மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஊழல் – தொடர் 4 – அளவில்லாததா ஊழல்?

ஆச்சாரி

Feb 1, 2013

அவர் ஆட்சியில் ஊழல் குறைந்திருந்தது. இவர் ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது. அந்த அதிகாரி இருந்த வரை இந்த அலுவலகத்தில்  ஊழலே இல்லாமல் இருந்தது. இது போன்ற பேச்சுக்களை நாம் அடிக்கடி கேட்டும் பேசியும் வருகிறோம். ஒரு கட்சிகாரர் தங்களது கட்சியின் ஆட்சியில் ஊழல் குறைந்திருக்கின்றது என்பதற்கு ஆயிரம் ஆதராங்களை காட்ட முடியும். அதே ஆட்சியில் ஊழல் மலிந்திருக்கின்றது என்பதை காட்டுவதற்கும் ஆயிரம் ஆதாரங்கள் இருக்கும். இவையாவும் மக்களின் புரிதல்களே அன்றி உண்மை நிலை அன்று.

தெளிவான அளவுகோல் இல்லாது ஊழல் குறைந்திருக்கின்றது அல்லது கூடி இருக்கின்றது என்று எப்படி கூற முடியும். ஊழலை குறைக்க விரும்பும் நாம் அதை சரியாக அளக்க கற்றுக் கொள்வது அவசியமல்லவா.

நடைமுறை வாழ்வில் பெரும்பாலும் நாம் ஊழலை கொடுக்கும் கையூட்டு பணத்தில் தான் அளக்கிறோம். ஓட்டுனர் உரிமம் வாங்க ஆயிரம் ரூபாய், பட்டா மாற்ற பத்தாயிரம் ரூபாய் என்று ஒவ்வொரு அரசு சேவைக்கும் (அரசு சேவை என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு மனசாட்சி உறுத்துகின்றது) கையூட்டு அளவிருக்கின்றது. கிடைக்க வேண்டிய நியாயமான பணிகளுக்கு கையூட்டு பணத்தின் மூலம் ஊழலை அளப்பது சரியாக பொருந்தும். ஆனால்  கையூட்டு கொடுத்து நடத்தப்படும் தவறான ஊழல் செயல்களுக்கு கையூட்டு மட்டுமே அளவாக இயலாது. உதராணத்திற்கு சரக்கு வாகனத்தில் மிக அதிகமான எடை ஏற்றி வருபவர்களிடம் ஆங்காங்கே நிறுத்தி 100 ரூபாய் கையூட்டு பெற்றுக் கொண்டு காவல்துறையினர் அனுமதிக்கின்றனர். அந்த வாகனம் அதிக எடையால் நிலை தடுமாறி எதிர்வரும் வாகனத்தில் மோதி பலர் உயிரிழக்க காரணமாகும் பொழுது  அந்த ஊழலின் மதிப்பு 100 ரூபாய் அல்ல.

இதற்கு தீர்வாக பல அமைப்புகள் ஊழலை அதனால் ஏற்படும் இழப்பை மதிப்பீட்டு அளக்கின்றன. இந்தியாவில் சமீபத்தில் மிக பிரபலமாகி இருக்கும் மத்திய தணிக்கை குழு இம்முறையில் தான் ஊழலை அளக்கின்றது. காவல்துறை, மத்திய புலானய்வுத் துறை போன்று மத்திய தணிக்கை குழுவும் அரசியல் அழுத்தத்தில் சிக்கி தவிக்கும்  ஒரு அமைப்பே. மத்திய தணிக்கை குழுவை மேற்பார்வை பார்க்கும் பொது கணக்கு குழுவின் தலைவர் எதிர்கட்சியை சேர்ந்தவர். ஆகவே மத்திய தணிக்கை குழு முனைப்புடன் ஊழல்களை வெளிக்காட்ட முயலும். அந்த முனைப்பு எந்த அளவிற்கு இருக்கின்றது என்பதை கீழ்கண்ட உதாரணத்தில் காணலாம்.

டில்லி விமான நிலைய விரிவாக்க திட்டத்தில் ஒரு இலட்சத்தி அறுபத்தி மூன்றாயிரம் (1,63,557) கோடி ஊழல் இழப்பு நடந்திருப்பதாக மத்திய தணிக்கை குழு அறிக்கை வெளியிட்டது. இத்திட்டத்தின் படி விமான நிலையம் அமைக்க 4,799.09 ஏக்கர் நிலம் 60 ஆண்டுகள் ஒப்பந்தத்திற்கு  டில்லி இண்டர்நேசனல் விமான நிலைய நிறுவனம் என்ற தனியார்  நிறுவனத்திடம் ஒப்படைக்கப் படுகின்றது. இந்நிலத்திற்கு வாடகையாக ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஆண்டிற்கு நூறு ரூபாய்  என்று ஒப்பந்தமிட்டிருக்கின்றனர். இந்

த  4,799.09 ஏக்கர் நிலத்தில் ஐந்து விழுக்காடு நிலத்தை அந்த நிறுவனம் தனது சொந்த இலாபத்திற்கு பயன் படுத்திக் கொள்ள ஒப்பந்தம் அனுமதிக்கின்றது. அதன்படி அந்நிறுவனம் 239.95 ஏக்கர் நிலத்தில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இந்த ஐந்து விழுக்காடு நில ஒதுக்கீட்டை தான் மத்திய தணிக்கை குழு இழப்பு என்று கூறி இருக்கின்றது. இதில் ஒரு ஏக்கர் நிலத்தில் ஆண்டு வருவாய் 681.63 கோடி ரூபாய் என்று மத்திய தணிக்கை குழு மதிப்பிடுகின்றது. இதன் படி 58 ஆண்டுகளுக்கு (60 ஆண்டு ஒப்பந்தம் – இரு ஆண்டுகள் கழித்துக்கொண்டு மதிப்பிட்டிருக்கின்றனர்) இந்த ஐந்து விழுக்காடு 239.95 ஏக்கர் நிலத்தில் இருந்து 1,63,557 கோடி வருமானம் வர வாய்ப்பு இருப்பதாக மத்திய தணிக்கை குழு மதிப்பிடுகின்றது.ஊருக்கு அப்பால் தூரத்தில் ஒதுக்கப்படும் நிலத்தில் இருந்து ஏக்கருக்கு ஆண்டு வருமானம் 681.63 கோடி ரூபாய் எப்படி சாத்தியமாகும்? இந்த 239.95 ஏக்கர் நிலத்தை கொடுத்தால் மத்திய தணிக்கை குழுவால் 58 ஆண்டுகளில் 1,63,557 கோடி வருமானம் ஈட்ட முடியுமா? இத்திட்டத்தில் ஊழல் நடந்திருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அதற்காக இவ்வாறு மிகைப் படுத்தி கூறுவது சரியாகாது. இங்கு ஊழலுக்கு ஆதரவாக எழுதவில்லை. உண்மைக்கு ஆதரவாக எழுத வேண்டி இருக்கின்றது.இவ்வாறு மிகைப் படுத்துவதால் தற்காலிக பயன்கள் பல கிடைக்கலாம். மக்கள் ஊழலுக்கு எதிராக போராடலாம் அல்லது ஆட்சி மாற்றத்தை கொண்டு வரலாம். ஆனால் நீண்ட காலத்தின் அடிப்படையில் இவ்வாறு மிகைப் படுத்துதல் பொது நலத்திற்கு எதிராக அமையும். இதன் விளைவாக எந்த ஊடகமும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு குறைவான ஊழல்களை வெளியிட ஆர்வம் காட்டுவதில்லை மக்களும் ஐம்பது கோடி ,நூறு கோடி ஊழல்களை எல்லாம் ஊழலாகவே கருதுவதில்லை. இது மிகவும் ஆபத்தான மனநிலை.ஊழல்களை பணத்தால் மட்டுமே அளந்து விட முடியாது. ஊழல்களை மறைக்க அல்லது திசை திருப்ப  கலவரங்களை தூண்டி விடுகின்றார்களே அதில் இழக்கும் விலை மதிப்பில்லா உயிர்களை எப்படி மதிப்பிட முடியும்?

நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்குமே ஊழல்களை அளப்பதற்கு சரியான அளவுகோல்கள் இல்லை. உலக வங்கியும், ட்ரான்பரன்சி இண்டர்நேசனல் என்ற அமைப்பும் ஊழல்களை மதிப்பிட பல அளவுகோல்களை வெளியிட்டு வருகின்றன. அவற்றில்  ட்ரான்பரன்சி இண்டர்நேசனல் அமைப்பின் ஊழல் உணர்வு குறியீடு (CPI) மிகவும் பிரபலமானது. வெவ்வேறு நிறுவனங்கள் பல தரப்பட்ட மக்களிடம் நடத்தும் பதினான்கு கருத்துக் கணிப்புகளை பயன்படுத்தி இந்த ஊழல் உணர்வு குறியீடை மதிப்பிடுகின்றனர். இந்த குறியீடு சராசரி அளவாகத்தான் பயன்படுமே ஒழிய ஊழலின் தீவிரத்தை உணர்த்த பயன்படாது. (சராசரி அளவுகளின் பலவீனத்தை கூற “சராசரியாக ஆறு அங்குலம் ஆழம் உள்ள ஓடையில் உயரிழந்தவர்” என்ற கிண்டல் சொற்றொடரை பயன்படுத்துவார்கள்.)

இந்த ஊழல் உணர்வு குறியீட்டின் மிகப் பெரிய பலவீனம் இது முழுக்க வியாபார அடிப்படையிலே கணிக்கப் படுவது. ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கு இருக்கும் சூழ்நிலைகள், அதில் நடக்கும் ஊழல்களை மதிப்பிடத் தான் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் இது போன்ற குறியீடுகளை வெளியிடுகின்றன. அரசு மருத்துவமனையில் நடக்கும் ஊழலால் இறக்கும் பச்சிளங் குழந்தைகளை இந்த குறியீடுகளால் காண முடியாது.

இத்தொடரின் முதல் பகுதியில் இக்குறியீட்டை பயன்படுத்தி தான் நம் நாட்டின் நிலையை ஒப்பிட்டிருக்கின்றோம். வேறு என்ன செய்வது ஆலை இல்லா ஊரில் இழுப்பைப் பூ தானே சர்க்கரை.

இத்தனை ஊனங்களுடைய அளவீடுகளை வைத்து கொண்டு ஊழலை ஒழிப்பது எளிதான காரியமல்ல. ஊழல் ஒழிப்பில் ஆர்வமுள்ள அறிஞர்கள் சரியான முறையில் ஊழல்களை அளவிடவும் ஒப்பிடவும் தேவையான குறியீடுகளை கண்டறிய வேண்டும். ஒவ்வொரு மாவட்ட அளவிலும் ஒவ்வொரு துறை அளவிலும் துல்லியமாக ஊழல்கள் அளக்கபட வேண்டும். இல்லையெனில் ஊழல் ஒழிப்பு செயல்களால் ஊழல்கள் குறைகின்றதா எனபதை கூட கண்டறிய முடியாது.

மேலாண்மை மாணவர்களுக்கு முதலில் கூறப்படுவதே, அளக்க முடியாத எதையும் மேலாண்மை செய்ய முடியாது என்பதே. அது ஊழல் ஒழிப்பிற்கும் அப்படியே பொருந்தும்.

Internships, externships, and work-study programs that connect students use the weblink to real job experiences as well as professional contacts are the new norm for college-goers

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “ஊழல் – தொடர் 4 – அளவில்லாததா ஊழல்?”
  1. Deepan says:

    அருமை

அதிகம் படித்தது