மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஊழல் – தொடர் 3 – எது ஊழல்?

ஆச்சாரி

Jan 15, 2013

எது ஊழல் என்று கேட்டால் பெரும்பாலானோர் கையூட்டு (இலஞ்சம்) வாங்குவது தான் ஊழல் என்பர். கையூட்டு ஊழலின் ஒரு வகை தான். நம் நாட்டில் எண்ணற்ற வகைகளில் புதிது புதிதாக ஊழல்கள்  நடக்கின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஊழல்கள் நேரடியானதாகவும், கண்டறிவதற்கும் மக்களும் எளிதாக புரியக்கூடியதாகவும் இருந்தன. ஆனால் இன்று நடக்கும் ஊழல்கள் மிகவும் சிக்கலானாதாகவும், இரகசியமாகவும் மக்களுக்கு விளக்கினால் கூட புரிந்து கொள்ளவோ  நம்பவோ முடியாத வகைகளில் நடக்கின்றன.

மேலை நாடுகளில் ஊழல்களை வகைப்படுத்தி அதன் ஒழிப்பு முறைகள் பற்றி விரிவாக ஆராய்கின்றனர். நாம் பொதுவாக ஊழல் என்று குறிப்பிடுவதை அவர்கள் குறிப்பாக பல்வேறு வார்த்தைகளில் அழைக்கின்றனர்; உதாரணத்திற்கு - graft, bribery, port barreling, embezzlement, nepotism, cronyism, extortion …..

நம் நாட்டில் திரைப்பட பாடலில் ஆராய்ச்சி பட்டம் பெரும் அளவிற்கு கூட ஊழல் ஒழிப்பில் யாரும் ஆராய்ச்சி செய்வதில்லை.மலேரியா, எய்ட்ஸ் போன்று ஊழலும் முறையாக ஆராயப்பட்டால் தான் அதை திட்டமிட்டு படிப்படியாக ஒழிக்க முடியும். ஒரு நாட்டில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ஊழல் ஒழிப்பு திட்டங்கள் வேறு நாட்டில் அமல்படுத்தப் படும் பொழுது தோல்வி அடைகின்றன. நம் நாட்டிற்கு ஏற்ற ஊழல் ஒழிப்பு முறைகளை நம்மால் தான் ஆராய்ந்து கண்டறியமுடியும்.

ஊழல்களைப் பற்றியும் அதற்கான அடிப்படை காரணங்களைப் பற்றியும் தெளிவாக புரிந்துகொள்ளாமல் ஊழலை எதிர்க்கப் போராடுவது பயனற்றது. நமது தெளிவற்ற நிலையை அரசியல்வாதிகள் வசதியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். 1996 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்களுக்கு எதிராக மக்கள் பெரும் எழுச்சி அடைந்தனர். ஆனால் அந்த எழுச்சியின் பயன் என்னானது? பதினேழு ஆண்டுகளுக்கு பின்னர் இன்று தமிழகத்தில் ஊழல்கள் மேலும் தான் பெருகி இருக்கின்றன.

நம்மைப் போன்ற பொது மக்களால் எது ஊழல் என்று தெளிவாக வரையறுக்க முடியாமல் போகலாம். ஆனால் ஊழலை காணும் பொழுது அடையாளம் காண முடிய வேண்டும். நாம் அழிக்க வேண்டிய அரக்கனை எவ்வடிவிலும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

நம் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஊழல்கள் பொதுமக்கள் அரசு கட்டிடங்களின் படி ஏறும் பொழுது தான் நடக்கின்றன. நாம் தினம் சந்திக்கும் குழந்தை பிறப்பு மருத்துவமனை ஊழல் முதல் கடைசி இடமான சுடுகாடு ஊழல் வரை பெரும்பாலான ஊழல்கள் அரசின் சேவைகளில் தான் நடக்கின்றன. இவற்றில் பெரும்பாலான ஊழல்கள் சட்டத்திற்குட்பட்ட நேர்மையாகக்  கிடைக்கக் கூடிய அரசு சேவைகளில் தான் நடக்கின்றன. இவ்வித ஊழல்கள்  தான் பொது மக்களை நேரடியாக பாதிக்கின்றன. இந்த ஊழல்களில் பெருமளவில்  ஈடுபடுவர்கள் கீழ்மட்ட அரசு அதிகாரிகளே. இது போன்ற ஊழல்களில் கைமாறும் தொகைகள் குறைவானவை. இதனால் நாட்டிற்கு விளையும் கேடுகளும் ஒப்பீட்டளவில் குறைவானவையே.

ஆனால் வணிக நிறுவனங்கள் அரசின் சேவைக்காக அணுகும் பொழுது நடக்கும் ஊழல்கள் மிகப் பெரிய அளவினதாகவும், பல நேரங்களில் நாட்டிற்கே கேடு விளைவிப்பதாகவும் நடக்கின்றன. 2G ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் போன்றவைகளை  நினைத்துப்  பாருங்கள். நம் மாவட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக எண்ணற்ற மக்களிடம் இருந்து வாங்கிய கையூட்டை விட மிக அதிகமாக ஒரே ஒப்பந்தத்தில் டில்லி அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பெற்று விடுகின்றனர். இவற்றில் பெரும்பாலான ஊழல்கள் அரசு விதிமுறைகளை தளர்த்துவதற்கும், சட்டத்திற்கு புறம்பாக அரசு சேவைகளை அடைவதற்கும் நடத்தபடுபவைகளே. பெரிய நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமான சட்டங்களை இயற்றுவதற்கும்  ஊழல்களில் ஈடுபடுகின்றன –

உதாரணம் சமிபத்திய அந்நிய முதலீடு சட்ட மசோதா.

அரசிடம் சென்றால் தானே ஊழல் என்று ஒதுங்கி இருந்தாலும் நம்மை தேடிவந்து அதிகாரிகள் அள்ளிச் செல்லும் ஊழல்களும் மலிந்து இருக்கின்றன. சாலையோர  கடைக்கான மாமூல்கள், விற்பனை வரி சோதனைகள் போன்று பல வகைகளில் அதிகாரிகள் தானே வந்து மிரட்டி பணம் பறித்து செல்வதை அன்றாடம் கண்டிருப்பீர்கள். சாலையில் நம் வாகனத்தை நிறுத்தி காவல் துறையினர் வசூலிப்பதும் இவ்வகையிலான ஊழல் தான்.

பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து கையூட்டு வாங்காமல் அரசு செல்வங்களை நேரடியாக கொள்ளை அடிக்கும் ஊழல்களும் சத்தமில்லாமல் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அரசு வாகனத்தை சொந்த பயன்பாட்டிற்கு ஈடுபடுத்தும் சிறு ஊழல்கள் முதல் கோடிக்கணக்கான மதிப்புடைய அரசு நிலங்களை சொந்தமாக்கிக்  கொள்ளும் பெரு ஊழல்கள் வரை பல ஊழல்கள் இவ்வகையில் நடந்து வருகின்றன. செய்யாத பணிகளை செய்ததாக காட்டுவது, இல்லாத பணியாளர்களுக்கு ஊதியம் கொடுத்தது என பல ஊழல்கள் அரசு ஆவணங்களை மாற்றுவதன் மூலம் எளிதாக நடத்தப்படுகின்றன. அரசு கட்டடங்களில் ஏற்படும் தீ விபத்துகள், திருட்டு சம்பவங்கள் பெரும்பாலும் ஊழல்கள்  தொடர்பானவைகளே.

பொதுவாக ஊழல்கள் பணத்திற்காக நடத்தப்பட்டாலும், சில நேரம் பாசம், நட்பு, பெருமைக்காக ஊழல்கள் நடத்தபடுகின்றன. உறவினருக்கு அரசு பணிகள் பெற்றுத்தருவது, நண்பருக்கு அரசு விருது வழங்குவது, தனக்கு தானே பட்டங்கள் கிடைக்கச் செய்வது போன்ற ஊழல்கள் இவ்வகையில் அடங்கும்.

தன் ஆதரவாளர்களுக்கு அரசு பணிகளும் ஒப்பந்தகளும் பெற்று தருவது போன்ற ஊழல்கள் பதவிக்காக நடத்தப்படுகின்றன.

பல ஊழல்கள் உடனடி பலனை எதிர்பாராமல் நீண்ட கால பலனின் அடிப்படையில் நடக்கின்றன. பத்திரிக்கைகளுக்கு அரசு விளம்பரங்கள் வழங்குவது அல்லது வேண்டும் என்று வழங்காமல் நிறுத்துவது போன்ற ஊழல்கள் இவ்வகையில் அடங்கும்.

நம் நாட்டில் சட்டத்திற்கு புறம்பானவைகள் மட்டும் தான் ஊழல்கள் என்று வரையறுக்க முடியாது. சட்டப்படி அனைத்து விதிமுறைகளை பின்பற்றியுமே பல ஊழல்கள் தினம் நடக்கின்றன. வீட்டு வசதி வாரியத்தின் நூற்றுகணக்கான வீடுகள் அரசியல்வாதிகளாலும், உயர் அதிகாரிகளாலும் குறைந்த விலையில் சட்டப்படி கொள்ளை அடிக்கபடுவதை அனைவரும் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றார்கள்.

பல வல்லுனர்கள் பொது மக்கள் நலனிற்கு எதிரானவைகள் அனைத்தும் ஊழல்கள் என்று வரையறுக்கிறார்கள். ஆனால் பல ஊழல்கள் இந்த வரையறைக்குள்ளும் சிக்குவதில்லை. உதாரணத்திற்கு அமெரிக்காவை ஆட்டிப்படைத்த வாட்டர்கேட் (Watergate)  ஊழலால் எந்த பொதுமக்களும் பாதிக்கப்படவில்லை. ஆயினும் அந்த ஊழலால் அமெரிக்க அதிபர் நிக்சன் பதவி விலக வேண்டிவந்தது. இன்றும் உலகெங்கும் நடக்கும் பெரிய ஊழல்களை இதன் நினைவாக கேட் என்று அடைமொழி சேர்த்து அழைக்கிறார்கள் — http://en.wikipedia.org/wiki/List_of_scandals_with_%22-gate%22_suffix.

பல நேரங்களில் சட்டமீறலோ, மக்கள் நலனோ நிர்ணயிப்பதை விட மக்களின் அபிப்பிராயங்களே பல செயல்களை ஊழலா? இல்லையா என்று நிர்ணயிக்கின்றன. ஆனால் மக்களின் அபிப்பிராயங்கள் சரியானதாகவோ நிலையானதாகவோ ஒரே மாதிரியானதாகவோ இருப்பதில்லை. இதை சமிபத்தில் டில்லி மாணவி கற்பழிப்புக் கொலை விவகாரத்தில் கூட தெளிவாகக்  காண முடியும். இந்தியாவில் தினம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழித்துக்  கொலை செய்யபடுகையில், டில்லி மாணவியின் கொலைக்கு மட்டும் மக்கள் கொதித்தெழுந்து நாடாழுமன்றத்தை முடக்கிவிட்டனர். அதே போன்று பல பெரிய ஊழல்களை மக்கள் கண்டுகொள்வதில்லை, ஆனால் சில சிறிய ஊழல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஊடகங்கள் பொறுப்போடு நடந்தாலோ அல்லது மக்கள் அறிவு விழிப்புணர்வு அடைந்தாலோ தான் இந்நிலை மாறும்.

பல நேரங்களில் ஊழல்கள் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகத் தெரிகின்றன. ஆனால் சில நேரங்களில் அவைகள் ஊழல்களா? இல்லையா என்று குழப்பத்தை உருவாக்கும் அளவிற்கு தெளிவற்றிருக்கின்றன.

கீழ்கண்ட செயல்களில் எவற்றை நீங்கள் ஊழல்களாக  காண்கிறீர்கள்?

  1. நாட்டிற்கு பொதுவான  பல திட்டங்களை தன் சொந்த தொகுதியிலே செயல்படுத்துவது
  2. அரசு திட்டங்கள் வருவதை செய்தி வெளியாவதற்கு முன்னரே தெரிந்து கொண்டு சுற்றி உள்ள இடங்களை வாங்கி வைத்து கொள்வது
  3. அரசு பயணங்களின் போது குடும்பத்தினரை அழைத்துச்  செல்வது
  4. தனக்கு பயனற்ற ஆனால் மேலதிகாரியின் நிர்பந்தத்திற்காக தகுதியில்லாத நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்குவது
  5. தான் நேர்மையாக நடந்து கொள்வது, ஆனால் தனது அதிகாரத்திற்கு கீழ் நடக்கும் ஊழல்களை கண்டு கொள்ளாதது
  6. இலவசங்களை உறுதியளித்து வாக்குகள் கேட்பது
  7. அரசியல் தலைவரின் வருகையை முன்னிட்டு சாலைகள் அமைப்பது
  8. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் வீட்டுமனை வழங்குவது
  9. திரைத்துறையினருக்கு வரி சலுகைகள் வழங்குவது
  10. அப்துல் கலாம் டி.ஆர்.டி.ஒ. நிறுவனத்தில் இயக்குனராக பணி புரிகையில் தனது சகோதரர் மகள் திருமணத்திற்கு செல்வதற்கு விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தியது

Working learners who have earned a bachelors degree work https://college-homework-help.org/ in similar occupations

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஊழல் – தொடர் 3 – எது ஊழல்?”

அதிகம் படித்தது