மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உத்திரப்பிரதேசம்: ஓர் அரசியல் கண்ணோட்டம்

ஆச்சாரி

Mar 1, 2012

இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படுவது உத்திரப் பிரதேச மாநிலம். இந்தப் பட்டம் இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தின் இருப்பிடம் மற்றும் மக்கள் தொகை இரண்டையும் குறிப்பிடுவதற்காக இந்திய தேசியவாதிகளால், அழைக்கப்பட்டதாகும். ஆங்கிலேயர் காலத்தில் “Unite Province” என்று அழைக்கப்பட்ட மாகாணம் இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு உத்திரப் பிரதேசம் என்ற பெயரில் இந்தியாவின் மக்கள் தொகை மிகுந்த மாநிலமாக உருப்பெற்றது.

மற்றுமொரு நோக்கிலும் உத்திரப் பிரதேச மாநிலத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதலாம். இந்தியாவின் தேசிய அரசியலில் உத்திரப் பிரதேசம் மிகவும் முக்கியமான மாநிலமாகும். இந்தியாவின் பாராளுமன்ற மக்களவையின் எண்பது உறுப்பினர்கள் உத்திரப் பிரதேசத்தை சார்ந்தவர்கள். உத்திரகான்ட் என்ற மாநிலம் உத்திரப் பிரதேசத்தில் இருந்து பிரித்து அமைக்கப்படும் முன்னர் எண்பத்து ஐந்தாக இருந்தது. எண்ணிக்கையில் மட்டுமல்ல அரசியல் எண்ணங்களிலும் உத்திரப் பிரதேசம் முக்கியமானது. இந்தியாவின் பெரும்பாலான பிரதமர்கள், அரசியல் தலைவர்கள் உத்திரப்பிரதேசத்தின் புதல்வர்கள். உத்திரப் பிரதேசத்தில் வெற்றி பெற்ற அரசியல் கட்சி அல்லது கூட்டணிதான் இந்தியாவை ஆளும் என்பது மரபு.

இப்படி அரசியலில் முக்கியத்துவம் பெரும் மாநிலம் பொருளாதார வளர்ச்சியிலோ சமூக முன்னேற்றத்திலோ அல்லது கல்வி அறிவிலோ மிகவும் பின்தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சாதி மற்றும் மத அடிப்படையிலான அரசியலிலும் வேரூன்றி உள்ள மாநிலம் உத்திரப் பிரதேசம் என்பது கவலைக்குரிய உண்மை. பாகிஸ்தான் தனி நாடு வேண்டும் என்ற எண்ணமும் இங்குதான் உதித்தது. இந்தியாவின் தென் பிரதேசத்தில் ஏற்பட்ட சமூக விழிப்புணர்ச்சியோ முற்போக்குவாத சிந்தனைகளோ இங்கு தாக்கம் ஏற்படுத்தாதிருக்க சாதி மதப் பிரிவினைகள் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்று சமூகவியல் அறிஞர்கள் கருதுகின்றார்கள்.

உத்திரப் பிரதேசத்தின் இன்னொரு வினோதம் அதன் மக்கள் தொகையில் சாதிகளின் விகிதம். இந்தியா முழுவதிலும் ஆதிக்க சாதிகள் (பிராமணர்கள், காயஸ்தர்கள். வைசியர்கள்) மக்கள் தொகையில் மிகவும் குறைந்த விகிதம் கொண்டவர்கள். பெரும்பாலாக பத்து சதவிகிதத்திற்கும் குறைவு. ஆனால் உத்திரப் பிரதேசத்திலோ ஆதிக்க சாதியினரின் எண்ணிக்கை இருபது சதவீதத்தைத் தொடக்கூடும் என்று எண்ணப்படுகின்றது. இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டது. ஒரு கணிப்பின் மதிப்பீட்டின்படி குறைந்தது பதினைந்து சதவிதம் இருக்கும் என்று கொள்வோம். இவர்கள் பெரும்பாலும் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிப்பவர்கள். அலகாபாத் உயர்நீதி மன்றம் சமீபத்தில் வழங்கிய ராம ஜென்ம பூமி தீர்ப்பு இந்துத்துவா இயக்கங்களை வலுப்படுத்தியுள்ளது.

மனுதர்ம விதிகளின்படி நாலு சாதிகள் என்று அழைக்கப்படும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் எண்ணிக்கை முப்பது சதவிகிதம் என்பது சராசரி மதிப்பீடு. 1960களில் யாதவ சமூகத்தினர் அரசியல் விழிப்புணர்ச்சி பெற்று காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளில் முன்னுக்கு வரத் தொடங்கினர். கல்யாண் சிங் பி.ஜே.பி.யில் இருந்த காலகட்டத்தில் யாதவ சாதியினரின் ஆதரவோடு பா.ஜ.க. உத்திரப் பிரதேசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் கல்யாண் சிங் பா.ஜ.க.வில் இருந்து விலகிய பிறகு பா.ஜ.க. உத்திரப் பிரதேசத்தில் தோல்வியையே தழுவியது. பெரும்பாலான யாதவ சமூகத்தினர், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியை ஆதரிக்கக் கூடும் என்று ஒரு கருத்துக் கணிப்பு கூறுகின்றது.

யாதவ சாதியினர் மற்றுமின்றி முஸ்லிம்களும் சமாஜ்வாதி கட்சியை ஆதரிக்கக் கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. கிட்டத்தட்ட இருபது சதவிகிதம் மக்கள் தொகை பலம் பெற்ற முஸ்லிம்கள் வெகுகாலமாக காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்தவர்கள். பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னரும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மதக் கலவரங்களினாலும் மிகவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், காங்கிரஸ் அரசின் பாரபட்சமான போக்கின் காரணத்தினால் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகளை ஆதரிக்கத் தொடங்கினர். இதில் மிகுந்த லாபம் அடைந்த கட்சி சமாஜ்வாதி கட்சிதான் என்பதில் ஐயமே இல்லை என்று கூறலாம்.

சமீப காலங்களில் தலித் சமூகத்தினரும் உத்திரப் பிரதேச அரசியலில் வலிமை வாய்ந்த ஒரு சாதியாக உருவாகியுள்ளனர். இதற்கு வித்திட்டவர் கன்சிராம் என்ற தலித் தலைவர். அண்ணல் அம்பேத்கரின் கனவுகளை நனவாக்க முனைந்து, பகுஜன் சமாஜ்வாதி கட்சியை தொடங்கி, அதன்மூலம் தலித் மக்களை ஒருங்கிணைத்து தலித் சமூகத்தினருக்கு ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தவர். இன்று அந்தக் கட்சியின் தலைவர் செல்வி மாயாவதி. கடந்த ஐந்து வருடங்களாக உத்திரப் பிரதேசத்தை ஆளும் கட்சி பகுஜன் சமாஜ்வாதி கட்சி. ஆனால் அக்கட்சி ஆட்சிக்கு வருவதற்காக மாயாவதி ஆதிக்க சாதியினரின் ஆதரவைத் தேடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுப்பதுவும் தலித் முற்போக்குவாத சிந்தனைகளுக்கு முரணானது என்று பல முற்போக்குவாத சிந்தனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். போதாக்குறைக்கு மாயாவதியின் மேல் ஊழல் குற்றச்சாட்டுக்களும் குவிக்கப்பட்டுள்ளன. இருந்தும் மாயாவதிக்கு தலித் சமூகம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த  அரசியல்  நிலவரத்தில், விருந்துக்கு  அழைக்கப்படாத  விருந்தாளி  போல  வெளியே  இருந்து  வேடிக்கை  பார்க்கும் நிலைக்கு  காங்கிரஸ்  கட்சி  தள்ளப்  பட்டுள்ளது .  ஆரம்ப  காலங்களில்  காங்கிரஸ்  கட்சியை  மலை  போல  நம்பிய  பல்வேறு  சாதியினரும்  மதத்தினரும்  காங்கிரசையே  ஆதரித்தனர் . நேரு  குடும்பத்தினரின்  வசீகரமும்  அதற்கு  முக்கிய  காரணம் .   அனால் , வசீகரத்தை  மட்டுமே  நம்பிய  காங்கிரஸ்  கட்சி  உத்திரப்  பிரதேசத்தின்  முன்னேற்றத்தைக்  கண்டு  கொள்ளாமல்  விட்டதும்,  மதவாத  சக்திகள்  வளர  இடம்  கொடுத்ததையும்  கண்ட  மக்கள் ,  காங்கிரசை  விட்டு  விலகினர்.  2009 வரை  மிகவும்  பின்  தங்கிய  நிலையில்  இருந்த  காங்கிரஸ்  கட்சி , ராகுல்  காந்தியின்  முயற்சிகளினால்  வலுப்  பெற்றுள்ளது  மறுக்க  முடியாதுதான் . 2009 ஆம்  ஆண்டு  நடந்த  மக்களவைத்  தேர்தலில்  காங்கிரஸ்  கணிசமான  வெற்றி  பெற்றது  என்பது  குறிப்பிடத்தக்கது .  அந்த  வெற்றியை  மீண்டும்  பெறக்  கூடும்  என்று  காங்கிரஸ்  கட்சியின்  ஆய்வாளர்கள்  கருதுகின்றனர் .  அவ்வாறு  நடக்குமேயானால் , காங்கிரஸ்  2014-இல்  நடக்கவிருக்கம்  மக்களவை  தேர்தலில்  தனித்து  நின்று  வெற்றி  பெரும்  என்றும்  நம்பி  உள்ளனர் .
ஒருவேளை  சமாஜ்வாதி  கட்சி  மாபெரும்  வெற்றி  பெற்றாலும்  காங்கிரஸ்  கட்சி  சமாஜ்வாதி  கட்சியுடன்  கூட்டணி  சேர்ந்து  2014-இல்  ஒருங்கிணைந்து  நிற்பதற்கும்  வாய்ப்பு  உள்ளது .  எதிர்பாராத  வகையில் , மாயாவதி  வெற்றி  பெற்றுவிட்டால் , மாயாவதியும்  பிஜேபி -யும்  2014-இல்  கூட்டணி  சேரும்  என்றும்  எதிர் பார்க்கலாம் .  எது  எப்படியோ , இந்த  மாநில  தேர்தல்  உத்திரப்  பிரதேச  அரசியலை  மட்டுமே  நிர்ணயிக்காமல்  தேசிய  அரசியலையும்  பாதிக்கும்  என்பதில்  சந்தேகமே  இல்லை .  இந்த  தேர்தலின்  முடிவை  இந்திய  அளவில்  அனைவரும்  கூர்ந்து  கவனித்துக்  கொண்டிருக்கின்றனர் .  இந்திய  அரசியலில்  முதல்  மாநிலம்  என்ற  நிலைப்பாட்டை  உத்திரப்  பிரதேசம்  மீண்டும்  உறுதிப்படுத்தியுள்ளது.

Whichever schedule you choose, tell your child you don’t have to tell them which day it is, but they’ll appreciate being treated like an adult, and check this out that can help encourage good behavior

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உத்திரப்பிரதேசம்: ஓர் அரசியல் கண்ணோட்டம்”

அதிகம் படித்தது