மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஒலிம்பிக் – மாற்றம் செய்தால் (தங்கப்) பதக்கம் நிச்சயம்

ஆச்சாரி

Sep 1, 2012

லண்டன் ஒலிம்பிக்  போட்டிகள் முடிந்துவிட்டன. எதிர்பார்த்தத்தை விட இந்தியா கூடுதல் பதக்கங்கள் பெற்றுள்ளது மகிழ்ச்சிகரமான விஷயம். ஆனால், மாபெரும் தேசத்துக்கு இது நிச்சயம் பெருமையில்லை.

தினமும் பட்டினி. முழு சாப்பாடு என்பதே கனவுதான் என்ற நிலையில் உள்ள ஆப்ரிக்க நாடுகள் உள்ள ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளன. ஆசியாவில் மிகச் சிறிய நாடுகளான தென் கொரியா, தாய்லாந்து, பெல்ஜியம் உட்பட பல நாடுகள் பதக்கங்களை வென்று இந்தியாவை பல இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. ஆனால், நாமோ தங்கப்பதக்கம் கூட இல்லை.6 பதக்கங்களை வென்று விட்டோம் என்று மகிழ்ச்சியடைகிறோம்.

இதற்கு என்ன காரணம்? நம்மிடம் திறமையில்லையா? அதற்கான வசதிகள் இல்லையா? பின் ஏன் இந்த நிலைமை?

கால்பந்து என்பது நம் ரத்தத்தில் ஊறிய விளையாட்டு. 5 வயது குழந்தை கூட பந்தை காலில் எட்டி உதைத்து விடும். ஆனால், ஆசிய அளவில் கூட நம்மால் ஒரு சிறந்த அணியை உருவாக்க முடியவில்லை. ஏனெனில் விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகள் புகுந்து கொண்டு செய்யும் அத்துமீறல்கள்தான் இதற்கு காரணம்.   எல்லா விளையாட்டுகளுக்கும் நம் நாட்டில் சங்கங்கள் உள்ளன. ஆனால், இந்த சங்கத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு அந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று கூட தெரியாது. அதை வைத்து எப்படி சம்பாதிக்கலாம் என்று மட்டும் நன்கு தெரிகிறது.

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக 25 ஆண்டுக்கு மேலாக சுரேஷ் கல்மாடி இருந்து வருகிறார். இவருக்கு தெரிந்தது என்ன? கிரிக்கெட்டால் மற்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் போய்விட்டது என்று சொல்ல மட்டும் தெரியும். ஆனால், கிரிக்கெட்டை போல் மற்ற விளையாட்டுக்களையும் முக்கியத்துவம பெற வைக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுத்தது இல்லை. ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போது அந்த நாட்டுக்கு அரசு செலவில் செல்வார். நன்கு சுற்றி பார்ப்பார். இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டியை கூட நேரில் பார்க்க மாட்டார். அங்கு நடக்கும் விருந்துகளில் கலந்து கொண்டு விட்டு தாயகம் திரும்பிவிடுவார். சுரேஷ் கல்மாடி மட்டுமல்ல. ஒலிம்பிக் போட்டியை காண வீரர்களுடன் செல்லும் இந்திய பிரதிநிதிகள் அத்தனை பேருக்கும் இதுதான் வழக்கம்.

அது மட்டுமின்றி, விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள், சலுகைகளை அனுபவிப்பதோடு பல முறைகேடுகளிலும் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக, திறமையான வீரர்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை. வளரும் வீரர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை.  இதற்கு சரியான உதாரணம் இந்திய ஹாக்கி.

ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கங்களை வென்ற அணி, இப்போது, ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இதை விட வெட்கக்கேடு வேறு தேவையில்லை. இந்திய ஹாக்கியை நிர்வகிக்கும் இரண்டு சங்கங்களிடையே கடும் போட்டி. ஹாக்கியை முன்னேற்றுவதில் என்று நினைத்துவிட வேண்டும். பணத்தை எப்படி சுருட்டலாம் என்பதில்தான் போட்டி. தயான் சந்த் போன்ற வீரர்கள், காலில் காலணி (ஷு) கூட அணியாமல் விளையாடி வெற்றியை தந்தனர். ஆனால் இன்று இந்த நிர்வாகிகள் மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டனர். கடந்த ஆண்டு உலக ஹாக்கி தொடர் போட்டி நடந்தது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி போல் இது நடத்தப்பட்டது. ஆனால், இதில் விளையாடினால், இந்திய அணிக்கு தேர்வு செய்யமாட்டோம் என்று 2 சங்கங்களும் அறிவித்தன. விளைவு? திறமையான வீரர்களை கண்டுபிடிக்க முடியாமல் போனது.

ஒலிம்பிக்கில் இந்தியா சாதிக்கவில்லையே என்று எல்லா இந்தியர்களுக்கும் வருத்தம் இருக்கிறது. ஆனால், வருத்தமும் வேதனையும் இருக்க வேண்டிய விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளுக்கு  அவை சிறிதும் இல்லை என்பதுதான் உண்மை. இவர்களா, விளையாட்டை மேம்படுத்த போகிறார்கள்?
ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டி முடிந்தவுடன், அடுத்த போட்டியில் கூடுதல் பதக்கம் பெறுவோம் என்று மார்தட்டி கூறுவதுடன் அவர்கள் பணி முடிந்துவிட்டது. கடைசி நேரத்தில் சங்கரா சங்கரா என்று சொல்வது போல், 4வது வருட இறுதியில், அதாவது ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு ஓரு மாதத்துக்கு முன்தான் அணியையே தேர்வு செய்வர். அதிலும் ஆயிரம் முறைகேடுகள்.

ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்க என்ன செய்ய வேண்டும்? முதலில் விளையாட்டு அமைப்புகளில் இடம் பெற்றுள்ள அரசியல்வாதிகளை விரட்ட வேண்டும். அரசியல்வாதிகள் யாரும் விளையாட்டு அமைப்புகளில் இடம் பெற கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும். அத்துடன், சம்பந்தப்பட்ட விளையாட்டு வீரர்களே அந்த அமைப்புகளின் நிர்வாகிகளாக இருக்க வேண்டும். விளையாட்டு சங்கங்களை  மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். அத்துடன் விளையாட்டுகளுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை சம்பந்தப்பட்ட சங்கங்கள் மேம்படுத்த வேண்டும்.

நம் நாட்டு குழந்தைகளிடம் பிறவியிலேயே குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகிய திறமைகள் உள்ளன. இவற்றை ஊக்கு விக்காததுதான் குறை.

நம் நாட்டின் தெருக்களில்  பல உசேன் போல்ட்கள் உள்ளனர். அவர்களை தேடி கண்டுபிடித்து திறமையை வளர்க்க வேண்டும். விளையாட்டில் திறமை உள்ளவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

2016ம் ஆண்டு ஒலிம்பிக் பிரேசிலில் நடக்க உள்ளது. அதற்கு நாம் இப்போதே தயாராக வேண்டும். திறமையான வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து, தீவிர பயற்சியளிக்கப்பட வேண்டும். சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஒலிம்பிக், ஆசிய, காமன்ªவெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றால் அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பரிசுகளை வாரி வழங்குகின்றன. ஆனால், வளர்ந்து வரும் வீரர்களை கண்டுகொள்வதில்லை.

இதனால், திறமை இருந்தும், வேறு பாதைக்கு மாற வேண்டிய அவசியம் இளம் வீரர்களுக்கு ஏற்படுகிறது. இளம் வீரர்களை ஊக்குவித்து அவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தால் 2016 ஒலிம்பிக்கில் நாம் பதக்கங்களை வெல்வது நிச்சயம். இவற்றை செய்யாமல் பதக்க பட்டியலில்  இந்தியா முதல் 10 இடங்களை பிடிக்க வேண்டும் என்று விரும்புவது, கொம்புத்தேனுக்கு முடவன் ஆசைப்பட்ட கதைதான்.
விளையாட்டுத்துறை தேவையான மாற்றங்களை உடனே செய்ய வேண்டும். இல்லாவிடில் பிரேசில் ஒலிம்பிக்கில் லண்டனை விட மோசமான இடத்தை இந்தியா பிடித்தால் வியப்பு இல்லை.

Released in 2013, hinge has grown in popularity http://trackingapps.org with 500,000 current members

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஒலிம்பிக் – மாற்றம் செய்தால் (தங்கப்) பதக்கம் நிச்சயம்”

அதிகம் படித்தது