மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காந்தியம் தேவையா?

ஆச்சாரி

Nov 30, 2013

நம்மில் சிலர் இன்றும், எந்தப் போராட்டமாக இருந்தாலும் உடனே உண்ணாவிரதம், அகிம்சைப் போராட்டம் என்று காந்திய வழி போராட்டத்தை மெச்சுகின்றனர். காந்திய வழி சிறந்த வழி என்ற கருத்து நிலவுகிறது. அன்று நம் நாட்டிற்கென ஒரு நிரந்தரமான, முறையான சமநிலை பெற்ற அரசோ, சட்டமோ இல்லாத நிலையில் காந்தியின் உண்ணாவிரதம், அகிம்சைப்போர் பொருந்தியது. இது அந்தக் காலகட்டத்திற்கு சரியானது. அப்போது நம்மை ஆட்சிசெய்த ஆங்கிலேயர்கள் அவர்களுக்குச் சாதகமான சட்டம், அதிகாரம், பதவி, உரிமை, ஊர்த் தலைவர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளைப் பணியில் அமர்த்துவது, வரிவசூல் செய்வது என்று பாரபட்சமாக இருந்தனர். எனவே காந்தியின் அகிம்சை உண்ணாவிரதம் சரி.

ஏனெனில் அப்போது நமக்கு, நமது மக்களால் ஏற்றப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சட்டம் மற்றும் நீதித்துறை இல்லை. மேலும் அகிம்சை என்ற ஒன்றை காந்தி மட்டுமே உலகத்திற்குச் சொன்னதாக நம்மில் பலர் எண்ணுகின்றனர் அது தவறு. புத்தர், மகாவீரர் மற்றும் அசோகர் போன்றோர் அகிம்சையைப் போதித்துள்ளனர். அகிம்சை பற்றி அவர்கள் சொன்ன காலத்தை மறைத்து, இதைக் காந்தி மட்டுமே சொன்னமாதிரி செயல்படுவது தவறு. ஏற்கனவே இருந்த ஒன்றையே காந்தி உள்வாங்கிக்கொண்டு வெளிப்படுத்தினார்.

அந்தக் காந்தியின் காலகட்டத்திலேயே அகிம்சைப் போராட்டத்தின் போது கூட வெள்ளையர்களின் சட்டத்தின் மூலமாக நீதிமன்றத்தின் வழியாக ஒரு தலைவர் சமுதாயத்தின் பிரச்சனைகளைச் சரி செய்துள்ளார். அவர்தான் இந்நாளில் நாம் அனைவரும் போற்றும் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர். மகத் (mahad) என்ற நகரம் சாவித்ரி நதிக் கரையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது. அந்த நகரத்தின் ஊர் பொது நீர் நிலைகளை சில உயர் மட்டத்தினர் மற்றும் உயர் சாதியினர் சொந்தம் கொண்டாடி, தலித் மக்கள் அதில் நீர் எடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள். அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 1927-ல் இருந்து தொடர்ந்து பத்தாண்டுகள் கடும் நீதிமன்ற வழக்குப் போராட்டத்தின் முடிவில் 1937-ல் ஆங்கில அரசு நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் அந்த ஊரில் உள்ள நீர் நிலைகளைத் தலித் மக்கள் நீர் எடுக்கலாம் என்ற தீர்ப்பு வழங்கியது.

இது போன்றே களாரம் (kalaram) கோவில் நாசிக் நகரத்தில் உள்ளது. இதிலும் உயர்சாதியினர்கள் தலித்மக்கள் கோவிலின் உள்ளே வரக்கூடாது என்று கூறினார்கள். அதனை எதிர்த்து 1930-ல் அம்பேத்கர் போராடத் துவங்கினார். அந்தப் போராட்டம் நான்கு ஆண்டுகள் நீடித்தது. 1934-ல் பல எதிர்ப்பு வந்தது. பின்னர் காந்தியின் ஒத்துழைப்பும் குறையத் தொடங்கியது. உடனே 1934-ல் அம்பேத்கர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அமைதியான முறையில் போராடினார். பின்னர் 1939-ல் கோவிலினுள் தலித்மக்கள் உள்ளே செல்லலாம் என்று இறுதித் தீர்ப்பு கிடைத்தது.

அந்தக் காலகட்டத்தில் நமக்குச் சொந்தமாக ஒரு அரசியல் அமைப்புச் சட்டம் இல்லாத நேரத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அதனை அமைதியாக வாதாடி மிக நேர்மையான முறையில் நீதி பெற்றார் அவர். இன்று நமக்குச் சொந்தமாக ஒரு அரசியல் அமைப்புச் சட்டம் ஜனவரி 26, 1950-ல் இருந்து பயன்படுத்தி வருகின்றோம். 63 ஆண்டு காலமாக நாம் பயன்படுத்தி வருகின்ற இச்சட்டத்தை மேலும் நாம் பிற்காலங்களில் பயன்படுத்த உள்ள நமது அரசியலமைப்புச் சட்டத்தினை முறையாக நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோமா? அல்லது அதனை எங்கு, எந்த இடத்தில் எந்தச் சட்டத்தினைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து உள்ளோமா? அல்லது நமக்குப் பிறகு வரும் நமது தலைமுறையினருக்குச் சரியாக எடுத்துச் சொல்லியிருக்கின்றோமா? என்றால் இல்லை என்பதுதான் நம்மில் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும்.

இன்று நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள மிகவும் முக்கியமான ஒன்று ஓட்டுப் போடும் உரிமை. அதை நம்மில் எத்தனை பேர்கள் சரியான முறையில் பயன்படுத்துகின்றோம்? தேர்தல் என்று வந்துவிட்டால் படித்த உயர்மட்டத்தில் வேலை செய்பவர்கள் ஒரு நாள் விடுமுறை கிடைக்கும் நன்றாக ஓய்வு எடுக்கலாமே என்றுதான் நினைக்கிறார்களே தவிர அக்கடமையை சரியாக எத்தனை பேர் நிறைவேற்றுகிறார்கள்?. மென்பொருள் அலுவலகங்களில் வேலை செய்பவர்களின் எண்ணம், ஓட்டெல்லாம் யார் போடுவார்கள்? என்பது. மாணவர்களுக்கு விடுமுறை என்ற மகிழ்ச்சி. இதில் பொது மக்களின் நிலைப்பாடு என்னவென்றால், இலவசப் பணம், மது ,பிரியாணி என எல்லாம் கிடைக்கும் என்று மகிழ்ச்சி அடைகின்றனர். நகரத்தில் உள்ளவர்களின் நிலைப்பாடும் இந்நிலையே. இவை மட்டுமே இன்றி பல அரசியல் கட்சித் தலைவர்கள், மக்களை ஏமாற்றுவதற்கும் நாம் நமது அடிப்படை அரசியல் அமைப்புச் சட்டத்தினைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது ஒரு காரணமாகும். அதனால் தான் நம் நாடு தேர்தலின் போது 100 சதவீத ஓட்டு எண்ணிக்கையைப் பெறமுடியாமல் உள்ளது.

 பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கீடு எடுக்கப்படும். அதில் எழுத்தறிவு பெற்றவர்கள் எத்தனை பேர்கள் என்று வரும். எதன் அடிப்படையில் அவர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் என்று கொள்ளப்படுகின்றது என்றால், யார் ஒருவருக்கு ஏதேனும் ஒரு மொழியில் எழுதப்படிக்கத் தெரியுமோ அவர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் பட்டியலில் வருவார்கள். அவர்கள் படித்த அனைவரும் இந்த அடிப்படை அரசியல் அமைப்பைத் தெரிந்து கொண்டு வெளியில் உள்ளவர்களுக்கு சொல்லி புரியவைக்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் உள்ள பள்ளி பருவத்தில் உள்ள குழந்தைகளுக்குச் சொல்லிவந்தால் காலப்போக்கில் அனைவரும் நமது அரசியலமைப்பை அறிந்து விடுவார்கள்.

நாம் நமது அரசியலமைப்பைப் பற்றிச் சரியாகத் தெரியாமல் இருப்பதால், நமது அரசியல் கட்சிகள் இன்று நமது மக்களை எவ்வாரெல்லாம் ஏமாற்றுகின்றனர்கள் என்று பார்ப்போம். நமது அரசியல் அமைப்புச் சட்டம் பற்றிய அடிப்படை தெரியாமல் உள்ளதால் அரசியல் தலைவர்கள் அரசியல் செய்யும் சமூக பிரச்சனைகள் தீராமல் உள்ளது. அரசியல் சட்டம் பற்றித் தெரிந்து கொண்டால் அவர்களைச் சமாளிக்க நமக்கு ஏதுவாக இருக்கும்.

தமிழ்நாட்டின் ஒரு பகுதியான கச்சத்தீவை அப்போதைய இந்திய அரசு இலங்கைக்கு அளித்த போது அப்போதைய தமிழ்நாடு அரசு என்ன செய்திருந்தால் நமக்கு கச்சத்தீவை இழந்திருக்க மாட்டோம் என்பது தெளிவாகப் புரியும்.

நதிநீர் பங்கீடு பற்றி முதலில் பார்ப்போம். நதிநீர் என்பது எல்லோருக்கும் பயன்படவேண்டிய ஒன்று. அதில் காவிரி நதிநீர் பகிர்வில் தமிழகம் மற்றும் கர்நாடகம், தமிழகம் மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையே காலம் காலமாக பிரச்சனை இருந்து வருகிறது.  உண்மையில் மாநிலங்களுக்கிடையே பாயும் நதிகளை எந்த மாநிலத்திற்கும் முழுமையான சொந்தம் என்று யாரும் உறவு கொண்டாட இயலாது. நதிநீர் பகிர்வில் சர்வதேசச் சட்டம் கூறுவது என்னவென்றால்  இருமாநிலங்களுக்கிடையே பாயும் நதிநீர் பகிர்வில், நதியானது கடைசியாகப் பாய்ந்து கடலில் கலக்கும் மாநிலத்தில் தேவையை முதலில் கணக்கிட்டு அப்பகுதிகளுக்கு எவ்விதத்திலும் நீர் குறைபாடும் நேரா வண்ணம் அப்பகுதிகள் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இந்திய அரசியல் சாசனத்தில் 262-ஆம் சரத்தின் பிரிவு 1-ல் பாராளுமன்றம், மாநிலங்களுக்கிடையே பாயும் நதிநீர் தொடர்பாக ஏற்படும் சச்சரவுகளில் சட்டமியற்றி சமநிலை செய்யவும், நதிநீர் உபயோகம், பகிர்வு மற்றும் நீர் நிர்வாகம் போன்றவற்றில் எந்த மாநிலங்களுக்கிடையே பிரச்சனைகளில் தலையிடவும் முழு உரிமை பெற்றுள்ளது.

இதே சரத்தில் 2-வது பிரிவில் பாராளுமன்றம் சட்டமியற்றி உச்சநீதிமன்றத்திற்கோ அல்லது வேறு ஏதேனும் நீதிமன்றத்திற்கோ பிரிவு 1-ல் காணலாகும் பணியை அந்நீதிமன்றங்களுக்கு வழங்கலாம். இதன் மூலம் நதிநீர் சச்சரவுகளில் நேரடியாகத் தலையிட நீதிமன்றங்களுக்கு அரசியல் சாசன அமைப்பு எவ்வித உரிமையும் அளிக்கவில்லை. மாறாக முழுப்பொறுப்பும், கடமையும் பாராளுமன்றத்திற்கே அளித்துள்ளது என்பது தெளிவாகின்றது. பாராளுமன்றம் சட்டமியற்றி அச்சட்டத்தில் அளித்துள்ள பணிகளை மட்டுமே உச்சநீதிமன்றம் செய்ய இயலும். இவ்விதத்தில் உச்சநீதிமன்றத்தின் பணி பாராளுமன்றத்திற்கு இயற்றும் சட்டத்திற்கு உட்பட்டதாக காணப்படுகிறது.

அரசியல் சாசன அமைப்பின் 262-ன் கீழ் மாநிலங்களுக்கிடையேயான நீர் சச்சரவு சட்டம் 1956 (33-ன் இயற்றப்பட்டது). அச்சட்டத்தின் 11-வது பிரிவு ஏதேனும் சச்சரவை தீர்ப்பாயம் விசாரிக்குமானால், உச்சநீதிமன்றம் அதில் தலையிட முடியாது. மேலும் தீர்ப்பாயத்தின் முடிவு இறுதியானது. அதை நடைமுறைப்படுத்த மத்திய அரசிற்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட முடியும்.

எனவே தான் நதிநீர் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளை கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்கள் செயல்படுத்துவதில்லை. மாறாக அவற்றிற்கு எதிராக அம்மாநில சட்;டசபைகளில் சட்டமியற்றி நீதிமன்றத் தீர்ப்பை செல்லாதவையாக்குகின்றன. 2005-ல் ஆண்டு முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தில் சுமார் 146 அடி வரை நீரைத் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க, அதை மதியாத கேரள அரசு, மாநில அணைக்கட்டுகளில் சட்டசபையால் இயற்றப்பட்ட சட்டத்தால் மட்டுமே நிர்வாகம் செய்யவேண்டும் எனச் சட்டமியற்றி உச்சநீதிமன்றத் தீர்ப்பை புறம் தள்ளின.

வங்கிகள், நெடுஞ்சாலைகள், கனிமவளங்கள், மின்சாரம் போன்றவற்றை தேசியமயமாக்கிய அரசியல் தலைவர்கள் நதிநீரை தேசியமயமாக்கத் தவறவிட்டனர்.

இனிக் கச்சத்தீவை பற்றிப் பார்ப்போம். இந்தியா-இலங்கை இடையே மன்னார் வளைகுடாவில் இந்திய கடற்பரப்பில் இருந்து சுமார் 13- கடல் மைல் தொலைவிலும் இலங்கையின் கடற்பரப்பிலிருந்து சுமார் 12 கடல்மைல் தொலைவிலும் அமைந்துள்ள சிறிய கடல் திட்டே கச்சத்தீவு. இராமநாதபுர மாவட்ட வருவாய் துறையினரின் நிலபதிவேடுகளின்படி இப்பகுதிகள் 1800-க்கு பின்னரும் மன்னர் சேதுபதியின் ஆளுகையின் கீழ் இருந்ததாக ஆவணக் குறிப்புகள் இன்றளவும் உள்ளன.

இந்தத் தீவை 1974-ல் அப்போதைய மத்திய அரசு இலங்கைக்கு வழங்கியது. இதேபோல் 1960-ல் மேற்கு வங்காள மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதியான பெருவாரி பகுதியை மேற்கு வங்காள மாநிலத்தின் ஒப்புதலின்றி 1960-ல் ஆண்டு சாதாரண பாராளுமன்ற மசோதாவின் மூலம் இந்திய அரசு பாகிஸ்தான் அரசிற்கு வழங்க முயன்றது. இதைக் கடுமையாக எதிர்த்த மேற்கு வங்க அரசு இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம் மாநிலங்களை பிரித்துத் தனி மாநிலங்களாக ஏற்படுத்துவது போன்றவற்றை மட்டுமே அரசியல் அமைப்பு சாசனத்தில் 2 மற்றும் 3-வது சரத்துகளைப் பயன்படுத்திச் சாதாரண பாராளுமன்ற மசோதாவின் மூலம் ஏற்படுத்தலாமேயன்றி இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளை வேறு நாட்டிற்கு அளிக்கும் போது அதைச் சரத்து 368-கீழ் அரசியலமைப்புச் சாசன திருத்தத்தின் மூலம் மட்டுமே செயல்படுத்த இயலும். எனவே பாராளுமன்றத்தின் இத்தகைய செயல் அரசியல் அமைப்பு சாசனத்திற்கு எதிரானது என அம்மசோதாவை தள்ளுபடி செய்தது. ஆனால் மத்திய அரசு கச்சத்தீவை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கெதிராகச் சாதாரண பாராளுமன்ற மசோதாவின் மூலம் இலங்கைக்கு அளித்து மீண்டும் தவறிழைத்து விட்டது. அதைக் கண்கூடாக அப்போதைய தமிழ்நாடு அரசு பார்த்துக் கொண்டு இருந்தது இன்று.

இன்று நாங்கள் கச்சத்தீவை மீட்போம், காவேரி,முல்லைப்பெரியார் நீர் தமிழகத்திற்கு கொண்டு சேர்ப்போம் என்று அனைத்து அரசியல் தலைவர்களும் மக்களை ஏமாற்றுகின்றனர்கள். இவை எல்லாம் நாம் நமது அரசியல் அமைப்பை தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பதால் நிகழ்பவை. காந்தியம் அப்போது சரி காந்தி காலத்தில் இப்போது உள்ள காலகட்டத்தில் அரசியல் அமைப்புச் சட்டம் கட்டாயம் நாம் ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

அரசியல் அமைப்புச் சட்டம் தெரிந்திருந்தால் ஓட்டு அதன் உரிமை, மக்களாட்சியின் பெருமை எல்லாம் நன்றாகத் தெரியும். நாம் ஓட்டுப் போடாமலும் இருக்க மாட்டோம். தவறானவர்களுக்கு ஒட்டுப்போடவும் மாட்டோம். நமது நாடு தேர்தலின் போது 100 சதவீதம் ஓட்டுப் பதிவு நடைபெறும். நாம் நமது பழமையும் உலகின் தனிப் பெருமையும் மறந்தோம். உலகத்திற்கு முதன் முதலில் மக்களாட்சியை அறிமுகப்படுத்தியவர்கள் அரசியல் அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? அரசியலில் தேர்தலில் போட்டிடவும் வெற்றி பெற்ற பின் எப்படி இருக்க வேண்டும்? என்று சொன்னவர்கள் தமிழர்கள்.

       -தொடரும்  . . .

A web facility permits the selection of a random sample of the raw data collected for http://www.pro-homework-help.com/ censusatschool

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காந்தியம் தேவையா?”

அதிகம் படித்தது