மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கவலையில்லா காளையர் கழகம் – 2

ஆச்சாரி

Aug 1, 2012

அதிகாலையில் கடிகார ஒலி ( அலாரம் )  கேட்டு எழுந்தான் மணி. கடைக்கு சரக்கு வாங்க சந்தைக்குப் போக வேண்டும். குளித்து சாப்பிட்டு விட்டு வீட்டு கதவைத் திறந்தான்.  பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தான். வீட்டு வாசலின் முன்னே பெரிய கயிறு ஒன்று கட்டப்பட்டிருந்தது. கயிற்றின் நுனியில் ஒரு ஆள் ஒரு சிறிய நாற்காலியில் அமர்ந்து இருந்தான். மணி “நீ யாருப்பா” என கேட்டவுடன் அந்த நபர் ஒன்றும் பேசாமல் ஒரு  சீட்டை எடுத்து நீட்டினான். அவனுக்கு தமிழ் தெரியாது என்று அப்போத தான் மணிக்கு தெரிந்தது. மணி உடனடியாக எதிர்த்த வீட்டைப் பார்த்தான். அங்கும் அத போல கயிறு. வாசலில்  ஒரு நபர். அந்தக் குழப்பத்திலும் மணிக்கு ஒரு சின்ன ஆறுதல். பிரச்சனை நமக்கு மட்டும் இல்லை.  பக்கத்து வீட்டுக்கும் அதே பிரச்சனை தான். வெளியே போய் எதுவும் பிரச்சனை என்றால் என்ன செய்வது. மணி உடனடியாக கதவை மூடி விட்டு பார்த்தசாரதியையும், வேலுவையும் தொலைபேசியில் அழைத்தான். சரியாக பத்தே நிமிடங்களில் வேலுவும் பார்த்தசாரதியும்  வீட்டில் இருந்தனர்.

வேலு உடனடியாக அந்த ஆளிடம் விசாரணையில் இறங்கினான்.
ஏய்! யாருப்பா நீ? இங்க உக்காந்து இருக்க?
ஐயோ வேலு. அந்த ஆளுக்கு தமிழ் தெரியாது. அவன் கிட்ட ஒரு சீட்டு இருக்கு. அத வாங்கி பாரு.

வேலு அந்த சீட்டை வாங்கி படித்தவுடன் அவன் முகம் தெளிவடைந்தது.

என்ன மணி நான் பயந்து போயிட்டேன். இதுக்கு போய் என்ன கூப்பிட்டு இருக்க. வீட்டுக்குள்ள போய் பத்து ரூபாய் எடுத்திட்டு வந்து குடு. அவர் போயிடுவார்.

என்ன வேலு சொல்ற?. எதுக்கு பத்து ருபாய் குடுக்கணும்?.

நான் எல்லாம் சொல்றேன் மணி. முதல்ல நீ பத்து ருபாய் குடு.

மணி உள்ளே சென்று பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்தவுடன் அந்த நபர் கயிற்றை  அவிழ்த்துக்  கொண்டு சென்று விட்டார்.

என்ன வேலு இது?.

மணி! அரசாங்கம் ஒரு புதுசா நலத்திட்டம் போட்டு இருக்கு. தமிழ்நாட்டுல இருக்கிற எல்லாத் தெருவையும் அரசு புதுப்பிக்கப் போகுது. அதுக்குத்தான் இந்த கட்டணம்.  கட்டண ( டோல் ) சாலை மாதிரி இனிமே  “டோல் தெரு”.

வேலு என்ன சொல்ற?. தலை சுத்துது. டோல் தெருவா?.

ஆமா மணி. நீ ஒவ்வொரு முறையும் நீ தெருவுக்குள்ள நுழையும் போதும் பத்து ரூபாய் நீ அரசாங்கத்துக்கு குடுக்கணும். அதுக்கு பதிலா அரசாங்கம் தெருவிற்கு மூணு அதிகாரிகளை  நியமிக்கும். அவங்க தெருவுக்குள்ள ஆடு மாடு , தெருநாய் , பக்கத்து தெரு ஆட்கள் எல்லாம் வராம பாத்துக்குவாங்க.

வேலு. எங்க தெருவில மொத்தமே ரெண்டு வீடுதான் இருக்குது. அதுக்கு மூணு அதிகாரியா? அதுக்கும் மேல எங்க பக்கத்துக்கு வீட்டுக்காரர்  பால் வியாபாரம் தான் பண்றார். ஆடு மாடு வராம தடுத்திட்டா அவர் எப்படி பொழைக்கிறது?

மணி. அரசாங்கம் இதெல்லாம் யோசிக்காம இல்ல. உங்க தெருவில இருக்கிற மாடுகளுக்கு எல்லாம் புகைப்படத்தோடு கூடிய அடையாள அட்டை குடுக்க போறோம். . இந்தியா முழுக்க ஒவ்வொரு மாட்டுக்கும் ஒரு தனிப்பட்ட அடையாள எண் இருக்கும். நாளைக்கே ஒரு மத்திய அரசு அதிகாரி வந்து புகைப்படம் எடுத்திட்டு போவார் . உங்க பக்கத்து வீட்டுக்காரர் கிட்ட சொல்லி நாளைக்கு ஒரு நாலஞ்சு பேரை தயாரா வைக்க சொல்லு.

நாலஞ்சு பேர் எதுக்கு?.

அதுவா?. மாட்டுக்கு  தான் கைரேகை இல்லையே. அதனால கால் ரேகை எடுக்கணும். அப்போ மாட்ட பிடிக்க நாலு பேர் வேணாமா?. கவனமா இருக்க சொல்லு மணி. கால் ரேகை எடுக்கும்போது  மாடு அதிகாரிய உதச்சா உங்க பக்கத்துக்கு வீட்டுக்காரர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில கைது செய்யப்படறதுக்கு வாய்ப்பு இருக்கு.

வேலு. எனக்கு பயமா இருக்கு.  எங்க வீட்டில அடுத்த வாரம் ஒரு விழா இருக்கு. சொந்தக்காரங்க எல்லாம் வருவாங்க. அவங்கள உள்ள விடுவாங்களா?.

அது ஒரு பிரச்சினையே இல்ல மணி. நீ முதல்ல காவல் நிலையத்துக்கு போய் ஒரு தடை இல்லாச் சான்றிதழ் வாங்கணும். அதை உங்க சொந்தக்காரங்க எல்லாத்துக்கும் அனுப்பினா , அவங்க அதை டில்லிக்கு எடுத்திட்டு போய் “மத்திய தெருக்கள் கட்டுப்பாட்டு அமைச்சரவை”  கிட்ட ஒரு சான்றிதழ் வாங்கி ..

வேலு. விட்டிடு. நான் விழாவையே ரத்து செஞ்சிடறேன்.அரசாங்கம் இந்தத் திட்டம் மட்டும்தான் போட்டிருக்கா இல்லை வேற ஏதாவது இருக்கா?.

பார்த்தா! இன்னைக்கு ஒரு திட்டத்த பத்தி பத்திரிக்கையில படிச்சோமே. அத சொல்லு.  நீ கூட ரொம்ப நல்ல திட்டம். இது நடந்தா உலக நாடுகள் மத்தியில இந்தியாவுக்கு ரொம்ப நல்ல பேர் கிடைக்கும்னு சொன்னியே.

ஞாபகம் வரலியே வேலு.

பார்த்தா! நம்ம அப்துல் கலாம் கூட இந்தத் திட்டத்தின் மூலமா ஆயிரத்து ஐநூறு கோடி மக்களுக்கு வேலை கிடைக்கும்னு சொன்னாரே.

ஒ! அதுவா?. மணி. அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் நடுவில பெட்ரோல் குழாய் ஒன்னு போடப் போறாங்க. அது உங்க வீட்டுக்கு கீழ  போகப் போகுது.

அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் நடுவில ஓடற குழாய் எங்க வீடு வழியா ஏன் போகணும்?.

மணி! புரியாத விஷயத்த கேட்காத! நம்ம நாடு வழியா போகாட்டி அது பாகிஸ்தான் அல்லது சீனா வழியா போகும். அப்புறம் நம்மோட அமெரிக்க உறவுக்கு அது ஆபத்து.

வேலு! என் வீட்டுக்கு கீழதானே போகப் போகுது. நான் பணம் எதுவும் குடுக்க வேணாமே?.

மணி. நீ பணம் எல்லாம் குடுக்க வேணாம். அவங்க குழாய் போடும்போது உன் வீட்டில பாதிய மட்டும் இடிப்பாங்க. அப்புறம் நீயே அதை திரும்பக்  கட்டிக்கலாம்.  அந்தக் குழிக்கு ஏதாச்சும்  சேதம் வந்தா மட்டும் நீயும் உன்னோட பரம்பரையும் தீவிரவாதிகள்னு ஒத்துகிட்டு ஒரு கையெழுத்து மட்டும் போட்டா போதும்.

மணி தலையில் கையை வைத்து அமர்ந்து  விடுகிறான்.  வேலுவும் பார்த்தசாரதியும் ஒரு பிரச்சினையை முடித்த மகிழ்ச்சியோடு  மணியின் அறியாமையை நினைத்து வியந்து கொண்டே கிளம்பினர். கவலை இல்லாக் காளையர் சங்கத்தின் எதிர்பாராத கூட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.

They advise on career change, http://writemypaper4me.org/ personal development training and general career options

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “கவலையில்லா காளையர் கழகம் – 2”
  1. vibarajan says:

    Dont waste energy on articles that conveys too negative comments about Government. We still need some procedure/policies for the Government to run the country.

அதிகம் படித்தது