மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் எதற்கு?

ஆச்சாரி

Jan 15, 2013

மொழிப்பாடம் ஏன் தேவை? மொழி வகுப்புகள் ஏதற்காக? என இக்கட்டுரைக்கு தமிழிலே தலைப்பு வைத்திருப்பதே மாணவர்களுக்கு புதிதாகவும், புரியாததாகவும் இருக்குமானால் படிக்காமலேயே இப்பக்கத்தை புரட்டலாம். அறிவியல் கல்லூரிகளில் சில ஆண்டுகள் முன்பு வரை BA, Bsc, Bcom போன்ற படிப்புகள் மட்டுமே முக்கியத்துவம் பெற்றிருந்த நிலை மாறி இன்று BBA,  BCA,  BSW போன்ற அறிவியல் பிரிவில் Vis com,  Mic.Bio, போன்ற காலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் பல துறைகளும் அறிமுகப்படுத்தப் பட்டு அவை அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றன.

நம் நாடு வளர்ந்த நாடுகளுக்கு ஈடாக முன்னேற வேண்டுமானால் கல்வி நிலையில் இத்தகைய வளர்ச்சி கண்டிப்பாகத் தேவை. இது சமுகத்தின் அனைத்து பிரிவினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று. ஆனால் இவ்வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் பல இளைஞர்கள் வாழ்க்கையில் தோற்றுப் போகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.இன்று தமிழிலக்கியம் அல்லாது வேறு துறையைத்  தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் குறிப்பாக மொழிப் பாடமாகத் தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்தவர்கள் மனதில் இருக்கும் கேள்வி “தமிழ் மொழிப் பாடம் எதற்கு?” இதனால் எங்களுக்கோ நாங்கள் பணிபுரியப் போகும் தொழிலுக்கோ என்ன பயன்? இதற்க்குச் செலவாழிக்கும் நேரத்தை முதன்மைப் பாடத்திர்க்குச் செலுத்தினால் இன்னும் அத்துறையில் தேர்ச்சிப் பெற்றவர்களாகத் திகழலாமே. இப்படிக் கேட்பவர்கள் மாணவர்கள் மட்டுமல்ல, சில கல்லூரி ஆசிரியர்களும் தான்.

“இருந்தமிழே உன்னால் இருந்தேன். இமையோர்

விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”

என்றும்,

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்”

என்றும்,

“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

என்றும் பாடித் தம் மொழிப்பற்றை வெளிப்படுத்திய கவிஞர்கள் வாழ்ந்த இம்மண்ணில் தமிழ் மொழியை வெறுக்கின்றவர்களாகவும் அதைப் பேச மறுக்கின்றவர்களாகவும் இன்றைய இளைய தலை முறையினர் தலை எடுத்து வருகின்றனர். மொழியின் மீது கொண்ட பற்று இவ்விதமாய் இருப்பதால் தானோ என்னவோ அம்மொழியின் வழியாய் நடத்தப் படுகின்ற இலக்கியங்களின் மீதான நாட்டமும் மாணவர்களுக்கு இல்லாமல் போகிறது. அது பயனற்றதாகவும், தெரிகிறது.

வாழ்வின் எந்தத் தேவையையும் நிறைவு செய்யக் கணக்கிலடங்கா கருவிகளும், கண்டுபிடிப்புகளும் இன்று வந்த வண்ணம் உள்ளன. இருந்த இடத்திலேயே உலகத்தின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ள இணையதள வசதிகள் இளைப்பில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இருபத்தைந்து வயதுக்குள்ளேயே பல லட்சங்களை ஊதியமாகக் கொடுக்கும் தொழில் நிறுவனங்கள் பெருகி வருகின்றன. இவற்றையெல்லாம் நோக்கித்தான் இன்றைய மாணவர்களின் பயணம் அமைந்துள்ளது. எந்திரமயமாகவும், வணிகமயமாகவும் மாறிப்போன வாழ்க்கையில் இவை புறத்தேவைகளை நிறைவு செய்யுமே தவிர அகத்தேவைகளான அமைதியையோ, இளைப்பாறுதலையோ இவற்றால் தர முடியாது. இவற்றைத் தரக் கூடிய அருமருந்து இலக்கியக் கல்வி தான்.

மாணவர்கள் தேட விழையும் மேற்கூறிய செல்வங்களைப் பெறுவதற்கு இலக்கியம் வழிகாட்டுகிறது.

“வாய்மையின் விழா அது மன்னுயிர் ஒம்புநர்க்கு

யாதும் உண்டோ எய்தோ அரும்பொருள்” என்கிறது

சிலம்பு, எப்போதும் உண்மையைப் பேசிக் கொண்டு, எந்த உயிர்க்கும் துன்பம் தராமல் வாழ்வானால் அவரால் உலகில் அடைய முடியாப் பொருளும் உண்டோ என்று கேட்கிறார் இளங்கோவடிகள்.

ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் வாழ்வாங்கு வாழத்தான் போராடிக் கொண்டிருக்கிறான். அந்த வாழ்க்கையை வாழும் முறையை அவனுக்குக் கற்றுக் கொடுப்பது இலக்கியம் தான்” என்கிறார் ஒரு ஆங்கில அறிஞன். “உலக வரலாற்றை மாற்றி அமைப்பதில் மற்ற எல்லாவற்றையும் விட இலக்கியம் ஆற்றல் மிக்கது, ஏனெனில் அறிவுத் துறைகள் மூளைக்கு மட்டும் எட்டி இயங்குவன. ஆனால் உணர்ச்சிக்கு வடிவங்களான இலக்கியத் துறைகள் மூளையை மட்டுமில்லாமல் மனத்தால் வாழும் வாழ்வு முழுவதையும் இயக்குவன. என்பார் டாக்டர் மு.வ.

மாணவர்கள் எந்த துறையையும் தேர்ந்தெடுக்கலாம்; அதில் சிறந்த புலமை  உடையவர்களாகவும் திகழலாம், இருந்த போதிலும் மூளைச் சோர்வு, அறிவுத் தளர்ச்சி, மாறுதல் விரும்பும் மனநிலை போன்றவை எத்தகைய அறிஞர்க்கும் இயல்பானதே. அத்தகைய நேரங்களில் அவர்க்கு கிடைக்கும் ஆறுதல் களம் இலக்கியத் துறைதான். மீண்டும் அவர்தம் முதன்மைப் பாடங்களில் கவனம் செலுத்த ஊக்கமும் புதுத் தெம்பும் தரத்தக்கது. இவ்விலக்கியங்கள் தான் வெறும் வருகைப் பதிவிற்காக மட்டும் மொழி வகுப்புக்கு வந்து மாணவர்களுக்கு மட்டும் இலக்கியத்தைப் படிக்கும் மாணவர்களுக்கு முதல் இரண்டாண்டு காலத்தில் இலக்கியத்தின் இவ்வாற்றல் புரிவதில்லை. இறுதியாண்டிற்குச் சென்றதும் மொழி வகுப்பு இல்லாத சூழழில், இலக்கியங்களோடு உறவாடாத நிலையில் தான் ஏதோ ஒரு வெறுமையையும் வரட்டுத் தன்மையையும் உணர்கிறோம் என்று வருந்துகிறார்கள்.

மொழி வகுப்புகளுக்குச் செல்வதும் இலக்கியக் கல்வியைக் கற்பதும் எதற்கு என்று  கேட்கும் மாணவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் துறைகளில் பெரும் சாதனைகளையும் உருவாக்கலாம். இவற்றைக் குற்றமறச் சொல்லவும், குறைவறச்  சொல்லவும், பயன் விளைய சொல்லவும் மொழிக் கல்வி தேவை. ஆங்கிலம் வழியாகவோ இன்று எல்லாப் பாடங்களையும் படிக்கின்ற மாணவர்களுக்கு மொழி வகுப்புகளும் இல்லாமல் போனால் தம் பெயரையே தமிழ் மொழியில் எழுதத் தெரியாத அவல நிலைக்கு ஆளாகி விடுவர்.

நம் சமூகத்தை முன்னேற்ற வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட அறிவு சார் துறையில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதாது அதைத் தமிழ் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கத் தமிழ் புலமையும் தேவை. இன்று நாம் பயன்படுத்தும் ஐந்து சொற்கள் ஆங்கிலமாகத்தான் இருக்கிறது. (இன்னைக்கு first hour major class ல  இந்த room ல book அ miss பண்ணிட்டேன்) இப்படித்தான் இன்று தமிழ் மொழியின் பண்பாடு கல்லூரிகளில் மட்டுமின்றி, எல்லா நிலைகளிலும் காணப்படுகிறது. இந்நிலை நீடித்தால் “மெல்லத் தமிழினிச் சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்” என்று பாரதி விடுத்த எச்சரிக்கை நனவாகி விடும். மொழியைத் தொலைத்த பிறகு நாம் எதை அடைந்தாலும் அதனால் நமக்கு என்ன பயன்? எனவே இந்த முகவரியைத் தக்க வைத்துக் கொள்ள நமக்கு மொழிக் கல்வி கண்டிப்பாகத் தேவை.

மொழிக் கல்வியின் மற்றொரு மிகப் பெரிய பயன்பாடு மனதைப் பண்படுத்துவது. அறிவியல் கண்டு பிடிப்புகள் ஏராளம் என்றால் அவை ஏற்ப்படுத்துகின்ற அழிவுகள் அதை விட ஏராளம். நன்மையும், தீமையும் கலந்து அமைந்த அறிவியல் கருவிகளில் அது தொலைக்காட்சியாக இருந்தாலும் சரி, இணையதளமாக இருந்தாலும் சரி, மனிதமனம் அவற்றில் தீமையை நாடி செல்வதையே விரும்புகிறது. அன்பு, அரவணைப்பு, பண்பு, பாசம், கனிவு, கருணை, பணிவு, மனிதநேயம் போன்ற வாழ்வின் மதிப்பீடுகளை மனித மனங்களில் மலரச் செய்ய இலக்கியக் கல்வியால் தான் முடியும்.

“அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்”

ஒருவன் அறத்தைப் போல் கூர்மையான அறிவுடையவனாக இருந்தாலும் அவனிடம் மனிதப் பண்புகள் இல்லாவிட்டால் அவன் மரத்திற்க்குச் சமமானவன் என்பார் வள்ளுவர். அந்த மனிதப் பண்பைப் போதிப்பவை இலக்கியங்களே.

அறிவுத் துறைகள் வெவ்வேறு தளத்திற்கு வளர்ச்சியடைந்து கொண்டு போனாலும் காதல், சோகம், அழுகை, இன்பம், பாசம் போன்ற உணர்வு நிலைகள் அன்றும், இன்றும் ஒரே நிலையில் தான் இருக்கின்றன. காரணம் இவை மனதோடு தொடர்புடையன. இலக்கியங்கள் அந்த மனங்களைப் பிரதிபலித்துக் காட்டுவன. ஒரு மனிதன் மனதைச் செம்மைப் படுத்திக் கொள்ளக்  கற்றுக் கொள்வானானால் தனி வாழ்விலும் சரி சமூக வாழ்விலும் சரி அவனால் வெற்றி பெற முடியும். இலக்கியம் அந்த வெற்றியைத் தரவல்லது.

அடிப்படைத் தேவைகளை அடைந்து விட்டாலே திருப்தியாகிற மற்ற உயிரினங்களைப் போல மனித இனம் திருப்தியடைவதில்லை. வாழ்க்கையை அறிய வேண்டிய தேவையும் மனிதனுக்கு இருக்கிறது. மனிதத் தோற்றத்திலிருந்து இன்றைய நிலை வரை அவன் அடைந்துள்ள அனைத்து வளர்ச்சிக்கும் காரணம் எதையாவது அறிய வேண்டும் என்ற தேடல் உணர்வு தான். இலக்கியம் என்பதும் ஒரு வகை அறிதல் தான். வாழ்வை அறிதல், மனங்களை அறிதல், உறவுகளை அறிதல், சமுகத்தை அறிதல் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இலக்கியம் எத்தகைய ஆற்றல் கொண்டது என்பதை அண்ணல் காந்தியடிகள் தம் சுயசரிதையில் கூறியுள்ள கூற்று மூலம் அறியலாம். என் வாழ்க்கையில் உடனேயே நடைமுறையான மாறுதல்களை உண்டாக்கிய நூல். “கடையனுக்கும் கதி மோட்சம்” என்ற நூலேயாகும். ரச்சினுடைய இம்மகத்தான் நூலில் என் உள்ளத்தில் உறுதிப் பட்டிருந்த கொள்கைகள் பிரதிபலித்திருப்பத்தை நான் கண்டு கொண்டதாகவே நினைக்கிறேன். அதனால் தான் அது என்னை ஆட்கொண்டதோடு என் வாழ்க்கையையும் மாற்றிக் கொள்ளும் படி செய்தது என்று இலக்கியத்தின் ஆற்றலை அனுபவத்தின் வாயிலாகக் கூறுகிறார். இத்தகைய மாற்றத்தை உண்டாகக் கூடிய ஆயிரமாயிரம் இலக்கியங்கள் தமிழ் கூறும் நல்லுலகில் உள்ளன. மதத்தைப் பரப்புவதற்காக தமிழகம் வந்த பிற நாட்டினர் தமிழ் மொழியின் இனிமையால்  கவரப்பட்டு அதன் இலக்கிய இலக்கியங்களைச் சுவைத்ததோடு நில்லாமல் அவர்களால் இயன்ற இலக்கிய இலக்கணச் செல்வங்களைத் தந்து இம்மொழிக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறார்கள் என்றால் நம் அன்னைத் தமிழின் அருமையை நாம் அறியாமல் இருக்கலாமா?

தமிழ் மொழி வகுப்புகள் மொழியைக் கற்றுக் கொடுக்கிறது; இறுக்கமான கல்விச் சூழலிலிருந்து இளைப்பாறுதலைத் தருகிறது; மனதைப் புதுப்பிக்கிறது; பக்குவப்படுத்துகிறது என்பதோடு இல்லாமல் எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கிறது. நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தனர். எப்படி வாழ விரும்பினர், நமக்கான பண்பாடு எது? அப்பண்பாட்டைப்  பாதுகாப்பது எப்படி? என்பவற்றையெல்லாம் நாம் அறிந்துகொள்ள இலக்கிய வகுப்புகளின்றி வேறு எந்த வகுப்பில் முடியும்? இவற்றை அறிந்து கொள்ளாமல் எந்த அறிவுத் துறையில் சிறந்து விளங்கினாலும் நாம் பெரும் பயன் தான் என்ன?

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”

“எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே”

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

போன்ற தமிழ் இலக்கியக் கருத்துக்கள் இன்றைய இளம் உள்ளங்களில் ஆழமாக விதைக்கப்பட வேண்டும். இந்தச் சமூகத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கும் தீவிரவாதம், சாதி, மதச் சண்டைகள் கடவுளை வாழ வைப்பதற்காக மனிதர்களைப் பலியிடும் போராட்டங்கள், தனி மனிதச் சிக்கல்கள்; குடும்பக் கலவரங்கள், அரசியல் அட்டகாசங்கள், அனைத்தும் அடக்கி அமைதியை நிலைநாட்ட மாணவர்களால் முடியும். அத்தகைய மாணவர்களை உருவாக்க இலக்கியங்களால் தான் இயலும். எனவே தமிழ் மொழி வகுப்பை வெறும் வருகைப் பதிவுக்காகவும், தேர்வு நோக்கிற்காகவும் மட்டும் பார்க்காமல் வருங்காலத்தை மாற்றியமைக்கவும் வறண்ட மனத்தை வளமாக்கவும், ஏற்றுக் களமாகப் பார்த்தால் தமிழ் மொழிப் பாடம் வேண்டும் என்ற உணர்வு தானாகத் தோன்றும்.

Evidence from a reputable academic journal or book has more credibility than evidence from magazines or newspapers http://www.college-essay-help.org/

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் எதற்கு?”
  1. வே.தொல்காப்பியன் says:

    நல்ல கட்டுரை. பொருள்களைக் குவித்துக் கொள்வதாலும் நுகர்வு வெறியாட்டத்தாலும் வாழ்க்கை / மனம் நிறைவடையாது என்பதைக் காலத்தில் உணர வேண்டியது அவசியம்.

    மொழிக்கல்வியால் நல்ல, பரந்த மனப்பான்மையையும் உருவாக்கலாம். போலித்தனத்தையும் உயர்வு / தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கலாம். எனவே தமிழ் மொழியில் (அல்லது எந்த மொழியாகவும் இருக்கலாம்) என்ன கற்கிறோம் என்பது முக்கியம்.

    அறிவியல் அடிப்படையில் மனிதர் எல்லோரும் ஒரே இனத்தினர் எனத் தெரிந்து இருந்தாலும் உலகில் ஒருமைப்பாடு அந்த அறிவியல் அடிப்படையில் வரவில்லை. மாறாக இப்படியான அறிவியலை அறியாதோர் உணர்வு நிலையில் கண்டுரைத்த உண்மையே (யாதும் ஊரே யாவரும் கேளிர்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்…) பெரும்பாலோரை அமைதி வழியில், அன்பு வழியில், மனித நேய வழியில் உறுதியுடன் வாழ வைத்துள்ளது.

    மாறாக வெற்றுப் பரிணாம வளர்ச்சி அறிவியல் (வலியது வாழும்…) கோட்பாடுகள் மனிதனை மனிதன் தனியனாகவும், இனமாகவும் நாடாகவும் சுரண்டவும் கொடுமைப் படுத்தவும் கொன்று குவிக்கவும் பூமியின் வளங்களை (காடு, கனிமம்) அளவிறந்த வழியில் கறந்து மாசுபடுத்தவும் இயற்கைச் சுழற்சியைத் தடம் புரட்டவும் அது போன்ற பொருளாதார அரசியலை நேரடியாகவும் மறைமுகமாகவும் நியாயப்படுத்தி வந்துள்ளன.

    மதத்தின் பெயராலும் அறிவியலின் துணையாலும் மனித நேயம் வளரவில்லை. மனித வஞ்சகமே வளர்ந்துள்ளது. இன்று உலகில் தேவைக்கு அதிகமாக உணவு உற்பத்தி ஆகின்றது. அதைப் பகிர்ந்து கொள்ளத் தடையாய் இருப்பது அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி மட்டுமே அடைந்த நாடுகளே; மக்கள் குழுக்களே; மனப்பான்மையே. மனித உரிமை என்பதும் ஆதிக்கப் போட்டியின் தேவைக்கு ஏற்ப சூழ்ச்சியாகப் பயன்படுத்தப் படுகின்றது.

    அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
    தம்நோய் போல்போற்றாக் கடை (திருக்குறள்: 315)

    மொழிக்கல்வி, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, மதம், ஆன்மீகம் எல்லாம் சக மனிதரை, பிற‌ உயிரினங்களை, மண்ணை, மலையை, ஆற்றை, காட்டை, கனிம வளத்தை, இயற்கைச் சுழற்சியை இவை எல்லாம் அடக்கிய பரம்பொருள் இயக்கத்தை உணரவும் நுகரவும் பேணவும் வைக்காவிடில் என்ன பயன்?

  2. Karthik says:

    இன்றைய நிலைமையில் தமிழ்பாடத்தை பார்த்து மாணவர்கள் பயந்து ஓடும நிலையில் தான் பள்ளிப் பாடங்கள் உள்ளது. அதை முதலில் சரி செய்வோம்.

அதிகம் படித்தது