கடவுள் : இருப்பும் தற்காலமும் (பாகம் – 1) (ஆதித்தொன்ம உருவாக்கங்களை முன்வைத்து – நிகழ்நிலையில் ஓர் ஆய்வு)- கட்டுரை
ஆச்சாரிApr 15, 2013
நம்மில்லான கடவுள் நம்பிக்கையும் அதனுள்ளார்ந்த வளர்ச்சியும் பரிணாமம் என்ற விஞ்ஞானக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானதாகும். -மயிலை சீனி.வேங்கடசாமி.
எப்படியும் கடவுள் என்பது மனிதனின் படைப்பு. எந்த பிற உயிரினங்களும் கடவுளைப் படைத்திருக்க முடியாது. ஏனெனில், அவைகள் யாவும் இயற்கையை வென்று, இயற்கையியலில் வாழ்கின்றன. மனிதன் மட்டும் தான், இயற்கையை கண்டு அஞ்சி, அதன் அரவணைப்பில் வாழ்கிறான். எனவே இவன் தான் கடவுள் என்ற ஒரு தர்க்கத்தைப் படைத்திருக்கக் கூடும். எப்படியானாலும் – கடவுளை எப்படி மனிதன் படைத்தான்? என்ற கேள்வி மேலெழத்தான் செய்கிறது. பொதுவாக
இல்லாத ஒன்றை படைக்க முடியாது.
இருப்பதை அழிக்க முடியாது.
-என்பது இயற்கையின் விதியாக இருக்கிறது.
பிரபஞ்ச உயிரினங்களுக்கான இயற்கையின் விதி, இப்படி இருக்க, மனித உணர்வுக்குள் கடவுள் எப்படி வந்தார்? அந்த உணர்வு எத்தகையது?… அவ்வுணர்வு எப்பொழுது வரும் அல்லது வெளிப்படும்?.. என்ற ஒட்டுமொத்தமான கேள்விக்களுக்கு ஓரளவேனும் விளக்கம் தர முயற்சிப்பதாக இக்கட்டுரை அமைக்கப்படுகிறது.
இயற்கையும் தெய்வப்புனைவும் :
தொடக்கத்தில் இயற்கை மனிதனுக்கு புதிராகவும், பயமாகவும் இருக்கப் போய், அதனுள்ளார்ந்த உணவுக்கான தேவை அவனை அதிசயிக்கச்செய்தது. கூட்டு உழைப்பாளான அன்றைய உணவு சேகரிப்பும், அதன் தேவையும் வேறுவழியின்றி இயற்கையை இசைந்தொழுகளானது. இந்த வகையான இயற்கை மேலீட்டால், அக்கால மனிதன் அதனை மந்திர அடிப்படையிலான முரு(கு)காவும், அதன் மூலம் பெறத்தக்க உற்பத்திக்காகவும் தன்னோடான பாட்டையும் ஆட்டத்தையும் அதற்கானதாக மாற்றினான். அதன் காரணமாகத்தான்
பழங்குடி மக்களின் ஆட்டமும், பாட்டும் இன்னும் அவர்களுடைய உணவுத் தேவையோடு தொடர்புடையவைகளாக இருக்கக் காண்கிறோம்.
அதனையொட்டியே அவன் வணங்கத் தலைபட்ட தெய்வங்களும் – அதன் வடிவ குணங்களும், உற்பத்தி முறையோடும், முனைப்போடும் தொடர்புடையனவாக இருக்கின்றன.
மனிதனின் உள்ளார்ந்த காப்பு நடவடிக்கைகள் இயற்கை மீதும், உணவுப்பொருட்கள் (வாழ்க்கைக்கான கச்சாப் பொருட்கள்) மீதுமானதாக இருக்கும் காரணத்தால் தான், எல்லா தெய்வங்களும் காவலர் வடிவம் கொண்டதாக இருக்கின்றன. அதிலும் பெண் தெய்வங்களுக்கு முன்னுரிமை இருந்துள்ளது. மேலும் தாவரங்கள் விலங்குகள் போன்றன, மனித குல வாழ்வுக்கும், அவனூடான பயணத்துக்கும், பசிக்கும் பங்கேற்றச் சூழலால், அவைகள் பாதுகாக்கப்பட்டு, அவைகளின் அடையாளங்கள் வேட்டைக் குகைகளுள், பழங்கால மக்கள் ஓவியங்களாக வடிவம் பெற்றுள்ளன. இவைகளே அக்கால மக்கள் கூட்டங்களின் அடையாளங்கள். குலக்குறிகள். இவையே பிற்காலத்தில் தெய்வங்களின் ஆயுதங்களாக, அணிகலன்களாக, வாகனங்களாக மாறி, ஒருவித வழிபாட்டு உருவம் முழுமைபெற துணைசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக,
கிருஷ்ணன், விருஷ்ணியாதவர் எனப்பட்ட கால்நடை வளர்க்கும் தொழிலையுடைய இரு குழுக்களின் தலைவன் ஆவான். பலராமன், சாத்துவர் எனப்பட்ட உழவர்களின் குழுத்தலைவன் ஆவான். காட்டில் மாடுமேய்ப்பவர்களின் இசைக்கருவியான புல்லாங்குழலைக் கிருஷ்ணன் கையில் பார்க்கிறோம், உழவர்களின் குழுத்தலைவனான பலராமனோ கையில் கலப்பை ஏந்தியுள்ளான்.
இத்தெய்வங்களைப் பற்றிய புராணக்கதைகளும், இவற்றின் இயல்பை நன்கு உணர்த்துவனவாக உள்ளன. பலராமன் நிறைய மது குடிப்பவன். ஒருமுறை மதுவெறியால் ஒரு மரத்தடியில் சாய்ந்துகொண்டு நீராடுவதற்காகத் தன்னிடம் வருமாறு யமுனை(நதி)யை அழைக்கிறான். அவள் வர மறுக்கிறாள். உடனே தன் ஆயுதமான கலப்பையை வீசி எறிந்து, அவளைத் தன்னிடத்திலே வரவழைத்து விடுகிறான்.
இக்கதையின் உண்மையான பொருள் என்ன? பலராமன் வாழ்ந்த காலத்தில், அவன் தலைமை ஏற்ற சாத்துவர், யமுனைக்கரையில் பல புதிய நீர்வழிகளைக் கண்டு, விவசாயப் பயிர் நிலங்களைப் பெருக்கினர் என்பது தான். அதேபோல்,
சனகர் காட்டுவாழ்க்கையில் நிலத்தைக் கலப்பைகொண்டு, உழும்போது நிலத்துக்குள்ளிருந்து வந்தவள் சீதை, என்பது சீதையின் பிறப்பை பற்றிய கதை.
இதன் பொருள் சீதை, உழும் தொழிலை உடைய ஒரு குழுவிலிருந்து பிறந்த தெய்வம் என்பதுதான். இங்கு பலராமனை ஷுலாயுதன் என்று குறிப்பிடும் வழக்கத்தின் படி பார்த்தல் ஷுலம் என்ற வடமொழிச் சொல் கலப்பை என்ற பொருளைக் குறிப்பதாகிறது.
இக்காலக் கட்டத்தில் இம்மாதிரியான தெய்வக்கதைகள் நிறைய பெருகி, அக்கதைகளுள் ஒற்றுமையுள்ள தெய்வக்கதைகள், ஒன்றையொன்று கலந்து, சில அடிப்படை தெய்வ வழிபாட்டு முறைமையைத் தோற்றுவித்துள்ளன.
சுருக்கமாகச் சொன்னால், இயற்கையை வணங்கத் தொடங்கிய மனிதகுல வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும், அவனுக்கான சமூகத் தேவைகள் வளர்ந்து, பெருக, பெருக, உழைப்பவர், உடைமையாளர் என்ற பிரிவுகள், தொடங்கி தெய்வங்களின் தன்மைகளும் பண்புகளாக – ஒழுக்க கற்பிதங்களாக பிரிவடையத் தொடங்கின. இதன் வளர்ச்சியாகவே நம் சங்க இலக்கியங்களும், தொல் புராணங்களும் நமக்கு, பெருதெய்வ, சிறுதெய்வ பிரிவுகளை கற்பிப்பவையாக இருக்கக் காண்கிறோம்.
இவையே, பெருதெய்வம் சார்ந்த தொல் ஒழுக்கங்களாகவும் நமக்கு புராணங்கள் மூலமும், இதிகாசங்கள் மூலமும் கிடைத்துள்ளன. அதேபோல், சிறுதெய்வக் கதைகள், உழைக்கும் மக்களின் வாய்மொழிகளாக, நாட்டுப்புறக் கலைக்கூறுகளாக, நாட்டுப்புற மக்கள் வெளிப்பாடுகளாக இருக்கின்றன. இவையாவும், அவரவர்களின் தன்வயப்பாடு என்பது உய்துணரத்தக்கது.
பக்தி இயக்கப்போக்கு :
கி.பி 6 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இயக்கம், தமிழ்நாட்டின் வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்த நிலவுடைமை வளர்ச்சியில் முதன்மைப்பங்கு வகிக்கிறது. சங்க காலத்தின் இறுதி கட்டத்திலே வந்தர்கள், “குளந்தொட்டு வளம் பெருக்கி புதிய பயிர்” நிலங்களை உருவாக்கியுள்ளனர். அக்காலக் கட்டத்திலேயே பயிர் நிலங்களின் அளவுகோளுக்கேற்ப, அப்பயிர் நிலங்களுக்கு உரிமையாளர்களான கிழார் எண்ணிக்கையும் பெருகின.
அரசனுக்கு அருகிருந்த பார்ப்பனரும், கிழார்களும் இணைந்து வேள்வி நடத்தினர்.
எனும் புறநானூறு குறிப்பு அதை மெய்பிப்பதாக அமைகிறது. மேலும், சிவபெருமான் நிலவுடைமையோடு சேர்ந்த தெய்வமானார். அப்பொழுது உடையார் என்னும் சொல் இறைவனைக் குறிப்பதானது. செல்வ(ம்) காரணத்தால் சிவபெருமானுக்கு மூலப்பண்டாரம், (அனைத்துச் செல்வங்களின் இருப்பிடம்) என்ற பெயர் வழங்கப்பட்டது. மேற்கண்ட நிலவுடைமை உணர்வுகள் பாமரமக்களின் குடும்ப அமைப்புக்குள் புகுந்த காலத்தில் தான், பெண் விதைப்புக்குரிய நிலமாகக் கருத்தப்படும் போக்கு, தெய்வத் திருமண சடங்கு முறைமைகள், கணவன்,மனைவி உறவுநிலை, சீர்வரிசை, சொத்துரிமை மாற்றம் போன்ற உறவுமுறை வழக்கங்கள் வலுப்பெறத் தொடங்குகின்றன. இவையெல்லாம் பக்தி இயக்கக் காலகட்டத்தில் ஏற்பட்ட தெய்வநிலை பெறலுக்கான வளர்ச்சிதை மாற்றங்களாகும்.
இங்கு பெண்கள் உடைமைக்கான மூலஉற்பத்திப் பொருளாக அடையாளம் காட்டப்படுகின்றனர். அதன் காரணமாகவே தொல் பழம்நம்பிக்கைகளுள், பெண், விதைப்புச் சடங்குக்கு உரியவளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வு நடந்திருக்கிறது. இஃது இன்றவுளம் மகப்பேற்று ஆற்றல் குறையாத மங்கலப்பெண்கள், விதைநெல்லை அளந்தும், விதைப்பெட்டியை எடுத்துக் கொடுக்கும் வழக்கத்தில் நிறுத்தப்பட்டு, பெண்ணை விதைப்புக்குரிய உற்பத்தி மூலமாகப் பார்க்கும் பார்வை, தொடர்வது குறிப்பிடத்தக்கது. மேலும் பெண்களின் திருமண சடங்கியலோடு சீர்வரிசை என்னும் சொத்துப் பரிமாற்றம், நடந்தது, இஃது பெண்ணுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்ட சமூக அமைப்பின் பாழ்வெளி அடையாளத்தைக் குறிப்பதாகிறது.
இந்த மாதிரியான சொத்துரிமை மறுப்பு பெண்களுக்கானதாக இருந்த காரணத்தால் தான், அப்போதிருந்தே, நம் திராவிட நாகரீகத்தின் தலைமை பண்புகளில் ஒன்றாக முறைப்பெண், முறை மாப்பிள்ளை வழக்கம் இருந்துள்ளது. இதை ஒருவித சொத்து சுரண்டலுக்கான வழக்கமாக பார்ப்பதே நியமானதாக இருக்கும். இந்நிலையில் சொத்துச் சேகரிப்பு அல்லது நிலவுடைமையினால் தோன்றும் செல்வச் செழிப்புமே, நிலக்கிழார்களை நேரடியாக பரத்தமைக்குத் தூண்டியது, என்கிற சமூக வளர்ச்சிப் போக்கும், பார்வையும் நமக்கு தேவைப் படக்கூடிய ஒன்றாகும், இதனையே மதுரை மீனாட்சி, அவள் கணவன் சொக்கனோடு நடத்தும் குடும்பப் பாங்கினைப் பேசும், தாலாட்டுப் பாடல் உறுதிசெய்கிறது. இதில் வரும்,
பொலியளந்து தூசியோட
என் கண்ணே சொக்கர்
போய் நொழைஞ்சார் தாசி வீடு
தாசி மயக்கமோ – என் அம்மா
தட்டாத்தி கைமருந்தோ
வேசை மயக்கமோ – என் அம்மா சொக்கர்
வீடு வந்துஞ் சேரவில்லை.
_என்ற இறுதி வரிகள், தமிழ்நாட்டின் தனிபெரும் கடவுளான சிவபெருமானை பரத்தமையோடுத் தொடர்புபடுத்துகிறது. அதோடு, நிலக்கிழார் சமூகத் தளத்தில், பரத்தமை தெய்வத்தின் பெயரால் நிலைப்படுத்தப்பட்ட சூழலையும் விளக்குகிறது.
இதனையே நிலவுடைமையின் நேரடி வளர்ச்சிப் போக்காக பரத்தமை இருந்தது என சங்க இலக்கியம், மருதத் திணைக் குறிப்பிடுகிறது. ஆக, அக்கால கோயில் வழிப்பாட்டுத் தளங்கள் – இறைவன், கோயில் பார்ப்பனன், மேலாண்மை செய்த வேளாளன் என பல்வேறு உடைமையாளர்களின் பெயரால் நிலங்கள் அனைத்தையும் தன்னோடு சேர்த்துக் கொண்ட, ஒரு பெரும் சொத்துரிமை நிறுவனமாக விளங்கியுள்ளன.
இது சோழ, பாண்டியப் பேரரசர்களின் காலக்கட்டத்தில் தான் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் காலக்கட்டத்தில் தான் பணப்புழக்கம், நீர் மேலாண்மை, மருத்துவம், நீதி, கலைகள் ஆகியன கோயிலோடு இணைக்கப்பட்டன. அலைந்து திரியும் பாணர் மரபும், வாழ்க்கையும் அழிக்கப்பட்டு – ஆடல், பாடல் கலைகளோடு அவற்றுக்குரிய கலைஞர்களும், கோயில் பணியாளர்கள் ஆக்கப்பட்டனர். பெருங்கோயில்களின் வளர்ச்சியோடுதான் தமிழ்நாட்டின் நிலமானிய அமைப்பு முறையும், அரசியலும் முழுமைப் பெற்றுள்ளது. எனவே தான், பரத்தமை என்ற நிறுவனத்தையும் கோயில் தன்னுள் இழுத்துக்கொண்டு கட்டுப்படுத்தியது.
இதன் பின்விளைவாகத்தான் கடவுள் சிறந்த நீதிபதியாக, சிறந்த மருத்துவராக, சிறந்த பாட்டுப்புலவராக, சிறந்த இசைவாணராக, சிறந்த ஆடல் வல்லவனாக, நிலக்கிழாராக, செல்வத்திரட்சியால் பரத்தை வீடு தேடிச்செல்பவராக என மனித மதிப்பீடுகளுக்குத் தலைமை வகித்துள்ளார். மேற்கண்ட இப்போக்கு நிலை, சைவ நெறியளவில் இல்லை என்றாலும் வைணவத்திலும் ஓரளவு இருந்தது என்பது குறிப்பிடப்பட வேண்டியது.
தொடரும் . . .
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
என்னோட கருத்துகளை கானாங்க . . . .
தவறு இருப்பின் மன்னிக்கவும்
/// மேற்கண்ட இப்போக்கு நிலை, சைவ நெறியளவில் இல்லை என்றாலும் வைணவத்திலும் ஓரளவு இருந்தது என்பது குறிப்பிடப்பட வேண்டியது.///
மேற் சொன்ன அனைத்துமா அல்லது இந்த பத்தி மட்டுமா ?
ஆன் பெண் சம நிலையை சொன்னதும் சைவம் ( சிவம் )
குலமாற்று ( கலப்பு) திருமணமும் செய்து வைத்ததும் சிவனே ( சுந்தரருக்கும் – பறவைக்கும் )இப்படி சிவத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம் . . . .
மனிதன் கடவுளைப் படைத்தானா ?
பிறந்த குழந்தை எதுவும் தன் தந்தையை பிறந்தவுடன் ” அப்பா ” என்று அழைப்பது இல்லை . . . .
அது பேச ஆரம்பிக்கும் போது சொல்லிக் கொடுக்க சொல்லும் ( வேறு ஒருவரை கூட அப்பா என்று சொல்லும் )
ஆனான் அது தன்னை அறிந்து தன் தந்தை அறிந்து ” அப்பா” என்று சொல்லுவது எப்படியோ
அப்படிதான் ஆதிவாசியா சுற்றும்போது பிறந்த குழந்தை
மேலும் நாகரீக வளர்ச்சி – பேச ஆரம்பித்த குழைந்தை
சைவன் அனைத்தையும் உணர்ந்து இவனே என் அப்பா என்று சொல்லும் குழந்தை .