மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காவேரி வெள்ளம் – விவசாயிகளின் கண்களில்

ஆச்சாரி

Nov 1, 2012

காவேரி நீர் திறக்க கர்நாடகா முலமைச்சர் மறுப்பு..
உச்ச நீதி மன்றம் கர்நாடாகவிற்கு கண்டனம்..
தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்..
காவேரி கண்காணிப்பு குழு இன்று கூடுகிறது..
போன்ற செய்திகளை பல ஆண்டுகளாக அடிக்கடி கேட்டிருப்பீர்கள். ஏதோ ஒரு அமைச்சர் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்பது போன்ற செய்திகளை கடந்து செல்லும் மன நிலையிலேயே காவேரி தொடர்பான செய்திகளையும் நம்மில் பெரும்பாலானோர் கடந்து செல்கின்றோம். நண்பர்களுடனோ அண்டை வீட்டாருடனோ அலுவலகத்திலோ உரையாடும் அளவிற்கு காவேரி பிரச்சினை நமக்கு சுவாரசியமாக இருப்பதில்லை.

நம்மைப் போன்றே அனைவருக்கும் வாழ்க்கை அமைந்துவிடவில்லை. காவேரி செய்திகளை தினம் பெருங் கவலையுடன் எதிர்கொள்ளும் மக்களும் நம்முடனே வாழ்ந்து  வருகின்றனர். அவர்கள் ஏதோ ஒரு மலை கிராமத்தில் வாழும் சிறு குழுவினர்கள் இல்லை. தமிழ்நாட்டில் காவேரி பாயும் மாவட்டங்களில் வாழும் நாற்பத்தி ஐந்து இலட்சம் விவசாயிகள் அவர்கள். நமக்கு சுவாரசியம் இல்லாத காவேரி செய்திகள் அவர்கள் சுவாசத்தையே நெருக்குவதாக இருக்கின்றன. ஒவ்வொரு செய்தியும் அவர்களுடைய வாழ்க்கையை நேரடியாக பாதிக்கையில் மனம் கலங்குகிறார்கள். அரசியல்வாதிகள் விளையாடும் காவேரி சதுரங்கத்தில் தினம் வெட்டுப்படும் சிப்பாய்கள் அவர்கள்.

விவசாய குடும்பத்தினரின் மொத்த பொருளாதாரமே அறுவடையை நம்பித்தான் இருக்கின்றது. சரியான நேரத்தில் காவேரியில் போதுமான நீர் திறந்துவிடப்படாத பொழுதெல்லாம் கதிர்கள் முற்றாமல் வெறும் பதர்களையே அறுவடை செய்கிறார்கள். நெல்லின் தரம் சிறிது குறைந்தாலும் அவர்களால் பாதி விலைக்கு கூட விற்க முடிவதில்லை. பெரும்பாலானோருக்கு அறுவடைக் கூலிக்கு கூட விற்கவே முடியாத அளவிற்குத் தான் நெல் கிடைக்கின்றது. நெல் மட்டுமல்ல மற்ற தானியங்கள், பணப்பயிர்கள் பயிரிடுபவர்களின் நிலையும் அதே பரிதாபமாகத் தான் இருக்கின்றது.

அறுவடை வருமானம் பொய்க்கவே விதைக்கும், உரத்திற்கும் வாங்கிய கடன்களால் நெருக்கப்படுகின்றனர். கூனிக் குறுகி வட்டிக்காரர்களுக்கு தவணை சொல்கையில்  அவர்களின்  கண்களில் தான் காவேரி வெள்ளமாக ஓடுகின்றது. பலர் அவமானம் தாங்காமல் பூச்சிக் கொல்லி மருந்துகளை குடித்து தம் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.

தம் பிள்ளைகளுக்கும் தம்மைப் போன்று எதிர்காலம் அமைந்து விடக்கூடாது என்று தம் பிள்ளைகளை பெரு நகரங்களில் வேலைக்கு அனுப்புகின்றனர். நீங்கள் சந்திக்கும் பெரும்பாலான கட்டட பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள் முந்தைய தலைமுறை வரை விவசாயம் செய்தவர்களே.

அடுத்த தெருவிற்கு கூட வயது வந்த பெண்ணை தனியாக அனுப்ப தயங்கிய விவசாய குடும்பங்கள்  இன்று தம் வீட்டு பெண்களை பாதுகாப்பற்ற பணிகளுக்கு தொலை தூரம் அனுப்புகிறார்கள். கிராமத்து பெண்களுக்கு நகர் புரங்களில் மில்களிலும், வீடுகளிலும் வேலை வாங்கித் தருவதற்கென புதிய தரகர்கள் உருவாகியிருக்கின்றனர். ஒரு பை துணியோடு தரகருடன் கிளம்பிச் சென்று ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரம் உழைத்து அவர்கள் வீட்டுப் பெண்கள் அனுப்பும் சிறிய தொகையில் தான் பல வீடுகளில் இன்று அடுப்பெரிகின்றன.

விவசாய குடும்பங்கள் மட்டுமல்லாமல் அதை சார்ந்திருக்கும் அனைத்து தொழில் துறையினரும்  காவேரியின் வறட்சியால் கடும் பணப்பற்றாக்  குறையில் சிக்கி இருக்கின்றனர். போதிய நெல் வரத்தில்லாததால் அரிசி ஆலைகள் பெரும்பாலான நேரம் மூடிக்கிடக்கின்றன. நாளையிலிருந்து வேலைக்கு வர வேண்டாம் என்று கூறி விட்டார்கள் என்று வீடு திரும்பும் ஆலைத் தொழிலாளியின் வீட்டில் அன்றிரவு தொடங்கும் துக்கம் குறைய பல வாரங்கள் ஆகும். அரிசி ஆலைகள் மட்டுமல்ல எண்ணை  எடுக்கும் செக்குகள் போன்ற மற்ற தானியங்கள் சார்ந்த தொழிற் கூடங்களுமே வேலை இல்லாமல் ஓய்ந்து கிடக்கின்றன.

தானியங்கள் ஏற்றிச் செல்லும் சிறு சரக்கு வாகன உரிமையாளர்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். தானிய மூட்டைகளை ஏற்றி இறக்கும் கூலித் தொழிலாளர்கள் மாதத்தின் பல நாட்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். சிறு விவசாயக் கருவிகள், பாத்திரங்கள் தயாரிக்கும் பட்டறைகள்  வேலை இல்லாமல் செயலற்று கிடக்கின்றன. பல ஊர்களில் இருக்கும் தேநீர் கடைகள், சிற்றுண்டி கடைகள் மூடப்படுகின்றன. வீட்டு விசேசங்கள், கோவில் திருவிழாக்கள் கூட சிறிய செலவுகளுடன் சுருக்கமாக செய்யப்படுகின்றன. ஒலி பெருக்கி, விளக்குகள் வாடகைக்கு விடும் சிறிய கடைகள் யாவும் நொடித்து போய்விட்டன.

நாம் விவசாயம் செய்யாமலிருக்கலாம், அரிசி ஆலையையோ , எண்ணைச்  செக்கையோ  சார்ந்தில்லாமல் இருக்கலாம், சரக்கு வாகனம் ஓட்டாமல் இருக்கலாம், கிராமத்திற்கு தொடர்பே இல்லாமல் முழு நகரவாசியாக இருக்கலாம், இருப்பினும்  காவேரியின்  வறட்சியில் இருந்து தப்பிக்க முடிவதில்லை. மளிகை சாமான் விலை உயர்விற்கும், காய்கறி விலை ஏற்றத்திற்கும், சென்னையில் ஏறும் வீட்டு வாடகைக்கும், பால் விலை உயர்விற்கும், அனைத்து வேலைகளுக்கும் கூலி அதிகரிப்பிற்கும் காவேரியின் வறட்சிக்கு தொடர்பிருக்கின்றது. நம்மில் பெரும்பாலானோர் அரிசி விலையை தவிர்த்து வேறு எதிலும் காவேரியின் வறட்சியை தொடர்பு படுத்திப் பார்ப்பதில்லை.

நம்மை மாறி மாறி ஆட்சி செய்த அரசியல்வாதிகள் காவேரி பிரட்சினையை திறம்பட கையாளவில்லை. வழக்கம்போல் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு எதிர் எதிர் திசையில் செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் தவறான அணுகுமுறைகளை கர்நாடாக அரசும் நடுவண் அரசும் நன்றாக பயன்படுத்திக்கொள்கின்றன. தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் மட்டுமல்ல கர்நாடாக அரசு, நடுவண் அரசு எங்கும் எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவேரி பிரச்சினை தீர்க்க முடியாது என்ற நிலைக்கு கொண்டு சென்று விட்டனர். நீதிமன்றத்தில் வாதாடி கிடைக்கும் நீரை பெற்றுக்கொள்வது தான் தற்போதைக்கு இருக்கும் ஒரே வழி ஆகிவிட்டது.

தமிழ்நாட்டிற்கு வெளியே கர்நாடகாவுடனும் டில்லியுடனும் மல்லுகட்டும் அதே நேரத்தில் தமிழ் நாட்டிற்குள்ளாகவும் செய்வதற்கு பல பணிகள் இருக்கின்றன. உதராணத்திற்கு நம் வீட்டு குழாயில் தண்ணீர் குறையத் தொடங்கினால் நாம் என்ன செய்வோம்? மாநாகராட்சி ஊழியரிடம் சென்று விசாரித்து வருவோம். தொடர்ந்து தண்ணீர் வருவது குறைந்தால் பின்னர் மாநாகராட்சி ஊழியரிடம் கோரிக்கை வைப்போம், உள்ளாட்சி பிரதிநிதியிடம் முறையீடு செய்வோம். இவற்றை எல்லாம் நாம் செய்வதற்கு முன்னதாக நம் வீட்டு பெண்கள் நான்கு புதிய குடத்தை வாங்கி நீர் வரும் பொழுது நிரப்பி இருப்பார்கள். இட வசதி இருந்தால் தொட்டி வாங்கி நீரை நிரப்பி இருப்பார்கள்.

இது போன்று காவேரி நீர் வரும் பொழுது நிரப்பி கொள்ள ஏதாவது ஒரு புதிய அணையை நாம் கடந்த நாற்பதாண்டுகளில் கட்டி இருக்கின்றோமா? புதிய ஏரி  ஏதேனும் தோண்டி இருக்கிறோமா? சிறு குடும்பத்து பெண்களுக்கு இருக்கும் திறன் கூடவா நம் நாற்பதாண்டு முதல்வர்களுக்கு இல்லை.

இதில் அரசியல்வாதிகளை மட்டும் குறை கூற இயலாது. புதிய அணை, ஏரி, கண்மாய் வேண்டி எத்தனை முறை போராட்டம் நடத்தப் பட்டிருக்கின்றது? நூறு நாள் வேலைத் திட்டத்தில் தம் சொந்த ஊரின் கண்மாய் தூருவாரப் படும் பொழுது கூட மரத்தடி நிழலில் தூங்கி விட்டு கிடைக்கின்ற கூலியை வாங்கிச் செல்பவர்களாக நாம் மாறிவிட்டோம். நம் ஊர் கண்மாய் நன்றாக தூர் வாரப்படுவது நம் ஊருக்குத் தானே நல்லது என்ற சிறிய சமூக சிந்தனை கூட நம் சுய வசதிக்கு முன் அடிபட்டு போய்விடுகின்றது. நாம் நம்மைப் பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டு, நம் அரசியல்வாதிகள் நம் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல்.

எல்லாருக்கும் பொதுவான பலன்கள் கிடைப்பதற்கு நாம் எதற்கு பாடுபட வேண்டும் என்ற எண்ணம் நம்மில் ஓங்கி இருப்பதே நம் நாட்டின் இந்நிலைக்கு காரணம். நாடு மோசமாக இருக்கின்றது என்பது பொதுவான நாட்டுடைய சிக்கல் அல்ல, நமது பிரச்சினையும் கூடத்தான். கர்நாடகா காவேரியில் நீர் திறந்து விடாதது முதலமைச்சரின் பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் அதனால் பயிர்கள் கருகிப்போவது நமது வயலில் தான், அதனால் அதிக விலை கொடுத்து உணவுப் பொருள்கள் வாங்குவதும் நாம் தான்.

நாம் மாறாமல் நாடு மாறாது. நமது ஊருக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைக்க நாம் தான் அரசிடம் கோரிக்கை அமைத்து, தொடர்ந்து பின்பற்றி செயல்படுத்த வைக்க வேண்டும். கடந்த நாற்பதாண்டுகளில் ஆண்டிற்கு ஒரு ஏரி அமைத்திருந்தாலே இன்று கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வந்திருக்காது.

உங்கள் பகுதி அரசியல் பிரதிநிதியை சந்தித்து உங்கள் பகுதி அல்லது ஊரின் நீர் வளத்தை மேம்படுத்த கோரிக்கை வையுங்கள். உங்கள் பகுதியில் புதிதாக ஒரு ஏரியோ, குளமோ, கண்மாயோ, தண்ணீர் தொட்டியோ அமைக்காமல் அடுத்த முறை வாக்கு கேட்டு வர முடியாது என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். நமது அடுத்த தலைமுறையாவது கர்நாடகாவிடம் கையேந்தாத நிலையை உருவாக்குவோம்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காவேரி வெள்ளம் – விவசாயிகளின் கண்களில்”

அதிகம் படித்தது