மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கவலையில்லா காளையர் கழகம் – 3

ஆச்சாரி

Aug 15, 2012

மணியின் கடைக்கு அன்று சீக்கிரமே வந்து விட்டனர் பார்த்தசாரதியும் வேலுவும்.  மணியும் சீக்கிரம் கடையை அடைத்து விட்டான். தெருவே வெறிச்சோடி கிடந்தது. எல்லோரும் தொலைக்காட்சி முன் அமர்ந்து இருப்பார்கள் இந்நேரம்.அவசர அவசரமாக கடையின் பின்புற அறையில் இருந்த தொலைக்காட்சியை போட்டு விட்டு அமர்ந்தனர் நண்பர்கள். லண்டன் ஒலிம்பிக்ஸ் 2012 என்ற வார்த்தைகள் வந்தவுடன் நண்பர்கள் பேசுவதை நிறுத்தி விட்டு தொலைக்காட்சியில் கவனம் ஆயினர். இன்று இந்திய வீராங்கனை குத்து சண்டையில் அரை இறுதியில் மோதுகிறார். போட்டி ஆரம்பம் ஆனது. நண்பர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். இந்திய வீராங்கனை முடிந்த வரை முயற்சி செய்தும் தோற்றுப் போனார். நண்பர்கள் சோகம் தாளாமல் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.

அப்பா! அப்பா! மணியின் மகனின் குரல் கேட்டது. வெளியே விளையாட போகலாமா?. நேத்து கேட்டதுக்கு இன்னைக்கு போகலாம்னு சொன்னீங்களே!

அடே! நானே இந்தியா தோத்த வெறியில இருக்கேன். தொல்லை பண்ணாதே! பேசாம போயிடு. வந்தா முதுகு பிஞ்சிரும்!

அப்பா! இன்னைக்கு மட்டும்ப்பா!

திரும்பவும் மணி கத்த ஆரம்பிப்பதற்குள் மணியில் மனைவி அவசரமாக மகனிடம் ஒரு சாக்லேட் பட்டையை குடுத்து அமைதிப்படுத்தினார்.

நாங்க வேணா இன்னொரு நாள் வரவா மணி?. உன் மகனோட போய் விளையாடு.

அட நீ வேற பார்த்தா! இவன் என்ன விளையாடி ஒலிம்பிக்ல பதக்கமா வாங்க போறான்?. ஒழுங்கா இன்னும் இங்கிலிஷ்ல ஒரு கட்டுரை எழுத மாட்டேங்கறான்.

என்ன மணி சொல்ற?. உன் மகனுக்கு அஞ்சு வயசு ஆயிடுச்சு இல்ல?. என் மகளுக்கு நாலு வயசு தான் ஆகுது. ஆனா  இங்கிலிஷ்ல எப்படி எழுதறா தெரியுமா?.

அது புள்ள! இவன் எப்பப் பாத்தாலும் விளையாடனும் விளையாடனும்னு.  இவன் என்ன சின்னப் பிள்ளையா?. அஞ்சு வயசு! வேலு! உன் மகன் எப்படி?.

அவன் ரெண்டு  வயசிலேயே கட்டுரை எழுத ஆரம்பிச்சுட்டான். விளையாட்டு, கிளையாட்டுன்னு மூச்சு விட மாட்டான்.

ஏண்டா! இவனுக்கு மட்டும் இப்படி புத்தி போகுது.  நான் விளையாடி விளையாடித் தான் இன்னைக்கு கடையில கஷ்டப்படறேன். இவனாச்சும் படிப்பான்னு பார்த்தா எப்பப் பார்த்தாலும் விளையாட்டு விளையாட்டுன்னு.

அவனுக்கு விளையாட்டில விருப்பம் போல. அவனுக்கு பிடிச்ச மாதிரி விட வேண்டியது தானே.

வேலு! நீ வேற!. எங்க மாமா மகன் இப்படித் தான் விளையாட்டு விளையாட்டுன்னு சுத்தினான். மாநில அளவில ஓட்ட பந்தயத்தில சாம்பியன். இப்போ எல்.ஐ.சி ல கிளார்க்கா கஷ்டப்படறான். அவன் கூட படிச்ச பசங்க எல்லாரும் ஐ.டி யில மாசம் ஒரு லட்சம் ரூபாய் வாங்கறாங்க.

அது சரி மணி!. எல்லோரும் டெண்டுல்கர் ஆக முடியுமா?.

அது சரி வேலு. அதெல்லாம் பிறவியிலேயே வரணும். நாம எல்லாம் டி.வி. ( தொலைக்காட்சி  ) பாக்க மட்டும் தான் லாயக்கு.  

நல்லா  சொன்ன மணி! எனக்கு சக்கரை வியாதி இருக்கதால ஒரு நாளைக்கு ஒரு நிமிஷம்  வெளியே போய் நடக்க வேண்டி இருக்கு.  இல்லாட்டி முழுக்க முழுக்க தொலைக் காட்சியிலேயே உக்காந்து இருக்கலாம்.

என்ன உனக்கு சக்கரை இருக்கா?. எனக்கும் இருக்கு வேலு.

இது என்ன அதிசயம்?. 2020 ல நாம தான் பெரும்பான்மை தெரியுமா?.

பெரும்பாண்மையா? என்ன சொல்ற பார்த்தா?.

ஆமா வேலு. 2020 ல  இந்தியாவில அறுபது சதவீதம் பேருக்கு சக்கரை வியாதி இருக்கும்.

பார்த்தா! அத பத்தி கவலைப்படாதே! அப்போ இந்தியா வல்லரசு ஆகிடும். சக்கரை வியாதியை குணமாக்க கண்டிப்பா மருந்து கண்டுபிடிச்சிடும்.

மணி!  நேத்து என்ன உங்க பக்கத்து வீட்டுக்காரர் கூட சண்டைனு கேள்விப்பட்டேன்?

அதுவா?. இந்தத் தறுதலை பந்த அடிக்குறோம்னு அவங்க வீட்டுக்குள்ள அடிச்சு பெரிய பிரச்சினை ஆயிடுச்சு வேலு.

வீட்டில சின்ன குழந்தை எதுவும் இருக்க?. அது மேல பட்டிடுச்சா?.

நீ வேற வேலு. அவங்க இப்போ வீட்டிலேயே இல்லை. வீட்டுக்கு வெளியே ஒரு கூடாரம் போட்டு தங்கி இருக்காங்க. அவங்க வீட்டில இப்போ நூறு ஈமு கோழியை  வளர்க்கிறாங்க.

ஏன் மணி! உங்க வயலுக்கு பக்கத்தில  தான் பெரிய காலி இடம்  இருந்துச்சே. அங்க போய் விளையாடலாமே?.

பார்த்தா!  அந்த இடத்தில இப்போ தேசிய விளையாட்டு ஆராய்ச்சி கழகம்னு ஒரு மத்திய அரசு நிறுவனம் ஆரம்பிக்கப் போறாங்க.  அதுக்காக  எடுத்துகிட்டாங்க.

தேசிய விளையாட்டு ஆராய்ச்சி கழகமா?. அதுல என்ன பண்ண போறாங்க மணி?.

அதுல ஆஸ்திரேலியா , இங்கிலாந்து எல்லா நாட்டில இருந்தும் வீரர்களை கொண்டு வந்து  விளையாட விட போறாங்க. அத நாம போய் பார்க்கலாம்.

அருமை! நம்ம ஐ.பி.எல் மாதிரின்னு சொல்லு. அப்போ அநேகமா பொண்ணுங்களையும் கொண்டு வந்து ஆட விடுவாங்க. இனி எல்லாத்தையும் நேர்லயே பாக்கலாம்.

எனக்கும் ஒரு தொல்லை விட்டது. இனி என்  மகன் விளையாட போகலாம்னு நச்சரிக்க மாட்டான். வேணும்னா அவனையும் கூட்டி போய் காமிக்கலாம்.

நல்ல யோசனை மணி. அவங்க விளையாடுறத  பாத்தா இவன் ஒழுங்கா படிப்பான்னு நினைக்கிறேன்.

வேலுவும் பார்த்தாவும் வீட்டுக்கு  கிளம்பினர்.  மணியின் மகன் சாக்லேட் நிரம்பிய வாயுடன் தூங்கிப் போயிருந்தான்.

What is learned under difficult conditions is hard to forget contextual interference writing helper effects in foreign vocabulary acquisition, retention, and transfer

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “கவலையில்லா காளையர் கழகம் – 3”
  1. kondraivendhan says:

    கடையக் கட்டி ஒலிம்பிக் பார்த்து, வேலைக்கு களவடிச்சு கிரிக்கட் பார்த்து, வாயக்கட்டி வயித்தக்கட்டி சினிமா பார்த்து அப்புறம் வாயப்பொத்தி, கைய்யக்கட்டி கோவனத்தையும் உருவி முள்ளிவாய்க்காலில் போற்றுவாய்ங்க போலிருக்கே..!!

அதிகம் படித்தது