மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காலம் மாறிப் போச்சு (சிறுகதை)

ஆச்சாரி

Apr 15, 2013

இன்றுள்ள நிலையில் திருமண வயதில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவும்,  ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கிறது. பெண்களும் ஆண்களுக்கு நிகராகப்  படித்து அனைத்துத் துறையிலும் நிகராக வேலை செய்யும் காலம் இது.  ஆனால் முந்நாட்களில் இருந்தபடி மாமியார்களின் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு, கொத்தடிமைகளாய் வாழ  எந்தப் பொண்ணும் தயாராக இல்லை.  ஏன் திருமணம் என்னும் பந்தத்திலேயே அவர்களுக்குப் பெரிய ஆர்வம் இல்லை.  அனுசரித்துப் போக வேண்டும் என்ற நிலை வருமாயின், அனுசரிப்பதை விட விலகிவிடுவதே மேல் என்ற நிலை பெண்களிடம் இருக்கிறது என்று ஒரு கருத்து கணிப்பு சொல்லுகிறது. (இந்த நிலைக்குக் காரணம் பெண்களா? என்று கேட்டால் நிச்சயமான பதில் “இல்லை” என்பது தான். ஆணாதிக்கமும் அதனை வெகுவாக ஆதரித்த இந்த சமூகமும் தான் காரணம்.

 இருபது வருடங்களுக்கு முன் இதுவும் பொட்டபுள்ளைனா அவளை அத்து விட்டுரு “என்று சொன்ன அம்மாக்களின் அகங்காரமும், இதுவும் பொட்டபுள்ளைன்னா உங்க அம்மாவீட்லேயே கிட என்று சொன்ன ஆணாதிக்கமும் இன்று பெண்களுக்குமுன் கை கட்டி வாய் பொத்தி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால் அதற்கு காரணம் பெண்மையும், பெண்ணீயமும் கோபம் கொண்டு பொங்கி எழுந்ததுதான் என்பது உண்மை.

இன்று பெண்களின் விகிதம் குறைந்ததுக்குக் காரணம் அன்றைய பெண்களின் தன்னம்பிக்கையின்மை . பெண்ணாயிருந்தாலும் நான் அவளை பிரமாதமாக வளர்ப்பேன் என்று சொல்லாமல் பெண்ணை கருக் கொலையாகவும், சிசுக் கொலையாகவும் கொன்ற கொடுமைக்கு இன்று ஆண்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். கருக்கொலை என்று மருத்துவரிடம் போகும் பொழுது அவர்கள் உபயோகிக்கும் கருவிகளுக்கு அகப்படாமல் அந்தக்கரு தான் வாழ்வதற்காக சுற்றிச் சுற்றி வரும் என்று ஒரு மருத்துவர் விஜய் தொலைக்காட்சியின் நீயா? நானா?நிகழ்ச்சியில் சொன்ன பொழுது, அதைக் கேட்கும் நம் மனது பதைத்து விட்டதல்லவா. 20 வருடங்களுக்கு முன் நடந்த செயல்களின் விளைவுதான் இன்று திருமண வயதில் இருக்கும் ஆண்கள் படும் அவலம் .  எய்தவன் இருக்க அம்பு பழி வாங்கப்பட்டுவிட்ட நிலைதான் இந்த ஆண்களுக்கு.

இந்த நிலையை எண்ணிப் பார்த்ததும் எனக்கு இப்படித்தான் எழுத  தோன்றுகிறது. இனி இந்த நிகழ்வைப் பார்ப்போம்.

சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து இருந்த பரமசிவம்,  தன் மனைவி கமலாவைக் கூப்பிட்டார். அவர் குரலுக்கு இதோ வந்துட்டேங்க . . . என்று சொல்லிக் கொண்டே கமலா அருகில் வந்தாள். என்ன கமலா, நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா? எல்லாம் கரெக்டா நடக்கணும் இல்லேன்னா ஏமாளிப்பட்டம் வாங்கிட்டுத் தான் நாம எல்லாரும் வரணும், தெரிஞ்சுதா என்றார். கமலாவும்  ஆமாங்க விசயத்தை நல்லபடியா முடிச்சுட்டோம்னா நமக்குக் கவலை இல்லை என்றாள்.

பரமசிவம் ஆமா உங்க வீட்டாளுங்க எல்லோருக்கும் சொல்லிட்டேல்ல. ஒழுங்கா, டீசன்டா வரச் சொல்லு.  கன்னா பின்னான்னு வந்து நின்னு மானத்த வாங்கப் போறாங்க என்றார். பேரன், பேத்தி, எடுத்தும் எங்க வீட்டு ஆளுங்கன்னா உங்களுக்கு இன்னமும் எளப்பம் தான் என்றாள் கமலா.

உள்ளே போய் கமலா தன் மருமகளிடம் காலைலே 4 மணிக்கு எந்திரிந்து குளிச்சுமுடிச்சு நல்லா டிரஸ் பண்ணி நகை நட்டேல்லாம் போட்டுக் கிட்டு,  குழந்தை ஆகாசுக்கு குளிப்பாட்டி  விட்டு டிரஸ் பண்ணி செயின், பிரேஸ்லெட் எல்லாம் போட்டுவிடு.  நம்ம குடும்பம் நல்ல அசத்தலா போனாதான் நமக்கு மதிப்பு இருக்கும்.  21 தட்டு வரிசை ரெடி செஞ்சுடு. 3 லட்சம் ரொக்கமா கொடுக்கலாம்னு இருக்கு, தேவைப்பட்டா இன்னும் 2 லட்சம் கைவசம் வைச்சுக்கலான்னு சொல்லியிருக்காரு.  அதனாலே எந்த குறையும் இல்லாமே பார்த்து நாமதான் நடந்துக்கணும் தெரியுதா? என்றாள்.  மருமகளும் சரி அத்தே, இது என்னோடு சம்பந்தப்பட்ட விசயமாச்சே. எல்லாம் கரெக்டா பாத்துக்கறேன் என்றாள்.

 கமலா தன் கணவனிடம் போய் ஏங்க காலையே 6 மணின்னு சொல்லுறீங்களே! நம்ம எல்லாரையும் உள்ள விடுவாங்களா? என்றாள்.  அதற்கு பரமசிவம் ஏண்டி  இவ்வளவு யோசிக்கறவன்  அதற்கு ஏற்பாடு செய்யாமலா இருப்பேன்.  நம்ம வார்டு கவுன்சிலர் மூலமா எம்.எல்.ஏ கிட்டே சிபாரிசு லெட்டர் வாங்கியிருக்கிறேன். அங்கேயும் பார்க்க வேண்டியவங்களை பார்த்து எல்லாம் செய்து இருக்கேன். எல்லாத்துக்கும் மேலே நம்ம குல தெய்வம் நல்லபடியா முடிச்சு வைக்கும் என்றார்.

உங்க எண்ணத்துக்கு ஒரு குறையும் வராது. எல்லாம் நல்லா நடக்குமுங்க என்றாள் கமலா.

 மறுநாள் வீடு ஒரே அமர்க்களப்பட்டது.  காலை 5 மணிக்கு 3 காரில் மொத்த குடும்பமும் கிளம்பினார்கள். டிராபிக் அதிகம் இல்லாத நேரம் என்பதால் 20 நிமிடத்தில் நகரின் மையப்பகுதியில் இருந்த அந்த தனியார் மருத்துவமனை வாசலுக்குச் சென்று விட்டனர்.  முதலிலேயே பரமசிவம் எல்லா ஏற்பாடும் செய்திருந்ததால், வார்டு பாய் சத்தம் போடாமல் மெதுவாக என்னோடு வாங்க என்று கூட்டிக் கொண்டு போனான்.

அறை எண் நான்கின் முன் நின்று, ஐயா! உங்களைப் பார்க்க பரமசிவம் சார் வந்துருக்கார் என்றான். மனைவி மல்லிகாவுக்கு உதவியாக அறையில் தங்கியிருந்த கணேசன் ஒரேயடியாக முழித்துக் கொண்டு எழுந்து நின்றான்.

 பரமசிவம், கணேசனின் கையைப் பிடித்துக்கொண்டு தம்பி உனக்கு இரண்டு நாள் முன்னாடி பெண் குழந்தை பிறந்திருக்குன்னு கேள்விப்பட்டேன் அதான் என் பேரன் ஆகாசுக்கு நாலு வயசு ஆகுது. அவனுக்கு நிச்சயம் பண்ணலாம்னு வந்தேன்.  மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க. கல்யாணத்தை 20 வருடம் கழிச்சு வைச்சுக்கலாம். நான் இல்லைன்னாலும் என் பையன் வாக்கை காப்பாத்துவான் இந்த சீர் எல்லாம் என் பேரன் மனைவிக்குத்தான்.  இங்கே ஆஸ்பத்திரிலே இல்லாம எல்லாத்தையும் வீட்டுலே கொண்டு போய் பொறுப்பா வச்சுடறோம். சரியா தம்பி என்றார்.

 திடீரென்று கமலா ஏங்க காபியை வைச்சுட்டுபோய் எவ்வளவு நேரமாகுது. அப்படி என்னங்க அந்தப் பேப்பர்ல? என்றாள்.                சட்டென்று சுயநினைவுக்கு வந்தவராக பரமசிவம், தன் கையில் இருந்த அன்றைய செய்தித்தாளை கமலாவிடம் காட்டினார். இங்கே பார், இந்த செய்திதான் என்னையும் என் நினைவையும் எங்கோ கொண்டு போய் விட்டது என்றார். தலைப்புச் செய்தியாக  “பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்தும், ஆண்களின் பிறப்பு விகிதம் அதிகமாயும் இருப்பதை போட்டிருந்தது.

கமலா ஆமாங்க எனக்கும் கவலையாகத்தான் இருக்கிறது.  நீங்க யோசிக்கிற படிதான் நிஜமாகவே செய்யணும் போல இருக்கே, சரி, சரி காபி ரொம்ப ஆறிப்போச்சு,  நான் போய் வேறெ கொண்டு வரேன் என்று சொல்லிப்போனாள். பரமசிவம் தனக்குதானே சிரித்துக் கொண்டே தன் பேரன் கல்யாணத்திற்கு இப்படித்தான் செய்ய வேண்டும் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு சூடான காபிக்காகக் காத்து கொண்டு இருந்தார்.

The conclusion, like the https://www.pro-essay-writer.com/ concluding sentence in a paragraph, is a summary or review of the main points discussed in the body

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காலம் மாறிப் போச்சு (சிறுகதை)”

அதிகம் படித்தது