மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கல்உடைக்கும் தொழிலாளர்களின் கண்ணீர்க் கதை

ஆச்சாரி

Jan 25, 2014

பலகோடி  ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையின் சீற்றத்தால் பூமியிலுள்ள அனைத்து வளமும் மண்ணுக்குள் புதைந்து கடினப் பாறைகளாக உருமாறியது. கற்கால மனிதர்கள் கற்களையே ஆயுதமாகப் பயன்படுத்தினர். அதன் பின் வந்த மன்னர்கள் தங்கள் கோட்டை, கோவில் கட்ட இந்த கடினப்பாறைகளை வெட்டி எடுக்கவும், சுமந்து செல்லவும் மனிதர்களையும் மிருகங்களையும் பயன்படுத்தி கோட்டை கொத்தளங்களை எழுப்பினர்.

அன்று பாறைகள் உடைக்கப்பட்ட பகுதியை பாறைக்குழி, கல்வெட்டாங்குழி எனக்குறிப்பிட்டனர். இன்று பாறைகளை வெட்டித் தோண்டி எடுக்க வசதியாக, ஆழமாகவும், அகலமாகவும் தோண்டி எடுக்கப்படும் பெரும் குழியை “குவாரி” எனக் குறிப்பிடுகின்றனர்.

இன்று அரசுத் துறைகளின் உதவியுடன் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் குவாரி உரிமையாளர்கள் என்ற பண முதலைகளின் பேராசைக்கு இயற்கை வளமும், சுற்றுச்சூழலும், மக்கள் நலமும் இரையாக்கிக் கொண்டிருகிறது.

தமிழ்நாட்டில் தருமபுரி, தேனி, மதுரை, கொட்டாம்பட்டி, மேலவளவு, சிவகங்கை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, பெரம்பலூர், சென்னையின் புறப்பகுதிகள் போன்ற இன்னும் பல்வேறு பகுதிகளில் மலைகளும், பூமியும் குடைந்தேடுககப்பட்டு வருகின்றன. இதில் காலகாலமாய் பலர் குடும்பத்துடன் கொத்தடிமைகளாக இருந்து வந்து அதை பல சமூக ஆர்வலர்கள் உதவியும் மீட்ட கதைகள் பலவும் உண்டு.

அந்த வரிசையில் தற்போது மதுரையிலிருந்து சிவகங்கை சாலையில் 5கி.மீ சென்றால் கருப்பாயூரணி என்ற ஊர் உள்ளது. இந்த ஊராட்சியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள பாண்டியன் கோட்டை என்ற கிராமம்.

சுற்றி பச்சை வயல்களையும் ஏரியையும் கொண்ட இக்கிராமத்தின் பிரதான சாலையில், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் பெரும் கல்குவாரி 2 உள்ளது. இக்குவாரியை நடத்துபவர் வி.கே.எம் எனக்கூறப்படும் அம்பலத்தார் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வம்சத்தில் உள்ள கருப்பணன் அம்பலம் என்பவற்றின் மகன் செல்வம் என்பவரே இவ்விரு குவாரிகளையும் நிர்வாகித்து வருகிறார். இவர்கள் கருப்பாயூரணி பிரதான சாலையில் அப்பர் மேல்நிலைப்பள்ளி என்றொரு அரசுப் பள்ளியை நிர்வகித்து வருகின்றனர். தவிர மதுரையில் உள்ள முக்கிய பாலங்களை இவர்களே கட்டியுள்ளனர். அரசு பாலங்கள், தார்ச்சாலைகளை கான்ட்ராக்ட் எடுத்துப் பணி செய்வதே இவர்களின் முக்கியத் தொழிலாகும்.

இந்த அம்பலத்தார் குழுவினர் நடத்திய இரண்டு கல்குவாரிகளைச் சென்று பார்வையிட்ட போது எனக்குக் கொஞ்சம் தலை சுற்றியது. காரணம் கொடைக்கானலின் தற்கொலைப் பாறையில் நின்று கொண்டு கீழே பள்ளத்தாக்கைப் பார்க்கும் போது எந்த ஒரு சிலிர்ப்பு ஏற்படுமோ அந்த ஒரு சிலிர்ப்பு இந்த கல்குவாரிகள் தோண்டப்பட்ட பள்ளத்தைக் காணும் போது எனக்கு இருந்தது.

குறைந்த பட்சம்  100 அடி ஆழத்தில் இக்குவாரிகள் தோண்டப்பட்டு இருந்தது. இக்குவாரிக்குள் கனரக வாகங்கள் சென்று பாறைகளையும், உடைக்கும் கற்களையும் கொண்டு வர பாறையில் உருவாக்கப்பட்ட செயற்கைச் சாலைகள் இருந்தன. இக்கல்குவாரியைச் சுற்றி மூன்று புறமும் பச்சை வயல்களும், ஒரு புறம் பள்ளிப் பேருந்துகள் உட்பட பிற வாகனங்கள் செல்வதற்கான தார்ச்சாலைகள் இருந்தன.

இதில் உள்ள ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்த தார்ச்சாலை அதன் பாதாள பள்ளம் கொண்ட கல்குவாரியின் விளிம்பில் வாகனங்கள் நகர்ந்து செல்கின்றன. ஒரு அடி வாகனகள் தவறிச் சென்றாலும் 100 அடி கரும் பாறையில் விழுந்து நொறுங்குவதைத் தவிர வேறு வழியில்லை. இப்படியொரு அபாயகரமான பயணத்தை இப்பகுதி மக்கள் மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு கல்குவாரியின் மேற்புறத்தில் நின்று கவனித்த நான் மெல்ல நூறு அடி பள்ளத்திற்குள் இறங்கினேன். அவ்வளவு பெரிய அதள பாதாளத்திற்குள் இரண்டு முதியவர்கள் மட்டும் கல் உடைத்துக் கொண்டிருந்தனர். மெல்ல அருகில் சென்றேன். என்னை வேற்றுகிரகவாசி போல் வெறுக்க வெறுக்கப் பார்த்தார்கள். மெல்ல அவர்கள் பற்றியும் அவர்களின் தொழில் பற்றியும் கேட்டதற்கு அவர்கள் கூறியவை.

மணி (கல் உடைக்கும் தொழிலாளி):

நான் கரும்பாயூரணியிலிருந்து இந்த வேலைக்கு வருகிறேன். காலை 7  மணிக்கு வந்து கல் உடைத்தால் மாலை 6 மணி வரை வேலை கொடுப்பார்கள். (சின்னக்கல் என்பது 3 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்ட கல்) பெரிய கல்லை உடைத்து ஜல்லியாக்கினால் ஒரு கல்லுக்கு  3 ரூபாய் கொடுப்பார்கள். ( பெரிய கல் என்பது 4 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட கரும்பாறை)

இதையே ஒரு யூனிட் ஜல்லிக்கல்  உடைத்தால் ரூ. 300 ரூபாய் கிடைக்கும். ஆனால் ஒரு யூனிட் ஜல்லிக்கல் உடைக்க நான்கு நாட்கள் ஆகும்.

காலை  7 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் முழுவதும் பெருங்கற்களை உடைத்து கால் யூனிட் அளவிற்கே ஜல்லிக்கல் உடைக்கிறேன். கால் யூனிட் உடைத்தால் ஒரு நாள் சம்பளம் 75 ரூபாய் கிடைக்கும். எங்களுக்கு வாரச்சம்பளம் தருகிறார்கள். ஒரு வாரம் முழுக்க கல் உடைத்தால் ரூ. 800 கிடைக்கும். இவ்வாறு கல் உடைக்கும் போது தெறிக்கும் சிறு கற்கள் கத்தி போல் சிதறி வந்து கால், கைகளைக் கிழிக்கும். ரத்தம் கொட்டும். அதற்காக நாங்க மருத்துவமனைக்கு சென்றால் எங்கள் கூலி கெட்டுவிடும் என்பதற்காக இந்த தரையில் கிடக்கும் மண்ணை அள்ளி சிறு சிறு மண்ணாக கையால் தெள்ளி எடுத்து அதை காயம்பட்ட இடத்தில் பூசிவிட்டு எங்கள் வேலையைத் தொடங்குவோம்.

நான் கடந்த  40 வருடமாக இந்தக் கல் உடைக்கும் பணியையே செய்து வருகிறேன். முன்பெல்லாம் நாள் முழுக்க வேலை பார்க்கத் தெம்பும், திராணியும் உடலில் இருந்தது. தற்போது ஒரு மாதத்தில் 15 நாட்கள் மட்டும் கல் உடைக்கிறேன்.  15 நாட்கள் ஓய்வெடுக்கிறேன்.

தற்போது பி.ஆர்.பி ஊழல் நடந்த பின் எல்லா குவாரிகளிலும் வெடி வைத்துப் பாறைகள் தகர்க்க அரசு தடை விதித்துள்ளது. அதனால் நாங்கள் ஆப்பை கற்பாறைகளின் இடுக்குகளில் பொருத்தி சம்மட்டியால் அடித்து பாறைகளைப் பிளந்து ஜல்லிக்கற்களாக மாற்றுகிறோம்.

எனக்கு வேறு வேலை தெரியாது. வேறு வேலை செய்யவும் பிடிக்கவில்லை. ஆதலால் ஏன் ஆயுளின் இறுதிவரை இந்த வேலையைப் பார்ப்பதைத் தவிர வாழ்வதற்கு எனக்கு வேறு வழியில்லை.

கிருஷ்ணமூர்த்தி:

எனது சொந்த ஊர் மதுரை மேலூர் ஊராட்சியில் அமைந்துள்ள கீழையூர் கிராமம் ஆகும். எனக்கு  60 வயது ஆகிறது. நான் கடந்த  45 வருடமாக இந்த கல்குவாரிகளில் கல் உடைக்கும் பணி செய்து வருகிறேன். இந்த கல்குவாரிக்கு வருவதற்கு முன் கீழையூரில் உள்ள பி.ஆர்.பி கிரானைட் நிறுவனத்தில் கல் உடைக்கும் வேலை பார்த்தேன். ஒரு நாளைக்கு கல் உடைத்தால்  100 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள்.

பி.ஆர்.பி. நிறுவனத்தில் ஆளுயர இருக்கும் பெரும் பெரும் கற்களை எடுத்து சோதனை செய்து, கரடு முரடாக இருக்கும் பெரும்பாறைகளைத் தட்டிச் செதுக்கி சதுர வடிவக் கற்களாக மாற்றும் பணியிலும் இருந்தேன். இப்படி பெரும் பாறைகளை தட்டிச் செதுக்கும் போது ஒரு மீட்டர் அளவு செதுக்கினால் 300 ரூபாய் கூலி கொடுத்தார்கள். அங்கு இருக்கும் போது நன்கு உழைத்துச் சம்பாதித்தேன். நல்ல கூலியும், உணவும் கொடுத்தார்கள்.

இங்கு பி.ஆர்.பி. கிரானைட் ஊழல் நடந்த பிரச்சனையில் எங்களுக்கு வேலை இல்லாமல் போனது. எனக்கு விவசாய வேலை தெரியாது. இதுவரை அவ்வேலையைச் செய்ததும் இல்லை. ஆதலால் கல் உடைக்கும் பணி வேறு எங்கு கிடைக்கும் எனத் தேடி அலைந்து இறுதியாக பி.கே.எம் செல்வம் அவர்கள் நடத்தும் இந்தப் பாண்டியன் கோட்டை கல்குவாரியில் ஏதோ கிடைத்த வேலையைச் செய்து பிழைக்கலாம் என வந்து இங்கு கல் உடைத்துக்கொண்டிருக்கிறேன்.

இங்கு ஒரு சிறு குடிசையில் நான் தங்கிக் கொண்டு நானே சமைத்துச் சாப்பிட்டு வேலை செய்கிறேன். என் குடும்பம் எல்லாம் மேலூரில் உள்ளது. இந்த வயதில் சம்மட்டி பிடித்து அடிக்கும் போது நெஞ்சுவலி வருகிறது. தவிர தூங்கப் போகும்போது உடல்வலி வருவதால் தினமும் மது அருந்தினால் தான் மறுநாள் வேலைக்கு வர முடிகிறது.

இந்த வேலையில் என்னோடு கல் உடைக்கும் மணி கூறியது போல் அந்த அளவுக்கு வருமானம் இல்லை. என்றாலும் தெரியாத வேலையைச் செய்வதை விட கூலி குறைவாக இருந்தாலும் தெரிந்த வேலையைச் செய்வதே எனக்கு சரி எனப்பட்டது. இதைச் செய்து ஏதோ பிழைப்பு நடத்தி வருகிறேன். “வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்” என்ற நிலைதான் இருக்கிறது.

கொட்டும் மழை என்றாலும், கொழுத்தும் வெயில் என்றாலும் இவர்கள்  ஒதுக்கிக் கொள்ள எந்த நிழலும் இடமும் இல்லை. போதிய ஊதியம் இவர்களுக்கு கிடைப்பதில்லை. ஈ.எஸ்.ஐ., ஓய்வூதியம் என்ற எந்தப் பலனும் இவர்கள் அனுபவித்ததில்லை. இங்கு இவர்களுக்கு ஏதேனும் விபத்து நடந்தாலோ, மரணம் ஏற்பட்டாலோ கவனிப்பார் எவரும் இல்லை. இழப்பீடு வழங்க எவரும் இல்லை. இந்த நிலையில் இவர்களின் வாழ்க்கைத் தரச் சூழல் இருக்கிறது.

என்ன ஒரு மன ஆறுதல் தமிழகத்திலேயே சிவகங்கை மாவட்டத்தில் தான் கல் குவாரிகள் குடும்பம், குடும்பமாக பல கொத்தடிமைத் தொழிலாளர்கள் கல் உடைத்து வருகிறார்கள். ஆனால் இந்த இருவரும் கொத்தடிமைகளாக இல்லை என்பதே எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

பல நாள் காணாத நண்பனைக் கண்டு நலம் விசாரித்துத் திரும்பும்போது ஏற்படும் மனநிலையே, எனக்கு இவர்களைக் கண்டு பேசிவிட்டுத் திரும்பும் போதும் இருந்தது.

The academic disciplines have at least college essay writing help as urgent an agenda

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கல்உடைக்கும் தொழிலாளர்களின் கண்ணீர்க் கதை”

அதிகம் படித்தது