மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காமத்துப்பாலை மறைக்கலாமா? (கட்டுரை)

ஆச்சாரி

Apr 1, 2013

திருக்குறளின் காமத்துப்பாலைப் பள்ளிவயது மாணவர்களிடமிருந்து நம் சமுதாயம் மறைப்பதை மீண்டும் மீண்டும் காண்கிறோம். பாடப்புத்தகங்களிலும் ஒப்பிப்புப் போட்டிகளிலும் அதனைத் தவிர்ப்பதைப் பரவலாகக் காணலாம்..

மற்றபடிப் பெரியவர்களுமேகூடத் திருக்குறளைப் படிக்கும்பொழுதும் காமத்துப்பாலைத் தவிர்ப்பதைக் காணலாம்.

 

திரைப்படக் காதலைவிடத் திருக்குறட் காதல் மோசமா?

ஆனால் இப்படிக் காமத்துப்பாலைத் தவிர்க்கும் அதே பெற்றோர்களும்  நண்பர்களும் போட்டியேற்பாட்டாளர்களும் திரைப்படங்களின் காதற்கதைகளையும் காட்சிகளையும் தங்கள் குழந்தைகளோடுகூடிச் சுவைப்பதைக் காண்கின்றோம்! இந்தக் காலத்திலே திரைப்படங்களில் மிகவும் வலுத்துக்காணும் ஒழுக்கக்கேடான போலிக்காதலையும், கொச்சையான காமப் பாடல்களையும் குடும்பமே பார்க்கிறது, கேட்கிறது. மேலும் பண்டிகைப் பொழுதுகளில் கூடித் தங்கள் பிள்ளைகளை அந்த ஆபாசப் பாட்டுக்களுக்கும் ஆடவும் கூடப் பழக்குகின்றார்கள்!  ஆனால் அதே தமிழ்ச்சங்கங்களின் பண்பாட்டுச் செயற்குழுவினர் இலக்கியப்போட்டியிலே காமத்துப்பாலை விலக்கிவிடுவார்கள்!

திருக்குறள் கண்ட தூயகாதலைத் தாங்கள் படிப்பதற்கும் தங்கள் பிள்ளைகளைப் படிப்பிப்பதற்கும் எப்படி மறுக்கிறார்கள்! இக்காலத் திரைப்படங்களில் காட்டும் காமத்தின் தரத்தைவிடக் குறளின் காமத்துப்பால் மோசமா? என்று நினைத்துப்பார்க்கவேண்டும். திரைப்படங்களை நாணமின்றிக் குடும்பத்தோடு பார்ப்பவர்களுக்கு வள்ளுவனின் காமத்துப்பால் காட்சிகளைக் கற்பிக்கும்பொழுது மட்டும் ஒரு நாணம் ஏன்?என்ன குழப்பம்! நம் சமுதாயம் இரட்டைவாழ்க்கை வாழ்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

 

சமயத் தலைவர்களின் பண்பாட்டுக் குழப்பம்:

இந்தக் குழப்பத்தின் முழுமுற்றலாகக் காமத்துப்பாலைத் திருவள்ளுவர் இயற்றவே கிடையாது அதுபிற்சேர்க்கை என்று கூறுபவர்களும் உண்டு!  அமெரிக்க அவாயித் தீவொன்றில் சிவன்கோயிலும் மடமும் நிறுவிய சிவாயசுப்பிரமணியர் அத்தகையவர். அவர் தம்முடைய “நெசவாளனின் ஓர்ச்சி” (Weaver’s Wisdom) என்ற திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பில் காமத்துப்பாலைச் சேர்க்கவேயில்லை! அதன் முன்னுரையிலே அதற்காக அவர் சொல்லும் காரணங்களில்  சில:

“முதலிலே யாங்கள் துறவிகள் என்பதால் எங்களுக்குக் காமஞ்சார்ந்த இதன் மொழிபெயர்ப்பில் ஈடுபடக் கூசுகின்றது. இரண்டாவதாகக இந்தநூல் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஆர்வந்தூண்டும் நோக்கத்தையே பெரும்பாலும் கொண்டது, அதிலே இந்தப்பாலை உட்படுத்துவது தகாதென்று தோன்றுகின்றது. மூன்றாவதாக வெளிப்படையாகக் கூறினால், இந்தப் புதுமியக்கால வாழ்க்கைக்கும் பழக்கத்திற்கும் பெருத்த தொடர்புடையதாகத் தெரியவில்லை; அது வெறுமனே ஒரு சூட்டிகையான காதலுரையாடல், அவ்வளவுதான்.“ என்று சொல்லி மேலும் தொடர்கிறார் சிவாயசுப்பிரமணியர்.

“இறுதியாக அந்த இறுதி இருபத்தைந்து அதிகாரங்களும் அந்த நூலின் மற்றபகுதிகளின் இயல்பினின்று பெரிதும் மாறுபட்டிருப்பதைப் பார்த்தால் அவை வேற்று ஆசிரிய ர்ஒருவரால் இயற்றினவையோ என்று ஐயுறுகிறோம். அதன் அமைப்பும், மொழியும், அணுகுமுறையும் அதற்கு முந்தைய எல்லாவற்றினின்றும் முற்றிலும் மாறுபட்டுள்ளது. கருத்தாழமுங்கூட அப்படிச் சிறக்கவில்லை. …” என்று பலவாறும் கூறுகிறார் அவர்.

 

இவையனைத்துமே எந்தத் தமிழ்ப்பண்பாட்டுச் சான்றுகளுமே இன்றிச் சொல்பவையாகும்; அதனைத் திருக்குறளுக்கு முன்பும் பின்பும் தோன்றிய இலக்கியங்களைப் பார்த்தாலே உடனே வெளிப்படையாகத் தெரிந்துவிடும். திருக்குறளுக்கு முந்தைய சங்க இலக்கியங்கள்  பெரும்பாலும் தலைவன்தலைவியரின் காதலைப் பற்றியனவே. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு,குறிஞ்சிப்பாட்டு ஆகியன முற்றிலும் காதலைப் பற்றின பாடல்களே; இசைப்பாடல்கள் கொண்ட பரிபாடல், முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை ஆகியவற்றின் பகுதிகள் காதலைக் குறித்தனவே.

 

ஞானமும் மோட்சமும் தருவது களவுக்காதல் இலக்கணம்:

மேலும் இறையனார் களவியலுரை அல்லது இறையனார் அகப்பொருளுரை என்ற 1200 ஆண்டுகள் பழைய அரியநூல் களவுக்காதல் என்ற அகப்பொருளின் துறை பற்றியது. அந்த உரைநூல் உரைகூற மேற்கொண்டுள்ள சூத்திரங்களை மதுரைச் சிவபெருமானே  செப்பேட்டிலே எழுதி இட்டுவைத்ததாக அந்தநூல் சொல்கிறது. பாண்டியன் பொருளிலக்கணம் அறிந்தாரில்லை என்று வருந்தினதுகண்டு மதுரை ஆலவாயில் அழனிறக்கடவுள் “அது ஞானத்திடையது ஆகலான் யாம் அதனைத் தீர்க்கற்பாலம்” என்று இவ்வறுபது சூத்திரத்தையும் செய்து செப்பிதழகத்து எழுதிப் பீடத்தின்கீழிட்டான் என்கிறது அந்நூல். எனவே களவுக்காதலின் இலக்கணத்தை உயர்ந்த ஞானமாகக் கருதினது தெரிகிறது.

அதிலே அந்தநூலின் கற்ற பயனைச் சொல்லும் பொழுது

“என்பயக்குமோ இதுகற்கவெனின் வீடுபேறு பயக்குமென்பது”

என்று சொல்கிறது; அதனால் நம்மிலக்ககியங்கள் கண்ட தூயகாதல் மோட்சம் என்னும் வீடுபேற்றினைத்தரும் உயர்ந்த தத்துவப்பொருளாகவும் கருதினது தெரிகிறது. இது மேற்கண்ட சிவாயசுப்பிரமணியருக்கு நேரெதிராக உள்ளதை அறியவேண்டும்.

யாருமே முதலாக உணரவேண்டியது என்னவென்றால் காமத்துப்பாலிலே உடலளவிலான ஆசைகளுக்கு முதன்மை கொடுப்பதோ உடற்கலப்புச் செய்கைகளைச் சித்திரிப்பதோ கிடையாது என்பதே. வடமொழியிலே வாத்சாயனார் இயற்றிய காமசாத்திரம் என்னும் நூல் அதற்கு நேர்மாறானது; அங்கே ஆண் பெண் உடற்கலவிக்கான வழிமுறைகள் சொல்லியுள்ளன. ஆனால் திருக்குறளின் காமத்துப்பாலில் தலைவனும், தலைவியும் ஆண்,பெண் என்ற முறையிலே மையல் கொண்டாலும் அவர்கள் உள்ளத்தளவில் பொதிந்துள்ள அன்பை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் நுணுகிய உள்ளத்துணர்வுகளைச் சித்திரிப்பதைக் காணலாம். எனவே இரண்டு நூலிலும் காமம் என்ற சொல் பயின்றாலும் மலையும் மடுவும் போல் வேறுபட்ட நோக்கமும் பொருளும் கொண்டவை என்று உணரவேண்டும்.

 

தமிழ் என்றாலே அகப்பொருள்தான்

            தமிழ்ப் பண்பாட்டின் ஒருதனிச் சிறப்பே காமத்துப்பால் காட்டும் அகப்பொருள் இலக்கணந்தான். திருக்குறளின் அறத்துப்பாலும், பொருட்பாலும் சொல்லுகிற கருத்துகளில் கணிசமானவற்றை மற்ற மொழியினரின் நூல்களில் கூடக் காணலாம். ஆனால் காமத்துப்பாலின் அகப்பொருள் தமிழ்ப்பண்பாட்டுக்கே உரியதாகும். அதனால்தான் அந்தப்பொருளிலக்கணத்திற்கு இன்னொரு பெயர் தமிழ் என்பது!

 

தமிழறிவித்தல் என்றாலே களவுக்காதலின் கற்பை அறிவித்தல்:

மேலும் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்கப்பாட்டின் குறிப்பு

“ஆரியவரசன்  பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு”

என்கிறது.

அந்தப் பாட்டை ஓதுபவர் யாரும் அது ஆரியமொழிபேசும் ஒருவனுக்குத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் அளவு எளிய நடையுள்ளதன்று என்பதை உணர்வர்;

அங்கே தமிழ் என்பது அதன் பொருளான “அறத்தொடு நிற்றல்” என்னும் காதற்றுறையின் ஒழுக்கமாகும்;

அது தலைவியின் களவுக்காதலின் உறுதியை அவளை வளர்த்த செவிலித்தாய்க்குத் தோழி உணர்த்தும் துறையாகும்.  இங்கே அறம் என்ற சொல் முதலில் கவனிக்கத்தக்கது: அடிப்படைத் தருமம் என்பதே காதலிலே கற்பு என்னும் உறுதியோடு நிற்றல்தான் என்று அது குறிப்பதைக் கவனிக்கவேண்டும்.

அந்த அறத்தொடுநிற்றல் என்னும் துறைத் தலைவியானவள் தான் காதலிக்கும் தலைவனை இறந்து மறுபிறவியிலாவது அடைவாள் என்று சொல்லுவதாகும்: “ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு” (குறிஞ்சிப்பாட்டு : 23-4). அதற்கு நச்சினார்க்கினியரின் 13-14-ஆம் நூற்றாண்டுரை உரைப்பது என்ன? “ஆற்றின் வாரார் ஆயினும்  இங்ஙனம் அறத்தொடு நின்றபின் தலைவர்க்கே நம்மை அடைநேர்ந்திலராயினும், ஆற்ற  நாம் உயிர்போந்துணையும் இவ்வருத்தத்தைப் பொறுத்திருக்க, ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு  மறுபிறப்பினும் இக்கூட்டம் கூடுவதொன்றாயிருந்தது” என்கிறது. அஃதாவது “இப்படிக் களவாகக் காதலித்தவரையே மணப்பேன் என்று அறத்தோடு நின்ற பின்னும் தலைவர்க்கே நம்மைக் கொடுக்காவிட்டால், நாம் உயிர்போகும் வரையும் இந்த வருத்தத்தைப் பொறுத்திருக்கவும், அதன்பிறகு மற்ற உலகமாகிய மறுபிறவியிலாவது நமக்குத் தலைவரை  அடைவது இயலும்” என்றுபொருள்.

எனவே இப்படி உயிரினும் மேலான கடவுட்காதலே தமிழினத்தின் அடையாளமாகக் கருதினதையும் அதனால் அதற்குத் தமிழென்ற பெயரழைத்துள்ளதையும் காண்கிறோம். இப்படிப்பட்ட காதலை உள்ளடக்கினதால்தான் தமிழர்களால் காமத்தை வெளிப்படையாகப் போற்றிக்கொண்டாட முடிந்தது; மற்றபல சமுதாயத்தினர் அதனைக்காணாததால் உயர்வளிக்க முடியாமல் காமமென்றாலே வெறுமையுணர்வுகொண்டு அதனை மறைப்பதை மேற்கொண்டனர்.

 

வள்ளிமுருகனின் திருமணத்தத்துவமே கற்புடைய களவுக்காதல்தான்:

மேற்கண்ட அறத்தொடுநிற்றல் என்ற குறிஞ்சித்திணை ஒழுக்கத்தைக் கருத்திலேகொண்டு தமிழென்ற சொல்லைக் காதலிலக்கணம் என்ற பொருளில் கூறுவதைப் பரிபாடல் என்னும் இசைப்பாடல்கள்கொண்ட சங்கநூலிலே  காணலாம். திருப்பரங்குன்ற மலையைப் புகழும்பொழுது வள்ளிமுருகன் களவுக்காதலைக் கருவாகக் கொண்ட பொருளிலக்கணத்தை ஆய்ந்திலாதவர்கள் பரங்குன்ற மலையின் பயனை உணரமாட்டார்கள் என்கிறார் குன்றம்பூதனார் என்ற புலவர்; அப்படிச் சொல்லும்பொழுது அவர் பொருளிலக்கணத்தின் இயல்பினை உடைய தண்டமிழ் என்கிறார்:

“தள்ளாப் பொருளியல்பின் தண்டமிழ் ஆய்வந்தில்லார் கொள்ளார் இக்குன்று பயன்” (பரிபாடல்:9:25-26).

எனவே வள்ளியையும், முருகனையும் தமிழ்க்கடவுளர்களாக வணங்குவதன் அடிப்படையே குறிஞ்சித்திணையின் தலைமக்களாகிய அவர்களின் தூயகாதல்தான். ஆனால் இன்று அதனை மறந்து வள்ளிமுருகன் திருமணத்திற்கு உட்பொருளாக இச்சாசத்தி, கிரியாசத்தி ஆகிய உள்ளீடற்ற தத்துவக்கருத்துக்களை எல்லாம் புகுத்தி தொல்பழம் உண்மையை மூழ்கடிப்பதைக் காண்கிறோம்.

 

உயர்ந்த இலக்கணங்கொண்ட தலைமக்களின் காதல்:

இப்படிப்பட்ட நம் தமிழிலக்கியத்தின் காதல் தொல்காப்பியத்தின் தலைவன் தலைவியின் இலக்கணத்தைப் பின்பற்றுவதாகும்;  தொல்காப்பியம் தலைவியின் இலக்கணமாக

உயிரினும் சிறந்தன்று நாணே;

நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று

(தொல்காப்பியம்: பொருள்: களவியல்: 23)

என்று சொல்கிறது. தலைவிக்கு “உயிரைவிட நாணம் சிறந்தது; அந்த நாணத்தை விடக் குற்றம் நீங்கிய தெளிவினை உடைய கற்பு என்னும் திண்மை சிறந்தது” என்கின்றது. எனவே நம் இலக்கியக்காதல் தூய கடவுட்டன்மை வாய்ந்ததாகும்.

தலைவனுக்கும் இலக்கணமாகப்

பெருமையும் உரனும் ஆடூஉ மேன

(தொல்காப்பியம்: பொருள்: களவியல் :7) என்கின்றது.

 

நச்சினார்க்கினியர் பெருமை என்பது அறிவும் ஆற்றலும் புகழும் கொடையும் ஆராய்தலும் பண்பும் நண்பும் பழிபாவங்கட்கு அஞ்சுதலும் முதலியனஎன்றும் உரன் என்பதுகடைப்பிடியும் நிறையும் கலங்காது துணிதலும் முதலிய வலியின் பகுதியும் என்றும் உரைப்பார்.

அவற்றை விளக்கினால் கடைப்பிடி என்பது “நன்றென அறிந்த பொருளை மறவாமை”;

நிறை என்பது “தன் நடத்தையில் காக்கவேண்டியதைக் காத்து நீக்கவேண்டியதை நீக்கும் ஒழுக்கம்”;

கலங்காது துணிதல் என்பது “நெஞ்சங் கலங்காமல் உறுதிமேற்கொள்ளல்”.

 

உரன் என்பதற்கு இளம்பூரணர் என்ற இன்னும் பழைய உரைகாரர் ““இதனானே மேற்சொல்லப்பட்ட தலைமகளது வேட்கைக் குறிப்புக் கண்ட தலைமகன், அந்நிலையே புணர்ச்சியை நினையாது வரைந்து எய்தும் என்பது பெறுதும்” என்கிறார்; அஃதாவது “ … தலைமகளது காமக்குறிப்பைக் கண்டறிந்த தலைமகன், அந்த நிலையிலேயே அவளைக் கூடுவதை நினையாது வரைந்து ( திருமணச்சடங்கு செய்து) அடைவான் என்பது பெறுகிறோம்” என்கிறார்!  தமிழ்த்தலைவன் காமுகனாக அலையாமல் ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்ட காதலனாய்த் திகழ்வது நமக்கு மெய்சிலிர்க்கிறது.

 

அகப்பொருள்தான் தமிழ்ப்புலமையின் உச்சக்கட்டமென்று மிகப் பழங்காலந்தொட்டே தமிழர்கள் கருதினர். கோவை என்னும் வகை நூல் அகப்பொருள் இலக்கணத்தில் உள்ள நூற்றுக்கணக்கான துறைகள் (சூழ்நிலைகள்) எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு கவிதையாகப் படுவது. இது பாடுவது மிகக் கடினமாகும். பொய்யாமொழிப் புலவரின் தஞ்சைவாணன் கோவை, மாணிக்கவாசகரின் திருக்கோவையார் என்பவை இவற்றுள் தலைசிறந்தனவாகும்.

 

மூன்றுவயதுப்பிள்ளை திருஞானசம்பந்தனின் முதற்பாட்டே காமப்பாட்டுத்தான்!

            திருஞானசம்பந்தர் உலக வரலாற்றிலேயே மிக இளைய இசைக்கவிஞன் என்பது தெரிந்ததே; அவர் மூன்றுவயதில் பாடிய “தோடுடைய செவியன்” என்ற தேவாரப் பதிகம் காமத்தை அடிப்படையாகக் கொண்ட அகத்துறைப்பாடல் என்பதைப் பலரும் மறந்துவிடுகின்றனர்!

அதில் பலபாடல்களில் “என் உள்ளங் கவர்கள்வன்” என்று சொல்வது களவுக்காதலில் ஈடுபட்ட தலைவியின் சொல்லாகும்;

அதை வெளிப்படையாகவே மூன்றாம்பாட்டில் “இனவெள் வளை சோர என் உள்ளம் கவர்கள்வன்” (“தொகுதியான வெண்சங்கு வளையல் கழன்று விழ, என்னைக் காதல் ஏக்கத்தால் உடல் மெலியச் செய்யுமாறு என் உள்ளம் கவர் கள்வன்”) என்னும் அகப்பொருட்பாடல்களின் மிகவும் வழக்கமான சொற்களால் அறியலாம்.

ஆனால் அந்தப் பதிகத்துப்பாடல்களை யாரும் சிறுவர்களுக்குக் கற்பிக்கத் தயங்குவதில்லையே?! மேலும் மூன்றுவயதுச் சிறுவனான திருஞானசம்பந்தன் 1400 ஆண்டுகள் முன்பு காதலிலக்கணத்தைக் கற்றுள்ளதையும் ஆராயவேண்டும்; அப்படியென்றால் பண்டைத் தமிழகத்தில் நிலவிய தெளிவினைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் இன்றைய தமிழ்ச்சமுதாயமும் திரைப்படங்கள்வாயிலாகக் காமத்தைக் கற்பிக்கிறதுதுதான்; ஆனால் நெறிபிசகின காமத்தைத்தான் கற்பிக்கிறது. எனவே காமத்தை எப்படியாவது சமுதாயங்கள் எல்லாக் காலத்திலும் சிறுவர்களுக்குக் காட்டுகின்றன. ஆனால் அதன் பண்புதான் மாறியுள்ளது என்பதை ஒப்பீட்டால் உணரலாம்.  மேலும் 1970-80கள் வரைகூடத் தமிழ்த்திரைப்படங்கள் பெரும்பாலும் தொல்காப்பியநெறி பிசகாமல் தலைமக்களைக் கொண்டிருந்தன. பிறகே படிப்படியாகப் பிசகத்தொடங்கின; அதற்குத்தக்க கீழான உரையாடல்களும் பாடல்மொழிகளும் பெருகியுள்ளதையும் காணலாம்.

முன்பு கூறிய மாணிக்கவாசகரின் நூலான திருக்கோவையார் சைவச் சமயத்துக் கவிதைகளில் தலைசிறந்ததாகக் கருதுவதாயினும் அது காமத்துப்பாலேயாகும். மேலும் ஔவையார் “நான்குவேதங்களின் முடிவான வேதாந்தமும் திருக்குறளும் அப்பர் சுந்தரர் சம்பந்தர் என்ற மூவரின் தமிழும் திருக்கோவையாரும் திருவாசகமும் ஒருசொல்லே என்று அறி” என்று குறித்து

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் கோவைத்

 திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகமென் றுணர்

நல்வழி:40)

எனப் பாடும் அளவு தத்துவச்செறிவும் கொண்டதும் ஆகும்.

            இது மேலே நாம்கண்ட அவாயிச் சைவமடத்துத் துறவியரான சிவாயசுப்பிரமணியர் காமத்துப்பாலை விலக்குவதற்கு சொல்லியதற்கும் மிக மாறாக இருப்பதையும் உணர்ந்துகொள்ளலாம்.

 

சிவன்கோவிலுக்குப் போவதைத் தடுக்கவேண்டுமே?

காமத்துப்பாலைச் சிறுவர்களிடமிருந்து மறைப்பவர்கள் சிவன்கோவிலுக்கும் தடைவிதிக்கவேண்டுமே? அங்கே திருவோலக்கத்தில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தின் உருவ உண்மையை எப்படி மறைத்து விளக்குவார்கள்? மேலும் குடிமல்லம் (Gudimallam) போன்ற பழங்கோவில்களிலே காணும் சிவலிங்கத்தைக் காண்பவர்கள் திகைத்துப்போவார்கள். இப்படிப்பட்ட உடலுறுப்பு உருவங்களைக்கூட ஊரோடுகூடி வழிபடும் மக்கள் காமத்துப்பாலை ஓதுவதிலும், ஓதுவிப்பதிலும் தடுமாறுவதைக் காண்கிறோம்.

கடவுளைவிடக் கற்பே உயர்ந்தது:

            இது தொடர்பாக அறிஞர் ஒருவர் கூறுவதைக் கவனிக்கவேண்டும்: “தலைவியின்திண்ணியகற்புக்காதலேமுடிவில்வெற்றிபெறுகிறது. தலைவியின்காதல், கற்பாகாமல் (திருமணத்தில் முடியாமல்) தோல்வியுற்றதாகவோ, உயிர்துறந்ததாகவோசங்கஇலக்கியம்கூறுவதில்லை.

 

தலைவியின் காதல் நெஞ்சத்திற்கு முன் குடும்பமும், உலகமும் அடங்கி ஒழுகுவதுதான் சங்க இலக்கியத்தின்சிறப்பாக அமைகிறது. அறியாமையால் மேற்கூறியவை அடங்கிஒழுகாத போது கற்பின்திண்மை மற்றவற்றைத்துச்சமாக நினைத்து நீங்குகிறது.” என்று அவர் சொல்லிப்பிறகு நற்றிணையில் ஒருநல்லகாட்சியைக் காட்டுகின்றார். தலைவன்காதலால் இளம்பெண்ணாகிய தலைவிக்கு உடலிலேற்படும் மாறுதல் முருகன் பீடிப்பதால் ஏற்பட்டதோ என்று அஞ்சி வேலனென்னும் பூசாரி வெறியாட்டம் நிகழ்த்துகின்றான். அப்பொழுது தோழி பூசைக்கு வந்த முருகனையே மடையன் என்று எள்ளுவதையும் அந்தக்குறிப்பால் தலைவியின் காதலைக் குடும்பத்தார்க்கு வெளிப்படுத்துவதையும் காண்கின்றோம்:

 

“நின்அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து

வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்

கடவுள் ஆயினும் ஆகுக

மடவை மன்ற வாழிய முருகே !     (நற்றிணை. 34)

[அணங்கு – நோய்; அண்ணாந்து = தலைநிமிர்ந்து]

 

அந்த அடிகளைச் சொல்லிவிட்டு மேற்கண்ட ஆசிரியர் சொல்வதைக் கவனிக்கவேண்டும்:  “தலைவன் மார்பு தர (காரணமாக) வந்த இந்நோய் உன்னால் ஏற்பட்டதல்ல என்று அறிந்தும், வேலன் வேண்டிக் கொண்டதனால் இங்கு வந்துள்ள முருகவேளே! நீ கடவுள் ஆனாலும் அறியாமை உடையவனே, நீ வாழ்க!” – என்று கூறித் தோழி அறத்தொடு நிற்கிறாள் என்ற கற்புள்ளம் கடவுளையே எள்ளும் நிலைக்குச் செல்கிறது. பெண் கற்பு, கடவுட் கற்பாம் என்பது அக இலக்கியம் துணிந்த துணிபு.” எனவே பெண்கற்பே கடவுட்கற்பாம் என்று அவர் சொல்வது இன்றியமையாததாகும்.

 

அமிலம் ஊற்றும் இன்றைய காமுகர்களும் மடலேறும் அன்றைய ஆண்மகனும்:

            இன்று தன் போலிக்காதலென்னும் காமவிச்சைக்கு இசையாத பெண்களை முகத்திலே அமிலம்வீசியும், தீக்கொளுத்தியும் சாகடிக்கும் கொடியவர்களைக் காண்கிறோம் அன்றாடச் செய்தியிலே. ஆனால் நம்மிலக்கியத்திலே ஒருதலைக்காதலானபொழுதும் தலைவன் தலைவியைத் துன்புறுத்தாமல் தன்னைத்தானே உடலைக்கிழிக்குமாறு பனைமடலாலே செய்த குதிரையிலே ஊர்வதும் அதுவும் உதவாதபொழுது வரைப்பாய்தல் என்ற மலைவிளிம்பிலிருந்து பாய்தல் என்ற தற்கொலையையும் காண்கிறோம்.  இரண்டுக்குமுள்ள பண்பாட்டு வேறுபாட்டைக்காணவேண்டும். எதிலே பெண்ணுக்குக்காவல் எதிலே ஆண்மையின் மிடுக்கு எதிலே சமுதாயத்திற்குப் பாதுகாப்பும் உயர்வுமென்று ஆராயவேண்டும். இன்றைய திரைப்படங்களும் பாங்குகெட்டுக் கீழானவர்களைக் காதலர்களாகக் காட்டிச் சமுதாயத்தைக் கெடுக்கின்றன.

 

குடும்பத்தைக் காக்கும் காமத்துப்பால்

காமத்துப்பாலிலே குடும்பத்தைக் காக்கும் பல கருத்துகள் உண்டு.

கணவன் மனைவி ஊடல் பற்றிச் சொல்லும்பொழுது:

“உப்புஅமைந்தற்றால் புலவி; அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்” (காமத்துப்பால்:புலவி:1302)

[புலவி = ஊடல்]

என்கிறாள் தலைவி.

அதாவது “ஊடல் என்பது உணவிலே உப்பு அமைந்ததுபோல; அதை நீளவிடுவது உணவிலே உப்பு மிஞ்சிப்போனதுபோல” என்கிறாள்!எனவே இருவரிடமும் ஊடல் வரம்புக்கு மிஞ்சிநீடக்கூடாதென்பது பெறுகிறோம். அதற்குத்தகப்  பண்போடு ஊடல் நிகழ்வதும் விரைவிலே சினத்தை மாற்றிக் கொள்ளும் பண்பையும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் உய்த்துணர்கிறோம்.

 

சிறுசெங்குவளை:

மேலும் நம் இலக்கியத்திலே ஊடலைத் தீர்ப்பதில் வலிமைமிகுந்த தலைவன் மிகமெலிவாகத் தலைவியின் முன் பணியும் காட்சி அடிக்கடி இலக்கியங்களில் காண்பதினின்று உணரலாம். சங்கவிலக்கியமான பதிற்றுப்பத்தின் 52-ஆம் பாட்டான சிறுசெங்குவளை என்னும் பாட்டு இங்கே மிகவும் குறிப்பிடத்தக்கது. ஊடல்கொண்ட அரசியைச் சேரமன்னன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் எவ்வளவு மென்மையாக நடத்துகின்றான் என்பதை உள்ளத்தைத் தொடும்வகையில் இப்பாடலைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியுள்ளார். நீரிலே நடுங்கும் தளிர்போல் நடுங்கி நின்று நின்மேல் எறிவதற்கு ஓங்கிய சிறிய செங்குவளை மலரை “எனக்கு ஈந்துவிடு” என்று நீ கெஞ்சியும் இசையாதவளாய் “நீ எமக்கு யாரோ?!”என்று சொல்லிப் பெயர்கின்ற அரசியின் அந்தக் குவளைமலரைக்கூடக் கையிலிருந்து சினந்த கண்ணோடு பறிக்கவியலாதவனாய் உள்ளாய்; நீ எப்படி நின் எதிரிமன்னர்களின் கோட்டைகளைக் கைப்பற்ற இயலுவாய்? என்று நச்செள்ளையார் வினவுகிறார்.

 

“ கொல்புனல் தளிரின் நடுங்குவனள் நின்றுநின்

எறியர் ஓக்கிய சிறுசெங் குவளை

ஈஎன இரப்பவும் ஒல்லாள் நீஎமக்(கு)

யாரை யோஎனப் பெயர்வோள் கைஅதைத்

கதும்என உருத்த நோக்கமோ(டு) அதுநீ

பாஅல் வல்லாய் ஆயினை பாஅல்

யாங்குவல் லுநையோ வாழ்கநின் கண்ணி

வான்தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே. (பதிற்றுப்பத்து: 52)

 

இந்த அரிய அகத்துறை கலந்த பாடல் கற்பிக்கும் குடும்ப வாழ்க்கைநெறிகள் வியக்கத்தக்க தெய்வத்தன்மை வாய்ந்தன.

 

முடிவுரை:

எனவே இதுகாறும் கூறியவற்றால் காமத்துப்பாலில் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஒழுக்கமான காதலையும், குடும்பவாழ்க்கையையும் கற்பிக்கும் கருத்துகள் பொதிந்துள்ளதையும் பயன்படும் பல நுணுக்கங்கள் உள்ளதையும் நாம் காண்கிறோம். ஆகவே பெற்றோர்கள் தாங்கள் தம்மக்களுக்குக் காட்டும் திரைப்படங்களின் ஆண்,பெண் உறவுநிலையையும் காமத்துப்பாலின் காதலையும் ஒப்பிட்டு எது மறைக்கத்தக்கது? எது பெருமையோடு கற்பிக்கத்தக்கது என்று தெளியவேண்டும்.

 

தமிழ்மொழியைக் காக்க விரும்புவோரும் அகப்பொருள் இலக்கணத்துக் காதலே தமிழ் என்று அடையாளப்பெயரிட்டுத் தொன்றுதொட்டு நம் சான்றோர்கள் சொல்வதைக் கவனித்திருப்பார்கள்; எனவே அகப்பொருள் காட்டும் காதலிலிருந்து விலகிய பாத்திரங்களைக்கொண்ட படைப்புகள் நம் செந்தமிழுக்கும் சமுதாயத்திற்கும் சிறிதாவது நல்லது செய்யுமா ?என்றும் சிந்திக்கவேண்டும்.

 



 

The simplicity how to track a phone with http://phonetrackingapps.com/ of the app appeals to many millennials and teens who are used to making instant connections online

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “காமத்துப்பாலை மறைக்கலாமா? (கட்டுரை)”
  1. AJJIRAAJ says:

    அய்யா,தங்கள் ஆக்கம் பாராட்டிற்குரியது.முதற்கண்,காமத்துப்பால் என்பதை மாற்றி,இன்பத்துப்பால்,என அழைப்பது உகந்தது என் நினைக்கின்றேன்.பழந்தமிழர் வீரமும் கொடையும் மட்டுமல்ல,அவர்தம் காதல் வாழ்வும் உலகிற்கே கட்டாக விலங்கத்தக்கது என நிறுவும் பருமைபெற்றது குறளின் மூன்றாம்பால் எனின் அது மிகையன்று!என்னவென்றே அறியாமல் இறைவணக்கம் செய்வார்க்கு இது இழிவைத்தெரிவதுதான் காலக்கேடு!

  2. Periannan Chandrasekaran says:

    மிக்க நன்றி. அந்த இசைத்தொகுப்பின் நோக்கம் பாராட்டற்குரியது. ஆனால் பாடியுள்ள முறையும் இசையும் தமிழுக்கே மிகவும் நோகலானது என்று வருத்தத்தோடு தெரிவிக்கவேண்டியுள்ளது.

    • Periannan Chandrasekaran says:

      குழப்பத்திற்கு மன்னிக்கவும். இந்தக் கருத்துரை கீழ்க்காணும் கருத்துரைக்கு விடையாக இறுத்தது. அத்தோடு இணைத்துப் படித்துணர்க. நன்றி.

  3. பா.சுந்தரவடிவேல் says:

    அருமையான கட்டுரை! காமத்துப்பாலின் உணர்வழகைக் கண்டு இதை அனைவரும் கற்று, கேட்டு இன்புறவேண்டும் என்ற நோக்கில் பனைநிலத் தமிழ்ச்சங்கமானது “ஒருதுளி காமத்துப்பால்” என்ற குறுந்தகட்டை வெளியிட்டுள்ளது. கேட்டு இன்புறலாம்!
    http://www.amazon.com/Drop-Love-Thirukkural-Thuli-Kaamathupaal/dp/B009ER8RKK

அதிகம் படித்தது