மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கறுப்புத் தங்கம் (கிரானைட்–கருங்கல்) கொள்ளை – ஊழல் நடந்தது எப்படி? ஓர் அலசல்

ஆச்சாரி

Aug 15, 2012

“மலை முழுங்கி மகாதேவன்” என கிராமங்களில் ஒரு சொல்லாடல் இருக்கிறது. அதை வெறும் விளையாட்டாக சொன்னவர்கள் மதுரைக்கு அருகில் 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலூருக்கு வந்து பார்த்தால் அதிர்ந்து போவார்கள். ஏனென்றால் மேலூருக்கு அருகில் உள்ள பல மலைகள் இந்த பத்து வருடங்களில் உண்மையிலேயே காணாமல் போய்விட்டன. இந்தக் கொடூரம் இந்தியாவில் ஊழல் எப்படி நடக்கிறது என்பதற்கு மட்டும் உதாரணம் இல்லை. இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கை இந்தியாவின் இயற்கை வளங்களை கொள்ளையிட எப்படி உதவி செய்கிறது என்பதற்கும் ஒரு உதாரணம். இந்தக் கிரானைட் கொள்ளை ஏதோ ஒரு சிலர் மட்டும் செய்தது போல தோற்றம் அளிக்க ஒரு முயற்சி நடக்கிறது. ஆனால் உண்மையில் இந்தக் கொள்ளையில் இந்தியாவின் அத்தனை அதிகார மையங்களுக்கும் பங்கு உண்டு. அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் , மாநில அரசு, மத்திய அரசு அதிகாரிகள், நீதிபதிகள் அத்தனை பேரும் இதற்கு உடந்தை.

இது எப்படி ஆரம்பமானது என்று பார்ப்போம். இந்தியாவின் தாராளமயமாக்கலுக்குப் பின்னர் மத்திய அரசு சுரங்கத் தொழிலை ஊக்குவிக்க முடிவு செய்தது. அதுவும் குறிப்பாக சுரங்கத் தொழிலை தனியார் துறைக்கு தாரைவார்க்கும் விதமாக அத்தனை சட்டங்களும் திருத்தப்பட்டன. இந்தப் பின்னணியில்தான் மேலூரில் உலகத்தரம் வாய்ந்த கருங்கல் பாறைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது ஏதோ உலகத்திலேயே மேலூரில்தான் இருக்கிறது என்று இல்லை. ஆனால் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் தங்கள் நாடுகளில் கறுங்கல் பாறைகளை வெட்டி எடுக்க அனுமதி கொடுப்பது இல்லை. உதாரணமாக நார்வே நாடு முழுவதுமே கருங்கல் பாறை நிரம்பிய மலைகள்தான். ஆனால் நீங்கள் ஒரு செங்கல் அளவு கூட கருங்கல்லை சுலபமாக எடுக்க முடியாது. அதே நேரத்தில் உலகெங்கும் கருங்கல் பாறைகளுக்கு மிகப்பெரும் தேவை இருக்கிறது. மேலை நாடுகளில் பெரும்பாலான நீண்டகால கட்டமைப்புகளுக்கு உதாரணமாக விமான நிலையங்கள், நடைபாதைகள் ஏன் கல்லறைகளுக்குக் கூட இந்த கருங்கல் பாறைகள் அவசியம். இந்த நிலையில்தான் உலகின் கவனம் மேலூரின் மீது திரும்பியது.

மாநில அரசின் சுரங்கங்களை வெட்டி எடுக்க அனுமதி கொடுப்பது “டாமின்” என்னும் மாநில அமைப்பு. இந்த அமைப்புக்குத் தான் சுற்றுப்புறச் சூழல் கெடாமல் சுரங்கத் தொழிலை நடத்தும் பொறுப்பு இருக்கிறது. 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் “டாமின்” அதிகாரிகள், மத்திய அமைச்சர்கள், மாநில அரசியல்வாதிகள் சிலரின் ஆசியோடு இந்தத் சுரங்கக் கொள்ளை ஆரம்பித்தது. இவர்கள் திட்டப்படி “டாமின்” சுரங்கங்களை குறிப்பிட்ட தனியாருக்கு ஏலம் விடும். இந்தத் தனி நபர்கள் குறிப்பிட்ட அளவு பாறைகளை வெட்டி எடுக்க அனுமதி பெறுவார்கள். ஆனால் அதை விட ஆயிரக்கணக்கான மடங்கு வெட்டி எடுப்பார்கள். இப்படி வெட்டி எடுக்கப்பட்ட பாறைகள் திருட்டுத்தனமாக (உண்மையில் எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாரும் தெரியாத மாதிரி நடிப்பார்கள் ) தூத்துக்குடி மற்றும் மற்ற துறைமுகங்களின் வழியாக இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த நாடுகளின் முதலாளிகளுக்கு கொள்ளை மகிழ்ச்சி. ஏனென்றால் இந்த பாறைகளை அவர்கள் சந்தை விலையில் நூறில் ஒரு பங்கு கொடுத்து வாங்க முடிந்தது. நீங்கள் மதுரை விமான நிலையத்தில் இப்போதெல்லாம் அதிகமாக இத்தாலி மொழியை கேட்கலாம். அதற்கு காரணம் இதுதான். இந்த ஊழலில் தமிழகம் இழந்தது சில லட்சம் கோடிகளை சுலபமாக தொடும். உண்மையில் அவர்கள் வெட்டி எடுத்து அனுப்பிய கல்லின் உண்மையான மதிப்பை அவர்களே அறிவார்களா என்பது ஒரு பெரிய சந்தேகமே.

இப்படி ஆரம்பித்த திருட்டில் ஆரம்பத்தில் நிறைய பேர் இருந்தாலும் சில வருடங்கள் கழித்து ஒரு சிலரே நிற்க முடிந்தது. அதில் முக்கியமான ஒரு நபர் கிட்டத்தட்ட மதுரையில் நிழல் அரசாங்கத்தையே நடத்தி வந்தார். நாளாக நாளாக இந்த கிரானைட் முதலாளிகளின் எல்லைகள் விரிவடைய ஆரம்பித்தன. பாறை எங்கு இருந்தாலும் தோண்ட ஆரம்பித்தனர். வீடுகள், விளைநிலங்கள், கோவில்கள் , பிராதன சின்னங்கள் எதுவும் தப்பவில்லை. மேலூருக்கு அருகில் உள்ள கீழ வளவு என்ற சிறிய ஊர்தான் இந்தக் கொள்ளையின் மையப்புள்ளி. அருமையான விவசாய செழிப்புள்ள அந்த ஊர் இன்று பாதாள கிணறுகள் நிறைந்த பாழடைந்த ஊராகக் காட்சி அளிக்கிறது.

விவசாயிகளிடமிருந்து நிலங்கள் அடிமாட்டு விலைக்கு பல்வேறு முறைகளை பயன்படுத்தி வாங்கப்பட்டன. ஒவ்வொரு ஊரிலும் உள்ள கிராம நிர்வாக அலுவலர் இதற்காக உளவுத்துறை நிபுணர் போல செயல்படுவார். ஒரு வீட்டில் திருமணம் என்றால் இவர் அந்த வீட்டை உடனடியாக அணுகுவார். எப்படியாவது அந்த வீட்டின் தலைவரை திருமணச் செலவுக்கு பணம் தருகிறேன் என்று கூறி சம்மதிக்க வைப்பார்கள். ஒரு வீட்டில் ஒரு மகன் இருசக்கர வாகனம் கேட்டு தொல்லை செய்தால் அவனிடம் உன் அப்பாவை நிலத்தை விற்கச் சொல் என உபதேசம் நடக்கும். சிலருக்கு பெண்கள். சிலருக்கு சாராயம். ஏன் ஒரு கைபேசிக்குக் கூட நிலத்தை விற்ற கொடுமை மேலூரில் நடந்து இருக்கிறது.

அப்படியும் நடக்கவில்லை என்றால் வன்முறை பிரயோகிக்கப்படும். ஆனால் உண்மையில் பெரும்பாலும் வன்முறை தேவையே இருக்கவில்லை. மக்களின் பேராசை இவர்களுக்கு பெரும் உதவியாக அமைந்தது. மக்களின் நிலங்களை அவர்களையே தேடி வந்து விற்க வைத்ததுதான் இந்தக் குழுவின் சாமர்த்தியம். கிராமங்களில் விவசாயம் என்பது மறைந்து “புரோக்கர்” என்ற தொழில் காலூன்ற ஆரம்பித்தது. மேலூருக்கு அருகில் உள்ள தெற்குத் தெருவில் மட்டும் ஒரு பெரிய நிறுவனத்துக்கு கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர் இருக்கிறது. இந்தக் கிராமத்தில் மொத்த நிலத்தில் பாதிக்கும் மேல் இப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளரான மூன்றெழுத்துகாரரின் கையில். மேலூருக்கு அருகில் உள்ள சிட்டம்பட்டி என்ற கிராமத்தில்தான் இந்தப் பதிவுகள் நடக்கும். அதுவும் இரவு பன்னிரண்டு மணிக்கு யாருக்கும் தெரியாமல் ஒட்டு மொத்த பதிவு அலுவலக அதிகாரிகளும் இருந்து இந்தப் பதிவுகளுக்கு உதவி செய்வார்கள். இப்போதும் இந்தப் பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு சென்றால் எங்கும் கிரானைட் குவாரி முதலாளிகளின் படங்களைக் காணலாம். அரசு எந்திரங்கள் அனைத்தும் இந்த முதலாளிகளுக்கு கை கட்டி சேவகம் செய்ய ஆரம்பித்தன.

மதுரை மாவட்டத்தின் பாசன முறையே இந்தக் குழுவால் சீர்குலைந்தது. மதுரை மாவட்டத்தின் சுற்றுப்புறச் சூழ்நிலை இனி மீள முடியாத அளவு பாதிக்கப்பட்டது. இதை கவனிக்க வேண்டிய அரசு இயந்திரத்தை கிரானைட் முதலாளிகள் தங்கள் கையில் ஆடும் பொம்மையாக மாற்றி இருந்தனர். ஒரு சில அரசியல் கட்சிகளைத் தவிர அனைத்து கட்சிகளுக்கும் பணம் வாரி இறைக்கப்பட்டது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் திகட்டத் திகட்ட பணம் கொடுக்கப்பட்டது. கடந்த தேர்தல்களில் ஓட்டுக்கு கொடுக்கப்பட்ட பணத்தில் பெரும்பகுதி இந்தக் கறுங்கல் கொள்ளையர்களின் பணம். இதில் ஒருவரின் மகன்களின் திருமணம் மதுரையில் நடந்தபோது சில உயர் நீதிமன்ற நீதிபதிகள் தனி விமானத்தில் வந்து திரும்பியது இவர்களின் அதிகார பலத்திற்கு ஒரு சிறிய சான்று. இதில் ஒருவர் மத்திய அரசின் சிறந்த ஏற்றுமதியாளர் விருதை பல முறை பெற்றவர் என்பது இவரின் ஊழலில் மத்திய அரசிற்கு என்ன பங்கு என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

இப்படித் தங்கு தடையில்லாமல் போய்க் கொண்டிருந்த கொள்ளைக்கு தினபூமி பத்திரிகையின் நிருபர் மூலமாக முதல் சோதனை ஏற்பட்டது. பல வருடங்களாக உயிரைத் துச்சமென மதித்து அந்த நிருபர் பல ஆதாரங்களை சேகரித்து தினபூமியில் சில வருடங்களுக்கு முன் வெளியிட்டார். கருங்கல் கும்பல் உடனடியாகக் களத்தில் இறங்கியது. அந்த நிருபர் காவல் துறை அதிகாரிகளால் “கவனிக்கப்பட்டார்.” கருங்கல் கும்பல்களின் ஊழியர்கள் பொதுமக்கள் போல அந்த பத்திரிகை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். அன்றைக்கு இருந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில நிர்வாகம் முழுக்க முழுக்க மூன்றெழுத்துக்காரர் ஒருவர் சார்பாக நின்றதால் அந்தப் பிரச்சினையை அப்படியே இந்தக் கும்பலினால் மூட முடிந்தது.

ஆனால் இவை அனைத்தும் திரு. சகாயம் மதுரை மாவட்ட ஆட்சியராக வந்ததும் தவிடு பொடியானது. நேர்மையின் மறு உருவமான சகாயம் இந்தக் குழுவின் அனைத்து கொள்ளைகளையும் மாநில அரசுக்கு அறிக்கையாக அனுப்பி விட்டார். அவருக்கு கிடைத்த இடமாற்றம் இந்தக் குழுவின் அதிகார பலத்திற்கு மற்றுமொரு சான்று. ஆனால் சகாயத்தின் அறிக்கை பத்திரிகைகளில் வெளிவந்ததுடன் மாநில அரசுக்கு நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

இந்தக் கும்பலினால் மதுரையின் விவசாயம் படுத்து விட்டது. இயற்கை வளங்கள் சீர் செய்ய முடியாத அளவு கெட்டு விட்டன. ஆனால் அதை விட பெரிய கொடுமை மதுரையில் உழைக்கும் எண்ணத்தையே இந்தக் கும்பல் அடியோடு மாற்றி விட்டது. சாதாரண விவசாயிகளின் மனதில் பேராசையை உருவாக்கி, சிறு வசதிகளுக்காக நிரந்தர வாழ்க்கையை தொலைக்க வைத்ததுதான் இந்தக் கும்பல் செய்த பெரிய குற்றம். இப்போதும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா என்பது பெரிய சந்தேகம்தான். ஏனென்றால் மதுரையின் மலைகளை அழித்த பணம் அவர்களிடம் மலையாகக் குவிந்து கிடக்கிறது.

Use parallelism wordy these books are not primarily for reading, but they are who can do my essay used for reference

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “கறுப்புத் தங்கம் (கிரானைட்–கருங்கல்) கொள்ளை – ஊழல் நடந்தது எப்படி? ஓர் அலசல்”
  1. Robat says:

    சொல்ல துடிக்குதட நெஞ்சம் ,வயிற்றுக்கோ வந்தது இங்கு பஞ்சம் என்ற பாரதியாரின் பாடலுக் கேற்ப நினைவு வருது …

  2. kasivisvanathan says:

    மேலூர் குறித்த தகவல் இந்தியா,இத்தாலி என்று விரிவடைகின்றது. இது போல கொடும்பாளூர், குடுமியான் மலைத் திருட்டு குறித்த தகவல்களும் மக்கள் அறிய விருப்பம் கொள்கின்றனர். இங்கு சித்தண்ண வாசல் இருந்தும் நினைவுச் சின்னம் பற்றிய எந்த அக்கறையும் இல்லாத அரசு, அதிகாரிகள்,பொது மக்கள். அத்தோடு, சிவகங்கையின் – சுண்டைக்காட்டு வேலங்குடி பாறைகள் எல்லாம் “க்ரஷர்” கொண்டு கரைக்கப்படுகிறது. இங்கு பாண்டியர் கல்வெட்டுக்கள் இருந்த(து)(ன) சுவடாவது இருக்கிறதா ? என்று தெரியவில்லை.
    “கல்லில் வடித்த சொல் போலே காலம் கடந்து வரலாறு சொல்லும்” நம் நினைவுச் சின்னங்களை இழக்க, விற்க இப்படியொரு சமுதாயம் ?! இருந்து என்ன ? இல்லாவிட்டால் என்ன ??

அதிகம் படித்தது