கவலையில்லாக் காளையர் கழகம் – 1
ஆச்சாரிJul 15, 2012
கவலையில்லாக் காளையர் கழகம் என்றதும் வின்னர் படத்தில் வரும் வடிவேலுவின் வேலை வெட்டி இல்லாத நண்பர்களின் கூட்டம் என நினைத்து விடாதீர்கள். இது வேலை இல்லாதவர்களின் வெட்டிக் கூட்டமல்ல. இது நிறைய வேலை இருந்தும் எந்த வேலையும் ஒழுங்காக செய்யாதவர்களின் கூட்டம்.
நமது கழகத்தின் தலைவர் பார்த்தசாரதி மென்பொருள் (சாப்ட்வேர்) நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். கழக உறுப்பினர்கள் அனைவரும் அவரது வகுப்புத் தோழர்கள். மணி சொந்தமாக ஒரு பலசரக்கு கடை வைத்திருக்கிறான். இன்னொரு நண்பர் வேலு தமிழகத்தின் முக்கியமான ஒரு அரசியல் கட்சியின் வட்டார தலைவர். தினசரி மாலை மணியின் கடையில் நண்பர்கள் பொழுது போக்க ஆரம்பித்தது தான் கவலையில்லாக் காளையர் கழகம். உள்ளூர் விவகாரத்தில் இருந்து அமெரிக்க அரசியல் வரை நண்பர்கள் பேசுவதைக் கேட்டால் பொழுது போவதே தெரியாது. சிறகுக்காக அவர்கள் என்ன பேசுகிறார்கள் என கேட்போம்.
மணியின் கடைக்கு தனது புது மாருதி ஸ்விப்ட் காரில் வந்து இறங்கினான் பார்த்தசாரதி.
என்ன மணி! கடையில இருந்து பெரிய கும்பல் போகுது. சரியான வியாபாரம் போல. எதுவும் கட்சி மாநாடு நடக்குதா?.
அடப் போடா நீ வேற!. வந்தது வேற யாரும் இல்லடா. நம்ம பிரணாப் முகர்ஜிடா!
என்னடா சொல்ற! அடுத்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியா உன் கடையில இருந்து போறது?. அவர் ஏண்டா இங்க வரணும்?.
எல்லாம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில ஒட்டு கேட்டுத் தாண்டா!.
ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் எல்லாம் நடக்குமா? இந்தியா முழுக்க தேடி குலுக்கல் முறையில் ஒரு ஆளைத் தேர்ந்தெடுத்து அவரை ஊர் சுத்த அனுப்புவாங்கன்னு நினச்சேண்டா!
நீ சரியான அப்பாவிடா! அவர் என்ன பிரதமரா? தேர்தலில நிக்காமலே ஜெயிக்க?. இல்லை உள்துறை மந்திரியா?. தோத்தாலும் ஜெயிக்க?. பாவம் ஜனாதிபதி பதவிக்கு ஓட்டு வாங்கித் தாண்டா ஜெயிக்கணும். அதுவும் அரசியல்வாதிகளோட ஓட்டு வாங்கி ஜெயிக்கனுண்டா. சரிடா! என்னடா சொன்னார் உன்கிட்ட?.
அதுவா?. அடுத்த ஜனாதிபதி தேர்தல்ல அவரைத் தான் ஆதரிக்கனும்னு ஒரே புலம்பல். எனக்கு ஓட்டு இல்லைன்னு சொன்னாலும் அவருக்கு காது கேட்கலடா.
ம்ம்ம். உனக்கு தெரியாதா?. அவருக்கு “தமிழ்ச் செவிடு” அப்படின்னு ஒரு வியாதி இருக்குடா!. தமிழ் ஆளுங்க அவங்க பிரச்சனைய சொன்னா மட்டும் தற்காலிகமா அவருக்கு காது கேட்காது. தமிழ்நாட்டு முதல்வர் நிதி கேட்டதுக்கு தைவான் நாட்டிற்கு நிதி கொடுத்தார்னா பாத்துக்கயேன்!
அவருக்கு மட்டுமாடா அது இருக்கு?. இந்தியால இருக்க நிறைய கட்சி தலைவர்களுக்கு இந்த வியாதி இருக்குடா. அவர் மட்டும் என்ன பண்ணுவாரு பாவம்.
சரியா சொன்ன! ஆனா நீ சரியான முட்டாள்டா! சரி ஓட்டு போடறேன்னு சொல்லி திட்டக்குழு கிட்ட ஒரு இரண்டாயிரம் கோடி நிதி உன்னோட கடைக்கு கேட்டு இருக்கலாம்ல?. அவர் இப்போ ஒரு ஓட்டுக்கு ஆறாயிரம் கோடி குடுக்கிறார் தெரியுமா?.
என்னடா சொல்ற? எனக்கு ஓட்டே இல்லடா! இருந்தாலும் ஓட்டுக்கு பணம் வாங்குறது தப்புடா.
ஓட்டுக்கு நேரா பணம் வாங்கினா தாண்டா தப்பு. திட்டக் குழு மூலமா வாங்கினா தப்பு இல்லடா!. உனக்கு சந்தேகம் இருந்தா உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் கிட்ட கேட்டுப் பாரு.
சரிடா! . அதோ வேலு வந்தாச்சு! வேலு கையில என்னடா கட்டு?.
அதுவா! ஏதோ டைம்ஸ் நு ஒரு பத்திரிகை எங்க பிரதமரை “செயல்படாதவர்” நு சொல்லிட்டாங்க! . அதனால இன்னைக்கு எங்க கட்சி சார்பா கடிகாரத்தை உடைக்கிற போராட்டம் நடத்தினோம். அப்போ கையில பட்டிடுச்சுடா.
ஆமா வேலு!. வர வர இந்த பிரதமர் பதவிக்கு ஒரு மரியாதை இல்லாம போச்சு. நம்ம பிரதமர பத்தி நம்ம நாட்டு மக்கள் அமெரிக்க கம்பனிகள் கிட்ட கேட்கணும். அப்பவாச்சும் அவங்களுக்கு புத்தி வருதான்னு பாக்கணும். ஒவ்வொரு கம்பனிக்கும் நம்ம பிரதமர் எவ்வளவு லாபம் சம்பாதிச்சு கொடுத்து இருக்கிறார் தெரியுமா?.
பார்த்தா! உனக்கு தெரியுது. தமிழ்நாட்டு ஜனங்களுக்கு தெரியலியே. நம்ம பிரதமர் எப்படி அல்லும் பகலும் அமெரிக்க கம்பனிகளுக்கு வேலை பாக்கிறார்னு!
சத்தியமா சொல்றேன் வேலு!. நம்ம பிரதமர் போகும் போது தான் தெரியும் அவர் என்ன எல்லாம் பண்ணி இருக்கார்னு.
அப்பவும் தெரியாது பார்த்தா!. நம்ம பிரதமர் செய்யற நல்ல காரியம் எல்லாம் வெளியே தெரியறது அவருக்கு பிடிக்காது. அதனால தான் அலைக்கற்றை ஊழல் சம்பந்தப்பட்ட நிறைய கோப்புகளைத் தொலச்சிட்டார்.
மணி என் அமைதியா இருக்க?. உனக்கு பிரதமர பிடிக்காதா?.
எனக்குத் தெரியல. அவர் ஆட்சியில நிறைய ஊழல் நடந்து இருக்கே. அப்புறம் எப்படி அவர நேர்மையானவர்னு சொல்றீங்க?.
ஐயோ மணி! ஒண்ணு நல்ல தெரிஞ்சுக்க. ஊழலுக்கும் நேர்மைக்கும் சம்பந்தம் இல்லை. நம்ம பிரதமர் அமெரிக்காவில வேலை பார்த்தவர். அவர் எப்படி நேர்மை இல்லாம இருக்க முடியும்?.
எனக்கு குழப்பமா இருக்கு பார்த்தா! அவர பார்த்தா நல்லவரா தான் தெரியுது. ஆனா நாடு திவாலாகி போகிற மாதிரி இருக்கு.
நாடு திவாலாகிற மாதிரி இல்லை மணி!.ஏற்கனவே திவாலாகி போச்சு. ஆனா அதுக்கு அவர் என்ன பண்ண முடியும் மணி? அவர் பாவம் இந்த நாட்டிற்கு பிரதமரா மட்டும் தானே இருக்கிறார். அவருக்கு என்ன பொறுப்பு இருக்கு?.
பிரதமர் தானே பார்த்தா எல்லாத்துக்கும் பொறுப்பான ஆள்?. நாடு திவாலாச்சுன்னா அவர் தானே பொறுப்பு?.
உனக்கு புரிய வேண்டிய அவசியம் இல்லை. நீ இந்தியாவில இருக்க ஒரு மாநிலத்தில இருக்க ஆள். இது மத்திய அரசின் அதிகாரம். அத கேட்கிற உரிமை நமக்கு இல்லை.
பார்த்தா! எல்லா மாநிலமும் சேர்ந்தா தானே மத்திய அரசு. அப்புறம் ஏன் எனக்கு உரிமை இல்லைன்னு சொல்ற?.
ஐயோ! என்னால முடியல. வேலு!. இவனுக்கு புரிய வை.
மணி! நம்ம அரசியல் சாசன சட்டப்படி வரியைக் கொடுக்கிறது மட்டும் தான் மாநில மக்களோட உரிமை. அத செலவு செய்யறது மத்திய அரசோட உரிமை. மாநில அரசுக்கு பணம் வேணும்னா அவங்க மத்திய அரசு கிட்ட கெஞ்சி கொஞ்சப் பணத்தை வட்டிக்கு கடனா வாங்கலாம்.
இது சரியா தெரியலையே. நம்ம காச நம்ம கிட்டே வட்டிக்கு கொடுக்கிறது எப்படி?.
ஹ்ம்ம். இப்படி கேள்வி கேட்டதால தான் நம்மள வெள்ளைக்காரன் அடிமை ஆக்கினான். நாடு உனக்கு என்ன கொடுத்துச்சுன்னு கேட்காதே மணி!. நாட்டிற்கு உன்கிட்ட இருக்க எல்லாத்தையும் கொடு.
ஒத்துக்க முடியல வேலு! என்கிட்டே இருக்காத எல்லாத்தையும் கொடுத்திட்டா எனக்கு என்ன இருக்கும்?.
உன்கிட்ட நாட்டுப்பற்றும் , கடமை உணர்ச்சியும் மிச்சம் இருக்கும் மணி. இத விடவா உனக்கு உன்னோட வீடும், வாசலும் பெருசு?.
வேலு!. இவன்கிட்ட பேசி புரிய வைக்க முடியாது. தமிழனுக்கு உணர்ச்சி மட்டும் தான் இருக்குன்னு இவன் காட்டிட்டான். நாம கிளம்பலாம். வரோம் மணி! நாளைக்கு மீதி சண்டைய போடலாம்.
வேலுவும் பார்த்தசாரதியும் கிளம்பினர். மணி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். கவலையில்லாக் காளையர் கழகத்தின் இன்றைய கூட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவலையில்லாக் காளையர் கழகம் – 1”