மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உணவே மருந்து

ஆச்சாரி

Feb 1, 2013

உணவே மருந்து என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் மருந்தையே உணவாகக் கொள்ளும்  பொழுது அது நம் உடலுக்கு எத்தனை நன்மையை கொடுக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலாகும்.  கொட்டும் மழையில் அம்மாவின் கையால் சுடச்சுட நல்லெண்ணையும்,  நெய்யும் கலந்து ஊற்றி பிசைந்து கொடுக்கப்பட்ட முத்து வற்றல் குழம்பு  சாதமும், சுட்ட அப்பளமும் சாப்பிட்டவர்களுக்கு  தெரியும் மருந்து எப்படி உணவாகும் என்று.

மருந்தாக விளங்கும் கீரைகளை, காய்கறிகளை என்று சொல்லப்படும் சிறு தானியங்களை நாம் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் அவற்றை எப்படிச்  சாப்பிட வேண்டும், எந்த முறையில் சாப்பிடவேண்டும், எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்பதற்கெல்லாம் ஒரு வரைமுறை இருக்கிறது. உணவாகச்  சாப்பிடும் பொழுது 4 இட்லிக்கு பதில் நன்றாக இருந்தால் 5 அல்லது ஆறு இட்லி கூட  சாப்பிடலாம். ஆனால் மருந்தே உணவாகும் பொழுது அங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது சமைக்கும் முறையும்  சாப்பிடும் அளவும்தான்.  அந்த வகையில் நம் வாசகர்களுக்காக பல செய்முறைகளை இந்த தொடரின் மூலம் சொல்ல இருக்கிறோம். அவற்றை செய்து சாப்பிட்டு உடல், மனநல வளமோடு வாழ வாழ்த்துகிறோம்.

சித்த மருத்துவத்தில் இல்லாத சிகிச்சை முறைகள் என்று எதுவும் இல்லை, ராமாயண, மகாபாரத காலம் தொட்டு முகலாயர்கள் படையெடுத்து வந்த காலம் வரை, ஆங்கிலேயரின் அடக்குமுறை என்றெல்லாம் பார்த்தால் கூட போர்க்கால ரணங்களும், அம்புகளும், தைத்து உடல் புண்ணாகவில்லையா என்ன? போரில் பெற்ற விழுப்புண்களை ஆற்றியது, துப்பாக்கியின் குண்டடி பட்ட வீரர்களை காப்பாற்றியதும் இந்த சித்த, ஆயுர்வேத மருந்துகள் தானே.  என்ன ஒரு வித்தியாசம் என்றால் ஆங்கில மருத்துவம் மறைத்து வைக்கப்படவில்லை. இதுதான் நோய் அதை இப்படித்தான் குணப்படுத்த வேண்டும் என்ற சிகிச்சை முறை எழுத்து வடிவத்தில் கொண்டு வரப்பட்டது.  அதை ஒரு பாடமாகவே பயிற்றுவிக்கக் கல்லூரிகள் பல அமைக்கப்பட்டன. விரும்புகிற வகையில் எலும்பு, நரம்பு, தசை, கண், காது, மூக்கு தொண்டை என்று பகுதிவாரியாக பிரிக்கப்பட்டு அவற்றில் வரும் நோய்களும் அதற்கான சிகிச்சை முறைகளும் சிறப்பான முறையில் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

ஆனால் பெருமளவில் ஆங்கில மருந்துகளின் தயாரிப்பில் நம் நாட்டு மூலிகைகள், பச்சிலைகள், வேர்கள் என்றுதான் உபயோகப்படுத்தப்படுகின்றன  என்பது நமக்கு தெரிந்தது தான்.  ஆங்கில மருத்துவம் மறைத்து வைக்காமல் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கப்பட்டதாலும் எழுத்து வடிவத்தில் ஆவணப் படுத்தப்பட்டதாலும் நன்கு வளர்ந்தது, செழித்தது. ஒருவருக்கும் சொல்லிக் கொடுக்கப்படாமல் குடும்ப ரகசியமாகப் பொத்தி வைக்கப்பட்டதால், சித்த ஆயுர் வேத முறைகள் காலப்போக்கில் அழியத் தொடங்கிது. ஆனால் தரமான எதுவும் மறையலாமே தவிர அழியாது.  எனவே மீண்டும் சித்த ஆயுர்வேத முறைகள் துளிர்க்கத் தொடங்கின.  துளிர் விட்ட நம் இயற்கை வைத்தியமுறையை நாம்  வளர்க்க வேண்டிய கடமை, உரிமை என்ற இரண்டையும் புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் செயல்பட வேண்டும். இயற்கையோடு இணைந்த ஆரோக்கிய  வாழ்வு வாழ அனைவரையும் அழைக்கின்றோம்.

1. முதலில் மணித்தக்காளி கீரையைப் பற்றி பார்ப்போம்:

மணிதக்காளி என்பது மணத்தக்காளி என்றும் சொல்லப்படுகிறது. இதன் இலை, காய் இரண்டுமே மருந்தாகப் பயன் படுகிறது.

மணத்தக்காளி இலை பொரித்த குழம்பு

தேவையான பொருள்கள்:

நன்கு ஆய்ந்து நறுக்கிய மணத்தக்காளி இலை =    1 கப்

துவரம்பருப்பு                         =    50 கிராம்

கடுகு                                =    1 டீஸ் பூன்

உளுத்தம் பருப்பு                      =    2 டீஸ் பூன்

எண்ணெய்                       =    4 டீஸ் பூன்

மிளகு                                          =    1 டீஸ் பூன்

பெருங்காயம்                    =    1 சிறுதுண்டு

துருவிய தேங்காய்               =    2 டீஸ் பூன்

மஞ்சள் தூள்                    =    1 சிட்டிகை

உப்பு                            =    தேவைக்கேற்ப

செய்முறை:

துவரம் பருப்பையும், மணத்தக்காளி கீரையையும் நன்றாகக்கழுவி  குக்கரில் அளவாக தண்ணீர் வைத்து மஞ்சள் தூள் சேர்த்து  மூன்று விசில் சத்தம் வரும் வரை வைத்து வேகவைக்கவும்.  இரண்டு ஸ்பூன் எண்ணையை வாணலியில் விட்டு சூடு படுத்தி அதில் மிளகு, ஒரு டீஸ் பூன் உளுத்தம் பருப்பு பெருங்காயம் போட்டு சிவக்க வறுத்து, கடைசியில் துருவிய தேங்காயையும் போட்டு ஒருமுறை பிரட்டி எடுக்கவேண்டும். வறுத்த சாமான்களை மிக்சியில் நன்றாக அரைத்து வேக வைத்துள்ள பருப்பு கீரை கலவையில் கொட்டி கொதிக்க விடவேண்டும். தேவைக்கேற்ப உப்பு போடவேண்டும், எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்து வரும்பொழுது 1 டீஸ்பூன் அரிசிமாவை 4 ஸ்பூன் தணிணீர்விட்டு கரைத்து கொதிக்கும் குழம்பில் விடவேண்டும். எல்லாம் ஒன்று சேர்ந்து குழம்பு பதத்திற்கு வந்ததும் இறக்கி வைத்து கடுகு உளுத்தம் பருப்பை தாளித்துக்  கொட்டவேண்டும். சூடான சாதத்தில் நெய்விட்டு மணத்தக்காளி கீரை பொரித்த குழம்பை பிசைந்து சாப்பிடவேண்டும்.

மணத்தக்காளி கீரை பொரியல்:

                தேவையான பொருட்கள

                நன்கு சுத்தம் செய்து நறுக்கிய கிரை    =    ஒரு கப்

                பாசிப்பருப்பு                           =    50 கிராம்

                மிளகாய் வற்றல்                =    2

                உளுத்தம் பருப்பு                 =    1 டீஸ்பூன்

                கடுகு                           =    1 ஸ்பூன்

                பெருங்காயத் தூள்               =    1 ஸ்பூன்

                சர்க்கரை                        =    1 சிட்டிகை

                உப்பு தேவைக்கேற்ப             =    1 ,1/2 ஸ்பூன்

                எண்ணெய்                       =    2 ஸ்பூன்

                செய்முறை:-  பாசிப்பருப்பை நன்கு களைந்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு வேக விடவேண்டும். பருப்பு சற்று வெந்ததும் (குழைந்து விட கூடாது) அதில் நறுக்கி வைத்துள்ள கீரையை போட்டு வேகவைக்க வேண்டும். உப்பையும் போட்டு விட வேண்டும். தண்ணீர் வற்றி பரும்பும் கீரையும் ஒன்றாக வரும் சமயம் அடுப்பை நிறுத்தி விடவேண்டும்.  பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு மிளகாய் வற்றலை தாளித்து, சர்க்கரையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.  சாம்பார், ரசம் சாதத்துடன் இந்த பொரியல் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

மணத்தக்காளி சாதம்:

             நன்கு சுத்தம் செய்யப்பட்டு நறுக்கிய கீரை        =      ஒரு கப்

                பச்சை மிளகாய்                     =                   3

                புளி                       =    ஒரு பாக்கு அளவு

                உப்பு                      =    தேவைக்கேற்ப

                கரமசாலா தூள்             =    1/4 ஸ்பூன்

                தனியா தூள்               =    1 ஸ்பூன்

                தாளிக்க

                உளுத்தம் பருப்பு           =    1 ஸ்பூன்

                கடுகு                      =    1/2 ஸ்பூன்

                முந்திரி பருப்பு             =    2 டீஸ் பூன்

                எண்ணெய்                 =    1 குழிக்கரண்டி

                செய்முறை:-  கீரை, புளி பச்சை மிளகாய், உப்பு எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவேண்டும். வாணலியில் எண்ணெயை விட்டு கடுகு, உளுத்தம்பரும்பு, முந்திரியை தாளித்து, தனியா, கரம்மசாலா, அரைத்த விழுது எல்லாவற்றையும் போட்டு எண்ணை பிரிந்து வரும் வரை வதக்கவும். நன்றாக உதிர்த்த சூடான சாதத்தில் இந்த விழுதை கலந்து பொரித்த அப்பளத்துடன் பரிமாறவும்.

மணத்தக்காளி வற்றல் குழம்பு:  (காரக் குழம்பு)

தேவையான பொருட்கள்: 

     பசுமையாக செடியில் இருந்து பறித்த காய்கள் =    50 கிராம் (அல்லது)

     உப்பு போட்டு உலர்த்திய வற்றலாகவும் இருக்கலாம் = 50 கிராம்

                புளி                        =   ஒரு எலுமிச்சம்பழம் அளவு.

                 நல்லெண்ணெய்            =    100 மில்லி

                சாம்பார் பொடி             =    4 டீஸ் பூன்

                கடுகு                      =    1 ஸ்பூன்

                வெந்தயம்                 =    1 ஸ்பூன்

                துவரம்பருப்பு               =    1 ஸ்பூன்

                பெருங்காயம் பவுடர்        =    1/4 டீஸ் பூன்

                வெல்லம்                  =    1 டீஸ் பூன்

                அரிசி மாவு                =    2 டீஸ் பூன்

                கறிவேப்பிலை             =    இரண்டு கொத்து

                மிளகாய் வற்றல்           =    இரண்டு

                உப்பு                      =    தேவைக்கேற்ப

செய்முறை:

வாணலியில் எண்ணெயைவிட்டு முதலில் பெருங்காயத் தூளை போட்டு பின் கடுகைப் போடவேண்டும். கடுகு வெடித்ததும் மிளகாய் வற்றலை இரண்டாகக்  கிள்ளிப்  போட்டு பின்பு வெந்தயம், மணத்தக்காளிக்  காயையோ அல்லது வற்றலையோ போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி தாளித்த பொருட்களோடு ஊற்ற வேண்டும். அதனுடன் சாம்பாபர் பொடி, தேவைக்கான உப்பு சேர்த்துப்  பொடி வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்து சற்று அளவு குறைந்ததும் வெல்லத்தூளை போடவேண்டும் பின்

கறிவேப்பிலையை கிள்ளி போட்டு அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து ஊற்ற வேண்டும்.  குழம்பு நல்ல பரிமாறும் பதத்திற்கு வரும். சூடான சாதத்தில் குழம்பு ஊற்றி நல்லெண்ணெய், நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இதைத் தான் “முத்து வத்தல் குழம்பும் சுட்ட அப்பளமும்” என்று சொல்லுவார்கள்.

சாப்பிடும் முறை: மேற்கூறிய பக்குவங்களில் ஏதாவது ஒன்றினை வாரம் ஒருமுறை சாப்பிடலாம்.

பலன்:  மணத்தக்காளி இயற்கை நமக்குக் கொடுத்த வரம், இதை சாப்பிடுவதால் வயிற்றுப் புண் வாயில் ஏற்படும் குழிப்புண் ஆகியவை வருவது தடுக்கப்படும். புண் வந்த பிறகு எனில்,  மணத்தக்காளி இலை 10 பறித்து நன்கு கழுவி விட்டு வெறும் வயிற்றில், வாயில் போட்டு மென்று சாறை மட்டும் முழுங்கி இலைச் சக்கையை துப்பி விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாள் செய்ய வாய்ப்புண் குணமாகும்.

கீரைகள் இன்னும் வளரும்

Stress social media etiquette spy apps iphone and why it’s important to mind your digital manners- even with disappearing messages

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “உணவே மருந்து”
  1. saranyadevi says:

    enaku cold then skin problem ans kitney problem so please tel good health Recurement

அதிகம் படித்தது