மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கட்டுக்கோப்பாக கட்சிகள்: கட்டவிழ்ந்த ஆட்சிகள் – ஒரு ஒப்பீடு !

ஆச்சாரி

Mar 15, 2012

தமிழகத்தில் இப்போது பல அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அதில் இரண்டு கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பலம் பொருந்தியதாக உள்ளன. அந்தக் கட்சிகளின் அமைப்பு முறையையும், செயல் திட்டங்களையும், நிர்வாகத்தையும் ஆராய்ந்து பார்த்தால் அஃது அரசாங்க கட்டமைப்பைக் காட்டிலும் வலுவானதாக இருப்பது நமக்கு புலனாகிறது. ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு திறன் கொண்ட இந்த கட்சிகள் தமது நிர்வாக, கட்டமைப்பு, செயல் திறன்களை ஆட்சியில் காட்டுவதில்லை, ஆனால் அவர்களின் கட்சி அமைப்புகளிலும், கட்சியை வழி நடத்துவதிலும், வெளிக்காட்டும் ஆற்றல் நம்மை வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது. அதனைப் பற்றிய ஒரு அலசலே இந்த கட்டுரை.

ஒரு கட்சித் தேர்தல், முதலில் அந்தக் கட்சியின் கிளை அமைப்பு உறுப்பினர்கள் வாக்களித்து கிளை நிர்வாகியைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்குகிறது. பிறகு கிளை அமைப்பு நிர்வாகிகள் ஒன்றிய, நகர நிர்வாகிகளை வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள், அந்த ஒன்றிய, நகர  நிர்வாகிகள் வாக்களித்து மாவட்ட செயலாளரை தேர்வு செய்வார்கள். மாநகராட்சிகளில் உறுப்பினர்கள் முதலில் வட்டச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பார்கள், வட்டச் செயலாளர்கள் பகுதிச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பர், பகுதிச் செயலாளர்கள் வாக்களித்து மாநகர செயலாளரைத் தேர்ந்தெடுப்பார்கள். பிறகு அவர்கள் மாவட்டச் செயலாளரைத் தேர்வு செய்வார்கள். கிளை நிர்வாகிகள் முதல் மாவட்டச் செயலாளர் வரையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கு பெரும் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களைக் கூட்டி அதில்  அந்தக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரை  புதிய நிர்வாகிகள்  தேர்வு செய்வார்கள்.

இப்படி குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் நடத்தும் வழிமுறைகளில் கட்சிக்கு கட்சி மாறுபாடு இருக்கலாம் ஆனால் கட்சி என்று ஒன்று இருந்தால் தேர்தல் என்பதை  நடத்த வேண்டும். தேர்தல் நடத்துகிறோம் என்ற போர்வையில் உள்ளுக்குள் தலைமையின் ஆதரவு பெற்றவர்களே கட்சிகளில் பெரிய பதவிக்கு வருவது தனிக் கதை. தமிழகத்தில் உள்ள இன்னொரு பலம் வாய்ந்த கட்சியில் முக்கிய நிர்வாகிகள் எல்லோருமே நியமன முறையில்தான் பதவிக்கு வருகிறார்கள். மாவட்டச் செயலாளர், அவைத் தலைவர் போன்ற பதவிகள் எல்லாம் நியமன முறையில்தான். ஆனால் கட்சியை சிதையாமல் வைத்துக் கொண்டுள்ளனர். இன்னும் சொல்லப் போனால் அந்த கட்சி மற்றவற்றைக் காட்டிலும் பெரிய அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக உள்ளது.

ஒரு கட்சி வளரவோ அல்லது வளர்ந்த கட்சி மாநாடு,பொதுக்கூட்டம் போன்ற கூட்டங்களை நடத்தவோ தொண்டர்கள் நிதி வசூலித்து தருகிறார்கள், அந்தக் கட்சியின் நகர, ஒன்றிய.கிளை செயலாளர்கள் அந்த நிதியுடன் சேர்த்து தாங்கள் வசூலித்த பணத்தை மாவட்ட செயலாளர்களிடம் தருவார்கள். அவர்கள் தொழில் அதிபர்களிடமும் மற்றும் மற்ற வகையில் வசூலானதை தலைமையிடம் தந்து கட்சி வளர்ச்சிக்குப் பயன்படுத்துகிறார்கள். மாநாடுகள் நடத்துகிறார்கள். ஆட்சி அதிகாரம் கிடைக்க தமது கட்சியை கட்டுக்கோப்பாக வைத்து வளர்த்து வளமாக்குகின்றனர். இப்படி செல்வம் ஆனது கீழிருந்து மேலே பயணிக்கிறது.

இந்த இடத்தில் அரசாங்கத்தை இவர்களுடன் ஒப்பிட்டு பாருங்கள், அரசு குடிமக்களிடம் வசூலிக்கும் வரி சரியாய், கருவூலத்துக்கு போகிறதா என்றால்,கண்டிப்பாக இல்லை.அனைத்து மட்டங்களிலும் வரி ஏய்ப்பு நடந்து அரசுக்கான வருமானம் சரியாக கீழ் இருந்து மேலே போய் சேருவது இல்லை. அப்படி முறையாக சென்று சேராத பொது எவ்வாறு அரசால் திட்டங்களை செயல்படுத்த இயலும். தமது கட்சிக்குள் இதனை  முறையாக செயல்படுத்தும் கட்சிகள் ஏன் ஆட்சியில் செயல்படுத்துவது இல்லை. ஏன் அரசு எந்திரத்தை முறையாக பயன்படுத்துவதில்லை?

ஒரு கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து ஆட்சிக்கு வரும் கட்சிகள் தன் கட்சிக்காரர்களை வளர்த்து விட கீழே காணும் அணுகுமுறையைத்தான் பெரும்பாலும் கடைப்பிடிக்கின்றன. பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை இன்னும் மற்ற துறைகளின் பெரிய தொகை கொண்ட  அரசு ஒப்பந்தங்கள் அநேகமாக ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளரின் உறவினருக்கோ அல்லது அவர் பரிந்துரைக்கும் நபருக்கோதான் கொடுக்கப்படும். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மாவட்டச் செயலாளர் கொடுக்கவேண்டிய இடத்தில் கொடுத்துவிட்டு அவர் ஒரு கணிசமான கோடிகளை வைத்துக்கொள்வார். சிறிய சிறிய ஒப்பந்தங்களும் மாவட்டச் செயலாளரிடம் கொடுக்கப்படும். அவர், அந்த ஒப்பந்தங்களை அக்கட்சியின் நகர, ஒன்றிய செயலாளர் போன்ற நிர்வாகிகளுக்குக் கொடுத்து விடுவார். அந்த நிர்வாகிகள் கிளை நிர்வாகிகளுக்கு வருமானத்தைப் பிரித்துக் கொடுத்து விடுவார்கள். இப்படி பணப் பங்கீடும், வருமானமும் மிகத் திறமையாக கையாளப்பட்டு மேலிருந்து கீழே பயணிக்கிறது. கட்சியின் செல்வம் பெருகுகிறது.

இப்போது கட்சிக்காரர்களுக்கு முறையாக செல்லும் இந்த சலுகைகளுடன் மக்களுக்கு அரசு தரும் சலுகைகளுடன் ஒப்பிட்டு பாருங்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆட்சியர் உள்ளார், அவருக்கு கீழே ஒவ்வொரு கோட்டதிற்கும் கோட்டாட்சியர் இருப்பார். அவருக்கு கீழே ஒவ்வொரு வட்டத்திற்கும் வட்டாட்சியர் இருப்பார். அவருக்கு கீழே ஆய்வாளர்கள்,கிராம நிர்வாகிகள்  இருப்பார்கள். ஆனால் அரசு அறிவிக்கும் எந்த சலுகையும் இந்த கட்டமைப்பில் முறையாக பயணிக்காது. ஏன் இந்த முரண்பாடு, கட்சி என்றால் அங்கே சிறப்பாக முறைகள்! ஆனால் ஆட்சியில் இல்லை?

அரசுப் பணிகளின் இட ஒதுக்கீடுகள் சாதி அடிப்படையில் ஒதுக்கப்படும். ஆனால் ஒதுக்கப்படும் பணிகள் பெரும்பான்மையாக ஆளுங் கட்சியினரின் பரிந்துரைத்த நபர்களுக்கே தரப்படும். இந்தத் துறை அரசுப் பணி நியமனத்தில் அந்தந்த மாவட்டச் செயலாளருக்கு இத்தனை பரிந்துரை செய்யலாம் என்று எண்ணிக்கை தந்து விடுவார்கள். மாவட்டச் செயலாளர் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகளுக்கு குறிப்பிட்ட இடங்களை தந்து விடுவார். பொதுவாக ஒரு அரசுத் துறையில் பணி நியமனமோ, இடம் மாறுதலோ வேண்டி அந்தந்தத் துறையின் அமைச்சரைத்தான் அணுக வேண்டும். ஆனால் இங்கே ஒவ்வொரு ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளரும் ஒவ்வொரு அமைச்சர் போன்றுதான் இருப்பார்கள். அரசுப் பணி, இடம் மாறுதல், அரசு ஒப்பந்தங்கள் இவை அத்தனைக்குமான பரிந்துரைக்கு ஆளுங்கட்சிக்காரர்கள் அவர்களின் மாவட்டச் செயலாளரைத்தான் அணுகுவார்கள். இது எல்லா கட்சிகளுமே ஆட்சிக்கு வந்தால் கடைப்பிடிக்கும் அணுகுமுறை.

சரி கட்சிகாரர்கள் இப்படி தமக்கு ஆக வேண்டியதை சாதித்துக் கொள்வார்கள்,கட்சி சாராத பொதுமக்கள் எவ்வாறு சாதிக்க இயலும்? அவர்களுக்கு தேவைகள் இல்லையா என்ன? எந்த அரசு அமைப்பை அவர்கள் தொடர்பு கொள்ள இயலும்? அப்படி தொடர்பு கொண்டாலும் காரியம் நடக்குமா?

கட்சியை வளர்க்க கட்சிக்காரர்களிடம் இருந்து கீழிருந்து மேலே பணம் போகிறது. அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் கட்சிக்காரர்களுக்கு மேலிருந்து கீழே போகிறது பணம், அதிகாரம் எல்லாம். இந்தச் சூழலில் இதில் பொதுமக்கள் எனப்படுவோரின் நிலை என்ன? அவர்களும் தங்கள் வேலை முடிய அரசியல்வாதிகளைத்தான் நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அங்கே அரசியல்வாதிகளிடம் பணத்தைக் கொடுத்து காரியம் நடக்காமல் பணத்தையும் நேரத்தையும் இழந்து அவதிப்படுவோர் ஏராளம்.

கட்சியை வளர்க்கவும் ஆட்சிக்கு வரும்போது கட்சிக்காரர்களை வளப்படுத்தவும் அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்கும் இப்படிப்பட்ட வழிமுறைகளை – திட்டங்கள், அரசு நிதி உதவிகள் போன்ற அரசு செயல்களை பொதுமக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க அரசியல்வாதிகள் பின்பற்றுவதில்லை. தேர்தலில் வெற்றி பெறவும், கட்சிப் பூசல்களை தீர்க்கவும், கட்சிக்கும் கட்சிக்காரர்களுக்கும் பணம் சம்பாதிக்கவும் தமது திறமையை வகையாக பயன்படுத்தும் கட்சிகள் மக்களுக்காக அதனை செய்தால் என்ன கேடு?

கற்சிலைகள் போல் எல்லாவற்றையும் மெளனமாக வேடிக்கை பார்த்து வெந்ததை உண்டு விதிவந்தால் மரணிக்கும் பொதுமக்கள் இவர்களை எப்போது கேள்வி கேட்கப் போகிறார்கள்? காலம்தான் சொல்ல வேண்டும்.

That is why today www.besttrackingapps.com we are examining the popular app line

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கட்டுக்கோப்பாக கட்சிகள்: கட்டவிழ்ந்த ஆட்சிகள் – ஒரு ஒப்பீடு !”

அதிகம் படித்தது