மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கேரளத்துக்குச் சென்ற இடியை கூடங்குளத்தில் இறக்கியது ஏன்?

ஆச்சாரி

Feb 15, 2012

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்து வருகிறது. அதே நேரம் அதை முடக்குவதற்கு மத்திய அரசும் மாநில அரசும் யார் யாரையோ தூண்டி விட்டு என்ன என்னவோ செய்துவருகின்றன. இந்த நேரத்தில் எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இந்தியாவில் எட்டு எட்டு அணு உலைகளை அமைப்பதென்று மூன்று திட்டங்கள் போடப்பட்டன. அமெரிக்கா மராட்டியத்தில் எட்டு அணு உலைகளை அமைப்பதென்றும், ஃபிரான்ஸ் வங்காளத்தில் எட்டு அணு உலைகளை அமைப்பதென்றும், ரஷ்யா கேரளாவில் எட்டு அணு உலைகளை அமைப்பதென்றும் திட்டம். அப்போது தமிழகம் பற்றிய பேச்சே கிடையாது.

வங்காளமும், மராட்டியமும் எங்களுக்கு அணு உலை வேண்டாம் என்று முதலிலேயே புத்திசாலித்தனமாகப் போராடி அமெரிக்க, பிரெஞ்சு திட்டங்களைத் தடுத்துவிட்டன. கேரளாவில் கோட்டயத்தில் அவர்களுடைய தொழில்நுட்பப் பூங்காவுக்காக – அமையவிருந்த அணு உலைகளை அவர்கள் வேண்டாம் என்று போராடித் தடுத்து விட்டார்கள். அதைத்தான் தமிழகத்தில் கூடங்குளத்தின் தலையில் கட்டினார்கள்.

கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசிய, தமிழக நலனுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் என்பதுபோன்ற ஒரு பிரச்சாரம் இப்போது செய்யப்படுகிறது. அப்படிச் செய்பவர்களுக்கு ஒரு கேள்வி:

ஃ எட்டாயிரம் மெகாவாட் மின்சார அணு உலைத் திட்டத்தைத் தடுத்ததற்காக வங்காளத்தை ஏன் தேசிய நலனுக்குக் குறுக்கே நிற்பவர்கள் என்று வசைபாட வில்லை?

ஃ அதேபோல எட்டாயிரம் மெகாவாட் அணு உலைத் திட்டத்தைத் தடுத்ததற்காக மராட்டியத்தை ஏன் வசைபாடவில்லை?

ஃ கோட்டயத்தில் இறங்கிய திட்டம்தானே தமிழகத்திற்கு இப்போது தலையிடியாக இருக்கிறது? கேரள மக்களை முதலில் “நீ ஏனய்யா உன் திட்டத்தை தமிழகத்தின் தலையில் கட்டினாய்?” என்று கேட்டுவிட்டல்லவா கூடங்குளம் எதிர்ப்பாளர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்?  உங்களுக்கு தொழிநுட்பப் பூங்காவுக்கு மின்சாரம் வேண்டுமென்றால் உங்கள் நாட்டில் வைத்துக்கொள்ள வேண்டியதுதானே?

கேரள மக்களுக்கு நாம் என்ன தீங்கு செய்தோம் என்று தெரியவில்லை. அவர்களுக்கு வரும் தீமைகளை எல்லாம் தமிழகத்தின் தலையில் கட்டி விடுவார்கள். நியூட்ரினோ திட்டம் முதலில் கேரளாவில் வயநாட்டில் ஏற்படுவதாக இருந்தது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று போராடினார்கள். கடைசியில் அதைத் தமிழகத்தில் தேனியில் அமைக்கப்போகிறார்களாம். பாறைகளை நொறுக்கி எடுப்பதால் இப்போது தேனி மாவட்டமே சீர்குலையும். அதுபோலத்தான் கூடங்குளம் திட்டமும்.

கூடங்குளத்தில் எட்டு திட்டங்கள்.  ஒவ்வொன்றும் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கென அமைக்கப்பட இருக்கின்றன. முதல் இரண்டு உலைகளை ஏறத்தாழக் கட்டி முடித்தாயிற்று. நம் மக்களுக்கு எப்போதுமே எல்லாமே காலங்கடந்துதான் தெரியவரும். இப்போது போராட்டத்தில் சிக்கி அல்லல்படுகிறார்கள்.

கூடங்குளத்துக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்று கூச்சலிடுகிறார் ஒரு அமைச்சர். எப்படியாவது கட்டிமுடிக்கப்பட்ட இரண்டு அணு உலைகளையும் திறந்துவிட்டால் மூன்றாவது கட்டத்தொடங்க முடியும். இந்தியா ஒரு ரியாக்டருக்கு 13,000 கோடி ரூபாய் வீதம் எட்டு அணு உலைகளுக்கும் 104,000 கோடி ருசியாவுக்கு திருப்பித் தர வேண்டும். அந்தப் பணம் வராமல் போகிறதே என்ற கவலையில் ருசியா இப்போது என்ன செலவானாலும் சரி,  எப்படியாவது எதிர்ப்பிரசாரம் செய்து- போராடும் மக்களை அமுக்கிவிடுங்கள் என்று கூறி ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளிக்கொடுத்துவிட்டதாம். அதை அணு உலைக்கு ஆதரவாகப் பரப்புரை செய்வோருக்கு பல வழிகளில் கொடுக்கிறதாம் அதிகார மையம். இது “தான் திருடி பிறனை நம்பான் என்ற கதையாக இருக்கிறது.

கூடங்குளம் மக்கள் எவ்வளவு நாளானாலும் இடைவிடாமல் போராடத் தயாராக இருக்கிறார்கள். இதற்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருவதல்ல காரணம். அங்கே இருப்பவர்கள் எல்லாம் கிறித்துவ மீனவர்கள். அவர்கள் ஒவ்வொருமுறை கடலுக்குப் போய்விட்டு வந்தாலும், தங்களுக்கும், தங்களோடு வந்தவர்களுக்குமாக மீனைப் பங்கு பிரிப்பார்கள். (பணம் தருகின்ற வழக்கமில்லை.) பத்துப்பேர் கடலுக்குப் போனால் பத்துப் பங்காகப் பிரிக்கப்படும்.

ஏதாவது திருவிழா, பண்டிகை, வீட்டுச் செலவுகள் என்று வரும்போது பங்குக ளைக் கூட்டிக்கொள்வார்கள். அதாவது பத்துப் பங்காகப் பிரிப்பதைப் பன்னிரண்டு பங்காக்கி, இரண்டு பங்கைத் தேவைப்படும் நபருக்கு, அல்லது திருச்சபைக்கு, இப்படித் தருவார்கள். அதிலே அவர்களுக்குச் சிரமம் ஒன்றும் கிடையாது. இன்னொரு முக்கியமான விஷயம்-கடலுக்குப் போவதுதான் ஆண். பெண்ணுக்குத்தான் எல்லா நிலத்தொடர்புகளும். ஆகவே இவற்றை கவனிப்பவர்களும் பெண்கள்தான்.

இப்போதும் அப்படித்தான் பங்கு பிரிப்பதை அதிகப்படுத்தி எல்லா மீனவர்களும் தரும் பணத்தை வைத்துப் போராட்டம் நடத்திவருகிறார்கள். இது அவர்களுடைய சொந்த மீன் விற்றகாசு. வெளிநாட்டுப்பணம் அல்ல. வெளிநாட்டுப் பணம் ஏதாவது எப்போதாவது வந்தாலும் உள்ளூர்ச் சாமியார்களுக்குத்தான் வரும். (பெரும்பாலும் அவர்களும் எப்படியாவது அதை ஏதாவது செய்து விடுவார்கள்.)

போராடுகின்ற மக்கள் கிறித்துவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் தமிழக மக்களின் ஒட்டுமொத்த நலத்திற்காகத்தான் போராடுகிறார்கள். அமைச்சர் ஒருவர் இந்துக்கோயில் வளாகத்திலிருந்து எதிர்ப்புப் பிரச்சாரத்தைக் கிளப்ப, அது மதச் சண்டையாக மாறக்கூடிய அபாயத்தை எட்டியிருக்கிறது.

இப்போது தமிழகத்தில் மின்வெட்டை அதிகரித்து கூடங்குளத்துக்கு ஆதரவாக முதலாளிகளைக் கூச்சல்போட வைக்கிறார்கள். கூடங்குளம் திட்டத்தில் முதல் இரண்டு ஆலைகளைத் திறந்தாலும் அவை முற்றிலும் இயங்கினால் இரண்டு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கலாம். இப்போதைக்கு 300 மெகாவாட்தான் முடியும் என்கிறார்கள். அதை அப்படியே கேரளத்திற்குத்  தரப்போவதாகப் பேச்சு. இதை வெளியிடாமல் தமிழக மக்களைத் தூண்டி விட்டு ஏன் ஏமாற்றவேண்டும்?

மத்திய அரசாங்கம் அமைத்த குழுவினர் ஐந்து முக்கியக் கேள்விகளுக்கு விடையளிக்க மறுக்கிறார்கள்.

1. இடிந்தகரை என்ற இந்த இடத்தை ஏன் இந்தத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுத் தார்கள்?  ஊர்ப் பெயரே இடிந்த கரை. முன் எப்போதோ அது கடலால் கொள்ளப்பட்டு, இடிந்துதான் இந்தப் பெயர்வந்தது. அப்படியிருக்க இப்போது இங்கே ஆபத்தே வராது என்று எப்படிச் சொல்லமுடியும்?

2. ரஷ்யாவுக்கும் நமக்கும் உள்ள ஒப்பந்தம்தான் என்ன? இது நமது மக்களை பாதிக்கின்ற ஒன்று. இராணுவ இரகசியம் என்று சொல்லி ஏமாற்றலாகாது.

3. பாதிப்பு ஏற்பட்டால் என்ன இழப்பீடு தருவார்கள்? யார் தருவார்கள்?  ரஷ்யா ஏன் இந்தப் பிரச்சினையில் எதுவும் சொல்ல மறுக்கிறது? போபால் நச்சுவாயுக்கசிவு வழக்கில் நடந்தது போல, “எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்ப் போனதுவே” என்று தமிழர்களும் சாகவேண்டியதுதானா?

4. அணு உலைகளின் கழிவுகளை அவ்வப்போது அகற்றியாகவேண்டும். அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? அமெரிக்காவே இந்த சிக்கலில் என்ன செய்வதென்று அறியாது விழிக்கிறது என்கிறார்கள். கடலில் கொட்டுகிறார்களாம். நமது வங்கக்கடலில்கூட அமெரிக்கக் கப்பல்கள் வந்து அணுக்கழிவைக் கொட்டிவிட்டுப் போவதாகக் கேள்வி. இந்தியாவின் கழிவு வெளியேற்றத் திட்டம் என்ன?

அணு உலைகள் பயன்படுவது என்னமோ நாற்பது ஐம்பது வருடங்கள்தான். ஆனால் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு கதிரியக்க வீச்சு இருந்துகொண்டே இருக்கும். நமக்கு இன்றைக்கு மின்சாரம் தேவை என்பதற்காக இருபதாயிராம் வருடங்களுக்கு நம் தலைமுறைகளை பாதிக்கலாமா? இதுவும் தமிழர்களை அழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியா?

5. இந்த உலைகளிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் அளவு என்னவாக இருக்கும்?

இவற்றையெல்லாம் சொல்லமாட்டார்களாம். இவையெல்லாம் இராணுவ ரகசியங்களாம். உலைகள் இயங்க ஆரம்பித்தால் அவை இராணுவத்துறை/ பாதுகாப்புத் துறையின் கீழ் வந்துவிடும். அவர்கள் தான் கதிர்வீச்சின் அளவை அளக்கவேண்டும். மாநில அரசுக்குக்கூட அந்த அதிகாரம் கிடையாது. யாரும் கதிர்வீச்சு அளக்கும் எந்தக் கருவியையும் கூடங்குளத்தின் அருகே கொண்டுசெல்லக்கூட முடியாது. அவர்கள் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவ்வளவுதான்.

Bullying isn’t just a childhood rite of passage it’s a real problem with lasting consequences, www.spyappsinsider.com and you should be ready to help them get beyond it

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

5 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “கேரளத்துக்குச் சென்ற இடியை கூடங்குளத்தில் இறக்கியது ஏன்?”
  1. kondraivendhan says:

    கேரளத்திற்குஷ் சென்ற இடியை, தன் அசகாய பலத்தினால் தமிழகத்தில் இறக்கிய மாவீரன் அன்றய் ஆளுனர் அலக்சான்டரே…!!! இந்த மாவீரனுக்கு தமிழகம் என்பது ஒரு குப்பைக்களமே…!!!! இங்கு யார் மாண்டால் என்ன ? யார் அழிந்தால் என்ன.???
    ஓட்டுப்பொருக்கிய தமிழ் ஈனத்தலைவர்கள் எல்லாம், தோளில் துண்டும், பையில் பணமும், கணக்கு சரி செஇய பிணமும் என்று அலைந்தவர்கள் தான்.

  2. lali says:

    All your information/writings are really very brilliant. Thank you for letting us know your knowledge.
    Long Live(Yadhum Ooran)

  3. ராசா says:

    அருமையான பதிவு

  4. Blogger says:

    அணு உலைக்கு எதிராக தொன்னூறுகளில் விவரம் தெரிந்த மக்கள் போராடும் பொழுது கூடங்குளம் பகுதி மக்கள் அதனை ஏற்கவில்லை. தங்களுக்கு வரும் வேலைவாய்ப்பு மற்றும் வசதிகளை இந்த எதிர்ப்பாளர்கள் தடுக்கிறார்கள் என்றே அப்பகுதி மக்கள் எண்ணினார்கள். ஜப்பானில், புகுஷிமாவில் விபத்து ஏற்பட்ட பின்னரே, அந்த விபத்தினை தொலைகாட்சி மற்றும் பேப்பர் ஊடகங்கள் வெளிப்படுத்திய பின்னரே (இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நமக்கு இப்படியான ஊடகங்கள் கிடையாது, அப்பொழுது விபத்தும் நடக்கவில்லை), அப்பகுதி மக்கள் உதயகுமாரையும், ஏனைய எதிர்ப்பாளர்களையும் அழைத்து வந்து போராடுகிறார்கள். ஆண்கள் மீன் பிடிக்கிறார்கள், பெண்கள் போராடுகிறார்கள்.

    அப்படியே அந்த மக்கள் ஏற்றுக் கொண்டு அணு மின் நிலையம் செயல் படத் துவங்கினாலும், அம்மக்களுக்கு ஒரு வேலை வாய்ப்பும் வரப் போவதில்லை. மருத்துவ, சுகாதார வசதிகள் கிடைக்கப் போவதில்லை. கல்பாக்கத்தில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை. (சென்னையில் இருக்கும் எனது வீட்டிற்கு மட்டும் 24 மணி நேரமும் மின்சாரம் உள்ளது)

    சில ஆண்டுகளுக்கு முன், கருணாநிதி ஆட்சியில் இருக்கும் பொழுது ஒரு அணுமின் கப்பல் சென்னை துறைமுகத்தில் ஒரு வாரம் நின்றது. அப்பொழுது ஜெயலலிதா அதை கடுமையாக எதிர்த்தார். சென்னை மக்களுக்கு அணுக்கதிர் ஆபத்து ஏற்படுமாம். அப்ப எல்லாம் ஒரு பயலும் ஜெயாவை எதிர்க்க வில்லை.

    இந்திரா உயிருடன் இருக்கும் பொழுது அணு நீர்மூழ்கி கப்பலை கட்டமைக்க அணு விஞ்சானிகளைப் பணித்தார். ஐந்து வருடம் அரசுப் பணத்தை செலவழித்தும் (தின்றும்) ஒன்றும் நடக்க வில்லை. அதன்பின் இந்திரா, ரஷ்யாவிடம் அணு நீர்மூழ்கி கப்பலை விலைக்கு கேட்டார். ரஷ்சியா அணு நீர்மூழ்கி கப்பல் வேண்டும் என்றால், அணு உலைகளையும் வாங்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறது. இந்திரா மறைந்தார். ராஜீவ் ரஷ்யாவிடம் கைஎழுத்து இட்டார். மராட்டா , கேராளாவில் துரத்தப்பட்டு, கூடங்குளம் ரெடி.

    இன்றும் பல ஆயிரம் கோடி வாடகைப் பணம் ரஷ்யாவிடம் கொடுத்து அணு நீர் மூழ்கி கப்பல் இந்தியா ஓட்டுகிறது. இதை எல்லாம் பிரசாந்த் பூசான் அவர்களும் எதிர்க்கிறார்கள்.

    அணு மின்சாரம் கேட்கும் நாம், அதே தென் மாவட்டங்களில் தொழில் சாலைகள் கேட்கிறோமா ?? நீர் ஆதாரங்களைப் பெருக்க அரசை கேட்டுப் போராடுகிறோமா ? தமிழகத்தில் தொடர்வண்டித் திட்டங்கள் கேட்டுப் போராடுகிறோமா ?

    அமெரிக்காவில் நூறு அணு உலைகள் உள்ளன. அமெரிக்க அரசு அம்மக்களுக்கான பாதுகாப்பை, வாழ்வாதாரத்தை உறுதி செய்கிறது. நம் அரசு ? மக்கள் போராட ஆரம்பித்த பின்னர் அப்துல் கலாம் சொல்கிறார் சுமார் இருநூறு கோடி ரூபாயில் பத்து அம்ச திட்டம் வேண்டும் என்கிறார். இதை எல்லாம் முன்னரே செய்து இருந்தால் பாராட்டலாம். அமெரிக்காவில் கடந்த முப்பது ஆண்டுகளாக ஒரு அணு உலை கூட ஆரம்பிக்கவில்லை. அமெரிக்காவில் இருபது விழுக்காடு அணு மின்சாரம், எண்பது விழுக்காடு மாற்று வழி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

    இந்தியாவில் நாற்பது விழுக்காடு குழந்தைகளுக்கு ஊட்ட சத்து இல்லாமல் சாகின்றன. ரேசன் உணவுப் பொருட்களைப் பாதுகாக்க அரசு கிட்டங்கிகளை கட்டவில்லை. ஆனால், பல லட்சம் கோடி செலவில் அணு உலை கட்டுகிறது. வருடத்திற்கு பல லட்சம் கோடிகளை இந்திய ராணுவத்திற்கு நமது அரசு செலவிடுகிறது – இது ஏன் என்று ஒரு மாணவி அப்துல் கலாம் அய்யாவிடம் கேட்டால் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. உங்களால பதில் சொல்ல முடியுமா ?

    அமெரிக்காவில் மின் கடத்தல் இழப்பு எழு விழுக்காடு மட்டுமே. ஆனால் இந்தியாவில் மின் கடத்தல் இழப்பு இருபத்தைந்து விழுக்காடு. எந்த விஞ்சானிகள் இதைத் தடுக்க ஆய்வு செய்கிறார்கள் ? உங்களால பதில் சொல்ல முடியுமா ?

  5. Sudalaiyaandi says:

    வீட்டிற்கு ஒரு கழிவறை வேண்டும். ஊருக்கு ஒரு கழிப்பிடம் வேண்டும். நாட்டிற்கு ஒரு சாக்காடு வேண்டும். அது ஒரு இனம் மட்டுமே அழிய மற்றவர்கள் ( இறையாண்மை மலடர்கள் ) பார்த்திருக்கவேண்டும். இது அரசியல் சட்டத்தில் எழுதாமல் விதிக்கப்பட்டது.
    ஏற்பது நன்று. எதிர்ப்பதைக் கைவிடு.
    இது ஆத்திச்சூடி அல்ல.
    சாக்காட்டுச் சுடலைப்பாட்டு.

அதிகம் படித்தது