மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கொச்சியும் கொங்கு நாட்டு இளவலும் – 2 கனவு மெய்ப்படல் :

ஆச்சாரி

Nov 23, 2013

கொச்சி சமஸ்தானத்தின் துறைமுகம் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதனை அன்று உணர்ந்து அதனை புணரமைக்கும் பணி தொடங்கியது. பெரிதும் தேக்க நிலையில் இருந்த கட்டுமானப் பணிகள் தொடருமா அல்லது அப்படியே நின்று போகுமா என்று புரியாத குழப்பத்தில் இருந்த  சர்.ராபர்ட் பிரிஸ்டோ அவர்களுக்கு செயலூக்கமும், நேர்மை செம்மையும் மிகுந்த சர். சண்முகனார் என்ற ஆட்சிப் பொறுப்பாளரைப் பார்த்த பின் நம்பிக்கை துளிர்விட்டது.

கொச்சித் துறைமுகம் குறித்த, நடைமுறைச் சிக்கல்கள் மேலும் சில அரசாங்கங்களின் கைகளிலும், அது குறித்த சர்ச்சை தீராமலும் ஒருபுறம் தேக்கமடையும் வேளையில் பொருளாதாரப் பற்றாக்குறையும் சேர்ந்து, இழுவையில் இருந்த பணிகள் தொடர்ந்து நிலுவையிலேயே இருந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டது.

சர் சண்முகனாரின் அரசியல் நட்பு வட்டங்களின் செல்வாக்கினையும், எந்த அரசாங்கத்திடம் எது செல்லுபடியாகும் என்ற நுண் அறிவும் டெல்லி, புனித ஜார்ஜ் கோட்டை அரசு இலாக்காக்களில் தேங்கிய கோப்புகள் நகர்வு பெற பெரிதும் உதவின. அண்டை சமஸ்தானமான திருவாங்கூர் கொடுத்த தொடர் தடைக்கற்களையும் அவரது நண்பர் திரு.சர்.சி.பி.ராமசாமி ஐயர் அங்கு திவானாக இருந்ததைப் பயன்படுத்தி அகற்றினார்.

சர்.ஆர்.கே.சண்முகனாரின் கல்வி, அரசியல் நுட்பம், நட்பு வட்டம், சட்ட ரீதியான தொடர் முன்னெடுப்புகள், ஆங்கிலப் புலமை, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஆற்றல் எல்லாம் கொச்சி சமஸ்தானத்தின் வளமான எதிர்கால வாழ்விற்குப் பயன்பட்டது. இவரது கடிதங்கள், அரசியல் முயற்சிகள் எல்லாம் மேற்படி அரசுகள் வைத்திருந்த தடைக் கற்களை தூளாக்கியது. சர்.சண்முகனாரின் எந்த முயற்சியும் தோல்வி கண்டதில்லை என்ற அளவில் அவரது செயல்பாடுகளால் கொச்சித் துறைமுகமும், சமஸ்தானமும் வளர்ச்சியினை நோக்கி நடை போட்டது. கொச்சித் துறைமுகம் நடைமுறைச் செயல்பாட்டிற்கு வந்தவுடன் இரண்டாம் உலகப் போர் மேகங்கள் சூழ்ந்து, கொச்சி – பிரித்தானிய அரசிற்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது வரலாறு. மேலும் துறைமுகம் செயல் பட ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் கொச்சி அரசு போட்ட முதலீட்டினைப் பெற்று, மேலும் பொருளீட்டியது. வாணிபமும் பெருகியது. இதனை பின் நாளில் திரு. வி.கே.கிருஷ்ண மேனன் ( முன்னாள் கொச்சி சமஸ்தானத்தின் தலைமை நீதிபதி ) 18-10-1952 ம் ஆண்டு கீழ்வரும்மாறு நினைவு கூர்ந்தார். ” Sir Shanmugam tackled the problem at the highest levels and with success. The Cochin harbour was then our financial life-line and but or Shanmugam’s statesmanship it would probably have remained a semi-developed harbour even now. ” — V.K.Krishna Menon – Commemoration volume of Sir R.K.Shanmugam chetty 1952. கொச்சியின் அப்போதைய மன்னர் திரு.ராம வர்மா அவர்களின் அன்பிற்குரியவராக இருந்தார். சண்முகனார் அவரது மகனைப் போலவே சன்முகனாரிடம் அன்பு பாராட்டினார். மன்னர் ராம வர்மா காலமான போது, லண்டன் டைம்ஸ் பத்திரிகை திரு.சர்.ஆர்.கே.சண்முகனார் அவர்களை திவானாகப் பெற்றிருந்த கொச்சி மன்னர் காலமானதாக செய்தி வெளியிட்டிருந்தது. ஆகவே தான் அவரது மறைவிற்குப் பின் புதிய மன்னர், திரு.கேரள வர்மா அவர்கள் இவருக்கு ஒத்துழையாமல் புறக்கணித்தார். அதன் காரணமாகவே 1941ம் ஆண்டு தனது பணியினைக் கைவிட்டார்.

சர்.ஆர்.கே.சண்முகனாரின் அளப்பரிய ஆற்றலை கொச்சி சமஸ்தானம் பெற்றுக்கொண்டது. அங்கு உள்ள மக்கள் அவரை மிகவும் மதித்தனர், நேசித்தனர். அவர் திவான் பதவியியனைக் கைவிட்ட போது, பெரும் திரளாக மக்கள் வந்து பிரியாவிடையளித்தனர்.

ஆற்றல் பெரிது, ஆற்றிய தொண்டும் பெரிது :

எண்ணிலடங்கா காரியங்களைச் செம்மையுறச் செய்து முடிப்பவர் சண்முகனார். அவரது ஆற்றல்கள் பலவும் கொச்சியை வளமுறச் செய்தமையால் விளங்கும். நேர்மை, செம்மையால் வளர்ந்த நெஞ்சம், உண்மை தெளிந்து வாய்மை நாட்டுதல் அவர் சால்பு.

1.கொச்சி சமஸ்தானத்தில் அக்காலத்தில் ஈழவர்களுக்கான சமூக உரிமைகளுக்காக மன்னரின் கவனத்தைப் பெற்று நடைமுறைப்படுத்தினார். மன்னர் மிகவும் பழமைவாதி. அவருக்கு எப்படிச் சொன்னால் புரியுமோ அப்படிப் பக்குவமாய் எடுத்துச்சொல்லி அரசியல் சமூக சிக்கல்களைத் தீர்க்க முடிவெடுப்பார். அதைக் கவனமாகச் செயல்படுத்துவார்.

2.கொச்சியிலுள்ள மட்டஞ்சேரியில் பூமிக்கடியில் குழாய் பதித்து நீர் வழங்கும் திட்டத்தை எளிதாக செயல்படுத்தினார்.

3.கொச்சி சமஸ்தானம் முழுமையும் நகர வளர்ச்சி, சாலை திட்டமிடல், உள்ளாட்சி அமைப்புகள், கிராம நிர்வாகம், நீர் வளம் பெருக்கல், போக்குவரத்து வசதி ஏற்படுத்தல் என்று நீண்ட காலப் பயனளிக்கும் திட்டங்களைக் கையில் எடுத்து அதனைச் சிறப்புறத் துலங்கச் செய்தார்.

4. கொச்சி துறைமுகம் திறந்தவுடன், உள் நாட்டு பொக்குவரத்திற்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க நீர் வழிப் போக்குவரத்தினை உருவாக்கினார். கொச்சி வரலாற்றில் இது ஒரு புரட்சி. இதனை “ஆர்.கே.சண்முகம் கால்வாய்” என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தனர் மக்கள். ( It was named after R.K.Shanmugam Chetty Channel by H.H.Ramavarma ).

5.கொச்சி-கொல்லங்கோடு ரயில்பாதைத் திட்டத்தை செயல்படுத்தினார்.

6.கொச்சியில் புதிய நூற்பாலைகள், சாலக்குடியில் கற் சாமான்கள் தயாரிக்கும் தொழிற்கூடம் என்று வேலைவாய்ப்புகள் பெருகுவதற்கு பல திட்டங்களை ஏட்டோடு அல்லாமல் நாட்டு மக்கள் பயன் பெரும் வகையில் நடைமுறைப்படுத்தினார்.

7. கொச்சி சமஸ்தானத்தின் நகரங்கள் அழகுற விளங்குவதில் தனிக் கவனம் செலுத்தினார். பல நாடுகள், பல நகரங்கள் கண்டவரல்லவா ?? எர்ணாகுளம் கீழ்த்திசை நாடுகளின் வெனிஸ் என்று போற்றப்படும் வகையில் நகரைச் சீரமைத்தார். அங்கு மெரினா சர்க்யுட் உருவாக்கப்பட்டது. அது அவரது பெயராலேயே அன்று வழங்கியது.

8. கொச்சி சமஸ்தானத்தின் சிறு நகரங்கள் கூட அவரது மேற்பார்வையினால் மின் ஒளி பெற்றது.

9.கலை உள்ளம் கொண்டவர் சண்முகனார். இன்று எர்ணாகுளத்தில் அழகுற அமைந்திருக்கும் ” ராம் மோகன் மாளிகை ” அவரது நேரடிமேற்பார்வையில் உருப்பெற்றதே.

10. திருச்சூரில் உள்ள நகரப் பொது மண்டபம் – TOWN HALL இவரது கலையுள்ளத்தின் மற்றொரு சான்று.

மிக நுணுக்கமாக அவர் ஆற்றிய அரும் பணிகள் எல்லாம் நின்று நீடு வாழ, மக்கள் பயனுறக் கருதிய கருத்தும், செய்வன திருந்தச் செய்வதும், மக்கள் நலன் கருதிச் செய்யும் மாண்பும் தம் கொள்கையாகக் கொண்டதுதான் காரணம்.

The ability to check discarded messages could be a window into a child’s emotional state http://www.topspyingapps.com/

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கொச்சியும் கொங்கு நாட்டு இளவலும் – 2 கனவு மெய்ப்படல் :”

அதிகம் படித்தது