ஐ.நா சபையில் கவலையில்லாக் காளையர் கழகம்
ஆச்சாரிNov 15, 2012
ஜெனீவாவில் அந்தச் சிறப்பு விமானம் வந்து இறங்கியது. உள்ளே இருந்து வேட்டி கட்டிய மூன்று தமிழர்கள் இறங்கி குளிரில் நடுங்கியபடி ஐ.நா சபை கட்டிடடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். வேறு யாரோ என்று நினைத்து விடாதீர்கள். நமது கவலையில்லாக் காளையர் கழக நண்பர்கள் தான் ஜெனீவாவிற்கு பான்-கி- மூனின் சிறப்பு அழைப்பின் பேரின் வந்திருக்கிறார்கள். ஐ.நா சபை ஈழ மக்களைக் காக்கத் தவறியது என்ற அறிக்கையை ஒட்டி தமிழகத்தில் இருக்கும் நிலையை அறியவே அவர்களுக்கு இந்த அழைப்பு விடப்பட்டு இருந்தது.
மூவரும் ஐ.நா சபை கட்டிடத்தின் மிக ரகசிய அறை ஒன்றினுள் அழைத்துச் செல்லப்பட்டனர். உள்ளே கவலை நிரம்பிய முகங்களுடன் பான்-கி-மூனும் , விஜய் நம்பியாரும் நண்பர்களை வரவேற்றனர்.
பான்-கி-மூன்: வாங்க தமிழர்களே. ஐ.நா சபை பத்தி தமிழ்நாட்டில ஏதாவது பேசறாங்களா?. இரண்டு லட்சம் தமிழர்கள் சாகும் போது நாங்க ஒன்னும் பண்ணவேயில்லைன்னு எவனோ உண்மையை வெளியே விட்டுட்டான்.
விஜய் நம்பியார்: வேற யாரும் இல்லை. நம்ம ஐ.நா நிபுணர்கள் தான் இந்த அறிக்கையை விட்டது. நான் அப்பவே சொன்னேன். இந்தியாவில இருந்து ரெண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகளை கூட்டிட்டு வந்து நம்ம நினச்ச படி ஒரு அறிக்கை வாங்கலாம்னு. இப்போ பார்த்தீங்களா?.
பார்த்தசாரதி: டாஸ்மாக் இருக்க வரைக்கும் எட்டுக் கோடித் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படாதீங்க.
பான்-கி-மூன்: என்னது எட்டுக் கோடித் தமிழர்களா?. என்ன மிஸ்டர் நம்பியார்?. தமிழ்நாட்டில வெறும் எட்டுத் தமிழர்கள் தான் இருக்காங்கன்னு எனக்குத் தகவல் கொடுத்தீங்க?.
வேலு: எட்டுத் தமிழர்களா?. ஒரு வாரத்தில சிங்கள கப்பற்படை சுட்டுக் கொல்ற எண்ணிக்கையே அதுக்கு மேல இருக்குமே.
விஜய் நம்பியார்: ஒரு வார்த்தை தவறிடுச்சு மூன். தப்பா நினைக்காதீங்க. ஆயிரம் பொய் சொல்லி ஒரு லட்சம் தமிழர்களை கொல்லலாம் அப்படின்னு ஐ.நா சபை விதியே நீங்க போட்டது தானே.
பான்-கி-மூன்: என் மேல பழி போடாதீங்க மிஸ்டர்.நம்பியார். இந்தியா, அமெரிக்கா , நோர்வே எல்லோரும் சேர்ந்து தானே அப்படி ஒரு விதி போட்டோம். சரி அத விடுங்க. எப்படியோ இரண்டு லட்சம் தமிழர்களை கொன்னுட்டோம். இப்போ எப்படி அதை மறைக்கிறதுன்னு மட்டும் பேசுங்க.
மணி: அடப் பாவிகளா?. எங்க உயிர் உங்களுக்கு அவ்வளவு மலிவா போயிடுச்சா?.
வேலு: மணி! அடக்கி வாசி. நம்ம உயிருக்கு இவ்வளவு மதிப்பு இருக்கறதே அதிகம். சொல்லுங்க பான்-கி-மூன் நாங்க எப்படி உதவி செய்ய?.
பான்-கி-மூன்: நாங்க இரண்டு லட்சம் தமிழர்கள் சாக உடந்தையா இருந்தது தமிழ்நாட்டில வெளியே தெரியக் கூடாது.
பார்த்தசாரதி: நீங்க தமிழ்நாட்ட பத்தி ஏன் இவ்வளவு கவலைப் படறீங்கன்னு தெரியல. எங்களுக்கு எல்லாம் சொரணை போய் ரொம்ப நாள் ஆயிடுச்சு.
நம்பியார்: அப்படி எல்லாம் விட முடியாது பார்த்தசாரதி. இப்படித் தான் நாங்க எகிப்து நாட்டப் பத்தியும் தப்புக் கணக்கு போட்டோம். அங்க பார்த்தீங்களா?.
வேலு: அப்போ நான் ஒரு வழி சொல்றேன். நடந்த எல்லா சாவுகளுக்கும் காரணம் டெங்கு காய்ச்சல் அப்படின்னு சொல்லிடலாம். இப்போ தமிழ்நாட்டில இருக்க டெங்கு பயத்தில என்ன சொன்னாலும் நம்புவாங்க மக்கள்.
மணி: தமிழ் உணர்வாளர்கள் கேள்வி கேட்பாங்களே?.
பார்த்தசாரதி: அவங்கள பத்தி கண்டுக்காதீங்க மூன். தமிழர்கள் தான் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னாடி ஏசுநாதரை சிலுவையில் போட்டாங்கன்னு ஏதாவது சொல்லி அதனால தான் இரண்டு லட்சம் தமிழர்களை நாங்க கொன்னுட்டோம்னு சொல்லலாம். மீறிப் பேசினால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு இரண்டு லட்சம் தமிழர்கள் சாவது அவசியம்னு சொல்லலாம். தமிழர்களுக்கு நாட்டுப் பற்று அதிகம். ஒரு பய கேள்வி கேட்க மாட்டான்.
பான்-கி-மூன்: இவ்வளவு முட்டாள் ஆகவா இருப்பாங்க?.
வேலு: நீங்க வேற. அவனுங்க நாட்டுப்பற்றுக்கு அளவே இல்லை.
பான்-கி-மூன்: அப்போ சரி. நான் கூட ரொம்ப பயந்திட்டேன்.
நம்பியார்: நாங்க இருக்க வரைக்கும் நீங்க எதப் பத்தியும் கவலைப்பட வேணாம் மிஸ்டர் மூன் .
பான்-கி-மூன்: நன்றி நம்பியார். சரி இவங்கள கூட்டிட்டு போய் சுத்திக் காட்டுங்க. இனி நான் நிம்மதியா தூங்குவேன். கூடங்குளத்துக்கும் கூட ஒரு கூட்டம் போடணும். இந்தியா அங்க சீக்கிரமே சமாதான பேச்சு வார்த்தை நடத்த போறாங்கன்னு ஒரு தகவல் வந்தது.
நம்பியார்: நன்றி மூன். நான் பாத்துக்கறேன்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஐ.நா சபையில் கவலையில்லாக் காளையர் கழகம்”