மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கரிக்கும்- கண்ணீர்த்துளிகள்! (கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Aug 22, 2020

siragu olippadm

நினைவுகளின் தொகுப்பாய்
மனத்திரை காட்சிகளாய்
ஆண்டுகள் உருண்டோடினாலும்
உருண்டோடா ஞாபகங்கள்
ஒளிப்படங்கள்;

வறுமையின் நிறங்கள்
உடைந்த தரை விரிசல்கள்
வர்ணம் பூசா சுவர்
ஒட்டடையில் எட்டுக்கால்
பூச்சியின் நூல் வீடு
பெருங்கிணறு
சிறு வயதில்
வளர்த்து வந்த
நாய்க்குட்டி
இவற்றைச்
சேமித்து வைத்து
காலத்தைப் பின்னோக்கி
ஓட்டும் கால இயந்திரம்
ஒளிப்படங்கள்;

ஒருமுறை கூட பார்த்திராத
கொள்ளுத் தாத்தன் – பாட்டியை
ஏந்திய  மங்கிய
ஒளிப்படம் தலைமுறைக்
கதைகளின் ஒளியேற்றும்
நெஞ்சத்தில் ;

ஒல்லியான தேகம்
சந்தன நிறத்தில்
நீல நிறப் புள்ளிகள்
கொண்ட பட்டுச்சேலை
அம்மாவும்,
பேல்பாட்டம்ஸ் – இப்பி
சிகை அலங்கார அப்பாவும்
காட்டும் ஒளிப்படம்
எண்பதுகளின் நாகரீக
வண்ணங்கள் ;

அப்பாவின் அம்மா
ஒளிப்படம் பார்க்கும்போதெல்லாம்
யாருக்கும் சொல்லாமல்
மறைத்து முற்றிய
மார்பகப் புற்றுநோய்
நாற்பத்து எட்டு வயதில்
மண்ணுக்குள் புதைத்த
நினைவுகள் அதிர வைக்கும்,
அவள் இறுதிக் கால
தளர்ந்த
நடை நிழலாடும்;

ஆறாம் குழந்தை பிறந்த
சில மாதங்களில் இறக்க- ஜன்னி
கண்டு இறந்து போனாளாம்
அம்மாவின் அம்மா;
அவள் ஒற்றை படம்
கூட நிழலில் வேண்டாம்
பிள்ளைகள் ஏங்குமென
ஐந்து பிள்ளைகளைத்
தனியாளாய் வளர்த்துவிட்ட
அம்மாவின் அப்பா
ஒளிப்படம்
பார்க்கும்போதெல்லாம்
சாதித்துவிட்ட உணர்வை
அவர் முகம் காட்டும்!

தங்கையின் இளஞ்சிவப்பு
சட்டை போட்டு தலை சாய்த்து
அவள் பார்க்கும் ஒளிப்படம்
இன்று வரை
கையிலேந்தா அவள்
மகனின் சாயல் கண்ணிமைகளில்
சாய்ந்துப் பார்க்கும்

கல்லூரி
ஒளிப்படங்களில்
பாடித் திரிந்த
நாட்கள் கண்
நிறையும்,
காலம் திருடிச்
சென்ற நண்பனின்
முகம்
தீமூட்டும்;

எல்லா வீடுகளிலும்
கவிழ்ந்த குழந்தைகளின்
ஆடையில்லா படமுண்டு
மையிட்டு- அரைஞாண்
கயிற்றோடு தலைநிமிர்த்திப்
பார்க்குமந்த நிர்வாண
ஒளிப்படம் இன்றும்
இரகசிய இரவுகளைப்
பலருக்குத் தாலாட்டும்;

ஒளிப்படக் கருவியைக்
கடன் வாங்கியெடுத்த
படங்கள் யாவும்
கரைந்துபோன
இளவேனிற் காலங்களை
இளையராசாவின் இசையாகக்
கடனில் மீட்டெடுக்கும்;

இன்று
நொடிக்கு நொடி
சுயமிகள்
அறிவியல் அருவியின்
நீர்த்துளிகள்;

நீர்த்துளிகள் சேமித்தால்
பெருவெள்ளமாகும்,
மூழ்கிடுதல் ஆபத்து;

ஒளிப்பட
நினைவுகள்
அறுசுவை உணர்த்தும்;
சிலருக்கு
நினைத்தாலே இனிக்கும்,
சிலருக்குப் புளிக்கும்- புல்லரிக்கும்,
சிலருக்கு மயக்கும்-கசக்கும்,
சிலருக்குத் துன்பம்-துவர்க்கும்,
சிலருக்குப் பாசம்-உறைக்கும்
யாருக்கும்,
கரிக்கும்- கண்ணீர்த்துளிகள்!

(ஒளிப்பட நாள் – ஆகஸ்ட் 19- அதற்காக எழுதியது.!!)


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கரிக்கும்- கண்ணீர்த்துளிகள்! (கவிதை)”

அதிகம் படித்தது