மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எங்கே போகிறது இந்திய அரசியல்?

ஆச்சாரி

Sep 1, 2012

கடந்த ஒரு வருடமாக இந்திய அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒன்று புரியும். இந்திய அரசியல் ஒரு பெரிய மாற்றத்திற்கு தயாராகிறது. இந்தியா என்னும் நாடு அறுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட பின்னர் இந்திய அரசியல் பல பெரிய மாற்றங்களை சந்தித்து இருக்கிறது. காங்கிரஸ் என்ற ஒரே கட்சி நாடு முழுவதும் ஆண்ட நிலை மாறியது, அவசரகால பிரகடனம், போபர்ஸ் ஊழல் பிரச்சினை , பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சி, இந்தியாவில் சந்தைப் பொருளாதார அறிமுகம் போன்றவை இந்திய அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கின. ஆனால் அந்த மாற்றங்களுக்கும் இப்போதுள்ள மாற்றங்களுக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. இது வரை எத்தனை மாற்றங்கள் நடந்தாலும் இந்தியாவின் அரசியல் என்பது இந்தியா முழுவதற்கும் ஒன்றாகத் தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால் தற்போது நடந்துள்ள பெரிய மாற்றம் இந்திய அரசியல் ஆனது மாநிலங்கள் அளவில் நடக்க ஆரம்பித்து இருப்பது ஆகும். இது வருங்காலத்தில் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது.

தமிழ்நாட்டில் பற்றி எரியும் மீனவர் பிரச்சினை, ஈழப் பிரச்சினை போன்றவை சென்னையை தாண்டிப் போய்ச் சேருவதில்லை. போய்ச் சேர்ந்தாலும் இந்தியாவின் ஒட்டு மொத்த நிலைப்பாடு தமிழகத்தின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிராக இருக்கிறது. அஸ்ஸாமில் என்ன நடக்கிறது என்றே இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு தெரிவதில்லை. பஞ்சாபில் முன்னாள் முதல்வரைக் கொன்ற கொலையாளிக்கு பஞ்சாப் மக்களிடம் கணிசமான ஆதரவு இருக்கிறது என்றால், ஒரு பகுதி இந்தியா ஏன் தூக்கில் போடவில்லை என கொந்தளிக்கிறது. ஹிந்தியை ஆட்சி மொழியாக்க ஒரு பகுதி இந்தியா கனவு கண்டால் பெரும்பாலான இந்தியா ஹிந்தி திணிப்பை அறவே வெறுக்கிறது. இவை எல்லாமே இந்திய அரசியல் மாநில அளவில் கூறு போடப்படுவதை தெளிவாக உணர்த்துகின்றன.

இந்த மாற்றம் எப்படி வந்தது?. இந்த மாற்றம் இப்போது தான் பெரிதாக வெளியே தெரிகிறது என்றாலும் இதற்கான விதை சுகந்திரம் அடையும் போதே போடப்பட்டு விட்டது. நாடு சுகந்திரம் அடைந்தவுடன் இந்தியா என்பது பல்வேறு இன மக்களின் நாடு என்பதை மறந்து விட்டு பெரும்பாலான அதிகாரங்கள் மத்தியில் குவியும்படி சட்டங்கள் இயற்றப்பட்டன. ஹிந்தி மொழி என்பது இந்தியாவின் அதிகார மொழியாக அடையாளப்படுத்தப்பட்டது.திட்டக்கமிஷன் எனப்படும் சட்ட விரோத அமைப்பு ஏற்படுத்தப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்கள் ஒரு அதிகாரியின் கீழ் நிதிக்காக பிச்சை எடுக்கும் நிலை உருவாகியது. இந்தியாவின் அரசியல் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததாலும், இந்தியாவின் அரசியல் முழுவதுமாக காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்ததாலும் இதை செய்வதற்கு அவர்கள் அதிகமாக சிரமப்பட வேண்டி இருக்கவில்லை.

தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் , பஞ்சாப் ,காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் நடந்த/ நடக்கின்ற போராட்டங்கள் போன்றவை இந்தியாவில் மாநில உணர்வுகள் வலுப்பெற்று வந்ததின் ஆரம்ப புள்ளிகள். இந்த போராட்டங்களை மத்திய அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கியது. அதே நேரம் அதிகாரங்கள் மத்தியில் மேலும் குவியும் வண்ணம் சட்டங்களை இயற்றியது. இது மத்திய அரசு தற்காலிகமாக பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்து விட்டது போல தோற்றம் கொடுத்தாலும் இது உண்மையில் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியது.

ஆரம்பத்தில் இந்தியாவின் ஹிந்தி திணிப்பும், மத்தியில் அதிகாரத்தை குவிக்கும் கொள்கையும் இந்தியாவை ஒரே நாடாக வைத்திருக்க உதவும் என்ற பொய்யான காரணத்தின் மூலம் நியாயப்படுத்தப்பட்டன.ஆனால் உண்மையில் இந்தக் கொள்கைகள் தான் இந்தியாவின் பல பகுதிகள் இந்தியாவையே வெறுக்கும் நிலைக்கு தள்ளி விட்டன. ஆனால் மத்திய அரசு அதை கவனத்தில் எடுக்கத் தவறியது. மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பிரித்து கொடுப்பதற்கு பதிலாக மேலும் அதிகாரங்களை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் மொழி , கல்வி போன்றவற்றை மட்டும் குறி வைத்த மத்திய அரசு இன்று மாநிலங்களின் கனிம வளங்களை குறி வைத்து சட்டங்களை இயற்றுகிறது. மாநிலங்களின் கனிம, நில, நீர் ,கடற்கரை வளங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும்படி சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் பெரும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு போட்டியில்லாத ஒரே கடையாக இருக்க விரும்புகிறது. மண்ணின் மைந்தர்களான ஆதிவாசி மக்களை “மாவோயிஸ்ட்களாக” மாற்றிய பெருமைக்கும் மத்திய அரசின் இந்த கனிமக் கொள்கையே முக்கிய காரணம்.

மத்தியில் அதிகாரத்தை குவித்த தலைவர்கள் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ளத் தவறினர். மத்திய அரசின் தவறான கொள்கைகளால் அன்னியப்பட்ட மாநில மக்கள் தேசிய கட்சிகள் தங்களுக்கு எந்தத் தீர்வையும் தராது என்ற முடிவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்து விட்டனர். இந்த நம்பிக்கையின்மை மாநில கட்சிகளாக அரசியல் உருவகம் பெற்றது. தேசியக் கட்சிகளில் கூட மாநில தலைவர்கள் அதிகமான செல்வாக்கு பெற்றவர்களாக மாறினர். இது போன்ற சூழ்நிலைகளால் மாநில கட்சிகளின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்தியாவில் தனிப்பட்ட எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையை உருவாக்கி இருக்கிறது. மத்தியில் மாநில கட்சிகளின் செல்வாக்கை காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. அரசுகள் இது வரை மாநிலத் தலைவர்களின் சுயநலத்தை பயன்படுத்தி கையாண்டன. இந்தத் திட்டப்படி மாநில தலைவர்களுக்கு ஓரளவு நிதி தரும் அமைச்சகங்களை தருவது. அவர்கள் செய்யும் ஊழலை கண்டு கொள்ளாமல் இருப்பது. அதே நேரம் தங்களின் கொள்கை முடிவுகளில் இந்த மாநில கட்சிகள் தலையிடாமல் பார்த்துக் கொள்வது. ஆனால் இது போல இனி செய்ய முடியுமா என்பது சந்தேகமே. மாநிலங்கள் இணைந்து மத்தியில் கொள்கை முடிவுகளை உருவாக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

இந்த மாற்றம் மத்தியில் அதிகாரத்தை பயன்படுத்தி வந்த மாநிலங்களை வெகுவாக பாதித்து இருக்கிறது. இனி வரும் காலங்களில் இந்த மாநிலங்கள் ( பீகார், உத்திர பிரதேசம் , கேரளா போன்றவை ) மத்தியில் பழைய முறையை கொண்டு வர முயற்சி செய்யும். அதே நேரம் மற்ற மாநிலங்கள் ( தமிழ்நாடு, ஒரிசா , பஞ்சாப் போன்றவை ) இந்தியாவில் மாநிலங்களின் அதிகாரத்தை அதிகரிக்க முயற்சி செய்யும். சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் பரம எதிரிகளான மாயாவதியும், முலாயம் சிங்கும் நிதீஷ் குமாரும் ஒரே வேட்பாளரை ஆதரித்தது இந்தியாவின் அரசியல் தேசிய கட்சிகளைத் தூக்கி நிறுத்த மாநில கட்சிகள் செயல்படுவதற்கு ஒரு உதாரணம். அதே நேரம் சங்மாவை தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ஒரிசா முதல்வர் பட்நாயக்கும் அறிமுகம் செய்தது மாநில கட்சிகளின் அதிகரித்து வரும் செல்வாக்கிற்கு ஒரு உதாரணம்.

இனி வரும் காலத்தில் மாநில கட்சிகளின் செல்வாக்கு மேலும் வளரும். இந்திய அரசியல் என்பது படிப்படியாக மாநில அளவில் முழுமையாக மாறும். மாநில கட்சிகள் இதை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். முக்கியமாக அனைத்து மாநில கட்சிகளும் இணைந்து இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். இந்தியா என்பது இயற்கையில் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு. இது இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட வேண்டும். பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை போன்ற ஒரு சில விடயங்களைத் தவிர அனைத்து அதிகாரங்களும் மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டும். ஹிந்திக்கு அளிக்கப்பட சிறப்பு அந்தஸ்து திரும்பிப் பெறப்பட வேண்டும். திட்டக் குழு என்பது முற்றிலுமாக கலைக்கப்பட வேண்டும். இந்தியா இனியும் அதிகாரங்களை மத்தியில் குவிக்க முற்பட்டால் இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குரியதாகி விடும்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “எங்கே போகிறது இந்திய அரசியல்?”
  1. பால்பாண்டி says:

    மத்திய அரசுஇப்படிசெய்தால்ரஷ்யாவைபோல்இந்தியாசிதறும்

  2. MURUGANANDAM. says:

    Well said. Gradually India is being dragged to several bifurcations, unless or otherwise, something is done to the national integrity.

அதிகம் படித்தது