மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கருத்தம்மாவின் தாலாட்டும், இதில் ஒளிந்திருக்கும் உண்மையும் (கட்டுரை)

ஆச்சாரி

Apr 15, 2013

முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம். இந்த முத்தமிழும் கலந்ததே தமிழர் நாகரிகமும் பண்பாடும். இன்று நாம் படித்தும், கண்டும், கேட்டும் இன்புறும் கலைகள் அனைத்தும் பண்டைய நாட்டார்  இலக்கியத்தின் எச்சமாகும். அந்த நாட்டார் இலக்கியத்தின் பல்வேறான கலைகளில் ஒன்றே தாலாட்டு.

தால் என்றால் நாக்கு, ஆட்டு என்றால் ஆட்டுதல், நாக்கை ஆட்டி, ஆட்டிப் பாடுதலே தாலாட்டாகும். குழந்தையைத் தூங்க வைக்கவும், அதன் அழுகையை நிறுத்தவுமே இத்தாலாட்டுப் பாடலை அன்றைய காலத் தாய்மார்கள் பாடி வந்தனர். இத்தாலாட்டுப் பாடலை பண்டைய தமிழகத் தாய்மார்கள் ஆராரோ ஆரிரரோ என்றும் , ராராரோ  ராரிரரோ என்றும், உலுலுலுலுலுலாயி … என்றும் தங்களது நாக்கை மேலும் கீழும் ஆட்டிப் பாடும் இப்பாட்டைக் கேட்டு குழந்தை மெய்மறந்து சிறிது நேரத்திலே தூங்கி விடுகிறது என்பது ஆச்சரியமான உண்மை.

 தாலாட்டைப் பாடுகின்ற நம் தாய்மார்கள் இது என்ன ராகம், தாளம், ஆலாபனை என்ற சங்கீத அடிப்படையை அறியாமலேயே நீட்டி முழங்கிப் பாடுவர். இதையே பின்னாளில் வந்த இசை வல்லுனர்களால் இத்தாலாட்டு நீலாம்பரி என்ற இன்பமூட்டும் ராகத்திலே அமைந்த பாடல் எனக் கண்டுபிடித்து இதை வரைமுறைப்படுத்தினர். பெரும்பாலான தாலாட்டுப்  பாடல்கள் இந்த ராகத்திலே தான் பாடப்படுகிறது என்பது பின்னாளில் வந்த இசை கற்றவர்களின் கூற்றாகும்.

 நம் நாட்டுத் தாய்மார்கள் பாடுகின்ற இந்தத் தாலாட்டில், பெற்ற குழந்தையை ராசாவாக வர்ணித்தும், குழந்தை விளையாடும் விளையாட்டுப் பொருட்களையும், உணவுகளையும், குழந்தைக்கு உரித்தான தாய்மாமன் பெருமைகளையும், அவனது குலப்பெருமைகளையும் போற்றிப் பாடப்படுகின்றன இத்தாலாட்டில்,

 இப்பாடல்களில் உவமை, உருவகம், கற்பனை, வர்ணனை, எதுகை, மோனை, இயைபு, அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி போன்ற இலக்கணங்களோடு இப்பாடல்கள் அமைந்துள்ளன. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மழைக்குக் கூட பள்ளிக்கூடம் அருகே ஒதுங்காத, கைநாட்டு இடும் நம் கிராமத் தாய்மார்கள் இத்தகைய இலக்கணத்தோடு தான் இப்பாடலை நாம் பாடுகிறோம் என்ற உண்மை பாடுகின்ற அவர்களுக்கே தெரியாது, தெரியவும் வாய்ப்பில்லை.

சென்ற மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்ட நான் சிகிச்சைக்காக சென்னையிலிருந்து என் சொந்த ஊரான மதுரை – உசிலம்பட்டிக்குச் சென்றிருந்தேன். அங்கே என் அம்மா கருத்தம்மாளைச் சந்தித்துக் கேட்டேன். “அம்மா போன முறை நான் வந்த போது ஒப்பாரிப் பாடலைப் பற்றிக் கூறினீர், பாடினீர். ஆதலால் இந்த முறை உனக்குத் தெரிந்த தாலாட்டுப் பாடல்களைப் பாடு என்று வேண்டினேன், அதற்கு அம்மா சொன்னாள் “ நான் தாலாட்டுப் பாடியே ரொம்ப நாளாச்சு, நீ திடீர்னு  பாடச் சொன்னா எனக்கெப்படி பாட வரும் கொஞ்சம் பொறு யோசிச்சிட்டுப் பாடுறேன் “ எனக் கூறினாள்.

நானும் பரீட்சை எழுதி தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் மாணவனைப் போல பொறுமையாகக் காத்திருந்தேன். பத்து நிமிடத்திற்குப் பின், தன் மெல்லிய குரலில் பாடினாள் தாலாட்டை… அது இதோ உங்களுக்காக … சுடச்சுட…

ஆராரோ ஆரிரரோ…

எங்கண்ணே

ஆராரோ ஆரிராரோ…

கண்ணில்லாத் தேங்காயோ

கணுவில்லாச் செங்கரும்போ

செங்கரும்பத் திங்க வந்த

சேவுகரே உம்மாமன்

இவ்வரிகளில் தேங்காய்க்கு முக்கண் இருக்கும். அந்தக் கண்ணே இல்லாது இருக்கும் தேங்காய், வழுவழுப்பாக இருப்பதைப் போன்றவன் நீயே என உருவகித்துப் பாடினாள். ‘கணுவில்லாச் செங்கரும்போ’ எனப் பாடிய இரண்டாம் வரியில் ஒரு வளர்ந்த கரும்பு போல தேகம் கொண்டவனே என உருவகித்துப் பாடினாள். “செங்கரும்பத் திங்க வந்த சேவுகரே உம்மாமன்’ என்ற வரிகளில் ஒரு குழந்தைக்கு தாய், தந்தைக்குப் பிறகு முழு உரிமை பெற்றவன் அம்மாவோடு பிறந்தவனான தாய்மாமனே. உனக்குச் சேவை செய்ய வந்த சேவகனே  உன் மாமன் எனத் தாய்மாமனின் உறவுப் பெருமையை இங்கே விளக்குகிறது இவ்வரிகள்.

 அல்லிக் கொடியோ

அழகுமல சன்னதியோ

மின்னிக் கொடியோ

மீனாட்சி சன்னதியோ

இவ்வரிகளில் அல்லிக் கொடியோ, அழகுமல சன்னதியோ இதில் அழகுமல என்பது மதுரைக்கு அருகே உள்ள அழகர் மலை ஆகும். இக்கோவிலின் இருப்பிடம் சுற்றி மலையும், செடியும், கொடியும், நீருற்றும் அமைந்த பகுதியாகும். இங்கே மதுரையைச் சுற்றி வாழும்  மக்கள் தங்கள் குழந்தைக்கு நேர்த்திக்கடன் செலுத்த அடிக்கடி அழகர்மலைக்கு வருவது வழக்கம். எனவே இம்மலையில் வளர்ந்த மென்மையான தண்டுகளைக் கொண்ட அல்லிக்கொடி போன்ற தேகம் கொண்டவனே… நீ, நான் வணங்கும் அழகர் மலைக் கோவிலோ என உருவகித்துப் பாடுகிறாள். அடுத்த வரிகளில் “மின்னிக்கொடியோ மீனாட்சி சன்னதியோ” என்பது மின்னலே ஒரு கோடி போலத்தான் இருக்கிறது. அது போன்ற மின்னலடிக்கும் பளிங்கு தேகம் கொண்டவனே நீ, நான் வணங்கும் மீனாட்சி கோவிலோ என உருவகித்து தான் பெற்ற குழந்தையை வியந்து பாடுகிறாள்.

காத்தடிச்சு கரும்பசைய

கருணர்மக கண்ணசர

வெயிலடிச்சு வேம்பசைய

வீமர்மக  கண்ணசர

காற்று அடித்து கரும்பு அசைகிறது. அந்தத் தென்றல் காற்று போல மென்மையானவளே, “கருணர்மக கண்ணசர“ என்ற வரியில் கர்ணனுக்கு மகளே இல்லை. ஆக கொடை வள்ளலான கர்ணனுக்கும் ஒரு மகள் பிறந்திருந்தால் அவள் உன்னைப் போன்று தான் அழகாக இருப்பாள். கண்ணசர, என்றால் கண் உறங்கு எனப்பொருள். “ வெயிலடிச்சு வேம்பசைய” என்ற வரிகளில் கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சி தருவது வேப்பமரம். எனவே நீ குளிர்ச்சி தரும் அந்த வேப்ப மரம் என்றும், வீமர் என்றால் பீமன். பீமனுக்கு மகளே இல்லை. எனவே வீரத்திற்குப் பேர் போன வீமனுக்கும் பெண் பிறந்தால் உன்னைப் போல வீரமாகத்தான் இருப்பார் என உருவகித்து தன் கணவரைக் கர்ணன் என்றும் பீமன் என்றும் உயர்த்திப்பாடப்படுகிறது.

ஆனைய அலங்கரிச்சு

ஆனமுகம் கல்பதிச்சு

ஆனமேல வாராக

அருச்சுனரே உங்களைய்யா

 இப்பாடல் வரிகளில் தாய் தான் குழந்தையிடம், தான் கணவரின் பெருமை பற்றிக் கூறுகிறாள். கிராமத்தில் அம்மாவை, ஆத்தாள் என்றும், அப்பாவை, அய்யா என்றும் பேச்சு வழக்கில் அழைப்பது வழக்கம். அதையே இப்பாடல் வரிகளில் உனது அப்பாவான அய்யாவானவர் எப்படிப்பட்ட பெருமைக்குரியவர் என்றால் அலங்கரித்த ஆணையில் வளம் வரும் அர்ச்சுனனைப் போன்றவர். இப்பேர்ப்பட்ட பெருமைக்குரியவர், பிறந்த உன்னைப் பார்க்க அளவற்ற மகிழ்ச்சியால் ஆனை மேல் வலம் வருவார், எனக் கணவரின் பெருமையை உயர்த்திப் பாடப்படுகின்றன.

காட்டுல நிக்குதுல்ல

கருங்காலி வேங்கமரம்

வேங்கபுரம் வெட்டவந்த

வேடரேல்லாம் உம்மாமன்

 வானுயர வளர்ந்தும், மிகவும் கெட்டித்தன்மை கொண்டும் காட்டில் நிற்கும் வேங்கை மரத்தையே வெட்டி வீழ்த்தும், வேடனைப் போன்ற வீர தீரம் படைத்தவரே உன் தாய்மாமன் எனப்பாடும் தாய், தனது குழந்தையின் தாய்மாமனை உயர்த்திப் பாடப்படுவதாக அமைத்துள்ளதே இப்பாடல் வரிகள்.

எலவம் பஞ்சு ஒம்மேனி

ஒம்பாதம் மருதாணி

ஆராரோ பாட்டக்கேட்டு

அப்படியே தூங்கு கண்ணே

 பிறந்த குழந்தையின் மேனியானது மிருதுவாக இருக்கும் இலவம் பஞ்சு போலவும், குழந்தையின் பாதம் சிவந்து இருப்பது மருதாணிச் சிவப்பு போலவும் இருப்பதாக உருவகித்துப் பாடும் தாய் இறுதியாகக் கூறுகிறாள், நான் பாடும் ஆராரோ தாலாட்டைக் கேட்டுத் தூங்கு கண்ணே எனக் கொஞ்சி நீலாம்பரி ராகத்தில் பாடும் போது எந்தக் குழந்தைதான் தூங்காது?

ஆக அழும் குழந்தையைச் சமாதானப்படுத்தவும், தூங்க வைக்கவும் எழுந்துள்ள இந்த தாலாட்டுப் பாடலானது இன்று அறுபது வயதைக் கடந்த அன்றைய கால தாய்மார்களுக்கு மட்டுமே தெரிந்த அரிய பொக்கிசமாகிப்போனது. இன்றைய தலைமுறைத் தாய்மார்களுக்கு தாலாட்டு என்றால் என்னவென்றே தெரியவில்லை.

 எனக்குத் தெரிந்து  திண்டுக்கல் மாவட்டத்தில் கரூர் சாலையில் உள்ள சாலையூர் என்ற கிராமத்தில் உள்ள என் அத்தை வீட்டிற்கு ஒருமுறை சென்றிருந்தேன். என் அத்தை வீட்டுக்கு அருகே இருந்த ஒரு தாய் தொட்டிலில் தன் குழந்தையை கிடத்திப் பாடினாளே ஒரு பாட்டு நான் மிரண்டு விட்டேன்.

பருத்தியினால் ஆன ஒரு எட்டு முழம் வேட்டியினால் கட்டப்பட்ட தொட்டிலில் அக்குழந்தையைப் படுக்கவைத்துவிட்டு இடது கையினால் தொட்டிலைப் பிடித்துப் பாடினாள் அந்தத்தாய். இயக்குனர் மணிரத்னம் இயக்கிய  “திருடா திருடா” என்ற படத்தில் இடம்பெற்ற

“வீரபாண்டி கோட்டையிலே

மின்னலடிக்கும் வேளையிலே

ஊரும் ஆறும் தூங்கும் போது

கொலுசுச் சத்தம் மனசைத் திருடியதே”

என இந்தப் பாட்டுக்குத் தக்கனவாறு தொட்டிலை ஆட்டினாளே  பாருங்கள், அதுவரை அமைதியாய் படுத்திருந்த குழந்தை   “ ஆங்…..ங்……” எனக் கத்தி அழுததை நான் இதுவரை மறக்க முடியாத நிகழ்வாகும்.

எனவே தாலாட்டு என்ற அரிய பாடல் கலையை இத்தலைமுறை இழந்தும், மறந்தும் வருவது தமிழ்ச் சமூகத்திற்கே ஏற்பட்டு வரும் மிகப்பெரும் இழப்பாகும். மேலே கண்ட அப்பாடல்களை எல்லாம் என் அம்மா பாடி முடிப்பதற்குள் என் அப்பா எருமை மாட்டை மேய்த்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். மேய்ந்து வந்த எருமை மாட்டுக்குத் தண்ணி காட்டச் என் அம்மா சென்று விட்டதால் என் அம்மாவிடமிருந்து வந்த தாலாட்டை முழுமையாக நானும், படித்துக் கொண்டிருக்கும் நீங்களும் கேட்க முடியாமலே போனது.

Many academic departments have identified members of staff who are responsible for building partnerships with employers, placing https://pro-academic-writers.com students and supporting them during their work placement

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கருத்தம்மாவின் தாலாட்டும், இதில் ஒளிந்திருக்கும் உண்மையும் (கட்டுரை)”

அதிகம் படித்தது