மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காடுகள் அழிவதா?: விளைவுகளை எண்ணுவோம் விழிப்புடன் இருப்போம்!

ஆச்சாரி

Jul 15, 2012

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது முதுமொழி. மனிதக் குற்றங்களால், சுற்றுச் சூழல் வேகமாக அழிந்து வருகிறது. கார்மேகம், குளிர்ந்த காற்று, வானவில் எல்லாம் எதிர்காலத்தில் ஏட்டில்தான் இருக்குமோ என்ற கவலை உருவாகிவிட்டது. கார்மேகம் தோன்றிய வானம் தார் பாலைவனம் ஆகி வருகிற வறட்சி நிலை தோன்றிவிட்டது. உலக அளவில் மழை அதிகம் பெய்யும் இடங்களில் எல்லாம் மழை சிறிதாவது பெய்யாதா என்று ஏங்கும் நிலை உருவாகியுள்ளது. மலைகள் எல்லாம் கிரானைட் கற்களாக விலை போகின்றன. காடுகள் அழிக்கப்படுகிறது, மரங்கள் மொட்டை அடிக்கப்படுகின்றன. காடுகளில் உள்ள மரங்கள் விறகுகளாகவும் வீட்டு உபயோகப் பொருட்களாகவும் மாறுகின்றன. பெரும்பாலான காடுகள் குடியிருப்புப் பகுதிகளாகவே மாறிவிட்டன.

காடுகள் அழிக்கப்படுவதால் இயற்கையாகவே தட்பவெப்ப நிலைகள் மாறுகின்றன. சமீபத்தில் ராஜாமலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 700 ஏக்கர் புல் மேடுகள் எரிந்து நாசமாகிவிட்டது. காட்டுத் தீயால் பல அரிய வகை தாவரங்களும் பூச் செடிகளும், அரிய விலங்குகளும் அழிகின்றன. மலைகள் மீது பச்சைக் கம்பளத்தைப் போர்த்தியது போன்ற உயர்வகைப் புல்வெளிகள் கருகுகின்றன. இதனால் பல கோடிக்கணக்கான விலையுள்ள மரங்கள் அழிவதுடன் நுண்ணுயிர்களும், வண்ணத்துப் பூச்சிகளும் பல விலங்குகளும் அழிகின்றன.

காடுகள் அழிக்கப்படுவதால் நேரடியாக பாதிக்கப்படுவது விலங்குகளே. காட்டில் நீர் இல்லாத சூழல் உண்டாவதால் நீரைத் தேடி வந்த யானைக் கூட்டம் தர்மபுரி அருகே தொடர் வண்டியில் அடிபட்டு இறந்ததாக சமீபத்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காடுகள் அழிக்கப்படுவது குடிநீர் பஞ்சத்தை உருவாக்கி விட்டது. இச் சூழலில் குடிநீரைத் தேடிவரும் விலங்குகள் மனித வாழ்க்கைக்கும் இடையூறு செய்கின்றன.

மரங்களை வெட்டி விற்பவர்கள் அனைவரும் காட்டுக்கு எதிரிகள் ஆவர். இந்தியா அளவில் 41000 எக்டேர் காடுகள் அழிக்கப்படுவதாகவும், மேகாலயாவில் 28000 எக்டேர் காடுகள் அழிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற மலைப்பிரதேச காடுகள் அழிக்கப்படுவதால் குளிர்ச்சியான சூழல் கெட்டு மழை பொய்க்கிறது. இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டதாய் தெரியவில்லை.

காடும் வயல்வெளியும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையன. வயல்வெளிகளில் உள்ள பழ மரங்களும் காய்கறிகளும் இதர பயிர்களும்  தானியப் பயிர்களும் காடுகளில் இருந்து செல்லும் பூச்சிகள், பறவைகள், வௌவால்கள் போன்றவைகளால் ஈர்க்கப்பட்டு மகரந்தச் சேர்க்கை முறையில் வயல்களில் உள்ள பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றன. இந்த உற்பத்தி காடுகள் அழிக்கப்பட்டுவதால் பாதிக்கப்படும்.

இந்தியாவில் காடுகளின் பரப்பு

முந்தைய காலங்களில் இந்தியா ஏராளமான காட்டு வளங்களைப் பெற்றிருந்தது. அசோகர் காலத்துக் கல்வெட்டுக்களில் மரம் நடுதலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று மக்கள் தொகை பெருக்கத்தாலும் முன் யோசனைக் குறைவாலும், திட்டம் எதுவுமின்றி மரங்களை வெட்டுவதாலும் இந்தியக் காடுகளின் தன்மையும் அவற்றின் பரப்பளவும் பெரிதும் குறைந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 30 சதவிகிதமாக இருந்த இந்தியக் காட்டுப் பகுதி அந்த நூற்றாண்டின் இறுதியில் 19.4 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. இந்தியாவில் 63.72 மில்லியன் எக்டேர் பரப்பளவு காடுகள் உள்ளன. அதில் 11.40 சதவிகிதம் அடர்ந்த காடுகளும் 7 சதவிகிதம் அடர்த்தி குறைந்த திறந்தவெளிக் காடுகளும், 0.15 சதவிகிதம் சதுப்புநிலக் காடுகளும் எஞ்சிய 55.09 சதவிகிதம் இதர காடுகளும் ஆகும்.

காடுகளால் ஏற்படும் பலன்கள்

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அடுப்பு எரிக்க பல்வேறு மரங்களின் பாகங்களைத்தான் விறகாக பயன்படுத்துகின்றனர். தேக்கு, கோங்கு, படாக், அத்தி போன்ற மரங்களின் கட்டைகள் மேசை, நாற்காலி, பீரோ, சன்னல் மற்றும் கதவுகள், கதவுநிலைகள் செய்யப் பயன்படுகின்றன. சந்தனம், வேம்பு போன்றவற்றின் எண்ணெய்கள், சோப்புகள் மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. மா, பலா, வாழை, ஆப்பிள், அன்னாசி போன்ற பழ வகைகளும், தேங்காய் முந்திரி போன்றவையும் மனிதர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.

காடுகளில் உள்ள ஏராளமான மூலிகைகளின் பூக்களும், இலைகளும், வேர்களும், தண்டுகளும் பலவித மருந்துகள் தயாரிக்க உதவுகின்றன. காடுகளின் மரங்கள் காகிதம், தீப்பெட்டி, மரப்பெட்டி, தோல் பதனிடுதல், சாயத் தொழில் ஆகிய தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களையும், தேன், கோந்து, ரப்பர் போன்ற பொருட்களையும் தந்து உதவி புரிகின்றன. மக்கள் தொகைப் பெருக்கத்தால் மனிதர்களுக்கு எரிபொருள், காகிதம் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது. வேளாண்மை, வீடு கட்டுதல், தொழிற்சாலைகள் அமைத்தல் ஆகியவற்றுக்கு காடுகள் பெரிதும் உதவுகின்றன.

மழை, புயல் போன்றவற்றால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்து மண் வளத்தைப் பாதுகாக்கிறது. மழை நீர் பூமிக்கு அடியில் சென்று நீரூற்றுகளில் தொடர்ந்து நீர் கிடைக்க காடுகள் வழி ஏற்படுத்துகிறது. மழை அளவு அதிகரிக்கவும், காலமாறுதல்களுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. காற்று மண்டலத்தில் ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்க உதவுகின்றன. காற்று மண்டலத்தில் உள்ள ஈரப்பத்தத்தில் மாசடைந்த காற்றினை கிரகித்து அதைச் சுத்தப்படுத்துகிறது.

காடுகளின் அழிவு

காடுகளின் அழிவு மனிதனின் வாழ்க்கைத் தரம், நாட்டின் பொருளாதாரம், எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றிற்கு தவிர்க்க முடியாத அச்சுறுத்தலாக உள்ளது. இன்றைய நிலையில் நாம் ஆண்டுதோறும் 1.5 பில்லியன் டன் மரங்களைப் பயன்படுத்துகிறோம். இந்த அளவு தற்போது நான்கு பில்லியன் டன்களை எட்டிவிடும் என்று கூறப்படுகிறது. இந்நிலை நீடித்தால் வெப்பக் காடுகள் முழுமையாக அழிந்துவிடும் அபாயம் உள்ளது. இடம்பெயர்ந்து பயிரிடும் முறை நம் நாட்டில் வேளாண் காடுகளின் தொன்றுதொட்ட வழக்கமாக இருந்து வருகிறது. காட்டின் ஒரு பகுதி மரங்கள், பயிரிடுவதற்காக வெட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. அதன் சாம்பல் மண்ணுடன் கலக்கிறது. அழிக்கப்பட்ட பகுதியில் இரண்டு மூன்று ஆண்டுகள் சாகுபடி நடக்கிறது. அந்த மண்ணின் சத்து குறைந்தவுடன் அதை அப்படியே விட்டுவிட்டு வேறு இடத்தில் பயிரிடும் தொழில் நடக்கிறது. அழிக்கப்பட்ட முந்தைய பகுதியில் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் செடி கொடிகள் வளர்கின்றன.

மலைப் பகுதிகளில் சாலை மற்றும் தொடர்வண்டிப் பாதைகள் அமைக்கும் பணி தொடங்கும்போது அப்பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்படுகின்றன. மலைகள் வெடிவைத்து தகர்க்கும்போது நிலச் சரிவு ஏற்படுகிறது. இதனால் மண் அரிப்பும் ஏற்படுகிறது.

அணைகள் கட்டுதல், கால்வாய்கள் அமைத்தல், நீர்த் தேக்கங்கள் அமைத்தல் மற்றும் நீர் மின் திட்டங்கள் ஆகியவற்றிற்குப் பெரும் காட்டுப் பகுதிகள் அழிக்கப்படுகின்றன. நிறைய காடுகள் நீரில் மூழ்கடிக்கப்படுகின்றன. இதனால் அங்கு பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்கள் இடம்பெயர நேரிடுகிறது. இதனால் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. மனித உயிர்களும், கால்நடைகளும், வீடுகளும் சேதமடையக் காரணமாக இவை இருக்கின்றன. காடுகளின் பாதுகாவலர்களான பழங்குடியினர் இடம் பெயர வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது.

மலைப் பிரதேசங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருட்களால் காடுகளில் உள்ள தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. கால்நடைகள் அதிக அளவில் தாவரங்கள் உண்பதால் காடுகள் அழிகின்றன. தொழிற்சாலைத் தளவாடப் பொருட்களுக்காகவும், விறகுகளுக்காகவும் மரங்கள் பயன்படுத்தப்படுவதால் காடுகள் அழிகின்றன. இயற்கையாகவும் மனிதர்களாலும் உருவாக்கப்படும் காட்டுத் தீ போன்றவற்றால் பல ஆண்டுகள் வளர்ந்து செழித்திருந்த மரங்கள் அழிகின்றன. காடுகள் அழிவதால், கோடைகாலம் அதிக வெப்பமாகவும், குளிர்காலம் அதிக குளிராகவும் மழை அளவு குறைந்தும் காலநிலை மாற்றங்கள் ஏற்படக் காரணமாகிறது.

நீரூற்றுகள் வறண்டு, நதிகளில் நீரோட்டம் குறைந்து வறட்சி ஏற்படுகிறது. நீரைத் தேக்கிவைக்கும் திறன் குறைவதால், மழைக் காலங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் ஏராளமான பொருள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. சிலவகைப் பூச்சிகள் தாவரங்களின் இலைகளையும் மொட்டுக்களையும் உண்பதாலும் நோய்களைப் பரப்பும் கிருமிகள் தாவரங்களைத் தாக்குவதாலும் காடுகள் அழிகின்றன. அதிகப்படியான பனிப் பொழிவு, தாங்க முடியாத வெப்பம், வேகமாக வீசு சூறாவளி ஆகிய இயற்கை இடர்களாலும் காடுகள் அழிகின்றன.

சிப்கோ இயக்கம்

இந்தியாவில்  இரக்கமற்ற முறையில் காடுகளில் உள்ள மரங்களை வெட்டிச் சாய்க்கும் முறைக்கு எதிராக முதல் எதிர்ப்புக் குரல் எழுப்பி அதற்காகத் தன் குடும்பத்தோடு உயிர் நீத்த முதல் நபர், ஜோத்பூர் நகர் அருகில் உள்ள கெஜாரிலி கிராமத்தைச் சேர்ந்த அம்ரிதாதேவி என்ற பெண்மணி ஆவார். அடுத்து  சுற்றுச் சூழல் ஆர்வலரும் பத்திரிகையாளருமான சுந்தர்லால் பகுகுணா அவர்களால் 1972 ஆம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தில் தொடங்கிய சிப்கோ இயக்கம் கர்நாடகா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மலைப் பிரதேசங்களுக்குப் பரவியது. பின்னர் காடுகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் 1988 ஆம் ஆண்டு இந்திய வனக் கொள்கை வெளியிடப்பட்டது. மலைப் பகுதியில் 60 சதவிகிதம் சமவெளிகளில் 20 சதவிகிதம் காடுகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

ஆனாலும் காடுகள் அழிந்து வருவதை தடுக்க முடியவில்லை. மனிதர்களின் நடவடிக்கைகளால் இயற்கை வளங்கள் சிதைந்து வருவது வேதனை அளிக்கிறது. அதுவும் அத்தனை இயற்கை வளங்களுக்கும் காரணமாக உள்ள காடுகள் குறைந்து வருவது எதிர்கால சந்ததியினர் கடும் இயற்கைச் சீற்றங்களை அதனால் பல விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். காடுகள் அழிந்தால் மழை பொய்க்கும், மழை குறைந்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும், இதை நம் வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவோம். காடுகளைப் பாதுகாத்து சுகாதாரம் பேணுவோம்.

Others, level of education in japan such as history or art, value both current and older material

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காடுகள் அழிவதா?: விளைவுகளை எண்ணுவோம் விழிப்புடன் இருப்போம்!”

அதிகம் படித்தது