உதவி – (சிறுகதை)
ஆச்சாரிApr 1, 2013
ஏண்டி பொன்னி! கொழந்தைக்கு காய்ச்சல் அடிக்குதே உன் கண்ணுக்குத் தெரியல? ஆசுப்பத்திரிக்கு கூட்டிட்டுப் போகலாம்ல என்று கத்தினாள் பாட்டி முனியம்மா.
இந்தா… சும்மா கத்தாத, எனக்கு மட்டும் புள்ள மேல அக்கற இல்லையாக்கும், ஆசுப்பத்திரிக்குப் போக காசு வேணாமா? நானே அஞ்சு பைசாவக் கூட முந்தியில முடிஞ்சு வைக்காம அல்லாடிட்டு இருக்கேன், ஏதோ இன்னிக்கு கூலி வேலைக்குப் போனாதான் கண்ணுல நாலு காசப் பாக்க முடியும்.
சரி… பண்ணையார்ட்ட இன்னிக்கு கூலியோட சேத்து எரநூறு ரூவா கடனா கேட்டு வாங்கிட்டு வர்ரேன், அதுவரைக்கும் புள்ளைய பத்திரமாப் பாத்துக்க புருஞ்சதா? என்று முனகியபடி வேலைக்குக் கிளம்பினாள் பொன்னி.
தோட்டத்தில் வேலை செய்ய முடியாதபடிக்குத் தன் குழந்தையின் நினைவு வந்தது. பொன்னிக்கு ஒருவழியாக வேலை முடிந்த அலுப்புடன் சம்பளம் வாங்கத் தயங்கியபடி தன் முதலாளியிடம் கைகளைக் கட்டிக் கொண்டு, தலை குனிந்து, அய்யா… எம் புள்ளைக்கு ஒடம்பு சரியில்லங்க டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகனும், நீங்க கூலிய சீக்கிரமா கொடுத்தா நான் நேரத்தோட கேளம்பிடுவேன்.
அதோட, கடனா ஒரு எரநூறு ரூபாயும் கொடுங்க, பின்னாடி எங்கூலியில புடுச்சுக்குங்க என்றவளைப் பார்த்து நக்கலாக “என்னது பணமா?” ஒனக்கு கடன் கொடுக்குற அளவுக்கு எங்கிட்டப் பணமில்ல, நானே 5 வட்டிக்கு வாங்கிட்டு வந்து கூலிய கொடுத்துக்கிருக்கேன், இதுல கடன் வேறயா? இந்தா நூறு ஒங்கூலிய மட்டும் வாங்கிட்டு போ… போ… எடத்தக் காலி பண்ணு என்று துரத்தினார் பண்ணையார்.
பொன்னி… மறுத்து எதுவும் பேசாமல் கொடுத்த கூலியை வாங்கிக் கொண்டு வேகமாக வீட்டிற்கு வந்தாள். குழந்தையின் கண்கள் மூடியபடியே இருந்தன. அழுவதற்குக் கூட தெம்பில்லாமல் அசைவற்றுக் கிடந்தது குழந்தை.
அதைக்கண்டு பதறிய பொன்னி, குழந்தையை தூக்கிக் கொண்டு அழுதபடியே வெளியே வர, அடியே? தனியாவா போற… கூட ஒம் புருசன கூட்டிட்டுப் போயேன்டி என்றாள் பாட்டி. அவன் எங்க குடிச்சுட்டு விழுந்து கெடக்கானோ என்று கோபம் கண்களில் தெறிக்கக் கத்தினாள். சரி..சரி… கத்தித் தொலையாம தாத்தாவ ஓங்கூடக் கூட்டிட்டுப் போ. . . என்றவளிடம் எல்லாம் எனக்குத் தெரியும், ஓ… வாய மூடிட்டு சும்மா இரு கெழவி, என தனது குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு கிளம்பினாள் மருத்துவமனைக்கு.
அனல் பறக்க குழந்தையின் மூச்சுக் காற்று அவளின் மார்பில் பாய்ந்து. அப்போது சாலையில் நடந்து வந்தவளின் கண்ணில் கார் ஒன்று வேகமாகத் தூரத்தில் வருவது தெரிந்தது. பொன்னி… அக்காரை நிறுத்துமாறு கையை ஆட்டினாள். அவள் உதவிக்காக நிற்பதை அறிந்த, காருக்குள் இருந்த ராஜேஸ்வரி, தனது வாகன ஓட்டுனரிடம் காரை நிறுத்துமாறு கூறினாள்.
கார் நின்றதும் ராஜேஸ்வரி பொன்னியைப் பார்த்து, “என்ன ஆச்சு கொழந்தைக்கு” என்றவளிடம்.. அம்மா! எம் புள்ளைக்கு ஒடம்பு சரியில்ல, காச்சம்மா . . . கொழந்த அசைவில்லாம இருக்கான், அவசரமா ஆசுப்பத்திரிக்குப் போகணும் கொஞ்சம் ஒதவி செய்ங்கம்மா.. என கண்ணீருடன் வேண்டிய பொன்னியின் தவிப்பைக் கண்டு “கவலைப்பாடதீங்கம்மா.. நான் அந்த வழியாத்தான் போறேன் வண்டியில ஏறிக்குங்க” என்றதும் தயக்கத்தோடு காரில் ஏறினாள் பொன்னி.
மறுநாள் பொன்னி கண் விழித்துப் பார்த்ததும், அதிர்ச்சி அடைந்தாள். மருத்துவமனைப் படுக்கையில் கிடந்தவள், தான் உடலில் அடிபட்ட வலியைப் பொருட்படுத்தாமல் தன் குழந்தையைத் தேடினாள், அந்த அறையில் தன் குழந்தையைக் காணாமல் கதறி அழுதாள் , அப்போது வந்த மருத்துவரோ “அழாதம்மா? உங்க குழந்தைக்கு எதுவும் இல்ல, பாப்பா நல்லாவே இருக்கு “ என்றார்.
அருகில் காயத்துடன் நின்றிருந்த கார் ஓட்டுனரிடம், எனக்கு உதவி செஞ்ச அந்த அம்மா எங்க? எப்படிங்க இருக்காங்க? என்றதும் அழுதுகொண்டே கார் ஒட்டுனர் கூறினார்.
அத ஏம்மா கேக்குற… கார்ல வேகமா வந்திட்டு இருந்தப்போ எதிர்ல இருந்து வந்த பஸ்சு இடிச்சதுல, நான் தடுமாறி, காரு பக்கத்துல இருந்த புளிய மரத்துல மோதிருச்சு, அப்போ நீங்க மயக்கமாகிட்டீங்க, ஒங்க குழந்த குப்புற விழுந்து அலுதுக்கிருந்துச்சு. பின்னாடி ராஜேஸ்வரி அம்மா தலையில பலமா அடிபட்டு உயிருக்கு போராடிக்கிருந்தப்ப. . . நான் அவங்கள காப்பாத்தப்போனேன். அதுக்கு அம்மா சொன்னாங்க நான் இனி பொழைக்க மாட்டேன், முதல்ல அவங்களைக் காப்பாத்துனு சொல்லிட்டு இருக்கும் போதே அம்மா மயங்கி இறந்துட்டாங்க எனக்கூறி ஓவென அழுதான்.
இதைக் கேட்ட பொன்னி, கண்ணீர் பெருக்கெடுத்து கதறிக் கதறி அழுதாள், எங்க உசுரக் காப்பத்துன இந்தச் சாமி மொகத்தைக் கூட பாக்கக் கொடுத்து வைக்கலியே என புலம்பி அழுதாள். துக்கம் தொண்டையை அடைக்க தன் குழந்தையைப் பார்த்தாள்.
படுத்திருந்த குழந்தை தாயைக் கண்டதும் கையாட்டிச் சிரித்தது, குழந்தையின் முகத்தில் கருணை குணம் கொண்ட இறந்த ராஜேஸ்வரியின் பிம்பம் பிரதிபலித்தது. சிரித்த குழந்தையைக் கண்டு கை கூப்பி அழுதாள் பொன்னி.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
NICE STORY