மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கவலையில்லா காளையர் கழகம் – 4

ஆச்சாரி

Sep 1, 2012

இன்று காலையில் இருந்தே கவலையில்லா காளையர் கழக நண்பர்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அப்புறம் சும்மாவா? பத்துக் கோடி தமிழர்களுக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு அல்லவா இன்று அவர்களுக்கு கிடைத்து இருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் கார் ( மகிழுந்து ) வரப் போகிறது. அவர்கள் அனைவரும் முத்தையா திரைப்பட வளாகத்திற்கு  ( அதாங்க  ஏ.வி.எம். ) செல்லப் போகிறார்கள். சென்று ஒரு திரைப்பட படப்பிடிப்பில் உதவி இயக்குனர்களாக பங்கெடுக்கப் போகிறார்கள். அதுவும் யார் படம்?. இயக்குனர் ஷங்கர் படம். இரண்டு வாரமாக அவர்களுக்கு தூக்கம் வரவில்லை.

பார்த்தசாரதிக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.  அந்தத் தொலைக்காட்சியில் உலக அறிவு குறித்த போட்டி குறித்த அறிவிப்பு வந்த போது அவன் தான் அதற்கு விண்ணப்பம் கொடுத்தது. பின்பு நண்பர்கள் அதில் பங்கேற்றதும் அதில் வெற்றி பெற்றதும் அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகள்.

மகிழுந்து வந்து விட்டது. பார்த்தசாரதி, மணி,வேலு மூவரும் ஓடிச் சென்று ஏறினர். வாழ்வின் கனவு நனவாகப் போகிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் திரைப்பட படப்பிடிப்பு பார்க்கப் போகிறோம்.

முத்தையா திரைப்பட வளாகம் களை கட்டி இருந்தது. இயக்குனர் ஷங்கரின் புதிய படம் “உனக்கே நீ அந்நியன்” படப்பிடிப்பு வேலைகள் இங்கு தான்  நடந்து கொண்டிருக்கிறது.

பார்த்தசாரதி : மணி! இங்க பாருடா! முதல்வன்  படத்தில முதல் பாட்டில கடைசி வரிசையில ஆடுவானே! அந்த பையன் மாதிரி இல்ல?

மணி: பார்த்தா! அவனே தான்! அவன விடு. அங்க பாரு! நம்ம இயக்குனர் கெளதம் மேனன் மாதிரி இல்ல?. பக்கத்தில தனுஷ்,சுகாசினி. என்னால நம்பவே முடியல. நமக்கு இப்படி ஒரு வாய்ப்பா?

ஷங்கர்: வாங்க! நீங்க தானே தொலைக்கட்சியில இருந்து வரீங்க?

மூவரும் ஒரே குரலில் : ஆமா சார். எப்போ சார் படப்பிடிப்பு ஆரம்பிக்கும்?

ஷங்கர் : அடுத்த வருஷம் தான். இப்போ தான் ஒரு பாட்டுக்கு துணை நடிகர்களுக்கு வயித்தில பெயிண்ட் அடிக்க ஆரம்பிச்சிருக்கோம். முடிய எப்படியும் ஒரு வருஷம் ஆகும். பெயிண்ட் ஆஸ்திரேலியா ல இருந்து கப்பல்ல வந்திட்டு இருக்கு. வாங்க பேசிட்டு இருக்கலாம். கெளதம் மேனன் சாரும் இப்போ வந்திடுவார்.

மணி: வயித்துக்கு பெயிண்ட் அடிக்க ஒரு வருடம் ஆகுமா?

ஷங்கர் : நீங்க அடிச்சா ஒரு நிமிடம். நான் அடிச்சா ஒரு வருடம். அது தான் என்னோட வெற்றிக்கு காரணம்.

பார்த்தசாரதி: சார்! நீங்க நண்பன் படத்தில ஒரு கனடாவில இருந்து ஒரு ஆள் தமிழ் தெரியாம வந்து முழிக்கிற மாதிரி ஒரு பாத்திரம் வச்சிருந்தீங்க. அதுக்கு என்ன சார் காரணம்?

ஷங்கர் : ஒ! அதுவா ?. இல்லாட்டி தமிழர்கள் கல்லூரியில ஆங்கிலம் தெரியாமல் முழிக்கிற மாதிரி காட்சி வைக்க வேண்டி இருக்கும். அது தானே உண்மையான நிலைமை. அதை எப்படி காட்ட முடியும்?. இன்னொன்னு தமிழன் தமிழ் தெரியாத மாதிரி காட்டினா தான் தமிழர்கள் ரசிப்பாங்க!

பார்த்தசாரதி : ஒ! அதனால தான் நீங்க சிவாஜி படத்தில கருப்பா ரெண்டு பொண்ணுங்களை கொண்டு வந்து “அங்கவை. சங்கவை. அத கொஞ்சம் பொங்க வை” அப்படின்னு கிண்டல் பண்ணீங்களா?. அதுவும் ஒரு தமிழ்ப் பேராசிரியர் “சாலமன் பாப்பையா” வச்சே பண்ணி இருந்தீங்க.

ஷங்கர் :  ( புன்னகைத்தபடி ) என்னோட படத்தில நகைச்சுவை என்றாலே தமிழைக்  கேலி செய்வது தான்.  அது தான் எனக்கு இயல்பா வருது.

மணி:  ( கொஞ்சம் யோசனையுடன் ) தமிழை ஏன் கேலி செய்ய வேண்டும்?

கெளதம் மேனன் :  எங்களுக்கு கேவலமா திட்டத் தான் ஆசை. ஆனா பண்ண முடியாது. அதனால தான் கேலி பண்றோம். ஏன் என் படத்தையே எடுத்துக்குங்க. தமிழ்ப் படம்னு சொல்லிட்டு பத்து வார்த்தையில அஞ்சு வார்த்தை ஆங்கிலத்தை சேர்த்திருவேன்.யாராவது ஏன்னு   கேட்டா அதப் பத்தி நானே நகைச்சுவையா பேசி தப்பிச்சுக்குவேன்.

மணி: ஏன் இப்படிப் பண்ணனும்?

கெளதம் மேனன் : எங்களுக்கு தமிழைப் பிடிக்காது. இது கூட புரியலையா?. அப்பாவியா இருக்கியே!

வேலு: தமிழ்நாட்டில இருந்துட்டு தமிழைப் பிடிக்கலேன்னு சொல்றீங்க?

ஷங்கர் : தமிழ்நாட்டில தான் சொல்ல முடியும். மத்த இடத்திற்கு போனா அடிப்பானுங்க!

பார்த்தசாரதி: இவன விடுங்க சார். உங்க படத்தில எல்லாம் ஒரு சமூக செய்தி இருக்கே. சமூகத்திற்கு சொல்ற செய்தி போய் சேர்ந்து இருக்கா?

ஷங்கர் : கண்டிப்பா!. அந்நியன் படத்தில ஒரு வசனம் வச்சு இருந்தேன். “தென்கொரியாவை பாருங்கள். அனைவரும் ஒரு பிளாட் வைத்து இருக்கிறார்கள்” அபப்டின்னு.  இன்னைக்கு தமிழ்நாட்டில நிறைய பேர் பத்து ஏக்கர் நிலத்தை வித்துட்டு அம்பது சதுர அடியில பிளாட் வாங்கறாங்க. இது கண்டிப்பா ஒரு மாற்றம் இல்லையா?

கெளதம் மேனன் : ஷங்கர் சாரை விடுங்க! நான் “நடுநிசி நாய்கள்” அப்படின்னு ஒரு படம் எடுத்தேன். என்னோட சொந்தக் கதை தான். எந்தப் ஹாலிவுட்  படத்தையும் பாத்து எடுக்கல. எப்படி ஒரு மாற்றத்தை உருவாக்குதுன்னு பாருங்க.

வேலு:  நீங்க வேற. அந்த படத்துக்கு குடும்பத்தோடு போயிருந்தேன் சார். என் பொண்டாட்டி என்ன வீட்டுக்கு வந்து செருப்ப எடுத்து அடிக்காத குறை.

கெளதம் மேனன் :  ( ஆத்திரத்துடன் ) இது தாண்டா தமிழனுக்கு நான் படம் எடுக்கக் கூடாதுங்கிறது.

ஷங்கர்: ( நிலைமை கை மீறுவதை உணர்ந்து )  கூல் மேனன்.!  நம்ம அளவிற்கு சாதாரண மக்களுக்கு ரசனை இருக்கணும்னு அவசியம் இல்லை. கரகாட்டக்காரன் ஓடின ஊர் தானே இது?

மணி: ( அப்பாவியாக ) கரகாட்டக்காரன் நல்ல படம் தானே!. நான் மூணு தடவை பார்த்தேன்.  எனக்கு ரொம்ப பிடிச்ச படம் சார்.

ஷங்கர்: வெளிநாடு போய் டூயட் பாடல!  தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து ஒரு பாட்டு இல்ல! நூறு கோடி செலவு பண்ணல.  அறுபது வயது ஆள் இருபது வயசு ஆளோட டூயட் பாடல. யாரையும் கேலி பண்ணி அசிங்கமா நகைச்சுவை இல்லை.அதெல்லாம்  படமா?. இயல்பாவே இல்லை.

வேலு: ஆனா படம் நல்ல ஒடுச்சே சார்.

ஷங்கர்:  படம் ஓடறது முக்கியம் இல்லை. நாலு இங்கிலீஷ் டி.வி ல வந்து பேட்டி எடுக்கணும். நூறு கோடி செலவு செய்யணும். அது தான் படம்.

பார்த்தசாரதி: அருமை சார்.  சரி சார் உங்க அடுத்த படத்தில பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் நடிக்கப் போறதா ஒரு செய்தி இருக்கே சார்.

ஷங்கர்: ஆமா. சூப்பர் ஸ்டார் ரஜினி தான் சொல்லி வாய்ப்புக் கொடுக்கச் சொன்னார்.

மணியும் வேலுவும் : சூப்பர் ஸ்டார்னா! சூப்பர் ஸ்டார் தான்.

ஷங்கர் : பவர் ஸ்டார் பண்றதெல்லாம் பாக்கும் போது நடிகர்கள் எப்படி தங்களுக்கு ஒரு இமேஜ் ( பிம்பம் ) உருவாக்கிக் கொள்கிரார்கள்னு மக்களுக்கு வெளிப்படையா தெரியுதாம்.  அதனால அவருக்கு முடிஞ்ச அளவு படத்தில நடிக்கிற வாய்ப்பு ஏற்படுத்தி அவர மேடையில பேச விடாம செய்யுங்கன்னு சொல்லி இருக்கார். அவர் மட்டும் இல்ல எல்லா நடிகர்களும் இப்போ அவங்களுக்கு வாய்ப்பு கேட்கிறாங்களோ இல்லையோ பவர் ஸ்டார் க்கு கேட்கிறாங்க.

கெளதம் மேனன்: ஷங்கர் நான் கிளம்பறேன்.  நான் , லிங்குசாமி , சுஹாசினி , குஷ்பு , தனுஷ் எல்லோரும் “தமிழர்கள் அசிங்கமானவர்களா? இல்லை முட்டாள்களா? ” அப்படிங்கற பட்டிமன்றத்துக்கு போறோம். சாலமன் பாப்பையா தான் நடுவர்.

ஷங்கர்: அருமையான  தலைப்பு. என் அடுத்த படத்தில பயன்படுத்திக்கலாம்.  நீங்க கிளம்புங்க.  நான் வீட்டுக்கு கிளம்பனும்.

மணி, பார்த்தசாரதி, வேலு: சார். நாங்க போயிட்டு வரோம். இந்த நாளை எங்களால மறக்க முடியாது.

ஷங்கர்: போயிட்டு வாங்க.

நண்பர்கள் தங்களுக்குள்  தமிழர்கள் அசிங்கமானவர்களா? இல்லை முட்டாள்களா? என்ற விவாதத்தை வேடிக்கையாக விளையாடியபடியே வீட்டுக்கு திரும்பினர்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “கவலையில்லா காளையர் கழகம் – 4”
  1. kasivisvanathan says:

    ” தமிழர்கள் அசிங்கமானவர்களா இல்லை முட்டாள்களா ” என்ற பட்டி மன்றத்தில் நல்ல தீர்ப்பு என்பதில் குழப்பமே ஏற்படும். ஆகவே அவர்கள் அசிங்கமான முட்டாள்கள் என்று தீர்ப்பெழுதினால், மேனன் – சுஹாசினி என்ற இரு தரப்பையும் தேற்றலாம். பட்டி மன்றத்தின் நிகழ்விடம் குறித்த தகவல் எழுதுங்கள். கவலை இல்லாத காளையர்கள் தமிழர்களின் மனசாட்சியாக இருக்கிறார்கள். அவர்கள் அப்படியே முடாள்களாக இருக்கும் போது தான் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் அப்படியே இருக்கட்டும். காளையரின் கூட்டணி தொடரட்டும்.

அதிகம் படித்தது