மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குறுந்தொகை- 18 வது பாடல் -விளக்கம்

ஆச்சாரி

Feb 15, 2014

குறுந்தொகை- 18 வது பாடல்.

குறிஞ்சித்திணைக்குரியது.

இயற்றியவர்- கபிலர்.

தலைவியை இரவுப்பொழுது சந்தித்துவிட்டுச் செல்லும் தலைவனிடம், விரைவில் தலைவியை வரைந்து(மணம்செய்தல்) கொள்ளுமாறு தோழி கூறுவது

தலைவியைத் தலைவன், இரவுப் பொழுதிலே சந்தித்துவிட்டுச் செல்கின்றான். ஆனால் மணம் செய்துகொள்ளுதல் பற்றி எதுவும் கூறுவில்லை. தோழியும் தலைவனோடு இதுபற்றிப் பேசுவதற்குச் சரியான சூழ்நிலையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்! மலைநிலம்.  கண்முன்னே தோன்றும் பலாமரமும் அதன் வேர்ப்பகுதியிலே சிறிய காம்பிலே தொங்குகின்ற பெரிய பலாப்பழமும் தோழிக்குத் தலைவியோடு அதனை இணைத்துப் பார்க்கத்  தோன்றியது. தலைவியின் நிலையைத் தலைவனிடம்  எடுத்துரைக்க இதுதான் சரியான நேரம் என்று நினைத்தாள். தலைவியின் துயர் களைய நடவடிக்கையும் எடுத்தாள். தலைவனிடம் பேசினாள்; என்ன பேசினாள் ? பாடலைப் பார்ப்போமா?

வேரல்வேலி வேர்க்கோட் பலவின்

சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!

யார் அஃது அறிந்திசினோரே! சாரல்

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்

உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே!

கருத்துரை:  மூங்கிலை வேலியாகக் கொண்ட மலைநிலம். அங்கே, வேரிலுள்ள கொம்புகளில் பலாப்பழங்கள் தொங்குகின்ற  மலைநாட்டுத் தலைவனே! விரைவில் தலைவியை மணம் செய்துகொள்ளும் காலத்தை உண்டாக்கிக் கொள்வாயாக! உன்னைத் தவிர யாரால் தலைவியின் நிலையை அறிந்துகொள்ள முடியும்? மலையிலே, சிறிய கொம்பிலே பெரிய பலாப்பழம் தொங்கிக் கொண்டிருப்பதுபோல, தலைவியின் உயிரோ மிகச்சிறியது; அவள் உன்மேல் கொண்ட விருப்பமோ பெரியது.

சொற்பொருள் விளக்கம்

 வேரல்வேலி – மூங்கில்வேலி, வேர்க்கோட்டு – வேரிலுள்ள கொம்புகளில், பலவின் – பலா மரத்தின், சாரல் நாட – மலைநாட்டவனே, செவ்வியை – வரைந்து கொள்ளும் காலத்தை, ஆகு – உண்டாக்கு, மதி – (அசைச்சொல்), சிறுகோட்டு – சிறிய கொம்பிலே, பெரும்பழம் – பெரிய பலாப்பழம், தூங்கி ஆங்கு – தொங்கிக் கொண்டிருந்தவாறு,  இவள் – தலைவி, உயிர் தவச் சிறிது – உயிர் மிகச் சிறியது, காமமோ பெரிதே – விருப்பமோ பெரியதே!

தலைவியின் உயிரோ பலாப்பழத்தின் காம்பினைப் போலச் சிறியது, ஆனால் அவள் உன்மீது வைத்துள்ள காதலோ பெரிய பழத்தைப்போன்றது. அதனால் விரைவிலே அவளை மணம் செய்துகொள் என்று நயம்பட தலைவனின் கடமையை எடுத்துரைக்கின்றாள் தோழி!

எப்படி சிறிய கொம்பிலே பழுத்த பலாவினை உரிய நேரத்தில் பறித்து பயன்படுத்துதல் வேண்டுமோ, அப்படி தலைவியையும் நீ உரிய நேரத்தில் மணம் செய்துகொள்ளல் வேண்டும் என்பதையும் உணர்த்தினாள் தோழி. உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே என்கின்றபோது, தலைவியின் சிறிய உயிரிலே தோன்றி வளர்ந்து பெரிதாகி நிற்கின்றது அவள் உன்மேல் கொண்ட விருப்பம் என்பதைத் தெள்ளத் தெளிவாக உரைக்கின்றாள் தோழி! பழம் முதிர்ந்து கீழே விழுந்துவிட்டால் உண்ணுகின்றவகையில் இருக்காது. அதுபோல்தான், உன் தலைவியும்! நீ அவளைச் சரியானநேரத்தில் மணம் செய்துகொள்ளவில்லையென்றால் அவள் தன்னுடைய உயிரையும் அழித்துவிட நேரிடும். அப்போது உனக்கும் இழப்புத்தான் என்ற எச்சரிக்கையும் விடுக்கி்ன்றாள்! தோழியின் குரலில் அறவுரையும் அறிவுரையும் எச்சரிக்கைக்குரலும் ஒன்றிணைந்து ஒலிப்பதை நம்மாலும் உணர முடிகின்றது.

இயற்கையான காதல் உணர்வை இயற்கையோடு பொருத்திப் பார்த்து இன்புற்று வாழ்ந்த நம்மவர் தம் ஈடு இணையற்ற இயல்பினை இயம்ப இயம்ப இன்பமன்றி வேறேது?

 

Where you see a blip, examine the information http://essaysheaven.com/ more closely to see what might have caused it

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “குறுந்தொகை- 18 வது பாடல் -விளக்கம்”
  1. kunandara says:

    “சாரல் சிறுகோட்டுப் பெரும்பழம்”- ஆஹா! கபிலர் காளிதாசனை விழுங்கி விட்டார். தன்னை தலைவியுருவாக்கும் கவிகள் மறைபொருளின் நுட்பங்களையும் கடந்து விடுகின்றனர்.
    தங்களின் இப்பகுப்புக்கு மிக்க நன்றி
    - குணந்தர மூர்த்தி

அதிகம் படித்தது