ஊழல் ஒழிப்பு – நீங்கள் மோகனா முருகனா?
ஆச்சாரிFeb 8, 2014
மோகனும் முருகனும் பள்ளி காலந்தொட்டு நெருங்கிய நண்பர்கள். ஒரே கல்லூரியில் படித்து ஒரே மாதிரியான துறைகளில் பணி செய்கின்றனர். வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருக்கும் சராசரி நடுத்தர நகரவாசிகள் இருவரும். அவர்களுடைய வழக்கமான பொழுதுபோக்கு சந்திப்பு, தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த அலைக்கற்றை ஊழல் தொடர்பான செய்தியால் இன்று வாக்குவாதமாகிப்போனது.
மோகன்: பிரசாந்த் பூசன் வெளியிட்டிருக்கின்ற ஒலிப்பதிவில் என்னெல்லாம் பேசி இருக்கிறார்கள் என்று படித்தாயா?
முருகன்: சவுக்கு தளத்தில் வாசித்தேன். என்ன அநியாயம்? பயமே இல்லாமல் வெளிப்படையாக ஊழல் பற்றி பேசி செயல்பட்டிருக்கிறார்கள். இதற்கு பிறகும் சரியான நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றம், அரசாங்கம் அனைத்தையும் பேசாமல் கலைத்துவிடலாம்.
மோகன்: அவர்கள் பேசி இருப்பதை கேட்டால், அலைக்கற்றை ஊழல் மட்டுமல்ல இன்னும் பல ஊழல்களை சேர்ந்து செய்திருக்கின்றார்கள் போலும். எத்தனை ஆயிரம் கோடியை இதில் பெற்றார்களோ தெரியவில்லை.
முருகன்: இப்படி ஈவு இரக்கமே இல்லாமல் எல்லாரும் நம்ம நாட்டை கொள்ளை அடிக்கிறார்களே. இது எங்கு தான் போய் முடியப் போகின்றதோ?
மோகன்: ஏதோ நாட்டை கொள்ளை அடிக்கின்றவரைக்கும் சரி. நம் வீட்டை யாரும் கொள்ளை அடிக்காதவரை சரி. சுதந்திரத்திற்கு முன்னால் வெள்ளைக்காரன் கொள்ளை அடித்தான், இப்போது நம் அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கிறார்கள். முருகன்: என்ன இப்படி பேசுகிறாய்? நாட்டுடைய பணமும் நம் பணம் தானே? நாம் சிரமப்பட்டு கட்டுகின்ற வரியைத் தானே அவர்கள் கொள்ளை அடிக்கின்றார்கள்.
மோகன்: நம் பணம் தான். அதுதான் மாதா மாதம் சம்பளத்திலே பிடித்துவிட்டு தானே கொடுக்கின்றார்கள். ஆனால் அரசாங்கத்திடம் போய்விட்ட பிறகு யானை வாய்க்குள் சென்ற கரும்பு போன்று தான், மறந்துவிட வேண்டியது தான். அனைத்தும் அவர்கள் பணம் தான்.
முருகன்: இவர்கள் கொள்ளை அடிக்காவிடில் நாம் வரியாவது குறைவாக கட்டி நம் பணத்தை சேமிக்கலாமே. அல்லது கட்டுகின்ற வரிக்கு ஏற்ற வசதிகளாவது கிடைக்குமே? தரமான அரசுப் பள்ளிகள் இருந்தால் போன ஆண்டு உன் குழந்தையை பள்ளியில் சேர்க்க செலவிட்ட கட்டாய அன்பளிப்புப் பணம் உனக்கு மிச்சம் தானே.
மோகன்: அரசுப் பள்ளியில் பிள்ளையை சேர்ப்பதா? அதற்கு பள்ளிக்கே அனுப்பாமல் வீட்டிலே வைத்திருக்கலாம். நம் மாநாகராட்சி பள்ளிக்கு ஒரு முறை சென்று பார், தெரியும்.
முருகன்: அரசு கல்லூரிக்கு மட்டும் சேர்க்கை கிடைக்குமா என்று அலைந்தீர்கள். கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்க்கை கிடைக்க வேண்டும் என்பது தானே உன் பள்ளிக்கால கனவு. அரசு கல்லூரிகளுக்கு இருக்கும் மேம்பட்ட வசதிகள் அரசுப் பள்ளிகளுக்கும் இருந்தால் அனைவரும் போட்டி போட்டு அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்கள் தானே? ஊழலில் இழக்கும் பல இலட்சம் கோடிகளில் ஒரு பகுதியை அரசுப் பள்ளிகளுக்கு செலவிட்டால் எவ்வளவு முன்னேற்றங்கள் கிடைக்கும். ஊழல் ஒழிந்தால் இதெல்லாம் நடக்கும்.மோகன்: ஊழல் எந்த காலத்திலும் ஒழியாது. இன்று நேற்றாக ஊழலில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சாணக்யன் “நுனி நாக்கில் வைத்த தேனை சுவைக்காமல் இருப்பது எப்படி முடியாதோ அதே போன்று அரசுப் பணத்தை அரசு ஊழியர்கள் சுவைக்காமல் இருக்க முடியாது” என்று எழுதியிருக்கிறான். சாணக்யன் காலத்தில் ஒழிக்க முடியாத ஊழல், அதற்கு இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னாலும் ஒழிக்க முடியாத ஊழல், இன்று ஒழிக்கப்பட்டு விடுமா என்ன? நடைமுறைக்கு சாத்தியமில்லாததை எதிர்பார்க்க கூடாது.
முருகன்: சாணக்யன் காலத்திலும் சரி, அதற்கு முந்தைய காலத்திலும் கூட ஊழல்கள் இருந்திருக்கலாம். எதற்கும் ஒரு அளவிருக்கின்றது. ஏன் இப்போதும் கூட ஊழல் முற்றிலும் இல்லாத நாடேதும் இருக்காது. ஆனால் நம் நாட்டில் ஊழல உச்சகட்டத்தை எட்டியிருக்கின்றது. சர்வதேச ஊழல் பட்டியலில் உலக அளவில் 94 ஆம் இடத்தில் இருக்கின்றோம். ஏன் நாமும் நியுசிலாந்து, நார்வே, சிங்கப்பூர் போன்று ஊழல் மிகக்குறைந்த நாடாக இருக்ககூடாது?.
மோகன்: இருப்பதோடு தான் நாம் வாழ முடியும். நான் ஏன் நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன், ஒரு பணக்கார வீட்டில் பிறந்திருக்கலாம் என்று எண்ணுவதைப் போன்று இருக்கின்றது உனது வாதம். நீ பட்டியலிடும் நாடுகள் முன்னேறிய நாடுகள், நம் நாடு தற்போது தான் வளர்ந்து வரும் நாடு. முருகன்: அவர்கள் முன்னேறிய நாடாக இருப்பதால் ஊழல் குறைவாக இல்லை. அங்கு ஊழல் குறைவாக இருந்ததால் தான் அவர்களால் வளர்ந்த நாடாக முடிந்தது. நம் நாடு வளர்ந்த நாடாக வேண்டுமென்றால் ஊழல் குறைந்தால் தான் முடியும். சிங்கப்பூர் 1950 களில் மிகவும் ஊழல் மலிந்த நாடாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது ஊழலற்ற நாடுகளில் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றது. லீ குஆன் போன்ற தலைவரும் அவருடைய ஊழலற்ற நிர்வாகத்தை ஆதரிக்கும் மக்களும் தான் சிங்கப்பூரின் இந்த முன்னேற்றத்திற்கு காரணம்.
மோகன்: சிங்கப்பூர் சிறிய நாடு. அதில் ஊழலற்ற ஆட்சி கொடுப்பது எளிது, இந்தியாவை அப்படி எளிதாக எல்லாம் மாற்றமுடியாது.
முருகன்: மாலத்தீவுகள் கூட தான் சிறிய நாடு, ஆனால் அங்கு ஊழல் இந்தியாவை விட மிக மோசமாக இருக்கின்றது. சீனா, இந்தியாவிற்கு அடுத்த படியாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு அமெரிக்கா, அது ஊழல் பட்டியலில் இந்தியாவை விட பல மடங்கு நல்ல நிலையில் 19 ஆம் இடத்தில் இருக்கின்றது. மிக அதிக மக்கள் நெருக்கம் கொண்ட ஜப்பான் கூட உலக அளவில் ஊழல் பட்டியலில் 18 ஆம் இடத்தில் இருக்கின்றது. ஊழலை ஒழிப்பதற்கு நாடு பெரிது, சிறிது என்பதெல்லாம் தேவையில்லை, ஆள்பவர்களுக்கும், மக்களுக்கும் நல்லொழுக்கம் இருந்தால் போதுமானது. நாமெல்லாம் ஊழலை எதிர்த்து செயல்படத் தொடங்கினால் நம் நாட்டிலும் மாற்றத்தைக் அவசியம் காணலாம்.
மோகன்: நம்மால் எல்லாம் ஊழலை எதிர்த்து ஒரு நாள் கூட நிற்க முடியாது. சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் அரசு அதிகாரி மகேந்தேஷ் ஊழலை வெளிப்படுத்தியதற்காக தாக்கி கொல்லப்பட்டது தெரியும் தானே. நம் ஊரில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற எத்தனை அதிகாரிகள் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஊழல்வாதிகள் முன்னால் நாம் எல்லாம் ஒன்றுமே இல்லாதவர்கள். நம்மை கொன்று போட்டால் கேட்பதற்கு கூட ஆள் கிடையாது.
முருகன்: நம்மிடம் இருக்கும் பயத்தை அறுவடை செய்து பலனடைந்து கொள்ளவே இது போன்று தாக்குதலில் ஊழல்வாதிகள் ஈடுபடுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நேர்மையான அதிகாரியை கொல்லும் பொழுதும் நம்முள் இருக்கும் தைரித்தையும் சேர்த்தே கொல்கிறார்கள். ஊழல் எதிர்ப்பை அடக்குவதற்கு அவர்களுக்கு இது மிக எளிதான வழியாக இருக்கின்றது. எனக்கும் ஊழலை வெளிப்படையாக எதிர்த்து நின்று உயிரை விடும் துணிவு இல்லை. குறைந்தது என் அளவில் ஊழலில் பங்கு பெறாமல், ஊழலை ஊக்கப்படுத்தாமல், ஊழலை எதிர்த்து செயல்படுவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலாவது செயல்படலாம் என்று நினைக்கின்றேன்.
மோகன்: நீ ஆயிரம் தான் சொன்னாலும் இன்றைய சூழ்நிலையில் நடைமுறை வாழ்வில் ஊழலை தவிர்த்து வாழ முடியாது. இலஞ்சம் கொடுக்காமல் வாகனம் ஓட்டுனர் உரிமம் பெற முடியாது, வீடு வாங்க முடியாது, பட்டா மாற்ற முடியாது, மின் இணைப்பு பெற முடியாது, கட்டட அனுமதி வாங்க முடியாது, குடிநீர் இணைப்பு பெற முடியாது. அரசு மருத்துவமனையில் குழந்தை பிறப்பதில் இருந்து, அரசு சுடுகாட்டில் எரிக்கும் வரை ஒவ்வொரு நிலையிலும் நம் மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. லஞ்சம் கொடுக்காமல் வாழ வேண்டும் எனில் எங்காவது காட்டுக்குள் சென்று அரசு தொடர்பே இன்றி ஆதிவாசியாகத் தான் வாழ வேண்டும்.
முருகன்: நம் நாடு மாறும் என்றோ, நம்மால் மாற்ற முடியும் என்பதிலோ உனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. நான் மாறுகிறேன். வரும் காலங்களில் பெரும்பாலானோர் மாறும் பொழுது நாடளவில் மாற்றம் அவசியம் வரும். நம் நாட்டிலும் ஊழல் ஒரு நாள் குறையும்.
மோகன்: நீ வேண்டுமென்றால் மாறிக்கொள். அது உன்னுடைய வாழ்க்கையைத்தான் சிரமமாக்கும். ஆனால் மக்கள் எல்லாரும் ஒரு நாள் மாறுவார்கள் என்று கனவெல்லாம் காணாதே. ஒருவரும் மாற மாட்டார்கள். நம் நாட்டில் 99% மக்கள் இந்த மோகனைப் போன்றவர்கள் தான்.
நீங்கள் மோகனா முருகனா?
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஊழல் ஒழிப்பு – நீங்கள் மோகனா முருகனா?”