மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குறுக்கு வெட்டு துள்ளுந்து ஓட்டுனர்

ஆச்சாரி

Oct 1, 2011


வேளச்சேரி பகுதியில் துள்ளுந்து ஓட்டுனராக பணி செய்யும் திரு. கங்காதரன் அவர்களிடம் பேசிய போது பெற்ற தகவல்

பிற மாநிலங்களை போல் அல்லாமல் தமிழகத்தில் மட்டும் ஏன் துள்ளுந்துகள் (ஆட்டோக்கள்) மானி (மீட்டர்) போட்டு ஓடுவதில்லை?

தமிழ் நாட்டுல பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 14:50 க்கு விற்ற காலத்தில் மினிமம் கட்டணம்  மேலும் கிலோமீட்டருக்கு ரூபாய் மூன்று என்று நிர்ணயிச்சாங்க, அதன் பிறகு ரொம்ப நாள் கழிச்சு பெட்ரோல் லிட்டருக்கு 53 க்கு வித்தப்ப மினிமம் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 6னு சொன்னாங்க. இப்போ பெட்ரோல் 70 ரூபாய்க்கு விக்குது, ஆனா அரசாங்கத்துலே கட்டணத்தை ஏத்தவே  இல்லை. கண்டுக்கறதே இல்லை. அரசு தான் இதுக்கு காரணமே ஒழிய ஆட்டோ ஓட்டுனர்கள் இல்லை.

இன்னிக்கு சென்னையிலே ஆட்டோ எல்லாருக்கும் தேவைப்படுது. ஒவ்வொரு ஏரியாலையும் பஸ் ஸ்டாண்ட்லேந்து ரெண்டு கிலோ மீட்டர் சுத்தளவுக்கு வளர்ச்சியா இருக்குது.. அதனாலே ஆட்டோல தான் போயாகணும்.அரசாங்கம் இந்த விஷயத்தை கவனிக்கனும்னு நாங்க போராட்டம், உண்ணாவிரதம் நடத்தலாம்னு இருக்கோம்.

என்ன கோரிக்கை வைத்து போராட்டம்?

எங்களுக்கு முக்கியமாக மூணு பிரச்னை இருக்கு. சில இடத்துக்கு போனால் திரும்பி வரும் போது சவாரி இல்லே, ரோடு சரி கிடையாது . பெட்ரோல் விலை அதிகம். அதனாலே மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்கணும், இதனை சரியான முறையிலே மைலேஜ் பாத்து செய்யணும். எங்களுக்கு ரேசன் முறையிலே பெட்ரோல் குறைந்த விலைக்கு தரனும். ரோட்டை சரி செய்யணும்.

நீங்கள் கேட்கும் பணம் தான் பெரும்பாலும் கிடைத்துவிடுமே? பிறகு எதற்கு போராட்டம்?

சனங்க கிட்டே நாங்க வாக்கு வாதம் செய்ய விரும்பலை . அதில்லாமே மீட்டர் போட்டு ஓடினா சவாரி அதிகமா வரும். பிரச்னைஇருக்காது. ப்ரீபெய்டு ஆட்டோல கூட பாயிண்ட் வரைக்கும் தான் போக முடியும். சென்ட்ரல் டு வேளச்சேரி அப்படினா வேளச்சேரி பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் தான் வர முடியும். அதுக்கு மேலே உள்ளே போக சொன்னா, நாங்க எச்ட்ரா கேப்போம். சனங்க கோவபடுவாங்க.  எங்களுக்கும் டென்சன். எரிச்சல். மீட்டர் முறை வந்தா இதெல்லாம் இருக்காது. செல்போன் பேசிக்கிட்டே சனங்க ஆட்டோலே ரொம்ப தூரம் சுத்துவாங்க. அதுக்கு காசு கேட்டா சண்டைக்கு வராங்க.

வருடத்தில் உங்களுக்கு ஆகும் செலவினங்கள் என்ன?

வருசத்துக்கு ஒரு தபா FC போகணும்.  வண்டி பதினஞ்சு நாள் நின்னுடும். டின்கேரிங், பெய்ண்டிங் எல்லாம் முடிஞ்சு தான் வண்டி எடுக்க முடியும். அதில்லாமே இன்சூரன்சு வேற கட்டனும். அதனாலே ஒரு பிரயோஜனம் கிடையாது. ரூவா 2500 மேலே கட்டறோம். ஒரு பிரச்சனைனா கம்பனிகாரன் எதுமே தர்றது   கிடையாது.  அங்கீகாரம் பெற்ற ஆட்டோ ரிப்பேர் மெகானிக் எழுதி கொடுத்தா தான்  இன்சூரன்சு கிடைக்கும்.

ஆனா எந்த மெக்கானிக் செடுக்கும் அங்கீகாரம் கிடையாது. இன்சூரன்சு பணம் கட்டி அதானாலே இழப்பீடு கிடைச்சது ஒரு சதவீதம் இருந்தா அதிசயம். ஒரேயடியா டிரைவர் செத்து போனா மட்டும் கிடைக்கும். அதை வாங்க அந்த டிரைவர் உயிரோட இருக்க மாட்டார். வரி கட்டனும்.  ரோடு சரி இல்லாமே இருக்கதாலே ரிப்பேர் செலவு வேற வரும்.

துள்ளுந்து ஓட்டுனர்கள் சந்திக்கும் மற்ற பிரச்சினைகள் என்ன?

எங்களுக்கு எந்த சமூக பாதுகாப்பும் கிடையாதுங்க. கடைசி காலத்துலே பென்ஷன் மாதிரி ஏதும் கிடையாது. வயசான உடனே உடம்பு கேட்டு போகும். கண்ணு பார்வை மங்கும். அதும் இப்போ வர வண்டிங்க எல்லாம் ஹை பீம் லைட்டு தான் இருக்கு. அதனாலேயே கண்ணு பிரச்சனை. நாப்பத்தஞ்சு வயசான ஒரு டிரைவர் வண்டி ஓட்டுறது கஷ்டம்..ஆனா அவருக்கு பொண்ணுங்க கல்யாணத்துக்கு நிக்கும். பசங்க படிப்பாங்க. இதனாலே மன ரீதியான பாதிப்பும் அதிகம்.

காவல்துறை எங்களை மதிக்கறதே இல்லை. டேய் போடா ன்னு  தான் திட்டுவாங்க. எங்க மேலே பொய் கேசு போடுவாங்க. எங்க உயிருக்கும் பாதுகாப்பு கிடையாது. ராத்திரிலே ரொம்ப உள்ளே சவாரி போனா எல்லா ஆபத்தும் எங்களுக்கு இருக்கு. அரசியல்வாதிங்க வேற எங்க சங்கங்களை இஷ்டத்துக்கு உடைச்சிடறாங்க. இப்படி தான் புலி வாலை புடிச்ச மாதிரி எங்க வாழ்க்கை போகுது.

A strong thesis statement must be precise enough to allow for a coherent argument moved over there and to remain focused on the topic

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குறுக்கு வெட்டு துள்ளுந்து ஓட்டுனர்”

அதிகம் படித்தது