேண்டும் என்பது வசனம். இந்தப் படம் 2011-ல் வெளி வருகிறது. இங்கே இருக்கும் காகிதப் புலிகள், சினிமாக்காரர்கள் இப்படி வசனம் பேசுகிறார்கள். ஆனால் உண்மையான கதானாயகன்- இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு திருப்பி அடித்தானே அவன்தான். அவன் கதாநாயகன் என்றால் இப்போது வசனம் பேசுகிறவன் யார் என்பது என் கேள்வி. யாரை ஏமாற்ற இப்படி வசனம் பேசி படத்தை ஓட்ட நினைக்கிறார்கள். இப்படி கேட்பதால் தமிழ் திரை உலகத்தினர் என் மீது கோபம் கொள்கிறார்கள். இதனால் ஒட்டுமொத்த தமிழ் திரை உலகமும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தை புறக்கணித்தது என்பது மிகவும் வேதனையானது.

சிறகு: புனிதவதியின் வேதனையை பதிவு செய்தது போல இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரை- முள்ளிவாய்க்காலைப் திரைப்படமாக பதிவு செய்ய திட்டம் வைத்துள்ளீர்களா?

இயக்குனர் புகழேந்தி: செய்ய வேண்டும். அது ஒரு சமுத்திரம். அது முழுக்க முழுக்க கண்ணீர் துளிகளால் ஆனது. புனிதவதியைப் பற்றி படம் எடுக்க ஏன் நினைத்தோம் என்றால், ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு லட்சம் பேர்தான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன், ஆனால் மன்னார் மாவட்ட தேவாலய பிஷப் சொல்கிறார்- கொல்லப்பட்டவர்கள் ஒரு லட்சத்து நாற்பது ஆயிரம் பேர் முதல் ஒரு லட்சத்து எழுபத்து ஐயாயிரம் பேர் வரை என்று. பாதிக்கப்பட்ட ஒன்னரை லட்சம் பெருக்கும் ஒரு கதை இருக்கும். இவர்கள் எல்லோரைப் பற்றியும் படம் எடுக்க இயலாது என்பதால் அந்த ஒன்னரை லட்சம் பேரின் துயரை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரம் வேண்டும் என்று நினைத்தோம். பதிமூன்று வயது குழந்தைக்கே இப்படி நடந்திருக்கிறதா என்கிற அந்த கோபமும் ஆத்திரமும் சோகமும் அந்த ஒன்றரை லட்சம் பேரின் அவலத்தை வலிப்படுத்துவதாக இந்தப் புனிதவதியின் காதாபாத்திரம் இருந்தது. ஒன்றரை லட்சம் பேரின் சோகத்தை அவள் தாங்கி நிற்கிறாள்.

O to accept the new reform on a deeper level, she would have had to unlearn old mathematics, learn new concepts of teaching mathematics, and have a much more substantial understanding pro-essay-writer.com/ of mathematics itself

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சிதனை முகர்ந்தால் – இயக்குனர் புகழேந்தி நேர்காணல்”

அதிகம் படித்தது