உலக சினிமா ஒரு பார்வை (the virgin springs)
ஆச்சாரிFeb 1, 2013
பதிமூன்றாம் நூற்றாண்டில் சுவிடனின் வரலாற்றின் இடைகாலத்திய நாட்டுப்புறக்கதையைத் தழுவி திரைக்கதையாக்கப்பட்டு வெளிவந்த திரைப்படம் வெர்ஜின் ஸ்பிரிங்ஸ். பழிவாங்கும் நோக்கம், மத நம்பிக்கை கேள்விகள், தீயதன்மை, ஒழுக்கம், குற்ற உணர்ச்சி, பாலியல் குற்றமற்ற தன்மை என பல கருத்துகளை முன்வைப்பினும் மதம் சார்ந்த விசயங்களையே ஒருமுனைப்படுத்துகிறது இத்திரைப்படம்.மேலும் பார்வையாளர்களுக்கு நீதி சார்ந்த கேள்விகளைத் தூண்டிவிடுகிறது.
கதைச் சுருக்கம்:
காரின் என்பவள், அழகும் வசீகரமும் உடைய ஒரு பருவப்பெண். விவசாய குடும்பத்தில் பிறந்தவள், மாற்றாந்தாயின் மகள் இங்ரி. இவள் கர்ப்பமடைந்ததால் அவளுக்குத் துணையாகக் கடவுள் பக்தியுடைய தந்தை டோரும் தாய் மெரிடாவும் காரினை கூட அனுப்பி வைக்கிறார்கள். மெழுகு -வர்த்திகளை கோயிலுள் சேர்க்கும் பொறுப்பை ஏற்றுச் செல்கிறாள் காரின். சிறுவயதிலிருந்தே காரின் மீது எரிச்சலும் பொறாமையும் கொண்ட இங்ரி காரினுக்கு ஏதேனும் நிகழ வேண்டும் என்பதற்காக நாடகமாடி காட்டில் காரினை தனியே பயணிக்க வைக்கிறாள். இரக்கமும், அன்பும் கொண்ட காரின் செல்லும் வழியில் மூன்று ஆடு மேய்க்கும் சகோதரர்களைச் சந்திக்கிறாள். மாசற்ற காரினின் உணவை அந்த மூன்று சகோதரர்களோடு பகிர்ந்து கொள்கிறாள். ஈவு இரக்கமற்ற காட்டுமிராண்டி சகோதரர்கள், தனிமையில் வந்த காரினைப் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு அவளது விலை உயர்ந்த உடைகளைக் கழற்றிச் செல்கின்றனர். அதன் தொடர்ச்சியாக உணவையும் உறைவிடத்தையும் தேடிச் செல்லும் அந்த சகோதரர்கள் இறந்து போன காரினின் விட்டிற்கே அடைக்கலம் கொள்கின்றனர். காரினுடைய உடைகளை காரினின் தாயான மெரிடாவிடமே விலை பேசுகின்றனர். இரத்தகரை படிந்த காரினினுடைய உடைகளைப் பார்த்த பெற்றோர்கள், நடந்தவற்றைப் புரிந்துகொள்கின்றனர். அப்போது இங்ரி தனது குற்ற உணர்ச்சியின் விளிம்பில் நின்று நடந்தவற்றைச் சொல்கிறாள். கடவுளுக்குப் பயந்த டோர், மூன்று சகோதரர்களையும் ஒருவர் பின் ஒருவராக கொன்று பழிவாங்குகிறார். அதன் பிறகு ஒரு அற்புதம் நிகழ்கிறது. காரினினுடைய உடலைக் கண்டறியுமிடத்திலிருந்து தண்ணீர் ஊற்றெடுகிறது.
இந்தப் படத்தைப் பற்றிய குறிப்புகள்:
வலிமையான அழுத்தமான கதை சொல்லல் மூலம் நம்மை கதைக்குள் அழ்ந்திருக்க வைக்கிறது. கேமராவின் நகர்வும். ஒளி மற்றும் நிழலும் ஒருமித்து விளையாடுகிறது. நடிப்பு, இயக்கம் என அனைத்திலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார் படத்தின் இயக்குனர் பெர்க்மென். பெரும்பாலான காட்சிகள் நம் நெஞ்சை வெடிக்க வைக்கிறது. மூன்று சகோதரர்களில் ஒருவன் மட்டுமே பேசுகிறான். ஒருவன் பேசமுடியாதவன், மற்றொருவன் சிறுவன், பேசுவதில்லை. இச்சிறுவனோ, தனது சகோதரர்களுக்கு காரினை பலாத்காரம் செய்ய உதவிய காரணத்தினால் குற்ற உணர்ச்சியோடு இருக்கிறான். டோரின் பழிவாங்கல் என்னும் கட்டத்திற்க்கு வருகையில் மேலும் பயங்கரம், கொடூரம் என நெஞ்சை பதபதைக்க வைக்கிறது. நன்றாகக் குளித்துவிட்டு விடியும்வரை காத்திருந்து மூவரையும் எழுப்பி கொலை செய்கிறார் காரினின் தந்தை டோர். சிறுவன் பயந்து மெரிடாவைப் பிடித்து ஒட்டிக் கொள்ள சிறுவனின் மயிர்க் கற்றை பிடித்து தூக்கி எறிந்து கொலை செய்கிறார் டோர். பாதிக்கப்பட்ட காரினுக்காக பெற்றோர்கள் பழிவாங்குவது சரியோ தவறோ திரைப்படத்தில் நியாயப்படுத்தப்பட்டுயிருக்கிறது. ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட டோரும் மெரிடாவும் கொடூரமாகக் கொல்வதற்க்கு எது உந்தப்படுகிறது? அவர்களுடைய மதம் அதைதான் போதித்ததா? என்ற கேள்வி மனதில் திரும்ப திரும்ப எழுகிறது. 1960 யில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டதாயிருந்தாலும் இன்றைக்கும் திரைப்படத்தில் வரும் பலாத்கார காட்சி அதிர்ச்சியை மனதில் எற்படுத்துகிறது. 1962யில் Fox worth ல் இத்திரைப்படம், இதில் வரும் பலாத்கார காட்சிக்காக திரையிடத் தடை செய்யப்பட்டது.
திரைப்படத்தில் நிறையக் குறியீடுகள் இருக்கின்றன. காரினும் இங்ரியும் பயணிக்கும் பொழுது காகம் காட்டப்படுகிறது. காகம் என்பது ஐரோப்பிய பாரம்பரியத்தில் பிரச்சனைக்குரிய அறிகுறியாகவும், மோசமான சகுணமாகவும் கருதப்படுகிறது. அதைப் போன்று நூல் இழைபோல் நீலிசத்தைப் பற்றியும் பேசப்பட்டிருக்கிறது. நீலிசம் என்பது குறிக்கோள், நோக்கம், இயற்கையாய் உள்ளவற்றிற்கான மதிப்பு இவை இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பதை முன்வைக்கிறது. இதில் வரும் கதைமாந்தர்கள் குறிப்பிட்ட காலகட்டத்தையும் அந்தச் சூழலையும் உணர வைக்கிறார்கள். ஒவ்வொரு நொடியும் நம்மனதில் மனிதனின் உள் உணர்வை ஒரு வடிவத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றமடைவதை உள்வாங்கும்படியாக அமைந்திருக்கிறது இத்திரைப்படம். இந்தப் படத்தின் முடிவு விவரிப்பது பாவ விமோச்சனம். டொர் கடவுளைப் பார்த்து “நீ பார்த்தாயா கடவுளே! ! ஒரு அப்பாவிக் குழந்தையின் மரணத்தை, என்னுடைய பாவத்தை எப்படி நீ அனுமதித்தாய்? எனக்குப் புரியவில்லை. என்னுடைய பாவத்திற்காக நான் உனக்காக ஆலயம் கட்டுகிறேன். கொலை செய்த இந்த கைகளினால்’’ என்ற சொல்வதோடு படம் முடிகிறது. மனிதர்களுடைய இயல்பு எந்த அளவிற்கு வியக்கத்தக்கதாக இருக்கிறது என்பதின் படிப்பிணையாக இருக்கிறது இப்படம். கொடூரமான கோழைகள், கபட வேடதாரி, பகைமை கொண்ட இங்ரி, அவளுக்கு நேர்மாறான உண்மையான கனிவு கொண்ட காரின் என மனிதர்களுடைய சுபாவங்கள் சூழ்ந்து பேசும் கலவையான இப்படம் தலைசிறந்த படம் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. 1961 யில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்காரை வென்றது வெர்ஜின் ஸ்பிரிங்ஸ்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலக சினிமா ஒரு பார்வை (the virgin springs)”