மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கம்பராமாயணத்தில் கம்பனில் ஆளுமையும் தலைமைப் பண்பும் (கட்டுரை)

ஆச்சாரி

Aug 1, 2013

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை
– பாரதி

கம்பனில் ஆளுமையா? கம்பனே ஆளுமையா என்கின்ற கேள்வி எழுமானால் இரண்டுமே மிகச் சரி. ஒருவன் இருக்கின்ற காலத்து அவனைப் பற்றி பேசுவதை விட அவன் இருந்த இடம் அவன் படைப்புகளால் நிரப்பப்பட்டு அவனுடைய காலத்திற்கு பின்பு அதிகம் பேசப்படுமானால் அதுவே அந்த மனிதனின் ஆளுமை. அவன் படைப்பின் ஆளுமை. கம்பனது கவியின் ஆளுமைத் தன்மையால் உந்தப்பட்டு உயிர்த்தெழுந்த கவிஞர்கள் உண்டு. இனங்காணப்படுகின்ற எடுத்துக்காட்டு கவியரசு கண்ணதாசன் இதன் காரணமாக இறுமாந்து சொன்னான் ‘ காலமெனும் ஆழியிலும் காற்றுமழை
ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு”. குறிப்பிடத்தக்கதாகும் ஆளுமைத்தன்மை   ஒருவனை தனிப்பட்ட சிறப்புடைய மனிதனாகச் செய்யும் தன்மைகளின் முழுமையை ஆளுமையென்று சொல்லாம். ஆளுமைக்கான அளவீடுகள்:
(1) உடல் அமைப்பு,
(2) ஆற்றல்கள்,
(3) திறமைகள்,
(4) நடத்தைகள்
நாம் பார்க்கக்கூடிய மனநிலை இவை வெளிப்படையான அம்சம். உந்தல்கள், தன்னை உணர்தல், உணர்வதில் அடங்கியுள்ள எண்ணங்கள், உணர்ச்சி, மனப்போக்கு, சிந்தனைகள், செயல்கள், ஆதிக்கம் செலுத்தும் உணரப்படாத நனவிலியான போக்குகள் இவை அனைத்தும் உட்புற அம்சம்;. புறத்தோற்றத்தில் காணப்படுவது அகத்தின் எதிரொலி, அகத்தில் இல்லாதவை
புறத்தில் இல்லை. அனுபவங்களைக் கொண்டு தான் உள்ளம் அறிவைப் பெறுகின்றது. உடலியக்கமும், உள்ள இயக்கமும் பின்னிப் பிணைந்தது.
உளவியலார்களின் கூற்றுப்படி மனிதனின் ஆளுமை எல்லையற்றது. நடத்தைகளோடு தொடர்புடையது, வண்ணம் போன்றது. அனைத்துப் பொருட்களும் குறிப்பிட்ட வண்ணத்தைக் கொண்டிருப்பது போன்று ஒவ்வொரு மனிதனிடத்தும் குறிப்பிட்ட ஆளுமை உண்டு. பழகும் விதங்கள், செயற்பாடுகள், அனுபவங்கள் கொண்டு ஆளுமையை வரையறுக்க முடியும். ஒருவனிடத்தில் அமையப் பெறுகின்ற ஆளுமையை, சமூகத்திடம் தொடர்புப் படுத்திப்பார்ப்பதால் மட்டுமே விளங்கிக்கொள்ள முடியும். நனவுகளே மனித ஆளுமையைத் தீர்மானிக்கிறது. இது பின்னனிகளுக்கேற்ப மாறுபடும். உள்ள ஆற்றல், ஆளுமை வளர்ச்சி, ஆளுமை அமைப்பு, ஆளுமை கட்டமைப்பு, ஆளுமை பண்பு இவைதான் ஆளுமையின் சாராம்சம். தனிநபர் வரலாற்றில் ஒவ்வொரு கட்டங்களிலும் ஆளுமை பண்புகள் உருவாகின்றன. உள்ளத்தில் பொங்கிய கவியாற்றலை சமூகத்துடன் தொடர்புப்படுத்திப் பார்க்கின்ற போது, சமூக கட்டமைப்புக்காகத் தருகின்ற போக்கினைக் கொண்டும், கம்பனே ஆளுமையான அதிசயத்தைக் காண்போம். கம்பனின் ஆளுமைத்தன்மை அவனது காப்பியத்திலும், உருவத்திலும் இருப்பது கண்கூடு. உள்ளத்தால் உயர்ந்தபின், கவி தந்தான், விசுவரூபம் எடுத்தான், ஒளிர்கின்ற கண்கள், மிளிர்கின்ற இரத்தினக்கடுக்கண், கூர்மூக்கு, செதுக்கிய மீசை, கவிதையை ஆடையாகக் கொண்டு நிற்கின்றத் தோற்றத்தில் கம்பனைப் பார்த்தாலே பரவசப்படுத்தும் பிரமிப்பாகும். இதுவும் ஆளுமையின் மறுவெளிப்பாடாகும்.

ஆளுமை வளர்ச்சி:
கம்பனால் படைக்கப்பட்ட பாத்திரங்கள் அனைத்தும் ஆளுமைத் தன்மையில் சளைத்தவர்கள் அல்ல. சுற்றிலும் நடக்கின்றதைக் கண்ணுற்றும், பேசுவதைக் கேட்டும், உள்ளம் தன்னைத்தானே மெருகேற்றுவது முதல்படி. அயோத்தி மாநகரின் பல இடங்களைச் சுற்றித் திரிந்துவிட்டு அரண்மனை திரும்புகிறான் சிறுவன் இராமன். எதிர்படுபவர்களை என்ன தொழில் செய்கிறாய்? நீ நலமா? வீட்டில் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா? இதில் முதல் கேள்வி தொழில் பற்றியது. இதில் நாட்டின் நிலை தெரிந்துவிடும். தொழிலுக்கு ஒழுங்காகச் சென்றால் உடல்நிலை நன்றாக இருக்கும். சோம்பல் மிகாது. எனவே அடுத்த கேள்வி நீங்கள் நன்றாக இருக்கிறார்களா? தொழிலும் குடும்பத்தலைவனும் நன்றாக இருந்தால் மனைவியும், குழந்தைகளும் நன்றாக இருப்பர். ‘மதிதரு குமரர்” என்கிற சொல்லாடலில் நல்ல குடும்பத்துப்  பிள்ளைகள் அறிவாற்றல் மிகுந்து காணப்படுவர் என்பதற்கிணங்க கேள்வி கேட்கிறான். எதிர்காலத்தில் மிகப் பெரும் சக்கரவர்த்தியாகப் போகும் ராமனது முன்னோட்டக் கேள்வி இது. முதிர்தரு கருணை என்கின்ற வினைத்தொகையை (முக்காலம்) கையாள்கிறான்.
‘எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர்தரும் கருணையின் முகமலர் ஒளிர,
ஏதுவினை? இடர் இலை? இனிது நும் மனையும்
மதிதரு குமரரும் வலியர்கொல்” (க.ரா.311)

குருகுலத்திலும், வெளியிடங்களிலும் கற்றுக்கொண்டதை வெளிப்படுத்துவது இராமனது ஆளுமை வளர்ச்சியாகக் கொள்ளலாம். அனுபவங்கள் தான் மனிதனின் ஆளுமை வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும் படிக்கட்டுகளாக இருக்கின்றன.

ஆளுமை அமைப்பு:

மிகப்பெரிய கட்டிடத்தின் அஸ்திவாரம் ஆளுமை. செயல் செய்வதற்கு முன்பு சற்றே யோசித்தல், பின் விளைவுகளை தொலைநோக்குப் பார்வையில் பார்த்தல், அளவிடல், அவசியப்பட்டால் பிறரின் ஆலோசனையை ஏற்றுக்கொள்தல், குழப்பமற்ற மனோபாவத்துடன் செயல்படுவதற்குத் தன்னைத் தயார்ப்படுத்துதல் என்று அடுக்கிக்கொண்டு செல்லலாம். தாடகை வதத்தின் போது பெண் என்று யோசிக்கின்றான் பெருங்குணத்தவன் இராமன். பின்பு விசுவாமித்திரர் சொல்வதைக் கேட்டு தாடகையைக் கொல்கின்றான்.
‘பெண்ணென மனத்திடை பெருந்தகை நினைத்தான்” (க.ரா.374)

நடையில் நின்று உயர் நாயகனாக இராமன் பரிணமிப்பதற்கு வலிமையான காரணி ஆளுமை அமைப்பே.
ஆளுமை பண்புகள்:
1) முடிவெடுக்கும் திறன்,
2) நேர்மறை எண்ணங்கள்,
3) தகவல் பரிமாற்றத்திறன்,
4) நேரத்தைக் கையாளுதல்
இவை நான்கும் வேதங்களைப் போன்றது.

முடிவெடுக்கும் திறன்:

இராமன் காட்டுக்குச் செல்வதற்கு தயாராகிறான். நீ இங்கேயே இரு, நான் போகிறேன் என்றவுடன், வெகுண்டு எழுகிறாள் சீதை பெருமாட்டி, என்னை விலக்குவது எந்தவகையில் சரி? உனது பிரிவுக் கொடுமையால் மனம் கொதிப்பதை விடவா, காடு என்னைச்சுடும் என்ற வினாவை எழுப்புகிறாள்.

‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு” (க.ரா.1827)

நின் என்கிற சொல்லைக் கம்பன் அழுத்தி உரைக்கின்றான். அகமனை புகுகின்றாள், காடுரை வாழ்க்கைக்கான மரஉரி தரிக்கின்றாள், வா போகலாம் என்று நாயகன் இராமன் கையைப் பிடிக்கின்றாள். இந்த முடிவெடுக்கும் திறன் தான் காப்பியத்தின் மிகப்பெரிய திறவுகோல்.

‘அகமனையை எய்தினள் புனையும் சீரம்
துணிந்து புனைந்தனள்” (க.ரா.1829)
இதனாலேயே சீதை ஏற்றம் பெற்றாள்.

நேர்மறை எண்ணங்கள்:

இன்றைய காலக்கட்டத்தில் சுயமுன்னேற்ற வல்லுநர்கள் அனைவரும் பயிலரங்கத்தில் கையாளுகின்ற வித்தைச் சொல் இது. நேர்மறையான எண்ணங்கள் மட்டுமே கொண்டிருக்கும் போது வாழ்க்கை வசந்தமாகிறது. குகனை, பரதன் கோசலைக்கு அறிமுகம் செய்கின்ற பொழுது புன்முறுவலுடன், ‘மகனே, இராமன் காட்டிற்கு வந்தது நலமேயாயிற்று. குகனுடன் இணைந்து நீங்கள் ஐவரும் ஒற்றுமையாக உலகத்தை ஆள்வீர்களாக” என்று ஆசீர்வதிக்கிறாள் ஆற்றல் சால் கோசலை.

                 ‘நைவீர் அவீர் மைந்தீர்” …. (க.ரா.2368)
தகவல் பரிமாற்றத்திறன்:

தகவல் தொடர்பில் உலகம் எங்கேயோ சென்று கொண்டிருக்கின்றது. தகவலை தெரிவிப்பத்தில் ஒரு நேர்த்தியும், புரிதலும் இருந்தால் தான் அவர்கள் சிறக்க முடியும். இந்திய இளைஞர்கள் இதில் சளைத்தவர்கள் அல்ல. குறிப்பாக தமிழர்கள். இதற்கு காரணம் கம்பன் என்றால் மிகையல்ல. சொல்லின் செல்வன் அனுமன், சொல்லின் செல்வி தாரை இருவரையும் சொல்லலாம். அனுமன், சீதாப்பிராட்டியைத் தேடி அலைந்து, இலங்கையில் கண்டபிறகு இராமனிடம் சொல்ல வருகிறான். பிராட்டியிருந்த தெற்கு திசை நோக்கி வணங்கி குறிப்பால் உணர்த்துகிறான். பிராட்டியை… என்று ஆரம்பித்தால் இராமன் யோசிப்பானோ என நினைந்து தெளிவாக, உறுதியாக, கண்டனன் – எங்கே? எப்படி? என்று ஆரம்பிக்கிறான்.

                 ‘கண்டனன் கற்பினுக்கு அணியை”…. (க.ரா.சு.கா.1307)

சொல்லின் செல்வி தாரையைப் பார்க்கலாம். கார்காலம் நீங்கியும் சுக்ரீவன் வரவில்லையே என்று கோபத்துடன் வருகிறான் இலக்குவன். அனைவரும் நடுங்குகின்றனர். விரைவில் முடிவெடுத்த தாரை, இலக்குவனிடம் நான் பேசுகிறேன் என்கிறாள்.

    ‘அயல் நீங்குமின்….” (க.பா.கி.கா.615)
‘ஐய நீ ஆழிவேந்தன்…” (க.ரா.கி.கா.622)

அண்ணனைவிட்டு பிரியமாட்டாயே, எதற்காக வந்தாயப்பா?” என்று வினவுகிறாள் இசையினும் இனிய சொல்லால்…. மென்மையாக பேசுவது யுக்தியாகும். இது தகவல் பரிமாற்றத்தின் முக்கிய அம்சமாகும்.                                                         .

நேரத்தைக் கையாளுதல்:

பிரமாத்திரத்தால் இலக்குவனும் வானரப்படைகளும் இறந்து போனது போல் மயங்கிக்கிடக்க அனுமனை சஞ்சீவி மூலிகைகள் கொணருமாறு சாம்பவான் அனுப்புகிறார். மேருமலையைக் கடந்து மருந்துமலையைப் பார்க்கிறான். சஞ்சீவி மூலிகைகளை தேடினால் நேரம் வீணாகும் என்று கருதி மலையைத் தூக்கிக் கொண்டுவருகிறான். ‘நேரம் கண்டு செய்தல்” என்ற வழிமொழிக்கேற்ப செய்கின்றான். ‘இங்கு நின்று இன்ன மருந்து என்று எண்ணினால் சிங்கும் ஆல் காலம் என்று உணர்ந்த சிந்தையான்”

ஆளுமைக்கட்டமைப்பு:
நிறைவாக, சிக்கல்கள் இல்லாத தன்மையுடன் பிரச்சனையைக் கையாளுகின்ற தன்மை வருகின்ற பொழுது ஒருவன் நிறைவான ஆளுமைத்தன்மையாளன் ஆகின்றான். இதனைத் தலைமைப் பண்பு என்று சொல்லலாம். படிப்படியாக வளர்ந்து பலநிலைகளைக் கடந்து தலைவனாகிறான். சான்றாண்மை, பேராண்மை, இறையாண்மை என்கின்ற மிகப்பெரும் தன்மைகளை இராமன் பெறுகின்றான்.இலக்குவனிடம் அன்பைக் காட்டுகின்ற பொழுது சான்றாண்மையையும், நிராயுதபாணியாக நிற்கின்ற இராவணனை இன்று போய் நாளை வா என்கிற பொழுது பேராண்மையையும், அனுமனின் பக்தியில் உருகி “என்னைப்
பொருந்துரப் புல்லுக” என்கிற பொழுது இறையாண்மையையும் காட்டுகின்றான் இராமன். ஆளுமைத்தன்மைகளை உள்ளடக்கிய அதிசய ஆளுமைப் பெட்டகம் கம்பராமாயணம். இளைய சமுதாயத்தின் உந்து சக்தியாகவும், ஆக்க சக்தியாகவும், மகிழ்வு சக்தியாகவும் இருப்பவன் கம்பனே.

Alerts cell phone spy software that has alert notification capabilities provides the ultimate in http://phonetrackingapps.com protection from all angles because you can grasp problems before they grow

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “கம்பராமாயணத்தில் கம்பனில் ஆளுமையும் தலைமைப் பண்பும் (கட்டுரை)”
  1. Gandhi says:

    நல்ல கட்டுரை. தொடரும் என நம்புகின்றேன்

அதிகம் படித்தது