மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கசாப்புக் கடைக்காரரிடம் வைக்கப்படும் கருணை மனுக்கள்

ஆச்சாரி

Dec 15, 2012

இந்தியா என்றொரு நாடு. அதில் இப்போது மட்டுமல்ல, அந்த நாடு உருவாக்கப்பட்ட நாளில் இருந்தே கற்பனையாகவும் கண்டிப்பாகவும் வலியுறுத்தப்படுவது “தேசிய ஒருமைப்பாடு”. ஆம், இயலாத ஒரு தேசியத்தைக் கட்டிக்காக்க, ஒரு பொது எதிரியினை முன் வைத்து மொழியால் வேறுபட்ட மக்கள் சமுதாயத்தை, மதத்தால் ஒன்றிணைத்து ( அதனையே வேறுபடுத்தவும் பயன்படுத்தி ) இன்றுவரை ஒருமைப்பாடு என்ற கூப்பாடு செய்துகொண்டு, இதில் ஒவ்வாத, இசையாத கருத்தியல் கொண்டவர்களை மோட்ச பரிபாலனம் செய்யும் கசாப்புக் கடைக்காரர்-  களிடம்தான் நாம் இன்று கருணை மனு விண்ணப்பம் செய்யும் நிலையில் உள்ளோம்.

கருணை மனு 1. :- தில்ஷன் என்ற பத்துவயது நிறைவு பெற்ற ( தீவிரவாதியைக் கண்டதும் சுட்டு ) மாமரத்தில் கல்லெறிந்து விளையாடும் சிறுவனை, ஒருமைப்பாட்டு தேசியம் கண்டதும் சுட வைத்து, நாட்டைக் காப்பாற்றிய அருஞ்செயலுக்காக, பிடிக்கப்பட்ட ( ஜோடிக்கப்பட்ட ) ராணுவ வீரரை, அவர் உறவுகளுக்கோ, குடும்பத்தினருக்கோ அறிவிக்காமல் ரகசியமாய் தூக்கேற்றாதீர்கள் என்று கோரப்படும் மனுவல்ல இது. மரண தண்டனையை முற்றிலுமாய் ஒழித்துவிடுங்கள் என்பதுதான் இந்த மனுவின் சாரம். தில்ஷன் என்ற பத்து வயது நிரம்பிய மீனவச் சிறுவன், மீனவர்களின் வாழ்வுரிமையுள்ள மண்ணிலேயே சுடப்பட்டதை ( அந்த ராணுவ முகாமும் மீனவர்களின் வாழ்வுரிமை கொண்ட இடம்தான்) தமிழர்கள் மறந்திருக்கலாம் ( அது தமிழனுக்கு இயல்பானதே !!!) ஆனால் துப்பாக்கி முனையில் நாட்டைக் காப்பவர்கள் மறக்கமாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும் என்னதான் சமஸ்கிருதப்பெயர்கள் வைத்திருந்தாலும் தமிழர்கள்,தமிழர்கள் தான் என்று. (ஒரே ஆறுதல், ராணுவத்தை மீறி, தேசப்பணி செய்து சிறுவனைச் சுட்டவரை ராவோடு ராவாக தள்ளுபடி செய்து தூக்கிலேற்ற மாட்டார்கள் என்பதுதான்.) நாமும் நம்புகிறோம்.

கருணை மனு 2. :- பாலியல் வன்கொடுமை, தொடர்ச்சியாக பெண்கள் கொல்லப்பட்டு உடல்கள் அறுக்கப்பட்டு தூக்கிலிடப்பட இருந்த முப்பதிற்கும் மேற்பட்ட, குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்ட குற்றவாளிகளைப் பெருந்தன்மையுடன் விடுவித்த பிரதிபா பாட்டீல் அம்மையார் அவர்களின் கருணையுள்ளத்தை (!?!?) உதாசினப்படுத்தி, ( பிரதீபா அம்மையார் பதவியில் இருந்தபோது கருணையுடன் வாழ்வளித்த அவர்களையும் ரகசியமாக நீதி நிலை நாட்டும் பொருட்டு ) உற்றார் உறவினர்களுக்குத் தெரியாமல், உள்துறையின் ரகசிய அறையிலேயே தூக்கேற்றிப் புதைத்துவிடாமல் இருப்பதற்கே இந்த இரண்டாவது மனு. (பிரதிபா அம்மையார், பேரறிவாளன்,சாந்தன்,முருகன் என்ற இருட்டறை விசாரணையில் கருவறுக்கக் குறிக்கப்பட்ட தமிழர்களின் மனுக்களை நிராகரித்தவர் என்பதும், இது குறித்து  தமிழனுக்கு  தேவையில்லாத தகவல் ஆகையால், விவாதிக்கவோ குறிப்பிடப்படவோ நினைவூட்டவோ இல்லை).

கருணை மனு 3.:- சட்டத்தின் முன் அனைவருமே சமம் என்ற ஒரு பித்தலாட்ட வாசகத்தை திருவாசகமாகக் கொண்டிருக்கும் இருட்டறையில் வாழும் குருட்டு தேசியவாதிகளுக்கும், அண்ணல் ( அண்ணன் அல்ல ) ராஜீவ் காந்தி அவர்களின் உயிர் புனிதமானது என்றும், அந்த நிகழ்விடத்தில் பறிபோன ஏனைய உயிர்கள் எல்லாம் தரவரிசைப்படி உயர்வானது அல்ல என்று வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் தமிழகத்தின் தொங்கு சதைகளுக்கும், ஏனைய இந்திய ஏதிலிகளுக்கும் வைக்கப்படும் இந்த மனுவில், கருணை கோரப்படவில்லை, மாறாக அண்ணல் ( அண்ணன் அல்ல ) ராஜீவ் காந்தி அவர்களின் புனிதமான உயிர் பறிக்கப்பட்ட போது என்றுமே ஒட்டியிருக்கும் தொங்கு சதைகள் எல்லாம், சிறு கீரல் கூட இல்லாமல் தப்பித்து, கண்களில் கிளிசரின் என்ற ரசாயானம் இல்லாமலே அழுது நடித்த அதிசயத்தை மறந்து விடுங்கள். அப்போது தான் அப்பாவிகளை தூக்கேற்ற உங்களுக்கும் உங்கள் மனசாட்சிக்கும் நிம்மதி கிடைக்கும். கேள்விகளின் குடைச்சல் இருக்காது.

கருணை மனு 4. :- வேலியே பயிரை  மேய்ந்தாலும் தேசியவாதிகளுக்கு அப்பாவி மக்களின் உயிர் எல்லாம் ஒரு (……) பொருட்டல்ல என்பதனை புனிதமிக்க பரந்துபட்ட நிலப்பரப்பில்,பொய்யான ஊடகத் தகவல்கள் வாயிலாகக் கேட்டு உண்மையறியாமல் துன்பப்படும் மக்களும் இந்தியர்கள் தான்” என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாத தேசிய ஒருமைப்பாட்டு போதைக்கு அடிமைகளாகியிருக்கும் அப்பாவி இந்தியர்கள் வாழும் இந்த மண்ணில்தான் வடகிழக்கு மாநிலங்களில் ராணுவத்தின் பாலியல் வன்கொடுமைகளும்,காஷ்மீரில் மனித உரிமை மீறல்களும் வரையறையின்றி நடத்தப்படுகின்றன, நடக்கின்றன. அதற்காகவெல்லாம் அரைவேக்காட்டு இந்தியர்கள் யாரேனும் மனுப்போட்டு, அதற்காக நாட்டைக்காக்கும் வேட்டைக்காரர்களை தூக்கேற்ற வேண்டாம் என்பதுதான் இந்த நான்காவது மனுவின் சாராம்சம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் இங்கு சரிப்பட்டு வராது என்பதனை மாட்சிமைக்குரியவர்கள் உணர்ந்திருப்பார்கள் ஆனால் சராசரிகளால் உணர முடியாது.

கருணை மனு 5. :- படி நிலை சமுதாயத்தைக் கட்டிக்காப்பதுதான் காவலர் கடமை என்று கர்ம சிரத்தையாக நரவேட்டையாடிய எந்தக்காவலரையும் தேடிப்பிடித்து, விசாரித்து பரமக்குடியில் அப்பாவிகளின் உயிர் பறிபோனதற்காகவெல்லாம் தூக்கேற்றாமல் கருணை காட்டுங்கள், என்பதுதான் இந்த ஐந்தாவது மனுவின் சாராம்சம். நரவேட்டையாடப்பட்டது தவறு என்று சிந்திக்கும் திறன் கூட இல்லாமல், சாதிவாரியாகவே கண்கொண்ட குருட்டுத்தமிழன், இன்னமும் இந்திய தேசிய சட்டகத்திற்கு லாயக்கு இல்லாதவனாக இருப்பதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். காவல் துறையும், ஆயுதம் தாங்கியவர்களும் (ராணுவமும் ) என்றுமே ஆட்சியாளர்களின் விசுவாச வேட்டை நாய்கள்தான் – ஏவப்பட்டவர்களைத்தான் கடிக்கும் (கொல்லும்) எஜாமானை அல்ல என்று கூறிய மேற்கத்திய சிந்தனையாளரின் கருத்தினை சாதிவாரித்தமிழர்கள் அறிய வாய்ப்பில்லை. ஆனாலும் இந்த மனு கொல்வதற்கு உரிமை படைத்த காவலர்களைக் காப்பதற்கே என்பது மட்டுமே உண்மை.

கருணை மனு 6. :- என்னய்யா இது உங்கள் கருணை மனுவில் இதுவரை நாங்கள் எதிர்பார்த்த அந்த மூவர் குறித்த விண்ணப்பம் எதுவும் வரவில்லையே என்று தமிழர்கள் அவசரமாய் அங்கலாய்த்து ஆவேசப்படலாம், பொறுமை, பொறுமை… என்பதே பெருமை. துறவு நெறி என்பது அற நெறியைத்தான் துறக்க வேண்டும் என்பது உள்ளிடக்கையாய் உய்த்துணரவைக்கும் அதி மேதாவிகள் அவதரித்த இந்த பாரத புண்ணிய பூமியில், கடுகளவும் சட்டம் தன் கடமையை ஆள் பார்த்துதான் செய்ய வேண்டும் என்ற அவசியத்தை உணராமல் இருக்கக்கூடாது. இது இப்படியிருக்க  {சங்கர) மடத்தில் நடக்கும் காந்தர்வத்தை எழுதியுரைத்த குற்றத்திற்காய், காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேளாளர் கொலைக்குற்றத்திற்காய் ( கூலிப்படை அமைத்த மிகச் சாதாரண குற்றத்திற்காய் ) தண்டத்தை விட்டு அண்டை மாநிலத்திற்கு ஓடியவர்களைப் பறந்து பிடித்து வந்து விசாரணை செய்துகொண்டிருக்கும் சட்டத்துறையும், காவல்துறையும் எக்காரணம் கொண்டும் இது விஷயத்தில் இரவோடு இரவாக தூக்கேற்றக்கூடாது. துறவு நெறி கொண்டாலும் மடச்சாம்பிரானிகள் அனாதைகள் அல்ல அங்கும் மடத்தம்பிரான்கள் போன்ற ட்ரஸ்டிகள் இருப்பார்கள், அவர்களுக்காவது தகவல் சொல்ல வேண்டும் என்றெல்லாம் இந்த மனுவில் கூறப்படவில்லை. மாறாக அவர்களை இருட்டறையில் மிகக் குறைந்தபட்சம் 22 ஆண்டுகளாவது காவலில் வையுங்கள் என்றும் கருணை கோரவில்லை. இதற்கும் மாறாக இவர்களை முற்றாக விடுவித்து, அவர்கள் அருள்பரிபாலனம் செய்ய காவல் துறையும் சட்டத் துறையும் நீதி பரிபாலனம் செய்யும்படி மேற்படி மனுவில் கோரப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.

கருணை மனு 7. :- தில்ஷன் முதல் காஞ்சி வரை, குமரி முதல் காஷ்மீரம் வரை, வடகிழக்கு வடமேற்கு என்று புனித பாரதத்தின் நீள அகலாமாய் நடப்பெதெல்லாம் நல்லபடியாகவே நடப்பதால், நாட்டில் மும்மாரி பெய்து குடி மக்கள் தண்ணீர்ப் பஞ்சம் இன்றி, அண்டை மாநிலத்திலும், இல்லை இல்லை அண்டை மாநிலங்களிலும் ஒரு சொட்டு தண்ணீருக்காய் கையேந்தாமல், இரண்டாம்தரமாகத் தங்களைக் கருதாமல் எங்கள் தமிழ் உறவுகள் எல்லா வளமும் பெற்று மின்சார உதவியின்றி வாழும் பெரும் பேற்றை மறந்துவிட்டு, ஒரு குற்றமும் செய்யாமல் தமிழனாய்ப் பிறந்த ஒரே குற்றத்திற்காய், 1991ம் ஆண்டு நடந்த சம்பவத்தில் தமிழகத்தின் ஒரு தொங்கு சதை கூடக் கிழிபடாமல் கச்சிதமாய் குண்டு வெடிக்க பக்குவமாய் 9 வோல்ட் பாட்டரிகளை, மறக்காமல் பெயர் சொல்லி ரசீது சிட்டை வாங்கி வந்த பேரறிவாளன் போன்ற எண்ணற்ற ஏதிலிகளை தூக்கேற்றி கருவறுக்காமல் ஓய்வதில்லை என்று ஒருமைப்பாட்டு கத்தியேந்தி கசாப்புக் கடை நடத்தும் தேசிய கனவான்களே…..!? இந்த மனுவில் உங்களிடம் கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட, இருட்டறையில் பறிக்கப்பட்ட  நீதி….!!!!!

Sniperspy offer just as mobile spy monitors the activities on a smartphone, sniperspy http://www.phonetrackingapps.com helps you get to the same truths about how your children and employees are using their desktop and laptop computers

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “கசாப்புக் கடைக்காரரிடம் வைக்கப்படும் கருணை மனுக்கள்”
  1. முத்துக்காத்தான் says:

    அருமையான கட்டுரை,சிறந்த நடை,நல்ல நையாண்டி,வள்ளி நாயகம் தொடரட்டும் உமது சாட்டை……..

அதிகம் படித்தது