ஒளவையார் பாடலில் சித்த வைத்திய குறிப்பு
ஆச்சாரிFeb 8, 2014
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக் கொண்டு
தும்பார் “திருமேனித் தும்பிக்கை யான்” பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.
-ஒளவையார்
விளக்கம்:
துப்பு ஆர் திருமேனி – பவளம் போன்ற சிவந்த உடலையும் தும்பிக்கையான் பாதம் – தும்பிக்கையையும் உடைய விநாயகப் பெருமானது திருவடிகளை, பூக்கொண்டு தப்பாமற் சார்வார் தமக்கு – நாள் தோறும் அடைந்து தவறாது மலரிட்டு வணங்கி வருவோருக்கு, நல்ல வாக்குண்டாம் – சிறந்த பேச்சு வன்மை உண்டாகும், நல்ல மனம் உண்டாம் – உயர்ந்த மனம் உண்டாகும், மாமலராள் நோக்குண்டாம் – சிறந்த செந்தாமரைப் பூவில் வீற்றிருக்கும் மகாலட்சுமியின் அருட்பார்வை கிட்டும், மேனி நுடங்காது – அவர்களுடைய உடல் பிணியால் வாட்டமடையாது. (துப்பு- பவளம்) (நுடங்குதல் – வாடி வதங்குதல்)
மேற்கண்ட இந்த ஒளவையாரின் பாடலுக்கு “திருமேனி தும்பிக்கையான்” என்ற சொல்லுக்கு விநாயகப் பெருமான் துணை என்று பொருள் கொள்வது வழக்கத்தில் உள்ளது.
ஆனால் பண்டைய தமிழ் வைத்திய முறையில் “திருமேனி தும்பிக்கையான்” என்ற சொற்றொடருக்கு இப்படியும் ஒரு விளக்கம் சொல்லுகிறார்கள்.
திருமேனி என்பது குப்பைமேனி என்ற மருத்துவபயனுள்ள செடியாகும். தும்பிக்கையான் என்பதை தும்பை கையான் என்று பிரித்தாளுகிறார்கள். தும்பை என்பது நாம் சாதாரணமாக பார்க்கும் தும்பைப்பூவாகும். இதற்கு துரோண புஷ்பம் என்று வடமொழி பெயர் உண்டு. கையான் என்பது சொல் வழக்கில் கையாந்த கரை என்று சொல்லப்படும் கரிசிலாங்கண்ணி ஆகும் இவை மூன்றும் மருந்தாக முறையோடு உட்கொள்ளப்படும்பொழுது வாக்கில் சுத்தம், தெளிவான மனம்,கோளாறு இல்லாத கண் பார்வை கிடைக்கும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
இப்படி நாம் பழந்தமிழ் செய்யுள்கள் ஒவ்வொன்றும் ஆய்வு செய்தால் நல்ல பல நலவாழ்வு குறிப்புகளை பெறலாம்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
wonderful is the final word
regards;
s.kannan
இந்த பகுப்பு எவ்வளவு செயல் முறைக்குகந்தது என்பதே உண்மையில் கண்டறியப்பட வேண்டியது. பொதுவாக குப்பைமேனி உட்கொள்ளும் மருந்தாவதில்லை. பொதுவாக குப்பைமேனி உட்கொள்ளும் மருந்தாவதில்லை. நிகழ் முனைவோர் திறம் இங்கு தேவை, நன்றி
- குணந்தரா
குப்பைமேனி வேர் சிறுநீரகக்கல் பிரச்னைகு உட்கொள்ளும் மருந்து
ஜெயா சுந்தரம் அவர்களின் நோக்கு எனக்குப் புதுமையாகப் படுகிறது. மிக அருமை இது போன்று எல்லாப் பாடல்களுக்கும் அவர் உரை எழுதி, வலைத்தளத்தில் சேர்க்கலாமே!நன்றி சிறகு!
அன்புடன்
காளியப்பன்.எ.