மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கூடங்குளத்தில் இரத்தம் சிந்தும் புத்தர்

ஆச்சாரி

Sep 15, 2012

சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்னர் மே 18, 1974 இல் காலை 8:05 மணிக்கு பொக்ரானில் சோதனை அணு குண்டு வெற்றிகரமாக வெடித்ததை சங்கேத வார்த்தைகளில் புத்தர் புன்னகைத்துவிட்டார் என்று நம் விஞ்ஞானிகள் கொண்டாடினர். புத்தரின் புன்னகையில் தொடங்கிய செயல்களால் இன்று நம் தென் தமிழக மக்கள் இரத்தம் வடிக்கின்றனர். அதன் பின் விளைவுகளை அறியாமல் நாமும் நமது முந்தைய தலைமுறையினரும் அன்று இந்தியராக விரைவில் வல்லரசாகிவிடுவோம் என்று பெருமிதம் கொண்டோம்.

பொக்ரானில் வெடித்த அணுகுண்டு தயாரிக்க தேவையான, புளுட்டோனியம் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் உதவியுடன் நிறுவப்பட்ட உலையிலிருந்து எடுக்கப்பட்டது என்றதால் அமெரிக்கா, கனடா உட்பட பல மேலை நாடுகளின் எதிர்ப்புகளை இந்தியா சம்பாதிக்க நேர்ந்தது. இந்நிகழ்வால் சர்வதேச சதுரங்கத்தில் இந்தியாவின் கட்டங்கள் மாறியதால் ரஷ்யா நமது அணு ஆராய்ச்சிக்கு கைகொடுக்க முன்வந்தது. அன்று தொடங்கிய இந்திய ரஷ்யா பேச்சு வார்த்தைகள் மற்றும் ஆராய்ச்சி பரிமாற்றங்களின் ஒரு மைல் கல்லாக 1988 நவம்பர் இருபதில் கூடங்குளத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

ஒன்பதாண்டு இடைவெளிக்குப் பின்னர் 1997 இல் இந்திய பிரதமர் தேவகௌடாவும் ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சினும் கூடங்குள அணுமின் நிலையத்திற்கான விரிவான திட்ட அறிக்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இத்திட்டத்திற்கு தேவையான அணு உலை, உபகரணங்கள், தொழில்நுட்பம், பயிற்சி மட்டுமல்லாது பணத்தையும் கடனாக கொடுப்பதற்கு ரஷ்யா தாராளமாக முன்வந்தது. இத்திட்டம் 1988 இல் ஆறாயிரம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப் பட்டது, பின்னர் 1997 இல் பதினேழாயிரம் கோடியாக உயர்த்தப்பட்டது. திட்டத்திற்கு தேவையான பணம் தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் ரஷ்யா கொடுக்கும் கடனை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் திரும்பக் கொடுக்க ஆரம்பித்தால் போதுமானது என்றும் அதுவரை நான்கு சதவிகித வட்டி கொடுத்தால் போதுமென்றும் 1998 இல் ரஷ்ய அரசு ஒப்புக்கொண்டது. இவ்வளவையும் ரஷ்யா அள்ளித்தர பின்னணி காரணம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் அன்று சிதறுண்ட நிலையில், ரஷ்யா பொருளாதாரத்தில் மிகவும் பலவீனமாக இருந்தது.

இவ்வொப்பந்தம் இடப்பட்ட சில மாதங்களுக்கு பின்னர் ரஷ்யாவில் 29 அணுஉலைகளை சொந்தமாக வைத்திருந்த ரஷ்ய மின்வாரிய நிறுவனம் (Russian Electric Power Company) அணு உலைகளை நடத்த பணமில்லாமல் உலகெங்கும் நிதி கோரியது. பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க, அவசியமான பராமரிப்பு பணிகளை தொடர, அதிமுக்கிய குழாய்களை சோதனையிட, அணு எரி பொருள் வாங்க கூட பணமில்லை என்று அமெரிக்காவிடம் சென்று நிதி திரட்ட முயன்றது இந்நிறுவனம். ஒன்பது அணு உலைகளை மூட வேண்டும் என்றும் அதை மூடி செயலிழக்க வைப்பதற்கு பணமில்லை என்று இந்நிறுவனம் தெரிவித்திருந்தது. (இணைப்பு – 1999 நியூ யார்க் டைம்ஸ் செய்தி – http://www.wise-paris.org/index.html?/english/othersnews/year_1999/othersnews0000990412.html&/english/frame/menu.html&/english/frame/band.html)

தன்னாட்டு நிறுவனம் இந்நிலையில் இருக்க ரஷ்யா அரசு எதற்காக கூடங்குளத் திட்டத்திற்கு பணம் தர வேண்டும்? ரஷ்ய அரசின் செயல்பாடு கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகும் கதையாக இருக்கின்றது. இந்தப் பணத்தை உண்மையிலே ரஷ்ய அரசு தான் தருகின்றதா? இதனால் ரஷ்யாவிற்கு என்ன பயன் என்பதெல்லாம் மர்மமாகவே இருக்கின்றது.

அணு உலை பாதுகாப்பானது, நம் விஞ்ஞானிகளுக்கு திறம்பட கதிர்வீச்சு பொருள்களை கையாளத் தெரிந்தவர்கள், கல்பாக்கத்தைப் பாருங்கள் என்று சுட்டி காட்டுபவர்கள் யாரும் ஜடுகொடா பற்றி பேசுவதில்லை. சாந்தா, முண்டா, ஹோ, பூமிஸ், காரியா என்ற பல ஆதிவாசி குழுக்கள் வாழ்ந்த மிகச் சிறிய கிராமம் ஜடுகொடா.  ஜார்கண்ட் மாநிலத்திலே கூட யாரும் அறியாத நிலையில் இருந்த ஜடுகொடா ஒரே நாளில் யுரேனியம் தாது கண்டறியப் பட்டதாக இந்தியா முழுவதும் பிரபலமானது. ஆதிவாசிகளுக்கு ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டு அவர்கள் வாழ்க்கையும், வீடும், நாடும் முன்னேறி விடும் என்று நம்ப வைக்கப்பட்டு 1957 இல் யுரேனியம் சுரங்கம் அமைக்கப்பட்டது. இந்தியாவில் இயங்கும் அத்தனை அணு உலைகளுக்கும் பெருமளவில் தேவையான யுரேனியம் எரிபொருள் இச்சுரங்கத்தில் இருந்து தான் வெட்டி எடுக்கப்படுகின்றது.

ஆடுமாடுகள் மேய்த்து கொண்டு காடு வேலைகளுக்கு சென்று கொண்டிருந்த ஆதிவாசிகள் முழுக்கால் சட்டைகள் அணிந்து சுரங்க வேலைகளுக்கு சென்றனர். ஓரளவிற்கு நகர வாழ்க்கைக்கு சமமான ஊதியங்கள் கொடுக்கப்பட, மற்ற கிராமங்களை விட ஜடுகொடா கிராம மக்கள் நாகரிகமாக மாறி முன்னேற்றத்தை அடைந்ததாக பெருமையடைந்தனர். சில ஆண்டுகளில் அவர்கள் முன் அறிந்திராத நோய்களாலும், ஊனமுற்ற குழந்தை பிறப்புகளாலும், இள வயது மரணங்களாலும் பாதிப்படையத் தொடங்கும் வரை, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் தான் சென்று கொண்டிருந்தது. கதிர்வீச்சின் பாதிப்புகளை அறிந்திராத மக்கள் ஊனத்திற்கும், நோய்களுக்கும், மரணத்திற்கும் காரணம் கடவுளின் கோபத்திற்கு ஆளாகிவிட்டதால் தான் என்று  ஊர்ப் பூசைகளையும், பரிகாரங்களையும் செய்து தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு தேடிக்கொண்டிருந்தனர்.

1990 களுக்கு பின்னரே பல தன்னார்வ தொண்டு ஆராய்ச்சியாளர்களால் இம்மக்கள் கதிரியக்கத்தின் பாதிப்புகளை முழுமையாக உணரத் தொடங்கினர். பல போராட்டங்களை நடத்தினாலும் ஜடுகொடா மக்கள் ஐம்பதாண்டுகளாகி விட்ட யுரேனிய சுரங்கத்துடனே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடன் இரண்டரை ஆண்டுகள் தங்கி ஸ்ரீபிரகாஷ் என்பவர் “புத்தர் ஜடகொடாவில் அழுகிறார் (Buddha Weeps In Jadagoda)” என்ற ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.  2000 ஆம் ஆண்டில் ஒரு ஆராய்ச்சியாளர் ஜடுகொடா மக்களின் குழந்தை பிறப்பை பற்றி வெளியிட்ட அட்டவணையைப் பாருங்கள்.

கர்ப்பிணி பெண்கள் 265
குழந்தை பிறப்புகள் 266
இறந்தே பிறந்த குழந்தைகள் 4 (ஒன்று ஊனமாக பிறந்தது)
உயிருடன் ஊனமாக பிறந்த குழந்தைகள் 14
உயிருடன் பிறந்து பின்னர் இறந்த குழந்தைகள் 9 (இதில் எட்டு ஊனமாக பிறந்தவைகள்)
பிறந்து ஒரே நாளில் இறந்த குழந்தைகள் 6

இந்தியாவை வல்லரசாக்க ஜடகொடா மக்கள் நவீன முறையில் நரபலி கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். உலகத்திற்கே அஹிம்சையை போதித்த புத்தரின் பெயரிலே அணு குண்டு சோதனை நடத்துபவர்களிடம் இருந்து வேறெதை அவர்கள் எதிர்பார்க்க முடியும். நம் பிரதமர் மன்மோகன் சிங் காந்திய வழியில் அணு ஆராய்ச்சிகள் நடத்தப்படுவதாக பேசிவருகிறார் (இணைப்பு – www.gandhism.net/nuclearprogram.php). இது போன்ற புத்தர் வழியில், காந்தி வழியில் தான் கூடங்குளத்தில் காவல் துறையினர் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஊனத்திற்கும் உயிர்பலிக்கும் அஞ்சி அணு உலையை எதிர்த்துப் போராடும் மக்களை அணு உலையை திறப்பதற்கு முன்னரே ஊனப்படுத்தி உயிர்பலியை வாங்கிக் கொண்டிருக்கின்றனர் காவல் துறையினர். உதயகுமார் தான் இத்தனைப் போராட்டங்களுக்கும் காரணம் அவரை கைது செய்துவிட்டால் மக்கள் அடங்கி விடுவர் என்று காவல்துறையினர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். 1988 டிசம்பர் 19, 1989 ஜனவரி 11, மே 1, ஆகஸ்டு 27, 1990 ஏப்ரல் 29, 1991 ஜனவரி 30, பிப்ரவரி 10 களில் நடந்த போராட்டங்கள் யாவும் உதயகுமார் தலைமையில் நடக்கவில்லை. அன்று ஒய்.டேவிட் ஒருங்கிணைத்தார். இன்று உதயகுமார் ஒருங்கினைக்கிறார்.கூட்டத்தோடு நிற்கும் ஒரு சிறுமியோ சிறுவனோ நாளை இப்போராட்டத்தை வழிநடத்தலாம். இடிந்தகரை மக்கள் ஒரு தலைவரைப் பின்பற்றும் மந்தைகளாக இருப்பதாக தோன்றவில்லை. அவர்கள் சரியான தலைவர்களை இனங்கண்டு வழிநடத்தும் வல்லமை படைத்தவர்களாகத் தெரிகின்றது.

இருபதாண்டுகளாக விட்டுக் கொடுக்காத மக்கள் சில உயிர் பலிகளை வாங்கினால் ஒடுங்கி விடுவர் என்று அரசு நினைப்பது அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சமூக அறிவியல் பற்றிய அறிவு, துளி கூட இல்லை என்பதையே காட்டுகின்றது. தீவிரவாதிகளின் தாக்குதல்களையும், சாதி சண்டைகளையுமே கையாண்டு அனுபவமுள்ள அரசு இயந்திரம் கூடங்குளப் போராட்டத்தையும் அவ்வாறே கையாள முயல்கின்றது. ஆயிரம் மக்களை கைது செய்து, இருபது பேரை சுட்டுக் கொன்று அரசால் அணு உலையை தொடங்கிவிட முடியும். பின்னரும் போராட்டம் மீண்டும் வலிமையாக தொடர்ந்து கொண்டுதான் செல்லும். மூன்று மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு அணு உலையை திறக்க அனுமதி கொடுத்த உடனே போராட்டம் முடிந்துவிட்டதாக அரசும், ஊடகமும் நம்பின. ஆனால் என்னாயிற்று இன்று? கூடங்குளம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் பரவி வருகின்றதே. அரவிந்த் கெஜ்ரிவாலின் வருகையும், அருந்ததி ராயின் ஆதரவும் வட மாநிலங்களிலும் கூடங்குளப் போராட்டத்திற்கு ஆதரவைத் தேடித் தருகின்றதே.

எரிபொருள் நிரப்பி விட்டாலும், மின் உற்பத்தி தொடங்கிவிட்டாலும் அம்மக்கள் போராட்டத்தை கைவிடப் போவதாகக் தெரியவில்லை. அணு உலை செயல்படும் காலம் வரை அரசு நிரந்தரமாக துணை இராணுவத்தை நிறுத்தி வைத்து, வேண்டும் என்றால் அணு உலையைக் காத்துக் கொள்ளலாம். இராணுவமும் மக்களும் எந்த ஊரிலும் அமைதியாக ஒன்றாக வாழ்ந்ததில்லை. தென்னகத்து காஷ்மீராக கூடங்குளம் மாறுவது பின்னர் தவிர்க்க முடியாமல் போய்விடும். இது நடக்குமானால் அதற்கான முழு பொறுப்பும் அரசியல்வாதிகளையும், நடப்பது தவறு என்று தெரிந்தும் வேடிக்கை பார்க்கும் நம்மையும் தான் சேரும்.

பொக்ரானில் புன்னகைத்த புத்தர், ஜடகொடாவில் அழுது, கூடங்குளத்தில் இரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறார். நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “கூடங்குளத்தில் இரத்தம் சிந்தும் புத்தர்”
  1. வே.தொல்காப்பியன் says:

    உலகம் முழுவதும் அணு உலை விபத்துகளால், கதிரியக்கக் கழிவுகளால் இது வரை நேர்ந்த உயிரிழப்புகள் மிக மிகச் சொற்பம். வெறும் சாலை விபத்துகளால் மட்டும் ஓர் ஆண்டுக்கு உலகம் முழுவதும் இறப்போர், ஊனமுறுவோர் (1.2 மில்லியன் / 12 இலட்சம்) தொகையுடன் ஒப்பிட்டால் அணு உலை ஆபத்து என்பது நம் கணக்கில் கடைசியில் போய்விடும். அதற்காக அணு உலையாலும் கதிரியக்கக் கழிவாலும் உள்ள ஆபத்தை அலட்சியப் படுத்தவோ மூடி மறைக்கவோ கூடாது. அதற்கு தகப் பாதுகாப்புகளைச் செய்வதும் செய்யப் பட்டுள்ளதைப் பொது மக்களுக்கு நன்கு புரிய வைப்பதும் தான் தீர்வாக இருக்க முடியும்.

    ஆபத்து இல்லாத ஆக்கப் பணி இல்லை. வீட்டிற்குள் இருக்கும் சமையல் வாயு, மின்சாரம், இரண்டு, நான்கு சக்கர மோட்டார்களில் பயன்படுத்தப் படும் எரிபொருள் எல்லாவற்றாலும் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதைப் புரிந்து கொண்டு அதற்குத் தக பாதுகாப்பு ஏற்பாடுகளும் பழக்க வழக்கங்களும் மேற்கொள்கிறோம். அணு உலையும் இதற்கு விதி விலக்கன்று.

    அரசாங்கம், ஆதிக்க சக்திகள் செய்யும் அடாவடி, அராஜகப் போக்கிற்கு மாற்று அதே போல் நடந்து கொள்வதல்ல. அது அரசியல் வியாபாரிகளுக்கே வாய்ப்பாகிப் போகும்.

    கூடாங்குளம் / கல்பாக்கம் அணு உலையால் ஆபத்து அதைச் சுற்றியுள்ள மீனவர்களுக்கு மட்டுமன்று; பல நூறு, ஆயிரக்கணக்கான கிமீ தொலைவில் வாழ்பவர்களுக்கும் விபத்தின் தீவிரத்தைப் பொறுத்து பாதிப்பு இருக்கும். எனில், ஏன் எல்லோரும் அதை எதிர்க்கவில்லை?

    பிரிட்டனில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய அணு உலை மின் திட்டங்களுக்கு ஆதரவு அரசு, மக்களிடையே எழுந்துள்ளது. நான்கு புதிய அணு உலை மின் திட்டங்களைக் கட்ட அடிப்படை வேலைகள் நடந்து வருகின்றன. நாட்டின் மின்சாரத் தேவையை அடுத்த 20 ஆண்டுகள் கால அளவில் கணித்து, அத்தருவாயில் காலாவதி ஆகி மூடப்படும் மின் உற்பத்தி (அனல், அணு) நிலையங்களைக் கணக்கில் கொண்டு, இன்று இத்திட்டங்களைத் தொடங்க வேண்டிய தேவை பற்றிய விவாதங்கள் நடக்கின்றன.

    மின்சாரத்தின் தேவையைக் குறைத்து கொண்டால் அணு மின் நிலையங்கள் தேவைப் படாமல் போகலாம். ஆனால் அத்தெரிவு கிராமத்தில் வாழ்ந்தாலும் நகரத்தில் வாழ்ந்தாலும் நடைமுறைச் சாத்தியமா?

    அனல் மின் திட்டங்களாலும், நீர் மின் திட்டங்களாலும் ஏன் சாக்கடைக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களாலும் தோல் தொழிற்க் கூடங்களாலும் மேலும் பல வேதியற் தொழிற்சாலைகளாலும் கூட அவ்வவ்ப் பகுதி மக்கள் பாதிக்கப் படுகின்றனர். நகரவாசிகளைத் தூற்றுவதை விட நகரவாசிகள் அனுபவிக்கும் மாசு, இரைச்சல் போன்ற துன்பங்களையும் நினைப்பது நல்லது. நகரங்கள் என்பன நாகரிகத் தோற்ற காலத்திலிருந்தே (நகர இகம் = நாகரிகம்) இருந்து வருவன. நகரங்கள் கிராமங்களைச் சார்ந்தும் கிராமங்கள் நகரங்களைச் சார்ந்தும் இயங்குவதைப் புரிந்து கொள்ள வேண்டும்; புரிய வைக்க வேண்டும்.

    பீதியைக் கிளப்பாமல் நம்முன் உள்ள நடைமுறை சாத்தியமான தெரிவுகளை (options) ஒப்பிட்டுப் பார்த்துச் சிந்திக்கவும் சிந்திக்க வைக்கவும் முயல்வது நல்லது.

  2. benjamin says:

    எல்லாராலும் இதை ஏன் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை?

    புரிய வைக்கவும் முடியவில்லை. ஊடகங்கள் தான் உதவி செய்யவேண்டும். அவைகளும் அரசின் கைக்கூலிகளாகிவிட்டனவே!!!!!!!!!!! பாவம் பாமர மீனவர்கள்

  3. தியாகு says:

    மிக அருமை , வாழ்த்துக்கள்

அதிகம் படித்தது