மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கிழிபடும் இந்திய இறையாண்மை!

ஆச்சாரி

Jun 1, 2012

இந்திய நாடாளுமன்றத்துக்கு வயது அறுபது. தனது அறுபதாண்டு நிறைவு நாளை அண்மையில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது இந்திய நாடாளுமன்றம். ஒரு நாடாளுமன்றத்தின் முழுமுதற் கடமை, அந்த நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதுதான். இந்தக் கடமையை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றி வருகிறதா? இந்தக் கேள்விக்கு இன்னொரு நாட்டுப் பாராளுமன்ற நடவடிக்கையோடு ஒப்பிட்டு விடை காண்பதே சரியானதாக இருக்கும். அவ்வாறு விடை காண நாம் வரலாற்றில் ஒரு நூற்றாண்டு காலம் பின்னோக்கி நடைபோட வேண்டும்.

இந்திய விடுதலைப் போராட்டக் காலம். இருபதாம் நூற்றாண்டின் துவக்கம். வெள்ளையருக்கு எதிரான ஆயுதப் போராட்டம் இந்தியாவில் மட்டுமின்றி, இந்தியாவிற்கு வெளியேயும் பல இடங்களில் மையம் கொண்டிருந்தது. அவற்றில் ஒன்றுதான் இலண்டன் இந்தியா ஹவுஸ் மாளிகை. இந்த மாளிகை குஜராத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவுக்கு சொந்தமானது. சிறந்த நாட்டுப் பற்றாளரான அவர், லண்டனில் தங்கிப் படித்து வந்த, இந்திய விடுதலையில் ஆர்வம் கொண்ட, இந்திய மாணவர்களின் விடுதியாக அதனை மாற்றிவிட்டார். இந்திய மாணவர்களின் விடுதியாக மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராளிகளின் வேடந்தாங்கலாகவும் அது விளங்கியது. “இந்தியன் லீக்” என்ற புரட்சிகர அமைப்பு அங்கிருந்துதான் செயல்பட்டது. மராட்டிய மாவீரன் வீரசாவர்க்கர், தமிழகத்தின் வ.வே.சு. ஐயர், டி.எஸ்.எஸ்.ராஜன் போன்றோர் அதன் முக்கிய உறுப்பினர்கள்.

அதே காலகட்டத்தில்,1908 ஆம் ஆண்டு வாக்கில், இந்தியாவிலிருந்த இங்கிலாந்து அரசாங்கம், இந்தியத் தலைவர்களைக் கடுந் தண்டனைகளுக்கு  உள்ளாக்கியது.

திலகர் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டு மாந்தலேயில் சிறைவைக்கப்பட்டார். வ.உ.சிக்கு நாற்பது ஆண்டு கால சிறைத் தண்டனை. சுப்பிரமணிய சிவாவுக்கு பத்து ஆண்டு சிறைத் தண்டனை. லாலா லஜபதிராய், அஜித்சிங் (பகத் சிங்கின் சித்தப்பா) ஆகியோர் செர்மனிக்கு நாடு கடத்தப்பட்டனர். வீர சாவர்க்கரின் தமையன் கணேஷ் தாமோதர் சாவர்க்கர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வளவுக்கும் காரணம், இங்கிலாந்து நாட்டிலுள்ள, இந்தியாவுக்கான அமைச்சரின் ஆலோசகர் கர்சான் வில்லிதான் என்று முடிவு செய்த “இந்தியா லீக்” அமைப்பினர் அவனுக்கு நாள் குறித்தனர்.

1909 ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள் இலண்டன் நகரின் மையப் பகுதியில், ஜகாங்கீர் மாளிகையில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு வந்த கர்சான் வில்லியை, மாவீரன், மதன்லால் திங்கரா நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்றார். அவரைப் பின்னிருந்து இயக்கியவர்கள் இந்தியா லீக் அமைப்பினர். குறிப்பாக வீரசாவர்க்கர் மற்றும் வ.வே.சு.ஐயர், மாவீரன் மதன்லால் யாரையும் காட்டிக் கொடுக்காமல் குற்றத்திற்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டு, தன்னந்தனியனாய் 1909 ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் நாள் தூக்குக் கயிற்றை முத்தமிட்டார்.

“இந்தியா லீக்” அமைப்பினர் தொடர்ந்து, தடங்கலின்றி செயல்படலாயினர். ஆனால் வீரசாவர்க்கருக்கு சிக்கல் ஒன்று தாய்நாட்டில் இருந்து வேறு வடிவில் வந்தது. வீரசாவர்க்கரின் சகோதரர் தாமோதர் சாவர்க்கரை அந்தமானுக்கு நாடு கடத்திய நாசிக் நகர நீதிபதி ஜாக்சனை பதினெட்டே வயது நிரம்பிய மாவீரன் ஆனந்த் லட்சுமண் கான்கரே 1909 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதியன்று நாசிக் நகர நாடக அரங்கில் வைத்துச் சுட்டுக் கொன்றார். இதற்காக ஆனந்த் கான்கரே 1910 ஏப்ரல் 19 அன்று தூக்கிலிடப்பட்டார். அவர் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. ஆனால் அவரோடு கைது செய்யப்பட மற்றொருவன் ஆனந்த் கான்கரே பயன்படுத்திய துப்பாக்கியை அனுப்பித் தந்தது லண்டனில் உள்ள வீர சாவர்க்கர் என காட்டிகொடுத்ததோடு அரசுத் தரப்பு சாட்சியாகவும் மாறிவிட்டான்.

உண்மையும் அதுதான். லண்டன் இந்தியா ஹவுசில் தங்கிச் செயல்பட்டு வந்த வீர சாவர்க்கர் வெடிகுண்டு செய்யும் செயல்முறை விளக்கக் குறிப்பையும், இருபது ரிவால்வார்களையும், ரஷ்ய புரட்சி பற்றி விவரிக்கும் அறிக்கைகளையும், மராட்டியத்தில் உள்ள தனது சகோதரர் தாமோதர சாவர்க்கருக்கு முன்னரே அனுப்பி இருந்தார். அவர் அனுப்பிய ரிவால்வார்களில் ஒன்றைத்தான் மாவீரன் கான்கரே பயன்படுத்தி ஜாக்சனை சுட்டுக் கொன்றார்.

வீரசாவர்க்கரை லண்டனில், லண்டன் போலீசார் கைது செய்தனர்.

அவரை லண்டனில் வைத்து விசாரிக்காமல் உடனடியாக இந்தியாவிற்கு அனுப்பி அங்கே வைத்து விசாரிக்க இங்கிலாந்து அரசாங்கம் முடிவு செய்தது. இதற்கு காரணம் இருந்தது. சாவர்க்கர் இங்கிலாந்தில் மட்டும் அல்லாமல், அடிக்கடி ஜெர்மன், பிரான்ஸ் சென்று அங்குள்ள இந்திய புரட்சியாளர்களுடனும் தொடர்பு ஏற்படுத்தி இருந்தார். மேலும் இங்கிலாந்து நாட்டு ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய அயர்லாந்து விடுதலை வீரர்களுடனும் அவர் அதிக நெருக்கம் கொண்டிருந்தார். அந்த அயர்லாந்து வீரர்கள் எப்படியேனும் சாவர்க்கரை லண்டன் போலீசாரிடமிருந்து விடுவிக்க பல வகைகளிலும் முயன்று வந்தனர்.

எனவே 01-07-1910 அன்று எஸ்.எஸ்.மோரியா என்ற கப்பலில் சாவர்க்கரை ஏற்றி இந்தியாவிற்கு இங்கிலாந்து அரசாங்கம் அனுப்பி வைத்தது. அந்தக் கப்பலை எங்கும் நிறுத்தாமல் இந்தியா சென்றுவிட வேண்டும் என்பதே இங்கிலாந்து அரசின் திட்டம். ஆனால் இந்தியா சென்று விசாரனைக்குள் சிக்கி வீணாக உயிரைவிட சாவர்க்கருக்கு விருப்பமில்லை. அதனால் சிறையில் இருந்தபடியே வ.வே.சு.ஐயருடன் ஒரு திட்டம் தீட்டியிருந்தார். அதன்படி எப்படியும் எஸ்.எஸ். மோரியா என்ற அந்தக் கப்பல் பிரான்ஸ் நாட்டின் மர்சேல்ஸ் துறைமுகத்துக்கு வெளியே நின்றுதான் தீரவேண்டும். அப்போது கப்பலில் இருந்து கடலில் குதித்து நீந்தி சாவர்க்கர் பிரான்ஸ் நாட்டுக் கரையை அடைந்துவிட வேண்டும். மர்சேல்ஸ் கடற்கரை சாலையில் காருடன் வ.வே.சு.ஐயர்( மேடம் காமா அம்மையாருடன்)  காத்திருந்து சாவர்க்கரை அழைத்துச் சென்றுவிட வேண்டும். திட்டமிட்டபடியே எல்லாம் நடந்தது. ஒன்றைத் தவிர.

1-7-1910 இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்ட எஸ்.எஸ்.மோரியா கப்பல் சாவர்க்கர் எதிர்பார்த்தபடியே 7-7-1910 அன்று இரவு வேளையில் பிரான்ஸ் நாட்டின் மர்சேல்ஸ் துறைமுகத்துக்குச் சற்று தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. கப்பலில் ஏற்பட்ட சிறு பழுதைச் சரிசெய்யவும் எண்ணெய் நிரப்பவுமே கப்பல் நிறுத்தப்பட்டது.

அதிகாலையில் ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரி அனுமதி பெற்று கப்பலின் கழிவறைக்குள் சென்ற சாவர்க்கர், கழிவறையில் இருந்த குறுகிய வட்டமான சாளரத்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு கடலில் குதித்து விட்டார். கண்ணாடித் துண்டுகள் கிழித்து அவரது உடலெங்கும் குருதி வடிய கரையை நோக்கி நீந்தத் தொடங்கினார். அவர் கடலில் குதித்து நீந்துவதைக்  கண்டுகொண்ட லண்டன் போலீசார், அவரைச்  சுடத் தொடங்கினர். சாவர்க்கர் தலையை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு கடலுக்குள்ளேயே நீந்தி கரையை நெருங்கிவிட்டார். லண்டன் போலீசார், ஒரு படகை கப்பலிலிருந்து கடலுக்குள் இறக்கி அதில் ஏறி அவரைத் துரத்தினர். அதற்குள் சாவர்க்கர், கரையேறி சாலையில் ஓடத் தொடங்கினார். அவரைப் படகில் துரத்தி வந்த லண்டன் போலீசாரும், கரையேறி, திருடன் திருடன் என்று கத்திக்கொண்டே அவரைத் துரத்திக் கொண்டு ஓடினார்கள். குருதியும் கடல் நீரும் சொட்டச் சொட்ட ஓடிய சாவர்க்கரை அவருக்கு எதிரே வந்த ஒரு பிரெஞ்சு போலீஸ்காரன், அவரை திருடன் என்று கருதி தடுத்து நிறுத்தி விட்டான். “நான் திருடன் அல்ல. இந்திய விடுதலைக்குப் போராடும் இந்திய அரசியல்வாதி. தஞ்சம் கேட்டு பிரான்ஸ் நாடு வந்திருக்கிறேன். என்னை உனது பிரான்ஸ் நாட்டு அரசின் அனுமதி இன்றி லண்டன் போலீசாரிடம் ஒப்படைப்பது சட்டப்படி தவறு” என்று தனக்குத் தெரிந்த அரைகுறை பிரஞ்சு மொழியில் அவனிடம் வாதாடினார். அதை விளங்கிக் கொள்ளாத அந்தப் பிரெஞ்சு போலீஸ்காரன் சாவர்க்கரை லண்டன் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டான்.

திட்டமிட்டபடி காருடன் வந்து காத்திருக்க வேண்டிய வ.வே..சு.ஐயரும், காமா அம்மையாரும் மூன்று நிமிடம் தாமதமாக அங்கே வந்து சேர்ந்ததால், சாவர்க்கரை லண்டன் போலீசார் மீண்டும் கப்பலுக்கு அழைத்துச் சென்ற காட்சியை அவர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. வேதனை மீறி இருவரும் விம்மி அழத் தொடங்கிவிட்டார்கள். விரைவிலேயே வேதனையையும் விம்மலையும் அடக்கிக் கொண்டு அடுத்தகட்ட செயலில் இறங்கினார்கள்.

பிரெஞ்சு மண்ணில் கால் வைத்து விட்ட சாவர்க்கரை லண்டன் போலீசார் கைது செய்தது சர்வதேச நியதிக்குப் புறம்பான அநீதி என்பதைப் பத்திரிகைகள் வாயிலாக உலகறிய அம்பலப்படுத்தினார்கள்.

பாரிசிலிருந்து வெளிவரும் “எல்ஹியூமனிட்டே” என்ற இதழின் ஆசிரியர் ஜீன் லாங்கெட் என்பவர் “பிரெஞ்சு நாட்டின் மர்சேல்ஸ் நகரில் வைத்து சாவர்க்கரை ஆங்கிலேயர் கைது செய்தது, பிரெஞ்சு நாட்டுக்கு இழைக்கப்பட்ட அவமானம்” என எழுதினார். இவர் காரல்மார்க்சின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல பிரான்சின் வேறுபல ஏடுகள் மட்டுமின்றி ஜெர்மனி முதலான பல ஐரோப்பிய நாடுகளின் ஏடுகளும் பிரிட்டனைக் கண்டித்து எழுதின. வலதுசாரி, இடதுசாரி என்ற பேதமின்றி அனைத்து பத்திரிகைகளும், அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து சாவர்க்கரை பிரிட்டன் அரசாங்கம் பிரான்சிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தீர்மானமே நிறைவேற்றின. சர்வதேச நீதிமன்றத்திற்கு இவ்வழக்குப் போனது. சர்வதேச அரங்கில் அன்று பிரிட்டனுக்கு இருந்த செல்வாக்கு காரணமாக தீர்ப்பு பிரிட்டனுக்குச் சாதகமாக அமைந்தது. சாவர்க்கர் லண்டன் போலீசாரால் இந்தியா கொண்டுசெல்லப் பட்டார்.

ஆனால் பிரான்ஸ் நாட்டு இறையாண்மைக்கு இழைக்கப்பட்ட அவமானமாக இதனைக் கருதிய பிரான்ஸ் நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்த விஷயத்தை விட்டுவிடுவதாக இல்லை. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி பிரான்ஸ் நாட்டுப் பிரதமரையும் அவரது அமைச்சரவையையும் கடுமையாகச் சாடினார்கள். பல உறுப்பினர்கள் பிரிட்டனுடன் போர் தொடுத்தே ஆக வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

பிரான்ஸ் பிரதமர் பிரியான்ட் திணறிப் போனார். மூன்று நாட்கள் குழம்பித் தவித்த அவர், இறுதியில் தெளிந்த மனதுடன் சாவர்க்கர் கைது தொடர்பாக பிரிட்டனால் பிரான்ஸ் நாட்டு இறையாண்மைக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைத் தடுக்கத் தவறியதற்காகத் தார்மீகப் பொறுப்பேற்று தானும் தன் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் பதவி விலகுவதாக அறிவித்தார்.

யாருக்காக? ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு அடிமை நாட்டுக் குடிமகனை, அடைக்கலம் என்று தன் நாட்டு மண்ணை வந்து அடைந்தவனை காப்பாற்ற தவறியதை தன்னாட்டு இறையாண்மையையே காக்கத் தவறிய குற்றமாகக் கருதி  பிரெஞ்சு பிரதமர் பிரியான்ட் கூண்டோடு பதவி விலகினார். அன்று உலகமே அவர் செயலைப் போற்றியது. (ஆதாரம்: சிவலை இளமதி எழுதிய ‘சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்’ இரண்டாம் பதிப்பு- அலைகள் வெளியீட்டகம்)

இன்று விடுதலை பெற்ற இந்தியாவில் என்ன நடக்கிறது? இந்திய குடிமக்களான தமிழக மீனவர்களை 1983 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நமது கடல் எல்லைக்குள் ஏறிவந்து சிங்கள கடற்படை தாக்காத நாளில்லை. இதுவரை ஐநூறுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்களான தமிழக மீனவர்களை சிங்களர்கள் இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் காயப்படுத்தி இருக்கிறார்கள். பல்லாயிரம் கோடி மதிப்புள்ள படகுகள், வலைகள், மீன்களை கொள்ளை யடித்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் கைது செய்து கொண்டுபோயிருக்கிறார்கள். நூற்றுக் கணக்கான மீனவர்களின் கதி என்னவாயிற்று என்றே தெரியவில்லை. சிங்களனிடம் பிடிபடும் தமிழக மீனவர்கள் படும் சித்திரவதைகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அவர்களை அம்மணமாக்குகிறான். மீனவர் படகுகளிலிருந்த இந்திய தேசியக் கொடியை சிங்களன் பூட்ஸ் கால்களில் நசுக்கி நாசப்படுத்தி “இதைக்  கோவணமாகக் கட்டிக் கொள்ளடா இந்திய வேசி மகனே” என தமிழக மீனவர்களை துன்புறுத்துகிறான்.

பல்லாயிரம் தாக்குதல்களை இந்திய கடல் எல்லைக்குள் நமது மீனவர்கள் மீது சிங்கள கடற்படை நடத்தியபோதும் ஒருமுறையேனும் நமது மீனவர்களின் உதவிக்கு இந்திய கடலோர காவல்படை சென்றதே இல்லை. சிங்களன் மீது ஒரு வழக்கு இல்லை. வாய்தா இல்லை.

கீழைக் கடலெங்கும் சிங்கள கடற்படையால் கிழிபடுகிறது இந்திய இறையாண்மை. இந்திய நாடாளுமன்றத்தின் உச்சியில் பட்டொளி வீசிப் பறக்கிறது பாரத மணிக்கொடி.

அன்றே தொல்காப்பியர் சொன்னபடி இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாய் இன்றும் கழிகிறது எமது நெய்தல் நில மக்களின் அன்றாட வாழ்க்கை. கட்சி வேறுபாடுகளைக் களைந்து, சாதி மத வேறுபாடுகளைத் துறந்து, ஓரணியில் திரண்டு தமிழக மீனவர்களைக் காக்க வேண்டிய தார்மீகக் கடமை தனக்கிருந்தும் வாய்மூடிக் கிடக்கிறது தமிழகம்.

வாழ்க பாரதம்!

(கச்சத் தீவு மற்றும் தமிழக மீனவர் துயரங்கள் பற்றி முழுமையாய் அறிந்துகொள்ள இங்கே சொடுக்கவும். கச்சத் தீவு நமதே)

Their trymobilespy.com first spy program for pcs and macs, acespy, was released in 2003 and before this they were in the web consulting and design business

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “கிழிபடும் இந்திய இறையாண்மை!”
  1. வினோத் says:

    இந்த மானங்கெட்ட நாட்டுக்கு இறையாண்மை ஒரு கேடா இந்த கட்டூரையை இந்திய பிரதமருக்கும் ஜெனாதிபதிக்கும் அனுப்புங்கள்

  2. kondraivendhan says:

    பாராளுமன்ற உச்சியில் பட்டொளி வீசிப் பறப்பது எதுவானாலும், அது நம் மலட்டு இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்காமல் கோவணமாய் அமையட்டுமே. கெட்டதில் பழுதொன்றும் இல்லை, பட்டதில் மிஞ்சியதும் ஏதும் இல்லை. தீயூழ் தொடர்வது தமிழனுக்கு…. என்றிருக்கும் இந்தீயம்……. இருப்பது போல் இருந்து கெடும். இது பட்டாங்கில் உள்ளபடி.

  3. arun says:

    அருமயான கட்டுரை. இந்திய அரசியல்வாதிகள் புரிந்து கொள்வார்களா?.

  4. தியாகு says:

    பிரஞ்சு அரசின் தீர செயல் எவனுக்கு உள்ளது இங்கே ? மீனவர்களை விடுங்கள் , ஈழத்தில் தமிழர்களை கொல்ல இந்தியா ஆயுதங்களை அனுப்பிய போதே தெரியும் இந்திய இறையாண்மை எங்கே சென்றது என்று . இந்தியன் என்று சொல்வதற்கே வெட்கபடுகிறேன்

அதிகம் படித்தது