மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கிரிக்கெட் பற்றிச் சில எண்ணங்கள் ( கட்டுரை)

ஆச்சாரி

May 1, 2013

தமிழ்ப்புத்தாண்டு அன்று (14-04-2013) காலையில் எழுந்தவுடனே காதில் தொலைக்காட்சியிலிருந்து ஒரு பெரிய ஆரவாரம் காதில் விழுந்துகொண்டிருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட்! இதன் பின்னணியிலிருக்கும் அரசியல், இப்போது அண்மையில் இதற்கு ஏற்பட்ட எதிர்ப்பு ஆகியவற்றை விட்டுவிடுங்கள். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை தொலைக்காட்சியிலிருந்து வரும் ஆரவார ஒலி, பெரிய அருவருப்பை ஏற்படுத்துகிறது. எதற்குக் கத்துகிறார்கள் இந்த மக்கள்? நம் எதிர்காலப் பிரச்சினைகள் என்ன என்பதை இவர்கள் சற்றும் அறிவார்களா? என்ன நேரப்போகிறது இந்த நாட்டுக்கு என்பதில் துளியும் அக்கறை கொண்டவர்களா இவர்கள்?
ஆங்கில நாட்டில் இந்த விளையாட்டு நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஏறத்தாழ 1598 அளவில் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் பிரபுக்கள் (லார்ட்ஸ்) என்றழைக்கப்பட்ட மேன்மக்களான ஆங்கிலப் பிரபுக்கள் தங்கள் உடல்மீது சூரிய ஒளி படும் விதமாகவும் காலார நடந்து தங்களுக்குச் சிறிய அளவிலான உடற்பயிற்சி ஏற்படுத்திக்கொள்ளும் விதமாகவும் உருவாக்கிய ஒரு விளையாட்டுதான் கிரிக்கெட். அந்த நாட்டிலும் மேன்மக்களின் விளையாட்டாக இது இருந்ததே ஒழிய சுரங்கங்களில் பணிசெய்கின்ற, தொழிற்சாலைகளில் பணி செய்கின்ற தொழிலாளிகள், விவசாயிகள் ஆகியோரின் விளையாட்டாக இது ஒருபோதும் இருந்ததில்லை. இப்படிச் சோம்பேறித்தனமாகத் தங்கள் உடலை வளர்க்க வேண்டிய கஷ்டம் அந்த நாட்டு உழைப்பாளிகளுக்கே இல்லை. அதனால்தான் போலும், இந்த விளையாட்டை விளையாடுகின்ற மைதானத்துக்குக்கூட லார்ட்ஸ் என்றே பெயர் வைத்தார்கள் இங்கிலாந்தில்! இங்கிலாந்து தன் ஆட்சிக்குட்படுத்திய காலனிநாடுகளை விட்டு வெளியேறிய போது அவர்களைச் சீரழிக்கின்ற பொதுச் சொத்து-’காமன்வெல்த்’து-களில் ஒன்றாக இதைக் கொடையாக அளித்துச் சென்றது. (இந்தக் காமன் வெல்த்து பற்றியும் நாம் விரிவாகப் பேசவேண்டிய தேவை இருக்கிறது!) காமன்வெல்த்-ஆகத் தம்மைக் கருதிக்கொண்ட ஏழெட்டு நாடுகளே இதில் முதலில் ஈடுபட்டன. நம் நாட்டிலும் முதலில் இதை ரஞ்சித் சிங் போன்ற அரசர்களும் பட்டோடி நவாப் போன்ற பெரும் பணக்காரர்களும் ஓய்வாகப் பொழுதைச் செலவிட்டே பிறரைச் சீரழிப்பதில் வல்லவர்களான மேட்டுக்குடிச் சாதியினரும்தான் இந்த ஆட்டத்தில் ஈடுபட்டனர். (இந்தியாவின் கிரிக்கெட் குழுவில் தமிழ்நாட்டின் ஓரிரு பிராமணர்கள் மட்டுமே இந்த ஆட்டத்தில்-அதுவும் பிற்காலத்தில்தான், பங்கேற்றனர். பொதுவாகத் தமிழ்நாட்டுக்கு இதில் இடமளிக்கப்பட்டதே இல்லை.) உண்மையில் ஆங்கிலநாட்டிற்கு அடிமைத் தனத்தை மறைமுகமாக உருவாக்கமுயன்ற பிரிட்டிஷ்காரர்களின் கொடைதான் இந்த விளையாட்டு.
காமன்வெல்த் நாடுகளைத் தவிரப் பிற நாடுகள் எதுவும் (அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்றவை….) இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டியதில்லை.
இந்தியாவில், அறுபதுகளில் அப்போது அரசாங்க வேலையிலிருந்த மேட்டுக் குடிப் பெருமக்கள் தங்கள் காதுகளிலே வானொலிப்பெட்டிகளை வைத்தவாறு தங்கள் அலுவல்களைப் புறக்கணித்துவிட்டு கிரிக்கெட் காமெண்டரிகளைக் கேட்டுக்கொண்டிருந்தது சர்வசாதாரணம். நிரூபணம் வேண்டுமானால் அக்கால ஆனந்தவிகடன், கல்கி, குமுதம் போன்ற பத்திரிகைகளில் இதைப்பற்றிய நகைச்சுவைத் துணுக்குகளையும் படங்களையும் பார்த்துக்கொள்ளுங்கள். அரசாங்க அலுவலகங்களில் ஊழலும் லஞ்சமும் பெருகுவதற்கு கிரிக்கெட் அந்தக் காலத்தில் ஒரு முக்கியக் காரணம். 1960களில் நாங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வெளியான அன்பே வா என்ற திரைப்படத்தில் (எம்.ஜி.ஆர். நடித்தது) கல்லூரி மாணவர்கள் பாடுவதாக ஒரு பாட்டு வரும். அதன் இரண்டு அடிகள்: ட்விஸ்ட் டான்ஸ் தெரியுமா? டெஸ்ட் மாட்ச் புரியுமா? கதாநாயகன் தனக்கும் இவை தெரியும் என்று காட்டி அந்தக் கல்லூரி மாணவர்கள் ஆதரவைப் பெற்றுவிடுகிறாராம். அந்தக் கால மேட்டுக்குடி மனப்பான்மையை விளக்க இதைவிடச் சான்று தேவையில்லை.

டெஸ்ட் மாட்ச் விளையாடா விட்டாலும் பரவாயில்லை, அது புரியவாவது வேண்டும்! தொலைக்காட்சி வந்தபிறகுதான் இதன் சீரழிவு அதிகமாயிற்று. ஒருபுறம் தனக்குள் ஊழல்மிக்க ஒரு அமைப்பாக கிரிக்கெட் வாரியம், அதன் தேர்வுகள், அதன் வரவு செலவுகள் அதன் அரசியல் குழுமனப்பான்மைகள் போன்றவை அமைந்தன. இன்றைக்குச் சர்வதேச கிரிக்கெட் வாரியமே புறக்கணிக்கும் அளவுக்கு இதன் ஊழல் சொல்லத் தகாததாக இருக்கிறது, ஆனால் அதைப்பற்றியெல்லாம் நமது கிரிக்கெட் வாரியங்களும் வீரர்களும் கவலைப்படுவதில்லை. துடைத்துப்போட்டுவிட்டு சொத்துச் சேர்ப்பது சர்வசாதாரணம்) இன்னொருபுறம் எந்த வேலையுமற்று தன்னைப் பார்க்கக்கூடுகின்ற ஒரு வெட்டிக் கும்பலை இது உருவாக்கிற்று. முன்பெல்லாம் பெருநகரங்களில் வேலையற்றுத்திரிந்த ஒரு பணக்காரக் கும்பல்தான் அதிக விலைகொடுத்துச் சீட்டுகளை வாங்கி இந்த விளையாட்டைப் பார்க்க முடிந்தது. தொலைக்காட்சி வந்தபிறகு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சோம்பேறிக் கும்பல் இதைப் பார்க்க உருவாகிவிட்டது. எவ்வளவு கால விரயம்! சக்தி விரயம்! பணவிரயம்! இதில் எவ்வளவு பணம் புழங்குகிறது என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு. கல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானம் மிகப்பெரியது. அறுபதுகளிலேயே அதில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து கிரிக்கெட்டைப் பார்த்ததாக ஒரு விமரிசகர் எழுதியிருக்கிறார். சராசரியாக ஒரு டிக்கட் ஆயிரம் ரூபாய் என்றாலும் ஒரு நாள் விளையாட்டின் வருமானம் ஆயிரம்  ஒரு லட்சம் = பத்துகோடி ரூபாய். எவ்வளவு ஊழல் இதில் நிகழும் என்பதைச் சொல்லவேண்டிய தேவையே இல்லை. நாம் கவலைப்படுவது இவ்வளவு பணம் கொடுத்து விளையாட்டைப் பார்க்க வரும் (விளையாட்டை அவர்கள் பார்க்க வருவதைவிட விளையாட்டு வீரர்களின் சேட்டைகளையும் நடிப்பையும் பார்க்கத்தான் வருகிறார்கள்!) பணக்காரக் கும்பலைப் பற்றிக்கூட அல்ல, இது கிராமப் புறங்களிலெல்லாம் புகுந்து நம் பழைய நாடகம் போன்ற கலைகளையும் பழைய வீர விளையாட்டுகளையும் அழித்துவிட்டது. இந்தியாவின் எல்லா இடங்களிலும் இருந்த தேசிய, கிராமப்புறப் பொழுதுபோக்கு விளையாட்டுக் கலைகளெல்லாம் கிரிக்கெட்டினால் அழிந்தன. கிராமப்புறப் பையன்களெல்லாம் நான்கு குச்சிகளையும் மட்டைகளையும் தேடி அலையலானார்கள். தமிழ்நாட்டின் சிலம்பாட்டம், சடுகுடு போன்ற விளையாட்டுகள் போன இடம் தெரியவில்லை. இது ஒருபுறமிருக்க, இந்தியாவில் வேறு எந்தஒரு சர்வதேச விளையாட்டுமே-டென்னிஸ், ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து போன்றவை எதுவுமே வளராமல் செய்த பெருமை கிரிக்கெட்டுக்கே உரியது என்பதை எல்லோரும் அறிவார்கள். இந்திய அரசாங்கம் தன் மக்களைக் கெடுக்கக்கூடிய, முட்டாளாக்கக்கூடிய எந்தச் சக்திக்கும் ஆதரவு அளிக்கக்கூடியது, பணம் வரக்கூடிய எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பதால் இதற்குமட்டுமே பணத்தைக் கொட்டிக் கொட்டிச் செலவுசெய்தது. மற்ற விளையாட்டுகளை அறவே கைவிட்டது.
இவ்வளவு விசயத்துக்கும் காரணமில்லாமல் இல்லை. கிரிக்கெட் அடிப்படையில் சினிமாவின் குணங்களைக் கொண்டது. கவர்ச்சியான தொடக்கம், வளர்ச்சி, முடிவு, சஸ்பென்ஸ் போன்ற விசயங்களில் பலசமயங்களில் திரைப்படங்களையும் மிஞ்சக் கூடியது. இந்த விளையாட்டின் நிச்சயமின்மைதான் இதன் கவர்ச்சிக்கு ஆதாரம். எந்தக் கணத்திலும் எதுவும் நிகழலாம். இன்னும் இருபது பந்துகள் தான் இருக்கின்றன, இருபது ரன் எடுத்தாக வேண்டுமென்றால் மட்டைக்காரர் எடுப்பாரா? மாட்டாரா? என்று யாருக்கும் தெரியாது. ஒரேடியாகப் பத்து ஆட்டங்கள் கட்டையைப் போட்டு அவர் அவுட்டானாலும் ஆகலாம், ஒரே அடியில் சிக்சர் அடித்து வெற்றி பெற்றாலும் பெறலாம். இப்போது குளோசப் கேமிராக்கள் வந்தபிறகு, மூன்றாம் அம்பயர் வந்த பிறகு எல்பிடபிள்யூ என்பது மதிப்பில்லாமல் போய்விட்டது. கி.பி.2000வரை, இந்த எல்பிடபிள்யூவுக்குத்தான் எத்தனை புகழ்!
இதனால் இதில் ஈடுபட்ட நம் மக்கள் அறவே தங்கள் கலாச்சாரத்தை மறக்க முடிந்தது. எப்படித் திரைப்பட நட்சத்திரங்கள் உருவானார்களோ அதுபோல கிரிக்கெட் நட்சத்திரங்களும் உருவானார்கள். திரைப்படங்களைப் பற்றிய வெட்டிக்கதைகள் பரவுவதைப்போலவே கிரிக்கெட் நட்சத்திரங்களைப் பற்றிய வெட்டிக்கதைகளைப் பேசுவதிலும் எவ்வளவு ஆர்வம்!   இன்னும் இதைப்பற்றி மிக விரிவாக எழுத எவ்வளவோ இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், கிரிக்கெட்டைக் கைவிட்டால், இந்தியா ஒலிம்பிக்கில் பிற விளையாட்டுகளில் மேம்பட்டுச் சிறப்படைய முடியும் ,நம் நாட்டுப்புறக் கலைகளும் விளையாட்டுகளும் மேம்படும், ஆங்கிலச் சீமான்களுக்காக உருவாக்கிய வெட்டிப் பொழுதுபோக்கு மறையும், ஜனநாயகத்தன்மை மலரும். ஜனநாயகத்துக்கு ஒவ்வாத தலைமை வழிபாட்டையும் நட்சத்திர வழிபாட்டையும் உருவாக்கி ஒரு சிலரைக் கோடீஸ்வரர்களாகவும், தலைவர்களாகவும் ஆக்கி விடுவது இந்த விளையாட்டின் குணம். (உதாரணத்திற்கு சச்சின் டெண்டுல்கர் பம்பாயில் கட்டியிருக்கின்ற ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவை (இணைய தளங்களில் எளிதில் பார்க்கமுடியும்) பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வளவு சொத்து சேர்ப்பதற்கும், மரியாதைக்கும் அவர் இந்திய நாட்டிற்குச் செய்த ‘சேவை’ என்ன? சர்வதேச விளையாட்டுகளில் இந்தியா ஒரு சிறிய இடத்தையாவது பிடிக்க உதவியிருக்கிறாரா? பிறருக்கு விளையாட்டுப் பயிற்சியையேனும் அளித்திருக்கிறாரா? தன் சொந்தப் புகழை, சொத்தை வளர்த்துக் கொண்டதைத் தவிர அவர் செய்த மகத்தான சேவை என்ன?) கிரிக்கெட் உடல்வளத்தையோ, மனவளத்தையோ மேம்படுத்தும் விளையாட்டும் அல்ல. ஓர் ஆட்டத்தில் ஒரு பவுண்டரி அடித்துவிட்டுப் பத்து ஆட்டங்கள் தன் கையையும் காலையும் ஆட்டியவாறு போஸ்கொடுத்தவாறு நின்றுகொண்டிருக்கும் அசாதாரணத் தன்மையை இதில்தான் பார்க்கமுடியும். தனி மனித மனப்பான்மையையும், ஊழலையும் வளர்க்கின்ற ஜனநாயகத்திற்கு எதிரான சாதனம் இது என்பதுதான் நம் முதல் குற்றச்சாட்டு. இதைத் தடைசெய்தால், அல்லது இதைப்பற்றி நம் மக்கள் ஒழுங்காகச் சிந்திக்க முடிந்தால்,
பதினொரு சோம்பேறிகளின் வெட்டித்தனத்தில் மகிழ்ச்சிகொள்ளும் கைதட்டும் ஆரவாரம் செய்யும் பதினொருகோடிச் சோம்பேறிகளின் வாழ்க்கை மேம்படும். (இதைத்தான் அந்தக் காலத்திலேயே ஐரிஷ் நாடகாசிரியரான பெர்னார்ட் ஷா வேறுவிதமாகச் சொன்னார்!) தமிழர்களுக்குச் சுரணை இருந்தால், இந்தக் காட்டு மிராண்டித்தனமான விளையாட்டை அறவே புறக்கணித்து நம் நாட்டுக்குரிய விளையாட்டுகள், கலைகளில் ஈடுபடுங்கள். அல்லது வேறு பயனுள்ள வேலைகளில் பொழுதைச் செலவிடுங்கள். 

Learn to avoid using slang and idioms in pro-essay-writer.com formal writing

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “கிரிக்கெட் பற்றிச் சில எண்ணங்கள் ( கட்டுரை)”
  1. Sanjay says:

    Worst article ever written. I could not get past the first few lines, full of inaccuracies…
    Cricket is believed to have been invented by shepherds!! There was a fixture…amatuers vs gentleman (even workers played) And lord’s is named after a guy named Lord (Notice it is called lord’s and not lords)
    Even am not a fan of cricket but it would be great if you can do some research before writing the article

    • Sanjay says:

      I had to come back to read the article again… The first indian superstar of Cricket was Palwankar Baloo belonging to a community classified as ST now (Please refer to Corner of a Foreign field by R.Guha)

      But i agree with your other points…Cricket has killed other games, especially the traditional games i used to play as a kid in my village.

      An excellent article but only from the second half. The first half if full of inaccuracies which could have been avoided

அதிகம் படித்தது