மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கொச்சியும் கொங்கு நாட்டு இளவலும்

ஆச்சாரி

Nov 15, 2013

1934 ம் ஆண்டு புது டில்லி சட்ட மன்றத்திற்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னராக சபா நாயகராகப் பதவி வகித்த அறிஞர் சர் ஆர். கே. சன்முகம் அவர்கள் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அது எதிர்பார்த்த ஆனால் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய தோல்வி. தேர்தல் பிரச்சாரத்தில் பரப்புரைகளிலும் கருத்துரைகளிலும் சக்ரவர்த்தி .சி. இராஜகோபாலாச்சாரி அவர்களுக்கும் சன்முகனாருக்கும் நேரடிப் போர் ஒன்று நடந்ததாகவே அன்றைய வரலாறு பதிவு செய்கின்றது. சென்னை விக்டோரியா பொது மண்டபத்தில் தேர்தல் பரப்புரையாக அவர் சர். ஏ. இராமசாமி முதலியார் முன்னிலையில் பேசிய போது பார்வையாளராக இருந்த திரு. அண்ணாதுரை அவர்கள்  பின் நாளில் தனது காஞ்சி வார இதழில் ( 13.06.1965 ) பின் வருமாறு எழுதுகிறார்.

பேச்சா அது, சர். சன்முகனார் அன்று பேசியது இன்றும் என் காதுகளில் ஒலிக்கின்றது. அன்று அவரது உரையின் வீச்சும், கருத்துரையும் அதனைத் தொடர்ந்த ஆரவாரமும் இன்று வரை நான் கேட்கவில்லை”.

1934ம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பின் சர். சன்முகனார் வாழ்வில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. இப்படிச் சொல்வதைவிட, கொச்சி சமஸ்தானத்திற்கும் அந்த குடி மக்களுக்கும் ஒரு மாபெரும் நல்வாழ்வு காத்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் ஆளுனராக இருந்த சர்.வில்லிங்டன் என்பவர் இந்திய வைசிராயாகவும் இருந்து 1936ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் ஓய்வு பெற்று பிரித்தன் செல்ல இருந்தார், சென்னையிலும் புது டில்லியிலும் நல்ல நண்பர்களாக இருந்த சன்முகனார் – வில்லிங்க்டன் சந்திப்பு என்பது 1935ம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பின் சிம்லாவில் நடந்தது. தாயகம் திரும்பும் நிலையில் இருந்த வில்லிங்டன் பிரபு தனது நண்பரிடம் ஒரு அன்பு வேண்டுகோள் விடுத்தார். அதாவது நிர்வாகத்திலும், சமஸ்தானத்தின் சமூகக் கட்டமைப்பிலும் பின் தங்கியுள்ள கொச்சி சமஸ்தானத்திற்கு திவானாக உங்களை அனுப்ப விரும்புகிறேன் என்றார். இதனை எதிர்பாராத சன்முகனார் ஏற்றுக்கொண்டார்.

1935ம் ஆண்டு கொச்சி சமஸ்தானத்தின் திவானாக பொறுப்பு ஏற்றார். அரசியல் எதிரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. 1935ம் ஆண்டு வாக்கில் அவர் பதவி ஏற்ற போது கொச்சி சமஸ்தானம் தேக்க நிலையும் பொருளாதார மந்த நிலையிலும், சமூகத்திலும் அரசுப் பதவிகளிலும் சாதி சமயப் பூசல்கள் இருந்தது. அதனை அப்படியொரு பதவியில் ( திவான் என்பது மன்னருக்கு அடுத்த நிலையில் உள்ள ஆட்சி அதிகாரம் ) மிகவும் சவாலான ஒன்றுதான். இதனை அறிந்தே சர் வில்லிங்டன் பிரபு அவரை அங்கு அனுப்பினார். பாராளுமன்ற அமைப்பிலும், நிர்வாகத் திறமையிலும் பெயர் பெற்ற சன்முகனார் இதனைத் திறம்பட ஏற்று வளமுறச் செய்தார்.

நிவாக அமைப்பாக மன்னர ஆட்சியில் இருக்கும் கொச்சியிலும், சட்ட சபை இருந்தது. அது ஒரு கொலு மண்டபம்தான். அரட்டை தர்பார் என்ற அளவிற்கு பெயர்பெற்றிருந்தது. கொச்சியின் அப்போதைய நிலை, செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் என்று அனைத்தையும் பட்டியலிட்டு இரவு பகலாக உழைத்தார்.

அரசின் நிர்வாகத்தில் மக்கள் நேரடியாக பங்கு பெறும் சனநாயக பூர்வமான ஒரு அமைப்பினை, பொறுப்பாட்சியினை நிறுவினார். இது அன்றைய பிரித்தானிய இந்தியாவில் வேறு எந்த சமஸ்தானத்திலும் செய்திராத ஒன்று. நாட்டின், நிர்வாகத்தின் மந்த நிலைக்கு அரசுப் பொறுப்பில் இருந்தவர்களே காரணம் என்பதை உணர்ந்தார். அதனை சீர்திருத்த பல நடவடிக்கைகளை எடுத்தார். சமுதாயத்தில் இருந்த பல் வேறு சமூகத்தினருக்கும் அரசுப் பதவி கிடைக்கவும், பங்குபெறவும் முயற்சிகள் மேற் கொண்டார். தகுதி அற்றவர்களை அகற்றினார். அரசுப் பதவிகளுக்கு மூன்று நபர் கொண்ட தேர்வாணைக் குழு ஒன்றினையும் அமைத்தார். சமஸ்தானத்தின் நிதி, நீதித் துறைகளைப் பெரிதும் மாற்றி அமைத்தார். விவாசாயிகளின் வாழ்வியலுக்கும், விவசாய மேம்பாட்டிற்கும் தனித் துறை கண்டு அவர்கள் மேம்பாட்டிற்கு வழி வகுத்தார்.

இத்தனை சாதனைகளையும் இரவு பகலாய் கண் துஞ்சாது, எவ்வித தீங்கினையும் கருதாது செய்து முடித்த போது கொச்சி சமஸ்தானத்தின் மக்களின் அன்பிற்குரியவராக இருந்தார். அவரை வெறுத்து ஒதுக்கியவரும் மனம் பாராட்டி நட்புடன் பழகினர்.

இந்தியத் துணைக் கண்டத்தில் கொச்சிக்கு தனியானதோர் இடத்தைப் பெற்றுத் தந்தவர் சன்முகனார் அவர்களே. Gate way of South India, Queen of Arabian sea என்ற பெருமைக்குரிய சொல்லாடல்களைப் பெற்றுத்தந்தவர் இவர் தம் ஓயாத உழைப்பும், செயல் திறனுமே.

கொச்சி துறை முகத்தை அமைக்கும் ஒரு பனியினை சர்.ராபர்ட் பிரிஸ்டோ தொடங்கினார். கொச்சியின் நிர்வாகக் குளறுபடிகளில் தேக்க நிலை அடைந்தது.பெர்ம் கவலையில் ஆழ்ந்திருந்த திரு.ராபர்ட் அவர்களுக்கு சர்.சன்முகனாரின் வருகை மிகப் பெரிய நம்பிக்கையினைக் கொடுத்தது. உள்ளாட்ச்சியினையும், விவசாயத்தினையும் வகை செய்த சன்முகனாரின் கவனம் கொச்சி துறை முகம் பக்கம் திரும்பியது.

தொடரும்…….

Student approaches to learning while the project www.domyhomework.guru is a most common form of engagement with learning for students in visual arts, students do not all approach project work identically

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கொச்சியும் கொங்கு நாட்டு இளவலும்”

அதிகம் படித்தது