மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கலிபோர்னியாவில் மே 18 தமிழர்கள் நினைவு தினம்

ஆச்சாரி

Jun 1, 2012

மே 19, 2012 – பாலோ ஆல்டோ, கலிபோர்னியா

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்கா ரடீ! – கிளியே!

செம்மை மறந்தா ரடீ!

மகாகவியின் இவ்வரிகள் இன்னமும் நம் செவியில் கொதிக்கும் ஈயத்தை ஊற்றிக் கொண்டிருக்கிறது. கண் முன்னே முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழினப் படுகொலையை நம்மால் தடுக்க முடியவில்லையே என்கிற குற்றவுணர்வு நெஞ்சை இன்றும் குத்திக் கொண்டிருக்கிறது. இந்த இனப்படுகொலையை தடுக்கும் பலமிருந்தும் சுற்றத்தைக் காக்க இனத்தைப் பலிகொடுத்தவர்களை காணும்போதும், ஈழத்துச் சகோதரிகளும், தாய்மார்களும் சிங்களச் சாத்தான்களால் சீரழிந்தது கண்டபோதும் பாரதி இன்று இருந்திருந்தால் ஒரு நவீன பாஞ்சாலி சபதத்தையே எழுதியிருப்பான் என்பது நிச்சயம்.

தமிழினத்தின் மாபெரும் அவலம் நடந்து மூன்று ஆண்டுகள் முடிந்தும் பன்னாட்டுச் சக்திகள் அரசியல் தீர்விற்காக இலங்கை அரசை  நெருக்கடியில் ஆழ்த்தாமல் நடந்ததை மறக்கவும், மறைக்கவும் வைக்கும்  முயற்சியில் ஈடுபடுவது தமிழினத்திற்கு மீண்டுமொரு அநீதியை இழைக்கத் திட்டமிடுகிறதோ என்கிற ஐயம் வருகிறது. தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் படுகொலைகளையும் மறக்க மாட்டோம் என்று உலகத் தமிழர்கள் உரத்தக் குரலில் முழங்கி வருவது அச்சக்திகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் உண்மை.

2009 மே திங்களுக்குப் பின் உலகத் தமிழினம் மூன்றாம் கட்ட ஈழப்போரை அறிவித்து தீவிரமாகச் செயல்பட்டு வருவது இலங்கைக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் மாபெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 1950 லிருந்து 1980 வரை ’ஈழத்துக் காந்தி’ தந்தை செல்வா அவர்களின் தலைமையில் ஓர் அகிம்சைப் போராட்டத்தை தமிழினம் நடத்தியது. ஆனால் சிங்களத்தின் பதில், அடக்குமுறையும், அடுத்தடுத்த படுகொலைகளும்தான். சிங்களத்தின் மீது நம்பிக்கையிழந்த தமிழர்கள் 1977-ம் ஆண்டில் வட்டுக்கோட்டையில் ‘தனி ஈழமே தீர்வு’ என்று தங்களது வாக்குகளின் மூலம் உலகிற்கு உணர்த்தினர். தந்தை செல்வாவிற்கு பின் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தலைமையில் தமிழ்ப் போராளிகள் 20 ஆண்டுகளுக்குள் சிங்களம் பூட்டிய அடிமைத்தளையை அறுத்தெறிந்து தமிழீழ நாட்டை உருவாக்கினர். தமிழீழம் புலிகளின் தலைமையில் முழுமையான நாடாகச் செயல்பட்டு வந்தது. கொலை, கொள்ளை, கையூட்டு போன்ற எவ்விதத் குற்றங்களுமில்லாத, உலக நாடுகளுக்கே எடுத்துக்காட்டாக விளங்கி வந்ததைப் பொறுக்காத பன்னாட்டுச் சக்திகள் அனைத்தும் சேர்ந்து ஈழநாட்டை அழித்தது. தமிழர்களை ஒடுக்கிவிட்டோம் என்று கொக்கரித்தது சிங்களம். ஆனால் ஆண்ட இனம் மீண்டும் அடிமையாகுமா? சிங்களத்தின் மீது பன்னாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு ஓர் அறிவுசார்ந்த போராட்டத்தை முன்னெடுத்தது உலகத் தமிழினம்.

தமிழினத்தைக் காக்க இனி ஒருவரிடமும் கையேந்தாமல் தாமே அம்முயற்சியைக் கையெடுக்க பல அமைப்புகள் தோன்றின. அவையனைத்தின் குறிக்கோள் ஒன்றே, அது தமிழின விடுதலை. முதலில் அவ்வமைப்புகள் அவரவர் பாதையில் சென்று கொண்டிருந்தன. தனித்தனியே தம் போராட்டங்களை நடத்திச் சென்றன.

‘ஒன்றுபட்டால்தானே உண்டு வாழ்வு?’ அதையறிந்த அறிவார்ந்த தலைவர்கள் இந்த ஆண்டு ‘தமிழர் நினைவேந்தல்’ நிகழ்வை ஒன்றாக செயல்படுத்த முடிவு செய்தனர்.  அதன் விளைவாக வளைகுடா வாழ் தமிழர்களும் அமெரிக்கத் தமிழர் அரசியலவையும் (United States Tamil Political Council) இணைந்து வரலாற்று சிறப்புமிக்க நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கு செய்தன. இந்நிகழ்வு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பாலோ ஆல்டோ நகரில் மே 13-ம் நாள் முள்ளிவாய்க்காலில் உலக நாடுகளின் சதியால் அழித்தொழிக்கப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடந்தேறியது. சான்பிரான்சிஸ்கோ பகுதி வாழ் தமிழர்களின் சீரிய முயற்சியால் இந்நிகழ்வு சாத்தியமானது. கண்ணீரில் துவங்கினாலும் தமிழர்களுக்கு ஒரு புத்துணர்வை இந்த நிகழ்வு அளித்தது என்பதுதான் உண்மை. இந்த நிகழ்வின் சிறப்பு,  முதன் முதலாக நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை என்கிற இருபெரும் அமைப்புகளும் கலந்து கொண்டன. இவ்விரு அமைப்பின் தலைவர்களும் ஒருங்கிணைந்து கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது.

ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்

உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப்

பௌவம் உடுத்தைப் பயங்கெழு மாநிலம்

கையப் படுவது பொய்யா காதே

புறம் 58.20-23

நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமையமைச்சர் மேதகு விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களும், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை முனைவர் எஸ்.ஜே. இமானுவேல் அவர்களும் இணைந்து அமர்ந்திருந்ததைக் கண்ட போது நமக்கு மேல் கண்ட புறப்பாடல்தான் நினைவிற்கு வருகிறது. காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் எனும் சங்கப் புலவர்சோழன் திருமாவளவனும், பாண்டியன் பெருவழுதியும் ஓரிடத்தில் கண்டபோது பாடிய பாடலிது. அதன் பொருள், ’நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிடுவீர். இருவரும் இப்படி இணைந்திருந்தால் உலகங்கள் அனைத்தும் உங்களிடத்தில் இருக்கும்’. அது போல புலம்பெயர்ந்த தமிழர்களிடையே பெரும் அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட முடிவு எடுத்திருப்பது, தமிழீழம் நம் கையில் அகப்படும் காலம் மிகத் தொலைவில் இல்லை என்பதை உணர்த்தி இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழர்களின் நினைவாக இவ்விரு அமைப்புகளும் இணைந்து நினைவேந்தல் செய்தியொன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள். அச்செய்தியை கீழ்க்காணும் தளத்தில் காணலாம். (http://world.einnews.com/pr_news/96545174/major-diaspora-tamil-groups-tgte-gtf-jointly-issued-rememberance-message) இரு அமைப்புகளும் வரும் காலங்களில் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

இந்த நிகழ்வு மதியம் 3 மணியளவில், இறந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் கண் ஒரு நிமிட மௌனத்துடன் துவங்கியது.  திரு இளங்கோ சேரன் அவர்கள் அனைவரையும் வரவேற்று நிகழ்வை தொகுத்தளித்தார்.

  • முதலில் உலக மன்னிப்பு சபை (Amnesty International) அமைப்பைச் சேர்ந்த டெரி ஹில்டன் (Teri Hilton) மற்றும் மோனிகா பகானி (Monica Pagani), இலங்கைத் தமிழர் மனித உரிமை பிரச்சினையில் தமது அமைப்பு எப்படி செயலாற்றி வருகிறது என்பதை அழகாக எடுத்துரைத்தார். போர்க் குற்றத்தை விசாரிக்க பன்னாட்டு விசாரணைக் குழு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
  • அதன் பின்பு வளைகுடாப் பகுதி டார்பர் குழுவைச் (Bay Area Darfur Coalition) சேர்ந்த திருமதி மார்டினா நீ (Martina Knee) அவர்கள் ஈழப் படுகொலையையும் யூத மக்களின் படுகொலையையும் ஒப்பிட்டுப் பேசினார். யூதர்கள் அழிக்கப்பட்டுவரும் வேளையிலும் வரலாற்றை மறக்காமலும், அவர்களுக்கு நடந்ததை ஆவணப்படுத்தி வந்ததையும் குறிப்பிட்டார். அது போல் தமிழர்கள் தமிழினத்திற்கு நேர்ந்த அவலத்தையும், போர்க்குற்றத்தையும் தொடர்ந்து ஆவணப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
  • இவரைத் தொடர்ந்து, ருவாண்டாவைச் சேர்ந்த திரு. வின்சண்ட் முகாபே தம் மக்களுக்கு நடந்த படுகொலையை விவரித்து ஈழ மக்களுக்கு நேர்ந்த அவலத்தை தம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது என்று உருக்கமாக விளித்தார்.  இவரது குடும்பமே இந்த இனப்படுகொலையில் மாண்டதை அவர் விவரித்த போது அரங்கமே அமைதியில் ஆழ்ந்தது.
  • தொடர்ந்து, அமெரிக்கத் தமிழர் அமைதி அமைப்பின்  (Tamil American Peace Iniative) இயக்குநர், மருத்துவர் காருண்யன் அருளானந்தன் அவர்கள் அமெரிக்கத் தமிழர்களின் செயல்பாடுகளை விரிவாக விளக்கினார்.
  • பின்பு, சான் ஓசே நகரமன்ற உறுப்பினர் திரு. ஆஷ் கால்ரா (San Jose City Council member) இலங்கை அரசின் மனித உரிமை மீறலைக் கண்டிந்து தமது அரசான அமெரிக்க அரசும் இதற்கு உடன் போனது கண்டிக்கத்தக்கது என்று பேசினார். இப்போராட்டத்தில் தாம் தமிழர் பக்கம் என்றும் இருப்பேன் என்று உறுதிகூறியது அனைவருக்கும் ஒரு தெம்பைக் கொடுத்தது. இது போன்ற நிகழ்வுகள் மூலம் தமிழருக்கு நேர்ந்த அநீதியை தொடர்ந்து செய்ய வலியுறுத்தினார்.
  • முனைவர் புஷ்பா ஐயர் (Monterey Institute for International affairs) அவர்களும் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசினார். தமது முனைவர் படிப்பிற்காக வன்னியிலே ஈழமக்களிடையே வாழ்ந்ததை நினைவு கூர்ந்த அவர், பன்னாட்டு விசாரணை ஒன்றே உண்மையை வெளிக்கொணரும் என்றார். இவர் அனைத்து தமிழர் நிகழ்வுகளில் கலந்து கொண்டு உலகத்தமிழர் முயற்சிக்கு ஆதரவளித்து வருகிறார்.
  • இளந்தமிழரணியின் (www.ilantamilar.org) செயற்குழு உறுப்பினர் திரு. கார்த்திகேயன் தங்கமுத்து அவர்களும் இறந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தி, தமிழகத் தமிழர்கள் என்றும் ஈழத்தமிழர்களுடன் இருப்பார்கள் என்று உறுதி கூறினார்.
  • அமெரிக்கத் தமிழர் அரசியலவையின் (United States Political Action Council) தலைவர் முனைவர் இலியாஸ் ஜெயராஜா அவர்கள் USTPAC அமைப்பின் செயல்பாடுகளை விவரித்து தம் அமைப்பு போர்க்குற்ற விசாரணையில் ஆற்றிவரும் பங்கை எடுத்துக் கூறினார். அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தில் (UNHCR) நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தில் USTPAC-ன் பங்கை விவரித்தார். தம் அமைப்பிலிருந்து இரு உறுப்பினர் ஜெனிவா சென்று இதற்கு உதவியதையும் நினைவு கூர்ந்தார்.
  • தொடர்ந்து, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் அவர்கள் விரிவாக உரையாற்றினார். “அனைத்துலகச் சட்டங்கள் நியாயங்களையெல்லாம் குழி தோண்டிப் புதைத்தவாறு பயங்கரவாதத்துக்கெதிரானப் போர் என்கிற போர்வையில் அநாகரீக முறையில் பல்லாயிரக்கணக்கான பொது மக்களை சிறீலங்கா அரசு கொடிய முறையில் கொன்றொழித்தது. ஐக்கிய நாடுகள் சபை உள்ளடங்கலான அனைத்துலக சமூகம் இப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்த உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என்பது ஒரு வரலாற்றுப் பதிவாகியிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் நாம் முன்னெடுக்கும் நமது மூன்றாம் கட்ட விடுதலைப் பயணத்தில் இம்முயற்சி ஒரு முக்கிய மைல்கல்லாகும். உலகத் தமிழர் பேரவையுடன் பல்வேறு புலம்பெயர் தமிழமைப்புகளுடனும் இலங்கையில் தமிழ்ப்பேசும் மக்கள் பிரதிநிதிகளுடனும் இவ்வை பொதுவான புரிந்துணர்வு நோக்கி செயற்படவுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலக தமிழ் மக்களிடையே, அதுவும் குறிப்பாக தமிழக உறவுகளிடையேயும் மற்றும் சர்வதேச மக்கள் சமூகத்திடையேயும் தமது வலுவைத் திரட்டி வருகிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூறும் இன்றைய தினத்திலே நமது மக்களின் விடுதலை நோக்கிய பயணம் ஓய்வின்றித் தொடரும் என்ற தெளிவான செய்தியினை நாம் கூட்டிணைந்து வெளிப்படுத்த விரும்புகிறோம்.” என்று திரு. இமானுவேல் அவர்கள் உரையாற்றினார்.

  • இறுதியாக, நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமையமைச்சர் மேதகு விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் தம் அரசின் பணிகளை விவரித்து, போர்க்குற்றத்தை விசாரிக்க பன்னாட்டு விசாரணைக் குழு (International Investigation)அமைத்தால்தான் போரின் இறுதி நாட்களின் உண்மை நிலை வெளிவரும் என்று ஆணித்தரமாக எடுத்து வைத்தார். விடுதலை அடைந்த தனித் தமிழீழ நாடு ஒன்றே இப்பிரச்சினைக்குத் தீர்வு என்று கூறிய திரு. உருத்திரகுமாரன் அவர்கள், இலங்கையில் இன்று தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்முறையை எடுத்துரைத்தார். தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடருவதாகவும், தமிழ் நிலங்களில் சிங்கள குடியேற்றங்கள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதையும் எடுத்துக் காட்டினார். தமிழர் தாகம் தமிழீழத் தாயகமே என்று முழங்கி தமது உரையை முடித்தார்.
  • திருமதி நளாயினி குணநாயகம் தனது நன்றியுரையில், என்று எம் நாட்டில் இரவு நேரங்களில் இளம்பெண்கள் தனியாக நெஞ்சில் அச்சமின்றி செல்லுவார்களோ, அன்றுதான் நமக்கு பொன்னாள் என்று உருக்கமாக பேசி அனைவரையும் நெஞ்சடைக்கச் செய்தார்.

முடிவாக விதையாகிய தமிழ் மக்களுக்கும், மாவீரர்களுக்கும் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வு தமிழர் ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றியது. விழாவில் சுவிட்சர்லாந்திலிருந்து பேராசிரியர் ஸ்ரீகந்தராசா உட்பட பல மாநிலங்களிலிருந்து தமிழர்கள் வந்திருந்தது கலந்து கொண்டது அனைவருக்கும் ஓர் ஊக்கத்தையும், நம்பிக்கையும் தந்தது.

’எங்கோ மறைந்தார் எங்கள் பகைவர் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே’ என்று கனவுகண்ட பாவேந்தனின் கனவு நினைவாகப் போவது வெகுதொலைவிலில்லை என்பதையே இந்த நினைவேந்தல் நிகழ்வு உலகத்திற்கு காட்டியது என்பது மிகையல்ல.

http://www.prweb.com/releases/2012/5/prweb9517894.htm

http://world.einnews.com/pr_news/96545174/major-diaspora-tamil-groups-tgte-gtf-jointly-issued-rememberance-message

Having assembled your ideas, it is then necessary to find a suitable order-essay-online.net framework for the essay

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கலிபோர்னியாவில் மே 18 தமிழர்கள் நினைவு தினம்”

அதிகம் படித்தது