மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம்

ஆச்சாரி

Nov 23, 2013

குழந்தைகளைத் தெய்வமாகப் பார்க்கும் நம் தமிழகத்தில்தான் அனாதை இல்லங்கள் அதிகமாக இருக்கின்றன. குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவில் இருப்பதும் தமிழகத்தில்தான். வறுமையான குடும்பச் சூழல், குழந்தைகளுக்கு சரியான பாதுகாப்பின்மை, கல்வி கற்க முடியாத சூழல் என பல்வேறு காரணங்களால் குழந்தைத்தொழிலாளர்கள் உருவாகின்றனர். பல்வேறு தொண்டு நிறுவங்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் போராடிய நிலையிலும் இந்தக் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதைத் தடுக்க முடியவில்லை. அரசாங்கம் பாதுகாப்புச்  சட்டம் இயற்றினாலும் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதைத் தடுக்க முடிவதில்லை. காரணம் அவர்களுடைய வறுமை. தனக்கோ, தன் குடும்பத்திற்கோ போதிய உணவோ, வருமானமோ இல்லாத சூழலில் வேறுவழியின்றி வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயம் உருவாகிறது. தவிர வேறு சில காரணங்களாலும் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

தமிழகத்திலும் இந்தியாவிலும் மட்டுமல்ல உலகளவில் குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை  பெரிய அளவாகத்தான் இருக்கிறது. உலகளவில் 21.5 கோடி குழந்தைகள், முழுநேரத் தொழிலாளர்களாக உள்ளதாக ஒரு கணக்கெடுப்புச் சொல்கிறது. பள்ளிக்குச் செல்ல முடியாமலும், சுதந்திரமாகச் செயல்பட முடியாமலும் கஷ்டப்படுகின்றனர். பெரும்பாலானோருக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. குழந்தைகளாக இருக்க இவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சிலர் மோசமான சுற்றுச்சூழல் இடங்களிலும், கொத்தடிமைகளாகவும் ஆண்டுக்கணக்கில் வேலை வாங்கப்படுகின்றனர். போதைப்பொருள் கடத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளிலும் இக்குழந்தைகளை ஈடுபடுத்துகின்றனர்.

இந்திய அரசும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றம் எனத் தெரிவிக்கிறது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் ஆய்வின் படி, உலகளவில் குழந்தைத் தொழிலாளர் அதிகம் உள்ள நாடுகளில், இந்தியா (16 கோடி குழந்தைத் தொழிலாளர்) முதலிடத்தில் உள்ளது. நிலக்கரிச் சுரங்கம், விவசாயம், தீப்பெட்டி, பட்டாசுத் தயாரிப்பு, செங்கல் சூளை, (டெக்ஸ்டைல்) துணிக்கடை, கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் இவர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். காரணம் இவர்கள் குறைந்த ஊதியத்தில், வார விடுமுறையின்றி ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கப்படுகின்றனர். மேலும் “சித்தாளு வேலை எட்டாளு செய்யாது” என்ற பழமொழிக்கிணங்க பெரும்பாலான சிறு, பெரு வேலைகளை இச்சிறுவர்கள் செய்வது போல் பெரியவர்கள் கூடச் செய்ய முடியாதென்பதால் இக்குழந்தைகள் அதிகம் பணிக்குப் பயன்படுத்தப்படுகின்றனர்.

தமிழகத்தில் சிவகாசிப் பகுதியில் உள்ள பட்டாசுத் தொழிற்சலையில் தான் அதிகளவில் குழந்தைத் தொழிளாலர்கள் உள்ளனர். அதற்கடுத்து திருப்பூர், கோவை, சென்னை போன்ற தொழில் நகரங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். நகரங்களில் மட்டுமல்ல  கிராமங்களிலும் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்திருக்கின்றனர்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.,), எந்த வயதில் வேலைபார்க்க வேண்டும் என்பதை வரையறுத்துள்ளது. அதன்படி, கடினமான வேலைகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கட்டாயமாகக் கல்வி கற்க வேண்டும். 13 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், அவர்கள் விரும்பினால் கடினமில்லாத (அவர்களது கல்வி, சுகாதாரம், மனம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாமல்).  வேலையைப் பார்க்கலாம் என வரையறுத்துள்ளது.

குழந்தைத் தொழிலாளார்களை மீட்டெடுக்கவும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் 1960 ஆம் ஆண்டு இந்திய அரசு குழந்தைகள் சட்டத்தை இயற்றியது. குழந்தைகள் இளம் வயதில் குற்றங்கள் செய்வதைத் தடுத்து அந்தக் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 1986 இல் மத்திய அரசு குழந்தைகள் நீதிச் சட்டத்தை இயற்றியது. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத உலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், ஜூன் 12ம் தேதி  ‘குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட  உறுதிமொழி,  ‘வீட்டு வேலைகளில், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்குவது’ என்பதுதான். இந்த உறுதி மொழியோடு அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கொடுக்கும் முயற்சியை இன்னும் துரிதப்படுத்த வேண்டும். அப்போதுதான் குழந்தைத் தொழிலாளர் நிலை ஒழியும்.

Sometimes, there is a requirement that one committee member be from another department or even from another institution www.eduessayhelper.org

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம்”

அதிகம் படித்தது