மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கல்வியும், தனியார் மயமாதலும் – கட்டுரை

ஆச்சாரி

Jul 1, 2013

முன்னுரை:

     “அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்

     ஆலயம் பதினாறாயிரம் நாட்டல்

     அன்ன யாவினும் புண்ணியம் கோடி

     ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”

                                                                               -மகாகவி

எந்த ஒரு நாட்டின் முழுமையான அடிப்படை வளர்ச்சிக்கும் கல்வியே இன்றியமையாத கருவியாகும். அதன் முக்கியத்துவம் கருதியே கொத்தாரிக் கல்விக்குழு (1966) –ல் தனது அறிக்கையின் முகப்புரையில் “ இந்தியாவின் தலைவிதி அதன் வகுப்பறைகளில் தான் தீர்மானிக்கப்படுகிறது” எனப் பறைசாற்றியது. நாட்டின் நலன்களை அடையத் தேவைப்படும் சமூகப், பொருளாதார, பண்பாட்டுத் தொடர்புடைய மாற்றங்களை உருவாக்கும் வலுவான கருவி கல்வியே என்ற கருத்து மிகவும் ஏற்புடையதாகும் என்னும் அக்கல்வியை நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்குச் சரியாகச் சென்றடைகிறதா? என்று நோக்குவோமானால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

கல்வி பரவலாக்கப்பட்டு அனைவருக்கும் கிடைப்பதற்குப் பல நிலைகளில் தடைகள் இருப்பினும் கல்வியில் தனியார் மயமாதல் என்ற நிலை ஏற்பட்டவுடன் வருமானம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட கல்வி நிறுவனங்கள் தோன்றி கல்வியைக்  குறுகிய நிலைக்கு அடைத்து விட்டது, இங்கு கல்வி, தனியார் மயமாதல் பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.

கல்வி – பொருள்: கல்வி என்னும் தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் எஜூகேசன் (Education) என்பதாகும், இதன் மூலச்சொல் லத்தீன் மொழியில் உள்ள எஜுகேர் (Educare) என்ற சொல்லாகும். அதன் பொருள் “ வளர்ப்பது” ( to bring up)  என்பதாகும். அதே போல சமசுக்கிருத மொழியில் சிக்ஷனா, அரபிமொழியில் தலீம், கிரேக்க மொழியில் பெடகாஜி (Pedagogy) போன்ற சொற்கள் கல்வி என்ற பொருளையே குறிக்கின்றன.

தனியார்மயமாதல் – பொருள்:

உள்நாட்டுப் பாதுகாப்பு, வெளியுறவு, நிதி தவிர நாட்டின் ஏனைய துறைகளில் தனியார் பங்கேற்பை பெருமளவில் அனுமதிப்பதே “ தனியார் மயமாக்கல்” எனப்படும். முதலாளித்துவக் கொள்கையைப் பின்பற்றி தனிநபர் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோன்றிய தனியார் மயக்கொள்கை இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் (கியூபா, சீனா போன்ற கம்யூனிச நாடுகள் தவிர) ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கல்வியில் தனியார் மயக்கொள்கை:

இந்தியா சுதந்திரம் அடைந்த போது கல்வி என்பது அரசியல் சாசனத்தில் மாநிலப்பட்டியலில் (State List) இடம் பெற்றிருந்தது. தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக் கழகங்கள் வரை அனைத்தும் அரசு நிறுவனங்களாகவே இருந்தன. திரு. ஆ.ஊ.சாக்லா (M.C.Chagla)அவர்கள் மத்தியக் கல்வி அமைச்சராக இருந்தபோது 1960-இல் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து, பொதுப்பட்டியலுக்கு (concurrent List) மாற்றப்பட்டது. நாடு முழுவதும் கல்வியைப் பரவலாக்க இந்திய அளவில் கல்வி அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இதன்படி நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான பாடத்திட்ட ஏற்பாட்டைப் பின்பற்றிப் பாடத்திட்டம் அமைக்க, மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (CBSE) உருவாக்கப்பட்டது. மேலும் இப்பாடத்திட்டத்தை ஏற்றுச் செயல்பட தனியார் சுயநிதிப் பள்ளிகளும் 1966 முதல் அனுமதிக்கப்பட்டன.

இதை முன்னோடியாகக் கொண்டு மாநிலக் கல்வித்துறைகளும் “மெட்ரிக்குலேசன் போர்டு”, “ஆங்கிலோ இந்தியன் போர்டு” போன்ற கல்வி வாரியங்களை நிறுவி அவற்றின் மூலம் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்களைப் பின்பற்றிச் செயல்பட தனியார் சுயநிதிப் பள்ளிகள் அனுமதிக்கப்பட்டன. மேலும் 1992 –ல் திரு.ஏ.நரசிம்மராவ் அவர்கள் பிரதமாராக இருந்தபோது, உலகளாவிய தாராளமயமாக்கல் (Global Liberalization) கொள்கை, இந்தியாவிலும் ஏற்கப்பட்டு உயர்கல்வியிலும் தனியார் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.

இந்தியக் கல்வியில் தனியார் நிறுவனங்களின் பங்கு:

இந்தியா, மக்கள் தொகையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு எனவே பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப அனைவருக்கும் அரசே கல்வியை வழங்க முடியாத நிலை ஏற்பட்ட போது கல்வியில் தனியார் பங்களிப்பு என்பது தவிர்க்க முடியாத காரணியாக உருவெடுத்தது. எனினும் ஆரம்பகால கட்டங்களில் அரசு குறைவான எண்ணிக்கையிலேயே தனியார் கல்வி நிறுவனங்களை அனுமதித்தது. இன்று அதுவே அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களைக் காட்டிலும் பன்மடங்கு உயர்ந்து முற்றிலும் தனியார் ஆதிக்கம் பெற்றுத் திகழ்கிறது.

கல்வித்துறை:

இந்தியாவில் கிட்டத்தட்ட 27 விழுக்காட்டினர் பள்ளிக்கல்வியைத் தனியார் பள்ளிகளில் பயில்கின்றனர். இந்தியாவில் 1800 மகளிர் கல்லூரிகள் உட்பட 16,000 கல்லூரிகளில் கணிசமான அளவில் தனியார் கல்லூரிகள் உள்ளன. உயர்கல்வி அளவில் இந்தியாவில் 42 மத்திய பல்கலைக்கழகங்களும் 275 மாநில பல்கலைக்கழகங்களும் உள்ளன. 130 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும்,90 தனியார் பல்கலைக் கழகங்களும் உள்ளன.

உதாரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் வெறும் 20 கல்லூரிகளே அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளாக உள்ளன. ஆனால் தனியார் கல்வியியல் கல்லூரிகளோ 641 உள்ளன. இதுபோல் பொறியியல், செவிலியர் பயிற்சி, தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் தனியார் பங்களிப்பு அதிகமாகவே உள்ளது. இப்படி மழலையர் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழக கல்வி வரை தனியாரின் பங்கு உள்ளது.

கல்வி தனியார் மயமாக்குவதற்காக காரணங்கள்:

நாடு சுதந்திரமடைந்து 66 ஆண்டுகளாகியும் அரசியல் சாசனத்தில் கூறியுள்ள அனைவருக்கும் எழுத்தறிவு விகிதம் முழு அடைவைப் பெறுவதற்கு, கல்வித்துறையில் வசதி படைத்த தனிநபர் (அல்லது) நிறுவனங்களை ஈடுபடவைத்து கல்வியை வழங்குவது தவிர்க்க முடியாததாகி விட்டது.

கல்வி நிலையங்கள் அரசு கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்போது அவற்றிடையே ஆரோக்கியமான போட்டி ஏற்பட வாய்ப்பில்லை எனவே கல்வியில் தரம் ஏற்பட தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதின் மூலம் ஓரளவு தரமான கல்வி மக்களுக்குச் சென்றடைகின்றது.

இன்று உலகளாவிய அளவில் கம்யூனிசச் சிந்தாந்தங்கள் மதிப்பிழந்து சந்தைப் பொருளாதாரம் செல்வாக்கு செலுத்தும் நிலையில், இந்தியா மட்டும் இத்தகைய போக்கிலிருந்து தனித்து செயல்பட முடியாது. சந்தைப் பொருளாதாரத்தில் “வலுவானவையே எஞ்சி நிற்கும்” (Survival of the Fittest) என்ற கோட்பாட்டின் படி தரமான கல்வி நிறுவனங்களே போட்டியில் வென்று நிலைத்து நிற்கும்.

அரசு தனியார் சுயநிதி நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம், முதலீடு இல்லாமலேயே கல்வி பெருக்கத்திற்கு வழிவகை செய்ய முடியும். அரசுக்கும், நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குகின்ற வகையில் கணிசமான அளவில் வருமானம் தொடர்ந்து வந்து சேரவும் வாய்ப்பு உள்ளது.

கல்வியில் தனியார் மயமாதலால் ஏற்படும் நன்மைகள்:

தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விக்கட்டணம் செலுத்தி கல்வி பெறுவதால் மாணவர்களிடம் பொறுப்பும், அக்கறையும் ஏற்பட்டு கல்வியில் முனைப்பு ஏற்படுகிறது.

தனியார் கல்வி நிறுவனங்களிடையே போட்டி ஏற்படுவதால் ஒவ்வொரு நிறுவனமும் தத்தம் கல்வித் தரத்தைத் தொடர்ந்து உயர்த்திக் கொள்ளவும், நிலை நிறுத்தவும் செய்கின்றன. கல்வித்தர உயர்வால் மனிதவள மேம்பாடு ஏற்பட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

கல்விக்காக கட்டணம் செலுத்துவதால் பெற்றோர்கள் தங்கள் பங்கினையும், பொறுப்பையும் உணர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பை நல்குகிறார்கள்.

தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை வருடந்தோறும் வேகமாக வளர்ந்து வருவதால் படித்த இளைஞர்களுக்குக் குறிப்பாக ஆசிரியர் பயிற்சி முடித்த இளைஞர்களுக்குத் தனியார் துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுகிறது.

தனியார் நிறுவனங்களில் ஆசிரியர்களின் ஊதியமும், பிற சலுகைகளும் அவர்களது திறமையோடு தொடர்பு படுத்தப்படுவதால் அவர்களது வேலைத்திறன் அதிகரித்து மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரம் உயர்கிறது.

கல்வி, தனியார் மயமாதலால் உண்டாகும் தீமைகள்:

கல்விக் கூடங்கள், லாப நோக்கத்தையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படத் தொடங்கி வணிக நிறுவனங்களாகவே மாறிவிடுகின்றன. “ தரமான கல்வியை அளிக்கின்றோம்” என்ற பெயரில் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், போக்குவரத்து வசதி, மதிய உணவு, விடுதி வசதி, சுற்றுலா, நன்கொடை எனக் கூறி மிக அதிகமான தொகையைக் கல்விக் கட்டணமாகப் பெறுகின்றன.

கல்விக்கட்டணம் முதல் பல்வகைக் கட்டணங்களை வசூலிப்பதால் ஏழை மாணவர்கள் இத்தகைய பள்ளிகளில் சென்று கல்வியைப் பெறுவதென்பது வெறும் கனவாகவே உள்ளது.

தனியார் பள்ளிகளிடையே வியாபாரப் போட்டி ஏற்படுவதால் தேர்வுகள் நடத்துவதிலும், கல்வியை வழங்குவதிலும் மோசடிகள் நிகழ்த்தப்படுகின்றன. லஞ்சமும், ஊழலும் கல்வித்துறையில் நுழைந்து மாணவர்களின் கல்வியைச்  சீரழிக்கின்றது.

கல்வியானது மாணவனின் முழு ஆளுமையையும் வளரச் செய்ய வேண்டும். ஆனால் தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை மதிப்பெண் இயந்திரங்களாக மாற்றி போதுத்தேர்வுக்குத் தயாராவது ஒன்றே குறிக்கோள் எனச் செயல்படுகின்றனர்.

கல்வியில் தனியாரின் பங்களிப்பை ஏற்பதற்கான தீர்வு:

வளர்ந்து வரும் மக்கள் தொகைப் பெருக்கத்தின் விளைவாக அனைவருக்கும் அரசால் கல்வியை வழங்க இயலாது. எனவே கல்வித்துறையில் தனியாரின் பங்களிப்பு அரசு கட்டுப்பாட்டுடனும் நடைபெற வேண்டும்.

நமது நாடும் சர்வதேச நாடுகளுடன் போட்டி போட்டு முன்னேற கல்வியில் தனியார் பங்களிப்பு மூலம் நல்ல தரமான கல்வியும், வேலை வாய்ப்பும் மாணவர்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களை அனுமதிப்பதோடு மட்டும் அரசு நின்று விடாமல் அரசு அந்நிறுவனங்களைத் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். மேலும் பின்வரும் பரிந்துரைகளைக் கூறி அவற்றைத் தனியார் நிறுவனங்கள் சரிவரப் பின்பற்ற ஆவண செய்ய வேண்டும்.

பரிந்துரைகளாவன:

பொருளீட்டுவதை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நகரப் பகுதிகளில் மட்டுமே செயல்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் கிராமங்களிலும் அதிகளவில் பள்ளிகளைத் திறக்கச் செய்தல்.

பள்ளியின் எல்லா வகுப்புகளிலும் குறிப்பிட்ட விழுக்காடு ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கி அவர்களிடம் மிகக்குறைந்த கல்விக் கட்டணத்தை வசூலித்தல்.

ஆசிரியர்களின் தகுதி, மாத ஊதியம், மாணவர்-ஆசிரியர் விகிதம் உள்ளிட்டவற்றை அரசு கல்வித்துறையே நிர்ணயம் செய்து அதனைத் தனியார் நிறுவனங்கள் கடைபிடிக்கின்றனவா? என்பதை உறுதி செய்தல்.

உயர் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்குக் குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு செய்து அவை தனியார் கல்லூரிகளில் சரியாகப் பின்பற்றப்படுகிறதா? எனக் கண்காணிக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஏழை மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகின்றதா? என்பதைக் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அதனைக் கடைபிடிக்காத நிறுவனங்களின் அங்கீகாரங்களை நீக்க வேண்டும்.

“பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையினான”

என்னும் நன்னூலார் வாக்கிற்கிணங்க மாறிவரும் தகவல் தொழில் நுட்பச் சூழலுக்கு ஏற்ப கல்வியில் புதுமைகள் பல புகுத்தி மாணவர்கள் உலக அரங்கில் இந்தியாவின் நிலையினை உயர்த்தக் கல்வியில் தனியாரின் பங்களிப்பு பயன்படுவதாக அமைய வேண்டும்.

This will spyappsinsider.com/ let them know that the better they behave, the less we’ll be monitoring

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “கல்வியும், தனியார் மயமாதலும் – கட்டுரை”
  1. Errol Patton says:

    இந்நயவஞ்சகத் திட்டத்தை மூன்றாண்டுகளுக்கு முன்பே சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆரம்பித்துவிட்டனர். பல்வேறு பெயர்களில் இயங்கிவந்த அப்பள்ளிகளை “சென்னைப் பள்ளி” என மாற்றி, 70 பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைக் கொண்டுவந்தனர். பின்னர் தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் உதவியுடன் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரித்தனர். அவற்றில் 10 பள்ளிகளைத் தேர்வு செய்து தனியார் வசம் ஒப்படைப்பது என்பது அரசின் திட்டம். தற்போது அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்கியிருப்பதும் தனியார்மயமாக்கலை நோக்கமாகக் கொண்டதுதான்.

    • ilamugil says:

      தரமான கல்வி என்ற பெயரில் முழுக்க தனியார் மய கல்வியை கொன்டு வந்து ஏழை மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப் படுவதை நியாயப்படுத்தும் காரணங்களை சொல்வதாக உள்ளது.

அதிகம் படித்தது